.

Pages

Thursday, December 31, 2015

அதிரை சேர்மன் இல்லத் திருமணம்: விழா துளிகள் !

அதிரை பேரூராட்சியின் பெருந்தலைவராக பொறுப்பில் இருப்பவர் எஸ்.ஹெச் அஸ்லம். இவரது குடும்ப திருமண விழா இன்று மாலை செக்கடி பள்ளியில் உலமாக்கள், மஹல்லா நிர்வாகிகள், குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் துளிகள்:
1. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய டி.ஆர் பாலு, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

2. முன்னதாக வண்டிப்பேட்டையில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் சார்பில் டிஆர் பாலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டிஆர் பாலுக்கு அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதைதொடர்ந்து திமுகாவை சேர்ந்த ஏராளமானோர் சால்வை அணித்து வரவேற்றனர்.

3. விழா மேடையிலும், வண்டிப்பேட்டை வரவேற்பிலும் காயல்பட்டினம் குழுவினர் தப்ஸ் முழங்கினார்கள். இவை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

4. வண்டிப்பேட்டையிலிருந்து 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக கொடியுடன் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து டிஆர் பாலுவை விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.

5. டிஆர் பாலுவின் வாகனத்தை பின் தொடர்ந்து திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் வாகனங்களில் அணிவகுத்து வந்தனர்.

6. வண்டிப்பேட்டை முதல் திருமணம் நடைபெறும் செக்கடி பள்ளி பகுதி வரையிலான இருபுறமும் அமைக்கப்பட்ட கம்பங்களில் திமுக கொடிகள் பறக்க விடப்பட்டன.

7. அதிரை சேர்மனின் ஆதரவாளர்கள், நண்பர்கள் பலர் திருமண நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தும், நிகழ்ச்சிக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்று அதிரையின் பிரதான பகுதிகளில் ஆங்காங்கே பிரமாண்ட ப்ளக்ஸ் பேனர்கள் வைத்தனர். மேலும் அதிரை பகுதிகளில் ஆங்காங்கே ஒட்டப்பட்ட வால்போஸ்டர்களிலும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

8. வாகன நெருக்கடியை தவிர்க்க தனியார் செக்யூரிட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும் இவர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியையும் மேற்கொண்டனர்.

9. விழா குழுவினர் திமுக பேட்ஜ் அணிந்து களப்பணி ஆற்றினார்கள்.

10. செக்கடி பள்ளி வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், ஒரு பகுதியினரை சாலையோரத்தில் போடப்பட்ட விழா மேடை பந்தலிலும், செக்கடி குளம் நடைமேடை பகுதியிலும் அமர வைக்கப்பட்டனர்.

11. திருமண விழா முடிந்தவுடன் செக்கடி பள்ளி அருகில் வெளியூர் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுக்கு பிரியாணி இலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் உடனிருந்து விருந்தாளிகளை கவனித்துக்கொண்டார்.

12. முன்னதாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், உள்ளூர் - வெளியூர் மற்றும் வெளிநாடு நண்பர்களை வரவேற்று நன்றி தெரிவித்துக்கொண்டார்.

13. விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிரை அனைத்து மஹல்லா சங்கங்களின் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், அதிரை சுற்று வட்டார கிராமத்தினர், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மதுக்கூர், மல்லிபட்டினம், புதுப்பட்டினம், செந்தலைபட்டினம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருகை தந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

 
 


அதிரை பகுதியின் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகள் !

அதிராம்பட்டினம், டிசம்பர் 31
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து நாசப்படுத்தி விடுகின்றன.அதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிரை பகுதியில் அடர்ந்த அலையாத்தி காடுகள் உள்ளன. இக்காட்டில் நரி, காட்டுப்பன்றி, முயல், காட்டு பூனை போன்ற வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி முடுக்குக்காடு, கரிசைக்காடு, வள்ளிக்கொல்லைக் காடு கருங்குளம், மஞ்சவயல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி நிலங்கள் உள்ளன. இதில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாற்றாங்கால் வயல்களில் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றை தின்பதற்காக இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வரும் காட்டு பன்றிகள் வயல்களை பள்ளம் பள்ளமாக தோண்டி நாசப்படுத்தி விடுவதால் விவசாயிகள் பெரும் பாதிப்படைகின்றனர். வயல் பகுதிக்கு காட்டு பன்றிகள் புகாமல் தடுக்க வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

முத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா அழைப்பு!

