.

Pages

Tuesday, December 31, 2013

ரேசன் கார்டு மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிப்பு ! மாவட்ட ஆட்சியர் தகவல் !!

தஞ்சை மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள உள்தாள்களின் 2013–ம் ஆண்டிற்கான கலங்களுடன் மறுபக்கத்தில் 2014–ம் ஆண்டிற்கு பயன்படுத்தும் வகையில் உள்தாள் அச்சடிக்கப்பட்டு உள்ளது. இந்த குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1–1–2014–ந்தேதி முதல் 31–12–2014 வரை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது. எனவே குடும்ப அட்டைகளில் ஏற்கனவே 2014–ம் ஆண்டிற்கு பயன்படுத்தும் வகையில் உள்தாள் இணைக்கப்பட்டுள்ளதால் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையை பயன்படுத்தி 1–1–2014 முதல் 31–12–2014 வரை தொடர்ந்து ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

நன்றி : தினத்தந்தி

பட்டுக்கோட்டை டிஎஸ்பி யுடன் அதிரை நகர த.மு.மு.க நிர்வாகிகள் சந்திப்பு !

பட்டுக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி.யாக இருந்த வெங்கடேசன் பணி மாறுதல் காரணமாக சீர்காழி உட்கோட்ட டி.எஸ்.பி.யாக சென்றுவிட்டார். அவருக்கு பதிலாக பட்டுக்கோட்டை உட்கோட்ட புதிய டி.எஸ்.பி.யாக செல்லப்பாண்டியன்  கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.

த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, அதிரை நகர த.மு.மு.க / ம.ம.க பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, த.மு.மு.க அதிரை நகர துணைச்செயலாளர் கமாலுதீன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து பேசினார்கள். சந்திப்பின் போது குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார்கள்.

டி.எஸ்.பி. செல்லப்பாண்டியன் இதற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் டி.எஸ்.பி. யாக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.


கவிஞர் இப்னு ஹம்துன் இயற்றிய கவிதைக்கு குரல் கொடுத்த அதிரை ஜாஃபர் ! [ காணொளி ]


இஸ்லாம்கல்வி.காம் இணையதளத்திற்காக கவிஞர் இப்னு ஹம்துன் அவர்கள் இயற்றிய கவிதைக்கு அதிரை ஜாஃபர் அவர்களின் குரலில் அழகிய காட்சியமைப்புடன் உருவான பாடல்.

Monday, December 30, 2013

அதிரை பேருந்து நிலையம் - மகிழங்கோட்டை சாலையை 61 லட்சத்தில் சீரமைக்க டெண்டர் விடப்பட்டது !

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரையிலான ஊராட்சி ஒன்றிய கிராம இணைப்பு சாலையை சீரமைத்து தர அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு, வர்த்தக சங்கம், பல்வேறு சமுதாய அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் , தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக வலியுறுத்தியும், அவ்வபோது ஆர்பாட்டங்கள் செய்துவந்தாலும், கடந்த [ 01-06-2013 ] அன்று நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மரியாதைக்குரிய N.R. ரெங்கராஜன் MLA அவர்களை அதிரை நியூஸ் சார்பாக அதிரை நலன் சார்ந்த மூன்று முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டி நேரடியாக சந்தித்து வலியுறுத்தினோம். அதில் இந்த கோரிக்கையும் ஒன்று

இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூபாய் 61 லட்சம் மதிப்பீட்டில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகளுக்குரிய டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்குரிய பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிரை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று நிறைவேற்றித் தந்துள்ள மரியாதையைக்குரிய  நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA மற்றும் பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன் ஆகியோருக்கு நன்றியையும் - பாராட்டுகளையும் அதிரை நகர மக்கள் - அதிரை நியூஸ் இணையதளம் சார்பாக அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிரை நியூஸ் குழு

அதிரை நடுத்தெருவில் மலிவு விலை பேபி ஷாப் !

