.

Pages

Saturday, November 30, 2013

சம்சுல் இஸ்லாம் சங்க சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள மஹல்லாவாசிகளுக்கு அழைப்பு !

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சிறப்புக்கூட்டம் எதிர்வரும் [ 04-12-2013 ] புதன்கிழமை மாலை 4 மணியளவில் சங்கத்தில் நடைபெற உள்ளதால் அதில் தவறாது கலந்துகொள்ளும்படி நமது மஹல்லாவாசிகளை அன்புடன் கேட்டுககொள்கிறேன்.

இப்படிக்கு,
தலைவர்
சம்சுல் இஸ்லாம் சங்கம்
புதுமனைத்தெரு - அதிரை

மதுக்கூரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அதிரையர் பங்கேற்பு !

மதுக்கூர் AKS திருமண மஹாலில் இன்று காலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஹாஜி P.S. ஹமீது தலைமையேற்க, மாவட்ட பொருளாளர் A.M அப்துல் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் எதிர்வரும் [ 28-12-2013 ] அன்று நடைபெற உள்ள இளம்பிறை மாநில மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தின் சார்பாக பெறும் திரளாக கலந்துகொண்டு மாநாட்டின் நோக்கம் வெற்றியடைய பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிரை S.S.B. நசுருதீன், S.B இஸ்மாயில், காயல் மஹபூப், S.A.M இப்ராஹீம் மக்கி, ஆடுதுறை A.M ஷாஜஹான், M.K. முஹம்மது யூனுஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில பொதுச்செயலாளர் K.A.M. முஹம்மது அபூபக்கர் சிறப்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 


குடிநீர் வழங்காததை கண்டித்து அதிரை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை !

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நிலவி வரும் மின்சார தட்டுப்பாட்டல் அதிரையில் குடிநீர் விநியோகத்தில் தடங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன் எதிரொலியாக அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு புதுத்தெரு பகுதிக்கு கடந்த 10 நாள்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள் பேரூராட்சியை கண்டித்து இன்று காலை 10 மணியளவில் அதன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிரையில் ஆய்வை மேற்கொண்டு வரும் தஞ்சை மாவட்ட பேரூராட்சிதுறை அலுவலரிடம் [ AD ] போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றியும், தொடர்ந்து இந்தப்பகுதி புறக்கணிக்கப் படுவதையும் எடுத்துக்கூறினர்.

இதை அனைத்தையும் கவனமாக கேட்டுக்கொண்ட பேரூராட்சிதுறை அலுவலர் இதுகுறித்து விசாரணை செய்து உடன் நவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது...
கடந்த 10 நாட்களாக எங்கள் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன... பள்ளி கல்லூரி செல்லும் எங்களின் குழந்தைகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சியின் கவனத்துக்கு எடுத்துச்சென்றும் கண்டுகொள்ள வில்லை. இதனால் பாதிப்படைந்த நாங்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

பேரூராட்சிதுறை அலுவலரிடம் கருத்து கேட்டபோது...
மின்சார தட்டுப்பாடல் சில இடங்களில் குடிநீர் வழங்கி வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இவை உடனடியாக சரி செய்யப்படும். குடிநீர் சீராக வழங்குவது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது அதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் அவர்கள் மேற்கொள்வார்கள் என்றார்.

பேச்சுவார்த்தையின் போது 11 வது வார்டு பகுதி மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்கியதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதி முழுதும் சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டன.

மின்தட்டுபடும் நேரங்களில் அதிரை பேரூராட்சியின் சார்பாக ஜெனரட்டர் பொருத்தி குடிநீர் வழங்குவது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.Friday, November 29, 2013

அதிரையில் நடைபெற்ற த.மு.மு.க வின் செயல்வீரர்கள் கூட்டம் !

இன்று மாலை 6.30 மணியளவில் த.மு.மு.க அதிரை நகர அலுவலக வளாகத்தில் த.மு.மு.க வின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அஹமது ஹாஜா, நகரத் தலைவர் சாதிக் பாட்சா, நகர செயலாளர் தமீம் அன்சாரி, நகர பொருளாளர் செய்யது முகம்மது புகாரி, அல்அய்ன் மண்டல செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது, ம.ம.க நகர செயலாளர் ஹாலித் ஆகியோர் முன்னிலையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில்

1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பை வழங்க வேண்டும்.

2. பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். 

