.

Pages

Monday, March 31, 2014

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியினருடன் திமுகவினர் மரியாதை நிமித்த சந்திப்பு !

எஸ்.டி.பி.ஐ  கட்சி போட்டியிடாத 37 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தருவது என கட்சியின் 26.03.2014 அன்று நடைபெற்ற நிர்வாகக்குழுவில் முடிவு செய்தனர்.

இதையடுத்து அதிரை நகர திமுக நிர்வாகிகள், அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவதற்காக இன்று இரவு 8 மணியளவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

இச்சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ  கட்சியின் தஞ்சை தெற்கு  மாவட்ட தலைவர் முகம்மது இல்யாஸ், நகர தலைவர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர். இரு கட்சியினரும் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவது என முடிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டிஆர் பாலுவின் உறவினர் அதிரை பேரூராட்சி தலைவரோடு சந்திப்பு !

தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் டிஆர் பாலுவின் உறவினர் நேற்று இரவு அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது தொகுதி வேட்பாளர் டிஆர் பாலுவை அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தனர். சந்திப்பின் போது ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், மேலத்தெரு 16,17 வார்டு செயலாளர்கள் முஹம்மது யூசுப், அப்துல் வாஹித் மற்றும் அயூப்கான், தமீம், அபூபக்கர் ஆகியோர் உடனிருந்தனர். இதனைதொடர்ந்து 1 வது வார்டுக்கு சென்று அப்பகுதியினரின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

மேலத்தெருவில் TNTJ நடத்திய பெண்களுக்கான மார்க்க சிறப்பு சொற்பொழிவு !

அதிரை மேலத்தெரு சானாவயல் பகுதியில் அமைந்துள்ள SP பக்கீர் முஹம்மது அவர்களின் இல்லத்தில் பெண்களுக்கான மார்க்க சிறப்பு சொற்பொழிவு சனிக்கிழமை தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக கடந்த [ 29-03-2014 ] அன்று  மாலை நடைபெற்ற சொற்பொழிவில் தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் 'இணைவைப்பு ஒரு பெரும் பாவம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மனநிலை பாதிக்கப்பட்ட அதிரையர் சங்கரன்கோவிலில் கண்டுபிடிப்பு !

அஸ்ஸலாமு  அலைக்கும்
சகோதரர்களே,

இந்த புகைபடத்தில் இருப்பவரின் பெயர் காதர் மைதீன்.
தந்தை பெயர் ஜைனுலாப்தீன்,
ஊர் அதிராம்பட்டினம்

இவர் இப்போது திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ளார். சற்ற மனநிலை பாதிக்கபட்டுள்ளதால் இந்த தகவல்களைதான் பெற முடிந்தது நம்மால் ஆகவே இவறை பற்றி தகவல் தெரிந்தால் உடனே கீழ்கானும் நம்பருக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9659824380
( TNTJ சங்கரன் கோவில் கிளை )

தகவல் : இப்ராஹிம் அலி

முத்துப்பேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு !

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் மளிகை கடை வைத்து இருப்பவர் அப்துல் வகாப். இவரது மகன் முகம்மது சபியுல்லாவுக்கும, புதுக்கோட்டை மாவட்டம் பி.ஆர்.பட்டிணம் அபுல்பரக்கத் மகள் சபினா பேகத்திற்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்தை முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி திருமணமும், அதே பள்ளிவாசலில் சாப்பாடு நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டு திருமண பத்திரிக்கையில் அடிக்கப்பட்டன. அதனால் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசலில் இரண்டு நாட்களாக செய்யப்பட்டன. இந்த நிலையில் மணமகன் மற்றும் பெண் வீட்டார் திடீர் என்று தவ்ஹீத் கொள்கை படி திருமணத்தை நடத்த திட்டமிட்டு கருமாரியம்மன் கோவில் அருகே உள்ள மணமகனின் உறவினர் வீட்டில் வைத்து நேற்று காலை 11.30 மணியளவில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் திருமணத்தை நடத்தினர். பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி திருமணம் நடத்த தயாராக எதிர்பார்த்து காத்து இருந்த ஜமாத் நிர்வாகிகள், ஊர்காரர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், திருமணத்தை ஜமாத்துக்கு மாறாக தவ்ஹித் கொள்கைப்படி நடத்தியதால் பள்ளிவாசலில் சாப்பிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனர். இதனால் பெரும் பதற்றமானது. உடன் மனமகன் வீட்டாரும், தவ்ஹித் ஜமாத் பிரமுகர்களும் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தொவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீசார் ஆசாத்நகர் பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் பிரச்சனை பெரிதாகி ஆத்திரம் அடைந்து சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்ட மதரஸாவை பூட்டுப்போட்டு பூட்டினார்கள். இதனால் மணமகன் உறவினர்கள் தவ்ஹித் ஜமாத் முன்னாள் மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி தலைமையில் போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு மாப்பிள்ளை தந்தை அப்துல் வகாப் மற்றும் இவரின் தந்தை பக்கிர் ராவுத்தர் ஆகியோர் பள்ளிவாசல் சென்று சுன்னத் ஜமாத் நிர்வாகிகளிடம் நான் செய்தது தவறு மன்னித்து கொள்ளுங்கள். ஜமாத் என்னா முடிவு எடுத்தாலும் கட்டுப்படுகிறேன், வந்தவர்களுக்கு சாப்பாடு வழங்க அனுமதி தாருங்கள் என்று கண்ணீர் விட்டு கேட்டனர். அதனால் சமாதனம் அடைந்த பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், ஜமாத் கூட்டத்தை கூட்டினார்கள். இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் கலந்துக் கொணடனர். அப்பொழுது பள்ளிவாசலில் நடந்த கூட்டத்தில் போலீசார்கள் மணிகண்டன், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தனது செல் போனில் படம் எடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் இளைஞர்களுக்கும், போலீசுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு சமாதானம் செய்யப்பட்டன. அப்பொழுது நடந்த கூட்டத்தில் மாப்பிளை தந்தை பள்ளிவாசலுக்கு, செய்த தவறுக்காக ஒரு லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டன. இதற்கு மாப்பிள்ளை தந்தை அப்துல் வகாப் சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டார். அதன் பிறகு திருமணத்துக்கு சாப்பிட வந்த ஆண்கள் மற்றும் பெண்களை சாப்பிடும் மதரஸாவின் பூட்டை திறந்து அனுமதித்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் விசாரனை நடத்தினார்கள். மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பள்ளிவாசல் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி: நிருபர் முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை


தஞ்சை தொகுதியில் போட்டியிட அதிரை உமர் தம்பி மரைக்கா வேட்புமனு பெற்றார் !

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் வெளியிட்டுள்ள 12-வது வேட்பாளர்கள் பட்டியலில் தமிழகத்தில் அரக்கோணம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், தேனி, திருவள்ளூர், திருச்சி, வேலூர் ஆகிய 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதேபோல, அடுத்த பட்டியலில் தஞ்சாவூர் தொகுதியும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. எனவே, வேட்புமனுக்கள் பெறுவதற்காக ஆம் ஆத்மி கட்சியினர் சுமார் 10 பேர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு சனிக்கிழமை வந்தனர். இவர்களில் இருவரை மட்டுமே போலீஸார் உள்ளே அனுமதித்தனர். இரு மனுக்களை வாங்கிச் சென்றனர்.

இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு அக்கட்சியின் மாவட்டப் பொருளாளர் உமர் தம்பி, துணை அமைப்பாளர் பழனிராஜ் விருப்பம் தெரிவித்துள்ளனர். தலைமையிடத்திலிருந்து வேட்பாளர் பட்டியல் விரைவில் வரும் என்றும், வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு கட்சியினரிடம் கலந்தாலோசனை செய்து ஏப். 1 அல்லது 2-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.

நன்றி : தினமணி
புகைப்படம் : அதிரை நியூஸ்

Sunday, March 30, 2014

வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி !

அதிரை கீழத்தெருவில் அமைந்துள்ள வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஹாஜி M.M.S. தாஜுதீன் அவர்கள் தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் முஹம்மது அப்துல் காதர், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் மேஜர் முனைவர் கணபதி, பள்ளியின் முன்னாள் மாணவர் அல்அமீன், ஆதம் நகர் ஜமாத் துணைத்தலைவர் வாப்பு மரைக்காயர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கூரில் நடைபெற்ற மார்க்க அறிவுத்திறன் போட்டியில் பள்ளியின் சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன.

முன்னதாக பள்ளியின் ஆசிரியை பள்ளி நிகழ்த்திய சாதனையை ஆண்டறிக்கையாக வாசித்தார். இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியை நன்றியுரையுடன் நிகழ்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றது.


மரண அறிவிப்பு ! [ ஏரோ வேர்ல்ட் அன்சாரி அவர்களின் மாமனார் ]

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் உ.அ.மு. முஹம்மது முஸ்தபா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி உ.அ.மு. தாஜுதீன், ஹாஜி உ.அ.மு. சம்சுதீன் ஆகியோரின் சகோதரரும், ஏரோ வேர்ல்டு டிராவல்ஸ் ஹாஜி எம்.எஸ். அன்சாரி, S. சகாபுதீன் ஆகியோரின் மாமனாரும், ஹாஜா கமால் அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் காதர் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10.30 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

மரண அறிவிப்பு [ புதுத்தெரு வடபுறம் ஹாஜி அப்துஸ் ஸமது அவர்கள் ]

புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் செ.கா. ஹாஜா முகைதீன் அவர்களின் பேரனும், மர்ஹூம் அப்ஜத் இப்ராஹீம் அவர்களின் மகனும், மர்ஹூம் தாசின் கமால் அவர்களின் மருமகனும், ஹாஜா செரிப் அவர்களின் சகோதரரும், அப்ஜத் இப்ராஹீம், முஹம்மது, அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அப்துஸ் ஸமது அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரை டாக்டர் ராஜூ மருத்துவமனையில் இலவச இருதய மருத்துவ முகாம் !