அதிரை நடுத்தெருவின் பிராதான சாலையில் இயங்கி வரும் M.I. பேபி ஷாப்பில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமான உபயோகப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளரிடம் பேசிய வகையில்...
எங்களிடம் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான பேம்பர்ஸ், மாமிபோகோ பேன்ட்ஸ், குழந்தைகள் அணியக்கூடிய ஆடைகள், ஷாம்பு, சோப், ஆயில் உள்ளிட்ட அனைத்துவிதமான பொருட்களும் விற்பனை செய்து வருகிறோம். உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருவதால் எங்களால் மலிவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிகிறது. அதிரை நகர மக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவை அளித்திட வேண்டும் என்றார்.

தொடர்புக்கு : 0091 9629533887குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

பட்டுக்கோட்டை பிரபல பல் மருத்துவர் ராகவைய்யா மரணம் !

பட்டுகோட்டையில் பல ஆண்டுகாளாக பல் மருத்துவ சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வந்த பிரபல பல் மருத்துவர் ராகவைய்யா அவர்கள் நேற்று இரவு காலமாகிவிட்டார். இவர் அதிரையர்களின் பேரபிமானம் பெற்ற மருத்துவராக திகழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, December 29, 2013

அதிரையில் அமோக விற்பனையில் மரவள்ளிகிழங்கு !

செப்டம்பர் - டிசம்பர் மாதங்களில் அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மரவள்ளி கிழங்கு அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கிழங்கின் விலை 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காங்கிரஸ் தலைவருடன் அதிரை நகர காங்கிரசார் சந்திப்பு !

தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக கடந்த சில வாரங்களுக்கு முன்பு எஸ்.பி.அந்தோணிசாமி காங்கிரஸ் மேலிடத்தால் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், அதிரை நகர காங்கிரஸ் செயலாளர் சிங்காரவேலு, பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை  மைதீன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், நகர இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் இஸ்மாயில், ராஜேந்திரன், ராஜா ஆகியோர் அடங்கிய காங்கிரசார் மரியாதை நிமித்தமாக சந்தித்து தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

Saturday, December 28, 2013

SDPI கட்சியின் தேசிய தலைவருடன் அதிரையர்கள் சந்திப்பு !

SDPI கட்சியின் மாநில தலைமையுத்துவ பயிற்சி முகாம் இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அதிரையிலிருந்து தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இலியாஸ், தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் A.K. சாகுல் ஹமீது ஆகியோர் சென்றிருந்தனர். முகாமை முடித்துகொண்ட இவர்கள் முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற SDPI கட்சியின் தேசிய தலைவர் சையத் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.

இளம்பிறை எழுச்சி பேரணியில் அதிரையர்கள் பெரும்திரளாக பங்கேற்பு [புகைப்படங்கள் ] !

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இளம்பிறை மாநில மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று மதியம் அதிரை தக்வா பள்ளி அருகிலிருந்து 4 வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். திருச்சி சென்றடைந்த இவர்கள் நேராக பேரணியில் பங்கேற்றனர்.

இதுகுறித்து நமது செய்தியாளர் அதிரை நியூஸ் சாகுல் ஹமீது அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்த வகையில்...
திருச்சி மாநகரில் எங்கு பார்த்தாலும் ஒரே மக்கள் வெள்ளம். இந்தளவு திருச்சி திணறியதை நாங்கள் பார்த்ததில்லை. பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்துள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் தங்களின் நோக்கம் நிறைவேறுவதற்காக ஒன்றினைந்துள்ளனர் என்றார்.
முத்துப்பேட்டையிலிருந்து இளம்பிறை மாநாட்டிற்கு சென்ற வாகனம் டயர் வெடித்து கவிழ்ந்தது !

முத்துப்பேட்டையிலிருந்து திருச்சியில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் இளம்பிறை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது.
முத்துப்பேட்டையிலிருந்து இளம்பிறை மாநாட்டிற்கு சென்ற கொண்டிருந்த வாகனம் ஒரத்தநாடு அருகே உள்ள புலவன்காடு கிராமத்தை கடந்து சென்ற போது வாகனத்தின் முன் டயர் வெடித்ததால் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வாகனத்தில் பயணம் மேற்கொண்ட சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தின் உள்ளே சிக்கி கொண்டவர்களை வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து மீட்டனர். காயங்கள் ஏற்பட்ட அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தபகுதி சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டன.