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக எதிர்வரும் [ 06-12-2013 ] அன்று மாலை 4 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ள மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் நகர கிளை சார்பாக பெறும் திரளாக சென்று கலந்துகொள்வது.

மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து த.மு.மு.க தலைமை கழக பேச்சாளார் திண்ணை பாருக் அவர்கள் மூலம் நடத்த இருக்கிற தெருமுனை பிரச்சாரத்தை நகரில் உள்ள சுமார் 7 முக்கிய பகுதிகளில் எதிர்வரும் [ 02-12-2013 ] அன்று காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடத்துவது.

உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் தரகர் தெரு கிளைத்தலைவர் அஹமது யாசின், நெசவுத்தெரு கிளைத்தலைவர் சகாபுதீன், மேலத்தெரு கிளைத்தலைவர் நியாஸ், பிலால் நகர் கிளைத்தலைவர் இப்ராஹிம்ஷா ஆகியோர் தலைமையில் அந்தந்த கிளை நிர்வாகிகளும், த.மு.மு.க / ம.ம.க வின் இதர நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இறுதியில் நன்றியுரையை ஒன்றிய செயலாளர் சாந்தா சாகுல் ஹமீது நிகழ்த்தினார். 

மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக வாய்க்கால் தெரு பள்ளிக்கூடம் !

பள்ளிக்கூடம் என்றாலே சற்றென்று நினைவு கொள்வது நாம் கல்வி பயின்ற தொடக்கப்பள்ளிகளே ! காரணம் நெஞ்சம் நெகிழும் அந்த மலரும் நினைவுகள் பசுமரத்து ஆணி போல் பளிச்சென்று நம் மனதில் ஒவ்வொன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

நமதூர் நடுத்தெருவில் கடந்த [ 09-05-1939 ] அன்று ஆரம்பிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சென்ற [ 03-10-2003 ] அன்று நடுநிலைப்பள்ளி என்ற அந்தஸ்தைப் பெற்று, தொடர்ந்து அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி பணியை சிறப்பாக வழங்கி வருகின்றது. 1 முதல் 8 ம் வகுப்புகள் வரை கொண்டுள்ள இந்த பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி அதிரை நகரில் உள்ள மெட்ரிக்பள்ளிகளுக்கு இணையாக கல்வியின் தரத்தில் உயர்ந்து வருகின்றன. இதற்காக ஆரம்ப கல்வியை பரவலாக்கும் நோக்கத்தோடு 'எல்லோருக்கும் கல்வி' என அரசால் கொண்டு வரப்பட்ட சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் 2012-2013 கல்வி ஆண்டில் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைகள் மூலம் 1 முதல் 5 ம் வகுப்பு மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமாக நேரடி காட்சிகள் மூலம் பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் கற்றலில் இனிமை, எளிமை, புதுமையால் மாணவ மாணவிகள் ஆர்வமாக பங்கேற்று கற்கின்றனர். அவர்களுக்கு மனப்பாடமில்லாமல் மனதில் எளிதில் பதிந்துகொள்ள உதவுகின்றன.

அதே போல் மற்றொரு மகிழ்ச்சிகுரிய செய்தி வருகின்ற 2013-2014 கல்வியாண்டு முதல் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழிக்கல்வி இந்த பள்ளியில் செயல்பட உள்ளது. பள்ளியின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்து வருகின்ற கிராம கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், தலைமை ஆசிரியர், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆகியோரைச்சாரும்.

இத்துணை நிறை இருந்தும் சில குறைகளும் அங்கே காணப்படுகின்றன. 

1. குறிப்பாக வயது வந்த பெண் பிள்ளைகள் பயன்படுத்தும் கழிவறைகள் பிரத்தியோகமாக பயன்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை. இவற்றை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.

2. புதிதாக கட்டியுள்ள வகுப்பறைகளில் சத்தம் அதிகமாக வருவதை குறைக்கும் விதமாக ஒலிப்பெருக்கியை பயன்படுத்தி பாடம் நடத்துவதற்கு தேவையான ஒலிப்பெருக்கி சாதனங்களை வாங்குவதற்கு இப்பள்ளிக்கு உதவ வேண்டும். 

3. அதே போல் போதுமான விளையாட்டு உபகரணங்களும் இப்பள்ளியில் இல்லை. 