அதிரை ராஜூ மருத்துவமனை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ சிகிச்சை முகாம் இன்று காலை 10 மணியிலிருந்து பகல் 3 மணி வரை நடைபெற்றது. 

இதில் சென்னை காவேரி மருத்துவனையின் இருதய சிறப்பு மருத்துவ நிபுணர் K. தாமோதரன் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் வருகை தந்து முகாமில் கலந்துகொண்டோருக்கு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் அதிரை  மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய 200 க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பிட்டு திட்டத்தில் மேற்கோள் சிகிச்சை சென்னை காவேரி மருத்துவமனையில் அள்ளிக்கப்ப்டும் என தெரிகிறது.

முகாமிற்கு தேர்வையான அனைத்து வசதிகளையும் மருத்துவர் ராஜூ மற்றும் அவரது குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.


ஒரு கடிதத்தால் சாதித்த அதிரையர் !

அதிரையில் கடந்த வாரங்களுக்கு முன் நள்ளிரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை திடிரென தொடர்ந்து மின் தடங்கள் ஏற்பட்டு வந்தது. இதனால் அதிரை பொதுமக்களும், அரசு பொதுத்தேர்வு  எழுதிய மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

முன்னறிப்பின்றி ஏற்படும் மின் தடங்கள் குறித்து நமதூர் மனிதஉரிமை ஆர்வலர் K.M.A. ஜமால் முஹம்மது அவர்கள் மின்சாரவாரியத்தை அணுகி காரணம் கேட்டதில், தவறு அதிரையில் இல்லை என்றும், மதுக்கூரில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 17-03-2014 அன்று மின்சார உயரதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திருக்கிறார். அதன் பலனாக மின்சார வாரிய துரித நடவடிக்கை மேற்கொண்டு பழுதுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இதனால் அதிரையில் இரவு நேரத்தில் திடிரென ஏற்படும் மின் தடங்கள் தற்போது குறைந்து காணப்படுகின்றன.


Saturday, March 29, 2014

அதிரையில் டிஆர் பாலுவை ஆதரித்து இரு வேறு இடங்களில் மமகவினர் நடத்திய தெருமுனை பிரசாரங்கள் !

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று இரவு 7 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தின் அருகே தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. டிஆர் பாலுவை ஆதரித்து தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 8 மணியளவில் தக்வா பள்ளியின் அருகே மீண்டும் பிரசாரம் தொடங்கியது. இரு வேறு இடங்களில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில் தலைமை கழக பேச்சாளர் திருச்சி ரபீக் மற்றும் மமகவின் நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான மமக மற்றும் திமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.


மரண அறிவிப்பு [ தட்டாரத்தெரு ]

தட்டாரத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சி.செ.மு. சேகு அப்துல் ரஹ்மான் ஹாஜியார் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது யாசின் அவர்களின் சகோதரரும், முஹம்மது புஹாரி, ஹபீப் ரஹ்மான், அஹமது தாஜுதீன் ஆகியோரின்  தகப்பனாரும், ஜமால் முஹம்மது அவர்களின் மாமனாருமாகிய சி.செ.மு. அஹமது இப்ராஹீம் அவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Friday, March 28, 2014

அதிரையில் புதியதோர் உதயம் 'ஹாட் விங்ஸ்' துரித உணவகம் !

அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் [ அல் அமீன் பள்ளி அருகே ] புதியதோர் உதயமாக 'ஹாட் விங்ஸ்' துரித உணவகம் இன்று [ 28-03-2014 ] மாலை முதல் செயல்பட துவங்கியது. திறப்பு நாளான இன்று ஏராளமான அதிரையர்கள் கலந்து கொண்டு உணவு வகைகளை ருசித்து சாப்பிட்டனர். வந்திருந்த அனைவரையும் நிறுவனத்தின் உரிமையாளர் அன்வர் சதாத் அன்புடன் வரவேற்றார்.

தொழில்குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் அன்வர் சதாத் நம்மிடம் கூறுகையில்...
'நவீன வசதிகளுடன் குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்த ஏற்றதொரு இடமாகவும், ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உடனுக்குடன் சுவையுடன் கூடிய உணவுகளை தயாரிக்கப்படுவதுடன், கனிவான உபசரிப்பு, ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே இலவசமாக ஹோம் டெலிவரி செய்வது போன்ற வசதிகளை ஏற்படுதியுள்ளோம். மேலும் ஃப்ரைட் சிக்கன், சிக்கன் போன்லெஸ், புரோஸ்டட் சிக்கன், சிக்கன் பாப்கார்ன், சிக்கன் லாலி பாப், சிக்கன் நக்கெட்ஸ், பிரெஞ்ச் ஃப்ரை ஆகியன இங்கே தயார் செய்யப்படுகிறது. புதினா, ஆரஞ்சு, மேங்கோ, பைனாப்பிள், புருட் பியர்,கோலா, லெமன், மசாலா சோடா போன்ற வெரைட்டிகளில் குளிர்பான வகைகளும் உண்டு' என்றார்.

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.