களத்திலிருந்து அதிரை நியூஸ் சாகுல் ஹமீது

வறண்ட குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவர நாங்க பட்டபாடு !?

1995 கடைசியாய் CMP வாய்க்கால் வழியே தண்ணீர் வந்து நம் ஊர் குளங்களை நிரப்பியது. நம்மீது என்ன கோபமோ அதன் பின் நம் ஊருக்கு வராமல் போனது வராமல் போனதை அரசிடம் கேட்டுப்பெறாததால் அழையா விருந்தாளியாக மாட்டேன் என்று அதுவும் இருந்து விட்டது தண்ணீர் வந்த வழித்தடமும் மறைந்தே போனது பேரூராட்சியின் அலட்சியமோ, மக்களின் அலட்சியமோ CMP சாக்கடை வாய்க்காலாய் மாறியது கடைமடை வடிகாலும் இல்லாமல் போனது.
   
அதிரையின் முதல் எழுத்தை கொண்டவரும் தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தை கொண்டவரும் அதிகாலை நடை பயிற்சியில் ஈடுபடுகையில் தொக்காளிக்காடு வழியில் செல்கையில் பள்ளிகொண்டான் to மாளியக்காடு  
வழியாக செல்லிக்குருச்சி ஏரிக்கு நீர் வருவதை கண்டார்கள் இவ்வளவு தூரம் வந்த விருந்தாளியை நாமும் அழைப்போமே வராமலா போவார்கள் என்ற நோக்கோடு முயற்சியை துவங்கி உள்ளார்கள் அதன்பின் நடந்தவைகளை நம் அதிரை நியூஸ் வாயிலாக நம் அதிரையர்கள் அறிந்ததுதான் இன்ஷா அல்லாஹ் அவர்களின் பேட்டியையும் நம் வலைத்தளம் விரைவில் பதியும்.
   
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் குளம் நிறைந்து வருவதாய் கேள்வியுற்று ஊரில் வேலை இருந்தமையால் ஊர் வந்தேன் நம் ஊருக்கு தண்ணிருக்கு தடம் ஏற்படுத்தி கொடுத்த நல்லுள்ளங்களை சந்திக்க விரும்பினேன் இரவு 10 மணி நீர் வரும் நிலைமைகளை தெரிய போன் செய்தேன் வேட்டைக்குத்தான் கிளம்பிக்கொண்டு இருக்கிறோம் என்றார்கள் படுக்கை விரிக்கப்போன எனக்கும் ஆவல் பற்றிக்கொள்ள நானும் வருகிறேன் என்று அவர்களோடு கிளம்பினேன் அங்கே நடந்தவைகளை உங்களிடம் பகர்கிறேன்...
     
செக்கடி குளத்திற்கு தண்ணீர் விழுந்து கொண்டு இருந்தது அங்கே 10 நபர்கள் கூடி நின்று என்ன செய்ய வேண்டும் என்பதை பேசிக்கொண்டு இருந்தார்கள் முதலில் CMP வாய்க்காலில் செக்கடி குளம் ஆலடி குளம் இரண்டிற்கு பிரியும் ஜங்சனில் நிறைய குப்பைகள் வந்து சேர்ந்து இருந்தன எல்லா குப்பைகளையும்  நீக்கினார்கள் தண்ணீர் குறைவாய் வந்து கொண்டு இருந்தது எங்கோ வாய்க்கால் ஓரம் மரம் விழுந்து விட்டதாம் அதற்காக தண்ணீர் அடைத்து வைத்து மரத்தை அப்புறப்படுத்திவிட்டு இப்பொழுதுதான் திறந்து இருக்கிறார்கள் இங்கு வர 6 மணி நேரமாகுமாம் என்று சேர்மன் சொல்லிக்கொண்டு இருந்தார்.
     