இவற்றை நிவர்த்தி செய்வது இப்பள்ளியில் கல்வி கற்று பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் உதவ முன்வந்தால் நிச்சயம் சிறந்த பள்ளி என்ற பெயரை பெறுவதோடு மட்டுமல்லாமல் நமக்கு கல்வி கற்றுத்தந்த நமது பள்ளிக்கு நாம் செய்யும் சிறிய கடமை என்ற மகிழ்ச்சி நம்மிடம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !
அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடிநீர், உணவுக்கூடங்கள் மற்றும் வகுப்பறைகளின் தரம், கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி நமது பள்ளிகளை நாமே தரத்திலும் சேவையிலும் உயர உதவுவோம்.
அதிரை ஜாஃபரின் இனிய குரலில் அம்மா பாடல் [ காணொளி ] !

அதிரை ஜாஃபர் இவரைப்பற்றி ஏற்கனவே அறிமுகம் தந்திருந்தாலும் தனது இனிய குரலால் அனைவரின் பார்வையையும் தனதுபக்கம் இழுத்து வருகின்றவர். இவரின் இனிய குரலை அதிரையின் அனைத்து கவிஞர்களும் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இனிவரும் காலங்களில் அதிரையின் சாதனையாளர்களின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெறும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரையரின் தலை சிறந்த படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகின்ற 'சமூக விழிப்புணர்வு பக்கங்கள்' என்ற வலைதளத்தில் கவிஞர் நபிதாஸ் அவர்கள் எழுதிய 'அம்மா' கவிதை பதியப்பட்டு அனைவரிடமும் சிறந்த பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் அதிக எண்ணிக்கையிலான பின்னூட்டங்கள் மூலம் பெற்றது.

கவியன்பன் கலாம் அவர்களின் கவிதை வரிகள் மூலம் குரல் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தாலும் முதன் முறையாக கவிஞர் நபிதாஸ் அவர்களின் பாடல் வரிக்கு குரல் கொடுத்துள்ளார்.

இனி நபிதாஸ் பற்றி சிறிய குறிப்பொன்றை காண்போம்...
நாம் எல்லோரையும் போல் மனித சமூகத்தன் மேம்பாட்டின் மேல் அக்கறைக் கொண்டவர். அதனை வெளிப்படுத்தும் விதமாக சமூக விழிப்புணர்வு பக்கங்களில் கவிதைகளும் கட்டுரைகளும் தொடரும் எழுதி வருகின்றார். தாய்மொழி தமிழில் பற்றுகொண்டவர் என்பதை இவர் கவிதைகள் பல எழுதினாலும் அவைகள் புதுக்கவிதை நடையில் எழுதினார். கவிதை முறைப்படி கற்று எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ள இவர், நம் வலைதளத்தில் கவிதைகளை எழுதிவரும் கவிக்குறள் கலாம் அவர்கள் எழுதும் கவிதைகள் போல எழுத ஆர்வம் கொண்டு இன்று மரபுக்கவிதை எழுதி வருகிறார். இணையத்தில் இலக்கணங்கள் கற்றாலும் ஆசான் ஒருவர் வழிகாட்டுதல் அவசியம். அதன்படி  கவிக்குறள் அவர்களின் மனதில் இடம்பிடித்த இவர், கவிதீபத்தின் வழிகாட்டுதல்படி மரபுகள் பற்றிய விளக்கங்கள் அவர்களிடமே கற்றுவருகிறார்.

அதிரை ஜாஃபரின் இனிய குரலில் நபிதாஸின் பாடல் :


உன்னையே உருக்கி அம்மா
.....உலகிலே விட்டாய் எம்மை
தன்னிலே வரைந்த என்னை
.....தரணியில் தந்தாய்த் தன்னாய்.
சின்னதா ! செய்தேன் தப்பு
.....சிறிதென நடித்தாய்த் தப்ப
என்னையே கண்டாய்க் கனவு
.....என்றுமே நான்உன் நினைவு.

வனப்புகள் செய்தே நாளும்
.....வசதிகள் தந்தாள் கேளும்
சினத்தினால் உண்ணாக் கோபம்
.....சிணுங்கிதான் நிற்பாள் பாவம்.
மனதினில் பரிவைக் கோர்பாள்
.....மதியுடன் பசியைத் தீர்பாள்   
தனக்கென வாழாத் தானம்
.....தந்ததில் வாழ்தேன் நானும்.