அதிரை அடுத்துள்ள முத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று 31.12.2015 நள்ளிரவு தொடங்கி 2016- ஆம்ஆண்டு துவங்கும் அதிகாலை 12-மணிக்கு நடைபெறுகிறது. இதில் சமூக ஆர்வலர் முத்துப்பேட்டை முகமதுமாலிக் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடந்து நடைபெறும் மதநல்லிணக்க புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் பிரமாண்டமான கேக்கை அனைத்து மத சகோதர்கள் வெட்டி சிறப்பிக்க உள்ளார்கள். எனவே இதனையே அழைப்பாக ஏற்று தாங்கள் அவசியம் கலந்துகொள்ள 'நிருபர்' முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.அமீரகத்தில் எதிகாத் ரயில் நிறுவனம் நடத்திய போட்டியில் தமிழக மாணவருக்கு பரிசு !

எதிகாத் ரயில் நிறுவனம் நடத்திய போட்டியில் தமிழக மாணவருக்கு  பரிசு வழங்கப்பட்டது.

அமீரகத்தை இணைக்கும் வகையில் எதிகாத் ரயில் நிறுவனம் சிறப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கலைப் போட்டிகளை நடத்தியது. இந்த போட்டியில் சார்ஜாவில் உள்ள அவர் ஓன் ஆங்கிலப் பள்ளியில் பயின்று வருகிறார். இவர் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தை சேர்ந்த மாணவர் ஹுமைத் அபுபக்கருக்கு மூன்றாம் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எதிகாத் ரயில் நிறுவன அதிகாரி சான்றிதழையும், ஆப்பிள் ஐ பேடையும் பரிசாக வழங்கினார்.

இவர் ஏற்கனவே கல்வியிலும், பொதுசேவையிலும் சிறப்பாக இருந்து வருவதற்காக துபாய் அரசின் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் விருது, மின்சாரம் மற்றும் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தியதற்காக சார்ஜா சஸ்டெய்னபிலிட்டி விருது, சார்ஜா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விருது, சார்ஜா அரசின் கல்வி விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். கிரீன் குளோப் என்ற அமைப்பினை ஏற்படுத்தி கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட விழிப்புணர்வு பணிகளை இவர் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாணவர்களிடம் நிதியினை திரட்டி உதவி செய்துள்ளார்.

இவரது தந்தை அபுபக்கர் எதிசலாத் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தாய் யாஸ்மின் அபுபக்கர் மற்றும் சுட்டியான இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர்.

Wednesday, December 30, 2015

மச்சான், விருந்துக்கு போகலாம் வர்றீயா?.


மச்சான், விருந்துக்கு போகலாம் வர்றீயா?.

நா வரலேப்பா,

யாம்ப்பா? உடம்புக்கு ஏதும் பண்ணுதா?

இல்லே!

பின்னே!

எனக்கு அழைப்பு வரலே, அதனாலே நா வரலே. நீ வேணும்னா போயிக்கோ.

எனக்கும்தான் அழைப்பு வரலே, அதுக்காக இந்த விருந்தை விடமுடியுமா?

மச்சான், அழைப்பு வராமே போவது சரி இல்லை? நீ போகாதே.

மச்சான், நான் சொல்லுவதை நிதானமாகக் கேள்.
கல்யாண வீட்டு காரர்களுக்கு நாம போனாலும் போகாட்டியும் ஒன்னும் தெரிந்து வராது. நூறோடு நூற்றிஒன்று, இரண்டாவதாக இந்த விருந்து மண்டபத்திலே நடக்குது அவ்வளவுதான்.

