Pages

தலைப்புச்செய்திகள்

Loading...

Monday, 21 July 2014

அதிரையை பரபரபாக்கும் உண்மையான தவ்ஹீத்வாதிகள் !?

“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. (அல் குர்ஆன் 2:11,12)

இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் பரம்பரை முஸ்லிம்கள‌ல்லர். பல்வேறு கால கட்டங்களில் பற்பல கரணங்களால் இஸ்லாத்தை ஏற்றவர்களின் வழி வந்தவர்களே.

அப்போது நமக்குப் புரியாத மொழியில் அரபிய மொழியில் இருந்த ஹதீஸ்கள் நாளடைவில் தமிழாக்கம் செய்யப்பட்டு நம் மக்களிடம் இதுதான் உண்மையான வழிபாடு என நம் முன்னோர்கள் காட்டித் தந்த வழியில் பல நூறு ஆண்டுகள்  நாமும் நம் முன்னோர்களும் வாழ்ந்து வந்த வேளையில் சுமார் இருபத்தைந்து முதல் முப்பது ஆண்டுகள் முன்பு வரை குழப்பமின்றி வாழ்ந்த நாம் தவ்ஹீத் என்ற சொல்லும், அதன்பால் வரும் ஹதீஸ், குழப்பங்களும். தொடர்கதையாகி ஆனால் இன்றும் அதற்கு முறையான தீர்வுகள் வந்தபாடில்லை. மாறாக ஒன்று இரண்டாகி, இரண்டு பத்தாகி மக்களை பித்துப்பிடிக்க வைத்துள்ளதுதான் மிச்சம்.

இஸ்லாத்தின் அடிப்படையே ஓரிறைக் கொள்கையும், சமாதானமும் சகோதரத்துவமும்தான் ஆனால் அதனை குழிதோண்டிப் புதைக்கக்கூடிய வகையில் நம் சகோதரர்களுக்கிடையே பிளவுகள், சவால்கள், விவாதங்கள் மற்றும் குழப்பங்கள்.

குழப்பம் மற்றும் சமாதானம், நாசம் மற்றும் சீர்த்திருத்தம், தீயது மற்றும் நல்லது, ஹராம் மற்றும் ஹலால் போன்றவற்றை பிரித்தறிவிக்கும் பொறுப்பை முழுமையாக தனது கையில் வைத்துள்ளது குர்ஆனும் ஹதீஸும்.  அதில் மனித புத்திக்கு இடம் கிடையாது. இதன் மூலம் இஸ்லாத்தில் குறித்த பிரச்சனைக்கான வாயில் முழுமையாக மூடப் பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

குர்ஆனையும், ஹதீஸ்களையும் ஆதாரங்களாக்கி பின்பற்றி வருபவர்களை வீணில் குழப்பும் வேலைகளைத்தான் ஒரு சிலர் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

இஸ்லாத்தில் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு இணையான எதையும் வழிபட அனுமதி இல்லை. அதுதான் இஸ்லாம் கற்றுத் தந்த பாடம். இது யாவரும் அறிந்ததே ! ஆனால் 'ஷிர்க்' ( இணை வைத்தலை ) கடுமையாக எதிர்க்கும் சிலர் அதன் சித்தாந்தத்தை மறந்து, தமக்குள் யார் சிறந்தவர் ? என்ற தமக்குள்ளேயே இணை கற்பிக்கும் கேவலம், இவர்களுக்குள்ளே ஏற்பட்டுள்ள ஈகோ மக்களிடையே இவர்கள் மீதான வெறுப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இஸ்லாம் கடுமையாக மறுத்துள்ள, இணை வைத்தல், தனிமனித வழிபாடு, வரதட்சணை எதிர்ப்பு இன்னும் பல. எல்லாவற்றிலும் ஒத்துப்போகின்ற, அமைதியை நாடும் மக்களிடம், புதிதாக ஏதேனும் ஒரு விசயத்தை தெளிவுபடுத்துகிறேன் பேர்வழி என்று அறைகூவல், சவால் என்று மக்களை குழப்பும் வழக்கத்தைத் தவிர இவர்கள் சாதித்தது என்ன ?

குர்ஆன், ஹதீஸ்களில் அணுவளவும் ஆதாரமில்லாத நிலையில் தங்களின் இயக்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் சுயமாகப் பெயரிட்டுக் கொண்டு அவற்றிற்கு வக்காலத்து வாங்குவதுதான் இவர்கள் சாதித்தது.

தங்களை மட்டுமே சிறந்தவர்கள் எனப் பீற்றுவோர், இறைக் கட்டளைகளை நிராகரித்து இவ்வுலகிலேயே தங்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள் எனத் தீர்ப்பளிப்பதோடு, மற்றவர்கள் முஸ்லிம்கள் இல்லை, காஃபிர்கள், முஷ்ரிக்கள் என்றெல்லாம் தீர்ப்பளிப்பதை மறுமைக்கென்று ஒத்திவைத்திருக்கும் நிலையில் அல்லாஹ்வின் அந்தத் தனி அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு இவ்வுலகிலேயே தீர்ப்பளிப்பவர்கள்

ஷிர்க்குகளில் மிகக் கொடிய ´ஷிர்க்கை செய்பவர்கள் தங்களைத் தாங்களே சிறந்தவர்கள் எனப் பீற்றுவோரே !

குழப்ப வாதிகள் எப்போதும் முற்றுப் பெறுவதில்லை; அவர்கள் சமூகத்துக்கு ஆபத்தானவர்களே, அதிலும் அவர்கள் தாம் சீர்திருத்த வாதிகள் என நம்பிக்கொண்டு நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவது மேலும் ஆபத்தானதாக அமைந்து விடுகிறது.

இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதலில் உலகே காசா ( பாலஸ்தீனம் ) மக்களுக்காக இந்தப் புனித மாதத்தில் கண்ணீர் விட்டு கதறிக் கொண்டு இருக்க, அதிரையில் மட்டும் நம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலருக்கிடையே நடைபெறும் வார்த்தைப் போர் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இஸ்லாம் அல்லாதோர் கூட பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்க இதில் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் நீயா ? நானா ? எனும் போட்டி அநியாயத்திற்குப் பல்லிளிக்கிறது.

இந்த சங்கைமிகு மாதத்தில் இறுதிப் பத்தில் இருக்கும் நாம், நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து உலகில் நம் சமுதாயம் எதிர் கொண்டிருக்கும் பேராபத்திலிருந்து விடுதலை பெற பிரார்த்திப்பதே ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் இதுதான் அமைதியை விரும்பும் மக்களின் எதிர்பார்ப்பும்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...