சிறிது நேரத்தில் சேர்மனுக்கு போன் வந்தது [ PWD ] தண்ணீர் வேகமாக வந்து கொண்டு உள்ளது உங்கள் ஆட்களை அழைத்துக்கொண்டு தண்ணீர் வரும் வழியெல்லாம் சரிபார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாராம், அங்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன நீ அந்த வழியாக போ நாங்கள் நாலுபேர் இந்த வழியாக வருகிறோம் என்று சொல்ல நான் 4 பேர்களோடு சேர்ந்து கொண்டேன்.
   
கும்மிருட்டு காட்டு  வழி பயணம் குளிர் வண்டிய நிறுத்து நிறுத்து என்ற சப்தம் வாய்க்காலை பார்த்தால் குப்பைகள் மிதந்து வந்தன இருவர் இறங்கி குப்பைகளை அகற்றினார்கள் அங்கே யாரோ மீன் வலை வைத்து இருக்கிறார்கள் 7-8 சிறிய மீன்கள் சிக்கி இருந்தன குப்பைகளையும் வலை தடுப்பதால் தண்ணீர் புதிய வாய்க்கால் ஏற்படுத்தி விடும் ஆகையால் வலையை அறுத்து எறிய உத்தரவு பிறப்பிக்கபடுகிறது உங்கள் கட்டளைய எங்கள் சித்தம் என்று இரு நபர்கள் செயல்படுகிறார்கள்
   
வண்டி அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கிறது நான் முந்தைய அனுபவங்களை வந்தவர்களிடம் கேட்டேன் ஒவ்வொன்றாய் சொன்னார்கள் இவர்களை பார்த்து ஒரு விவசாயி சொன்னாராம் நல்ல காரியம் செய்கிறீர்கள் இந்த வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டு இருந்தாலே போது எங்கள் கிணறுகளெல்லாம் ஊற்றேடுக்கும் ரொம்ப நன்றி தம்பி என்றாராம் மற்றொரு விவசாயி அதிகாரியிடம் நாங்கள் 6 மாதமாய் தண்ணீர் கேட்டு அழைக்கிறோம் எங்களுக்கு வராத தண்ணீர் இப்ப எப்படி வந்தது என்று அவர் பங்கிற்கு உண்டான தண்ணீரை ஒரு மதகில் பெற்று வருகிறாராம்.
       
நதிமூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள் நாங்கள் அதிரைக்கு தண்ணீர் வரும் ரிஷி மூலம் அறிய சென்றோம் பட்டுக்கோட்டை முருகையா தியேட்டர் அருகே 20 அடி அகலம் கொண்ட வாய்க்கால் செல்கிறதே அதுதான் நம் ஊருக்கு வரும் தண்ணீர் பாதை அங்கே ஓர் சுவாரஸ்ய சம்பவம் யார் வீட்டோ கல்யாண தோரணம், அலங்கார வளைவுகள் இடப்பட்டு பின் குப்பையாய் அந்த வாய்க்காலில் மிதந்து வந்தது இதை பார்த்த 26 வயது மதிக்கத்தக்க நம்மில் வந்த ஒருவர்[ன்] குபீர் என்று ஆற்றில் குதித்து விட்டார்[ன்] எங்களுக்கு அதிர்ச்சி  டேய் டேய் என்று கரையில் இருந்து ஒருவர் கத்த காக்கா வாழை மரம் மிதந்து போகுது அங்கே போய் அடைச்சிக்கும் என்று சொல்கிறான் மேலே இருந்த அவன் நண்பன் எங்கடா உன்னுடைய போன் என்று சப்தமாக கேட்க அதல்லாம் பத்திரமாக என் எக்கல்ல இருக்குன்னு அப்பாவியாக வாழை மரத்தை கரை வந்து சேர்க்கிறான் சேர்த்த நேரம் இரவு 12.30 டிசம்பர் 23 [ கரை வந்த அந்த பயனுக்கு சன்மானமும் வழங்கப்பட்டது கடலை மிட்டாயும் முறுக்கும் ]
     