நேற்று வரைக்கும் இவைவிடாமல் இறைச்சி பிரியாணி, காலை, இரவு ரொட்டியும் கறியும் கணக்கில்லாமல் சாப்பிட்டதினால், ஒரே புளிச்ச ஏப்பமா வருது, ராத்திரி நேரத்திலே வட்டுலப்பம் சாப்பிட்டது ஒரே மாதிரியாக இருக்குது.

வயிறு சரியில்லை என்று சொல்றா, அப்போ எதுக்கு விருந்துக்கு போறேன்னு துடிக்கிறா?

மச்சான், நீனும் தானே சொன்னாய் வயிறு சரி இல்லை என்று!?., இன்னைக்கு அவங்க வீட்டு விருந்தாம், அதுவும் ஐந்து கறி “சோராம் விருந்தாம், அதிலே அழகான தேங்கா பால் புளியானமும் இருக்கும்.

நெய்ச்சோறுக்கும்–இறைச்சி கறியானத்துகும்–புளியானத்துக்கும் சூப்பர் கெமிஸ்ட்ரி மச்சான், இந்த புளிச்ச ஏப்பம் எல்லாம் பறந்து போய் விடும், வாவேன், போய் ஒரு புடி புடிச்சுட்டு வரலாம்.

ஆமா! இந்த புளியானத்துக்காக போகனுமா? நா வரலே மச்சான்.

என்ன மச்சான் இப்படி கேட்டுட்டா? அதிரை புளியானம் இண்டர்நஷனல் பேமஸ், அது தெரியுமா உனக்கு.

அமெரிக்காவில் இருக்கின்ற எல்லா ரெஸ்டாரண்டுலேயும் நம்ம ஊரு புளியானதாம் மிகவும் தூக்கலாக இருக்குதான். அவங்களே நம்ம ஊரு புளியானத்தை குடிக்கும்போது, நாம அதை ஒதுக்கலாமா...! அதனாலே நீ வர்றா, அவ்வளவுதான்.

மச்சான், இன்னொரு விஷயம் உன்னிடம் சொல்லணும்.

என்ன அது.

நேத்து ராத்திரி தோழன் சாப்பாடுக்கு போனோம்ல.

ஆமாம், அதுக்கு என்ன.

அந்த பெண்வீட்டு காரர்களுக்கு ரவா வை காய்ச்ச தெரியலே`!

ஏன்? என்னாச்சு?

நார்மலாக, ரவாவை லேசாக வறுத்து, தேங்காய்ப்பால் விட்டுதான் காய்ச்சுவார்கள். அப்போதுதான் அது சுவையாக இருக்கும்.

சரி இப்போ அதுக்கு என்ன சொல்ல வர்றே?

அவங்க, ரவாவை வறுக்காமே, பசும்பாலில் காய்ச்சதினாலே, ஒரே பால் வாடையாக இருந்தது. அதுவே என் வயிற்றை கலக்குது.

மச்சான், ஒரு விஷயத்தை கவனி, இப்போ நாம போற விருந்தில் சூப்பர் புளியாணம் இருக்குது, அதோடு வயிற்றுப் பிரச்சனை எல்லாம் போய்விடும்.

சரி மச்சான், நானும் வர்றேன்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
CONSUMER RIGHTS.

மவ்லவி அதிரை எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்களின் வாழ்க்கை வரலாறு !

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த மவ்லவி எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து இலங்கை மௌலவி காத்­தான்­குடி பௌஸ் அதிபர், அல்­பலாஹ் குர்ஆன் மத்­ரஸா பாணந்துறை அவர்களால் தொகுக்கப்பட்ட கட்டுரை 'விடிவெள்ளி ஆன்லைன்' என்ற இணையதளத்தில் வெளியாகியது. அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கட்டுரையை நன்றியுடன் அப்படியே எடுத்து இங்கு மீள் பதிவு செய்கிறோம்.

இலங்­கையின் கிழக்கு மாகாணம் மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து தெற்­காக ஐந்து கிலோ மீட்­டர் தொ­லைவில் அடைந்­து­விடக் கூடிய அற்­பு­த­மான ஊரே காத்­தான்­கு­டி­யாகும்.