பிறப்புகள் எதுவும் உண்டா
.....பிறவியில் காண்ப துண்டா
பிறந்ததும் எனக்குத் தானோ !
.....பிறவியோ உனக்கு வீனோ ?
துறவறம் கொள்வார் பின்னால்
.....துறவியாய் வாழ்வாள் என்னால்
திறம்பட எதுவும் தந்தும்
.....தீர்த்திட முடியாப் பந்தம்.

என்முகம் சோகம் ஏற்காய்
.....இன்னலை அழித்தே தீர்பாய்
உன்முகம் என்னைத் தேடும்
.....உறங்கிட தாலாட்(டு) பாடும்.
அன்னையின் பாதம் நிற்கும்
.....அதன்கீழே மகனின் சொர்க்கம்
சொன்னவர் உலகின் கோமான்
.....சொல்வழி நடந்தால் சீமான்

கண்டதும் அதிகம் என்னை
.....கனவிலும் இழந்தாய் உன்னை
மண்ணிலே எதுவும் இல்லை
.....மனதிலும் நானே தொல்லை
ஆண்டவன் படைப்பில் காண்போம்
.....அதினிலே பொறுமை என்போம்
அண்ணலார் சொன்னார் நன்றே 
..... அன்னையும் சிறப்பு என்றே !

நபிதாஸ்

Thursday, November 28, 2013

அதிரை அருகே வாகனம், பயணிகள் மீது திடீர் தாக்குதல் !

இன்று மாலை 6.30 மணியளவில், நாகூரிலிருந்து கேரளா பாலக்காட்டை சேர்ந்த செளக்கத் அலி என்பவர் டூரிஸ்ட் வேனில் தனது குடும்பத்தினருடன் ஏர்வாடியை நோக்கி ஈசிஆர் சாலையில் பயணமானார். இதில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 20 பேர் இருந்துள்ளனர்.

தம்பிக்கோட்டை சாலையோரக் கடையில் டீ குடிப்பதற்காக வேனை நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கே இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர்கொண்ட கும்பல் வேனின் மீது கற்களால் தாக்கியுள்ளனர். வேனில் இருந்தவர்களை தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் தாக்குதலில் வேனின் கண்ணாடி, கதவு உள்ளிட்டவை சேதமடைந்தன. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த வேன் டிரைவர் வேனை பதட்டத்துடன் அதிரைக்கு ஓட்டிவந்துள்ளார்.

இதனை அறிந்த அதிரை நகர த.மு.மு.க, எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் அதிரை இளைஞர்கள் திரண்டு வந்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் கூறினர்.

பாதிக்கப்பட்டோர் சார்பாக அதிரை காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

செய்தி தொகுப்பு : அதிரை போஸ்ட்
புகைப்படங்கள் : அதிரை நியூஸ்


மரண அறிவிப்பு [ நடுத்தெரு முஹம்மது அபூபக்கர் அவர்கள் ]

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் உ.க.வா. சாகுல் ஹமீது அவர்களின் மகனும், முஹம்மது அலி, முகைதீன் சாஹிப், செய்யது ஹுசைன் ஆகியோரின் சகோதரரும், முகமது தம்பி, யாசர் ஆகியோரின் தகப்பனாரும், மு.செ.மு. செய்யது முஹம்மது அவர்களின் மைத்துனருமாகிய முஹம்மது அபூபக்கர் அவர்கள் இன்று [ 28-11-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் மரைக்காப் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

குறிப்பு : பொதுநல நோக்கில் மிகுந்த சிரமங்களுக்கிடையே சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்கள் சேகரித்து தளத்தில் பதியப்பட்டு வருகின்றன. இவ்வாறாக பதியப்படும் செய்திகளை இலகுவாக காப்பி செய்து தங்களின் தளத்தில் பதியும் நண்பர்கள் எங்களின் இணையதள முகவரியை நன்றியோடு குறிப்பிட மறந்துவிடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை எங்களால் பதியப்படும் செய்திகளை பிற சகோதர தளங்கள் எடுத்துப்பதிவதில் எவ்வித ஆட்சபனையும் எங்களுக்கு இல்லையென்றாலும் தளத்தின் பெயரை அடிக்குறிப்பிட்டு பதிய அன்புடன் வேண்டுகிறோம்.

எக்ஸ்போ 2020 கண்காட்சி நடத்த துபாய் தேர்வுக்கு அதிரையர்கள் கலிஃபாவை சந்தித்து வாழ்த்து [ புகைப்படங்கள் ] !