அடுத்த சம்பவம் மணி 2 ஒற்றையடி பாதை இருள் சூழ்ந்த இடம் உபாதைகளுக்கு ஒதுங்கிய நாற்றமெடுக்கும் பகுதி 70 வயது மதிக்கத்தக்க முதியவர் தன் வறண்ட தோப்பிற்கு வந்த தண்ணீரில் பங்கு போடுகிறார் நம் பசங்க சப்தம் போட்டுக்கொண்டு பெரியவரே நேத்துதானே சொல்லிட்டு போனோம் மறுபடியும் இப்படி பண்றிங்களே என்று அதட்டுகிறார்கள் அவர் மழுப்பலாய் பதிலுரைக்கிறார் [ தாகம் இல்லார் இவ்வுலகில் உண்டோ ] ஆத்துல போற தண்ணிய அம்மா குடிச்சா என்ன ஆத்தா குடிச்சா என்ன என்று சொன்ன காலமெல்லாம் போயே போயுந்தி.

நடந்த சம்பவங்களில் நம் ஆய்வில் நாம் தெரிந்து கொண்டது கலெக்டரிடம் மனு, ஆபீசர்களின் ஒத்துழைப்பு நல்லுள்ளம் படைத்தவர்களின் பண பங்களிப்பு மட்டும் பத்தவில்லை. இரவு விழிப்பு உடல் உழைப்பு எல்லாம் சேர்ந்தே தண்ணீர் வரும்.
   
கனிவான வேண்டுகோள் தண்ணீர் வருவதற்கு தடம் புதுபிக்கபட்டு விட்டது இனி தண்ணீர் தடையின்றி வருவதற்கு அனைத்து அரசியல் ஆர்வலர்களும் கட்சிக்கு இரண்டு குளங்கள் என்று தத்து எடுத்தாலும் எங்கள் குளங்களும் நிறையும் அதிரையர்களின் மனங்களும் நிறையும்.

மு.செ.மு. சபீர் அஹமது

அதிரையில் நடைபெற உள்ள "இளம் இஸ்லாமியன்" மார்க்க அறிவுத்திறன் போட்டிற்கான அறிவிப்பு !

எதிர்வரும் ஜனவரி 15 ஆம் தேதி அதிரை மாணவர்களுக்காக "இளம் இஸ்லாமியன்" என்னும் மார்க்க அறிவு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை எந்தவொரு  அமைப்புமின்றி அதிரை இளைஞர்களின் முயர்ச்சியில் இன்ஷா அல்லாஹ் நடைப்பெற உள்ளது.

நோக்கம்:
1. தற்பொழுது நமதூர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை எடுத்துக்கொண்டால் பலரும் உலக கல்வியின் மீது தான் ஆர்வமாக உள்ளனர்.

2. மேலும் பல மாணவர்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களை, வரலாறுகளை அறியாதவர்களாக உள்ளனர்.

3. எனவே நமதூர் மாணவர்களிடம் மார்க்க கல்வி மற்றும் மார்க்க சட்ட திட்டங்கள், வரலாறுகளை அறிய ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டியை நடத்த உள்ளோம்.


பரிசுகள்
பிரிவு-1
(6 முதல் வகுப்பு வரை)
பிரிவு-2
(9 முதல் 11 வகுப்பு வரை)
முதல் பரிசு

இரண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு
3000 (மதிப்பிலான பொருள்)

2000 (மதிப்பிலான பொருள்)

1000 (மதிப்பிலான பொருள்)
3000 (மதிப்பிலான பொருள்)

2000 (மதிப்பிலான பொருள்)

1000 (மதிப்பிலான பொருள்)


விதிமுறைகள்:
1. 100 மதிப்பெண் கொண்ட போட்டியான இது எழுத்துமுறையில் நடைபெறும்.

2. இந்த போட்டிக்கான கேள்வி பதில் கொண்ட புத்தகத்தை அதிரை டிஜிடெக் கம்பியூட்டர்ஸில் பெற்றுக்கொள்ளவும்.

3. இந்த போட்டிக்கு தங்கள் பெயரை பதிவதற்க்கு அதிரை முகைதீன் பள்ளி அருகே உள்ள பூங்காவில் இம்மாதம் 28-30 தேதி காலை 10:00- 12:30, மதியம் 2:00- 3:30 மணி வரை.