இவ்­வூரின் இலட்­ச­ணத்­துக்கு ஆணி­வே­ராக அமைந்த கல்வித் தாபனம் மத்­ர­ஸதுல் பலாஹ் அரபுக் கல்­லூ­ரி­யாகும். இக் கல்­லூரி 1955 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது.

காலியைப் பிறப்­பி­ட­மா­கவும் அட்­டா­ளைச்­சே­னையை வாழ்­வி­ட­மா­கவும் கொண்ட மர்ஹும் அப்­துல்லாஹ் ஆலிம் ஸாஹிப் அவர்கள் இதனை ஆரம்­பித்து வைத்­தார்கள். அன்று முதல் மார்க்க சட்­டங்­க­ளையும் அல்­குர்ஆன், அல்­ஹதீஸ், தப்ஸீர் விரி­வாக்கம் ஆகிய பாடங்­க­ளுடன் அரபு இலக்­கண, இலக்­கியம் அனைத்தும் பயிற்­று­விக்­கப்­பட்­டன.

அதி­பர்கள் விபரம்
இக் கல்­லூ­ரியின் ஆரம்ப அதி­ப­ராக காலியைச் சேர்ந்த மர்ஹூம் மௌலவி ஏ. அஹ்மத் ஆலிம் ஸாஹிப் அதன் பின்னர் அக்­கு­ற­ணையைச் சேர்ந்த மௌலவி எம்.ஏ.எம்.ஜே. ஸைனுல் ஆப்தீன் ஆலிம், காத்­தான்­கு­டியின் மூத்த உலமா மர்ஹூம் எஸ்.எம்.எம். முஸ்­தபா (கப்பல் ஆலிம்) ஆகியோர் பிரதி அதி­ப­ராகக் கட­மை­யாற்­றினர்.

அதன் பின்னால் அதி­ப­ராக தென் இந்­தியா அதிராம்பட்­டி­னத்தைச் சேர்ந்த மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ. முஹம்­மது அப்­துல்லாஹ் (ரஹ்­மானி) அவர்கள் 1959 ஆம் ஆண்டு தனது கட­மையைப் பொறுப்­பேற்­றார்கள். இவர்­க­ளது அய­ராத முயற்­சி­யினால் காத்­தான்­கு­டியின் கண்­ணாக மத்­ர­ஸதுல் பலாஹ் விளங்க ஆரம்­பித்­தது.

பாட விரி­வாக்கம்
‘தப்ஸீர்” அல்­குர்ஆன் விரி­வாக்கம், ‘பிக்ஹு” மார்க்க சட்டக் கலை நுணுக்­கங்கள், ‘அகாயித்” சமய சித்­தாந்தம், ‘தஸவ்வுப்” பண்­பாட்டுக் கலை ‘உஸுல்” சட்ட மூலா­தாரம், ‘லுகத்” அரபு மொழி­ய­றிவு, ‘நஹ்வு” சொற்­பு­ணர்ச்சி இலக்­கியம் ‘ஸர்பு” சொல் இலக்­கண ஞானம்.

‘இல்முல் பயான்” உரை இலக்­கண ஞானம்,  யாப்­பி­லக்­கணம், அள­வியல் பேச்சு நுட்ப ‘மன்­தி­கையும்'' இன்னும் இது போன்ற பல கலை­க­ளையும் தாமாக முன்­னின்று அப்­துல்லாஹ் (ரஹ்­மானி) ஆலிம் அவர்கள் அதி­ப­ராக போத­க­ராகப் பயிற்­று­வித்­தார்கள்.

மௌலவி தரா­தரம்
இலங்கை அர­சாங்­கத்தின் கல்வி அமைச்­சினால் 17.11.1959  இல் இம் மத்­ரஸா பதி­யப்­பட்­டது. இதன் நிமித்தம் இதே ஆண்டு இக்­கல்­லூ­ரியில் மாண­வர்கள் தங்கிப் படிப்­ப­தற்­கான விடுதி வச­தியும் செய்­யப்­பட்­டது. இதன் பின்னால் நாட்டின்  நாலா பகு­தி­க­ளி­லி­ருந்தும் மாண­வர்­களின் வருகை அதி­க­ரித்­தது. பயிற்­று­விப்­பு­களும் சீராக நடை­பெற்­றன.