2020ம் ஆண்டுக்கான உலக வர்த்தக எக்ஸ்போ கண்காட்சி நடத்துவதற்கு துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அமீரகத்தில் வசிக்கும் மக்கள் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அமீரக வாழ் அதிரையர் பலர் மகிழ்ச்சிகளை சக நண்பர்களுடன் பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.

இதில் நெசவுத்தெரு அமீரக அமைப்பின் பொருளாளர் N. முஹம்மது தாஹா, அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் செயலாளார்  N.K.M. நூர் முஹம்மது [நூவன்னா] ஆகியோர் சேக் கலிஃபா [ In charge of Ministry of Environment & Water Department அவர்களை சந்தித்து தங்களின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர். மேலும் எதிர் வரும் டிசம்பர் 2 அன்று கொண்டாடப்பட உள்ள அமீரக தேசிய தினத்திற்கும் தங்களின் வாழ்த்துகளை முன்னதாக தெரிவித்துக்கொண்டனர்.

பிரேசில், துருக்கி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளும் இந்த எக்ஸ்போ கண்காட்சியை நடத்தப் போட்டியிட்டிருந்தன. இந்தப் போட்டியில் துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பாரிஸில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் துபாயில் இருக்கும் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவின் இரு பக்கங்களிலிருந்தும் வெடிகள் வெடிக்கப்பட்டன. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த எக்ஸ்போ கண்காட்சி ஒரு மத்திய கிழக்கு பகுதி மாநகரில் நடப்பது இதுவே முதன்முறை.

இந்த கண்காட்சியை உலகமே பிரமிக்கும் வகையில் நடத்தப்போவதாக துபாயின் மன்னர் ஷேக் அல் மக்தூம் உறுதியளித்திருக்கிறார்.
இதை நடத்த புதிய இடம் ஒன்றுக்காக சுமார் ஒன்பது பிலியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும்.

2015ம் ஆண்டுக்கான எக்ஸ்போ இத்தாலியில் உள்ள மிலான் நகரில் நடக்கவிருக்கிறது.

செய்தியும், புகைப்படமும் 
N.K.M. நூர் முஹம்மது [ நூவண்ணா ]

மரண அறிவிப்பு [ தரகர் தெரு முஹம்மது நெய்னாமலை அவர்கள் ]

தரகர் தெருவை [ ஆஷாத் நகர் ] சேர்ந்த மர்ஹூம் அல்லா பிச்சை அவர்களின் மகனும், M. கட்சி முகைதீன், M. ராஜிக் அஹமது ஆகியோரின் தகப்பனாரும், P.M முகம்மது மஹ்ரூப், Y. அஸ்ரப் அலி, O. ஜேக்கத் அலிகான், P. முஹம்மது அனஸ், A. அயூப்கான் ஆகியோரின் மாமனாரும், S. அஹமது மன்சூர், S. லியாகத் அலி, S. முஹம்மது இக்பால் ஆகியோரின் மச்சானுமாகிய முஹம்மது நெய்னாமலை அவர்கள் இன்று [ 27-11-2013 ] அதிகாலை 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [ 28-11-2013 ] மாலை அஸ்ர் தொழுகைக்கு பின் தரகர் தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

குறிப்பு : பொதுநல நோக்கில் மிகுந்த சிரமங்களுக்கிடையே சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்கள் சேகரித்து தளத்தில் பதியப்பட்டு வருகின்றன. இவ்வாறாக பதியப்படும் செய்திகளை இலகுவாக காப்பி செய்து தங்களின் தளத்தில் பதியும் நண்பர்கள் எங்களின் இணையதள முகவரியை நன்றியோடு குறிப்பிட மறந்துவிடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை எங்களால் பதியப்படும் செய்திகளை பிற சகோதர தளங்கள் எடுத்துப்பதிவதில் எவ்வித ஆட்சபனையும் எங்களுக்கு இல்லையென்றாலும் தளத்தின் பெயரை அடிக்குறிப்பிட்டு பதிய அன்புடன் வேண்டுகிறோம்.

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு !

தஞ்சை மாவட்டத்தில், நடப்பு நிதியாண்டில் [ 2013-2014 ] பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ மாணவியருக்கு மின்னணு பரிமாற்றம் மூலம்  [ ECS ] கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாணவ மாணவியரை விண்ணப்பித்து பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொள்கிறார்.