புத்தகம் பெறும் இடம்: அதிரை டிஜிடெக் கம்பியூட்டர்ஸ், காதிர் முகைதீன் கல்லூரி எதிரில், அதிராம்பட்டினம்.
போட்டிக்கு முன்பதிவு செய்யும் இடம்: அதிரை முகைதீன் பள்ளி அருகில் உள்ள பூங்காவில்
போட்டி நடைபெறும் இடம்: A.L. மெட்ரிக் பள்ளி, அதிராம்பட்டினம்.
நாள்: 15- 01- 2014                    
நேரம்: காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை
மேலும் விபரங்களுக்கு: 
9597773359, 7200563300, 7200364700, 8122848088

                                                                                                                       இங்ஙனம்,
                                                                                                    இளம் இஸ்லாமியன் கமிட்டி
தகவல் : அதிரை பிறை

அதிரையில் வாழும் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கிய அதிரை லயன்ஸ் சங்கத்தினர் !

நேற்று 27/12/2013 இரவு அதிரை லயன்ஸ் சங்கம் சார்பாக குளிரில் அதிரையின் முக்கிய பகுதிகளில் ஆதரவற்று வீதியில் உறங்குபவர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.

அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் அகமது அவர்கள் தலைமை  ஏற்று நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்கப் பொருளாளர்  ஹாஜி சாகுல் ஹமீது லியோ மாவட்டத்தலைவர் மேஜர் லயன் S.P.கணபதி மாவட்டத் தலைவர் லயன் முகம்மது முகைதீன், லியோ கவுன்சில் பொருளாளர் ரியாஸ் அகமது, லியோ கவுன்சில் உறுப்பினர் முகைதீன் மற்றும் லயன்ஸ், லியோ சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Friday, December 27, 2013

அதிரை நடுத்தெரு பகுதிக்கு எஸ்டிபிஐ கட்சியின் புதிய கிளை துவக்கம் !

அதிரை நடுத்தெரு பகுதிக்கு எஸ்டிபிஐ கட்சியின் புதிய கிளை இன்று [ 27-12-2013 ] மாலை துவங்கியது.
நகர தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களின் தலைமையிலும், மாவட்ட செயலாளர் முஹம்மது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய பொறுப்பாளர்களின் விவரங்கள் :
தலைவர் : ஜெஹபர் சாதிக்
துணைத்தலைவர் : அலி அக்பர்
செயலாளர் : ஹாஜா முஹைதீன்
இணைச் செயலாளர் : ஜாஃபர்
பொருளாளர் : ஹாஜா
கிளை செயற்குழு உறுப்பினர்கள் : புரோஸ்கான், அப்துல் சலாம், தமீம் அன்சாரி

இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் இதர உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.அதிரையில் ADT நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் !

அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பாக இன்று 27-12-2013 மாலை 6 மணியளவில் நமதூர் தக்வா பள்ளி அருகில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் தலைவர் அதிரை அஹமது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களாக கலந்துகொண்ட மவ்லவீ முர்ஷீத் அப்பாஸி அவர்கள் 'ஏகத்துவம்' என்ற தலைப்பிலும், மவ்லவீ சித்தீக் இஸ்லாமி அவர்கள்  'இளைஞர்களே உங்களைத்தான் !' என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல் M. ஸாலிஹ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் செய்துருந்தனர்.

அதிரை பெரிய மார்க்கெட்டில் ரூ 50 க்கு விற்கப்படும் தாளன் சுறா மீன்கள் !

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் தொழிலாக படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மீனவர்களின் வலைகளில் தாளன் சுறா மீன்கள் அதிகளவில் பிடிபடுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வகை மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படும் தக்வா பள்ளி மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. அதிரையர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் தாளன் சுறா மீனை 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை விற்கின்றனர். இந்த மீன்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், மீன் பிரியர்கள் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர். விலை மலிவாக கிடைப்பதால் மீன் பிரியர்களுக்கும், விரைவில் விற்று தீர்ந்து விடுவதால் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.