இதற்­க­மைய மத்­ர­ஸதுல் பலாஹ்வின் முத­லா­வது பட்­ட­ம­ளிப்பு விழா 18.01.1962 இல் மிகச் சிறப்­பாக நடை­பெற்­றது. முழு காத்­தான்­கு­டியும் கண்டு களிக்கும் அள­வுக்கு ஊர்­வ­ல­மாக மௌல­விமார் அழைத்து வரப்­பட்­டது அந்த நாட்­களில் அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­தது.

அல்­குர்ஆன் மனன வகுப்பு
இலங்­கையில் முத­லா­வது அல்­குர்ஆன்  மனன ‘ஹிப்ழ்” வகுப்பு மத்­ர­ஸதுல் பலாஹ்­வில்தான் முத­லா­வ­தாக 18.12.1971 இல் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இந்த வகுப்பை தென் இந்­தியா காயல் பட்­டி­னத்தைச் சேர்ந்த மர்ஹூம் மௌலானா, மௌலவி அல் ஹாபிழ் ரீ.எம்.கே. செய்யித் அஹ்மத் (முத்து வாப்பா) ஆலிம் அவர்கள் ஆரம்­பித்து வைத்­தார்கள்.

இந்த ‘ஹிப்ழ்’ பணிக்­காக அதிபர் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள்  சம்­மாந்­து­றையைச் சேர்ந்த மௌலவி ஹாபிழ்  ஏ. ஹஜ்ஜி முஹம்மத் அவர்­களை  நிய­மித்­தார்கள்.

அய­ராத முயற்­சியின் கார­ண­மாக 1975 ஆம் ஆண்டு அல்குர் ஆனின் 6666 வச­னங்­க­ளையும் மனனம் செய்த ஹாபிழ்கள் குழு பட்டம் பெற்று வெளி­யே­றி­னார்கள். இந்த ஹாபிழ்கள் எதிர்­கால நலன்­க­ருதி இதே மத்­ர­ஸாவில் மௌலவி பயிற்சி நெறி­யையும்  எட்டு வரு­டங்கள் முடித்து வெளி­யே­றி­னார்கள்.

ஜாமி­அதுல் பலாஹ்!
மத்­ர­ஸதுல் பலாஹ் என்ற பெயரில் இயங்கி வந்த இக்­கல்­லூரி 1974 ஆம் ஆண்டு  ‘நூறுல் பலாஹ்’  என்ற இரு­ப­தாண்டுப் பூர்த்தி விழா மலர் ஒன்றை வெளி­யிட்­டது. அப்­போது நான் இக்­கல்­லூ­ரியில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயில்­கின்றேன்.

எனது இலக்­கிய ஆர்­வத்தைப் பயன்­ப­டுத்தி ‘முத்­தான குர்ஆன் ’ என்ற கவி­தையை மல­ருக்கு எழு­தினேன். இம்­ம­லரின் ஆசி­ரி­ய­ராக மௌலவி எம்.எச்.எம். புஹாரி பலாஹி செயற்­பட்டார்.

இந்த மலரின் பின்னர் ஏற்­பட்ட விழிப்­பு­ணர்வால் 1983 ஆம் ஆண்டு இக் கல்­லூ­ரி மத்­ர­ஸதுல் பலாஹ் என்ற பெயரை மாற்றி “ஜாமி­அதுல் பலாஹ்” எனும் பெயரில் உயர்­ க­லா­பீ­ட­மாக மாற்­றப்­பட்­டது.

இங்கு வெளி­யே­றிய மௌல­விமார் வெளி­நாட்டு ஜாமி­ஆக்­களில் கல்வி பயில்­வ­தற்கு இந்த ஜாமிஆ என்ற மாற்றம் முக்­கி­ய­மாகத் தேவைப்­பட்­டது.

இன்றும் பல்­நாட்டுப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஜாமி­அதுல் பலாஹ் மாண­வர்கள்  உயர்­கல்வி பெற்று வெளி­யே­றி­யுள்­ளனர். அது மாத்­தி­ர­மன்றி இங்கு பட்­டம்­பெற்று வெளி­யே­றிய ஹாபிழ்கள் முஸ்லிம் நாடு­களில் நடை­பெற்ற அல்­குர்ஆன் போட்­டி­களில் பங்­கு­பற்றி பரி­சில்­களை சுவீ­க­ரித்­துள்­ளனர்.

கல்விச் செயற்­பா­டுகள்!
ஜாமி­அதுல் பலாஹ்வில் தனி அரபை மாத்­திரம் பயிற்­று­விக்­காது அல் ஆலிம் பரீட்­சைக்­கு­ரிய பாடங்­களும் தமிழ், கணிதம், சமூகக் கல்வி, ஆங்­கிலம், உருது போன்ற மொழி­களும் பாடங்­களும் பயிற்­று­விக்­கப்­பட்­டது.

தற்­போது கல்வி விரி­வாக்­கலை மைய­மாகக் கொண்டு அர­சாங்க பாடத் திட்­டத்­தோடு இணைந்து தரம் 8 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதா­ரணம், க.பொ.த. உயர்­தரம் வரை வகுப்­புகள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

மேல­தி­க­மாக கணனி செயற்­பாட்டு கருத்­த­ரங்­குகள், பயிற்­று­விப்­பு­களும் முறை­யாக நடை­பெ­று­கின்­றன.

ஒரு வரு­டத்தில் அரை­யாண்டுப் பரீட்சை வருட இறுதிப் பரீட்­சைகள் நடை­பெறும். கல்விக் காலம் முடி­யும்­போது மௌலவிப் பரீட்சைத் தகு­திகாண் உல­மாக்கள் மூலம் நடத்­தப்­ப­டு­கின்­றது.

விசேட விரி­வு­ரை­யா­ளர்கள்
அதிபர் மௌலானா மௌலவி எம்.ஏ. முஹம்மத்  அப்­துல்லாஹ் ஆலிம் (ரஹ்­மானி) அவர்­க­ளுடன் வெளி­நாட்டு இஸ்­லா­மிய பட்­ட­தா­ரி­களும் பங்­கேற்­றனர்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த அல்­லாமா மௌலானா அஹ்மத் அப்துல் ஹமித், பாகிஸ்­தானைச் சேர்ந்த அல்­லாமா மௌலானா மக்சூத் அஹ்மத், மௌலானா நூர் இலாஹி போன்­ற­வர்­க­ளுடன் உப அதி­ப­ராக மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) யுடன் விரி­வு­ரை­யா­ளர்­க­ளாக  மௌலவி பீ.எம்.எம். ஹனீபா (பலாஹி), மௌலவி ஏ.ஜீ.எம். அமீன் (பலாஹி), மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி), மௌலவி எம்.வை. ஸைனுதீன் (பலாஹி மதனி), மௌலவி எம்.எம். அப்துர் ரஹீம் (பலாஹி), மௌலவி ஏ.ஆர். நிஸார் (பலாஹி), மௌலவி எம்.எம். கலா­முல்லாஹ் (றஷாதி), மௌலவி எம்.ஐ. அப்துல் கபூர் (பலாஹி மதனி), மௌலவி ஏ.எம். அலியார் (பலாஹி றியாழி) ஆகி­யோ­ருடன் ஹிப்ழ் பிரி­வுக்­காக மௌலவி ஹாபிழ் ஏ.எஸ்.எம். ஜின்னாஹ் (பலாஹி), மெள­லவி ஹாபிழ் என்.எம். அப்துல் அஹத் (ஷர்கி) ஹாபிழ் எஸ்.எம். கலந்தர் லெப்பை போன்­ற­வர்­களும் புதிய பல முகங்­களும் தொண்­டாற்­றி­னார்கள்.

ஜாமி­அதுல் பலாஹ்வின் உயர்­ப­டி­யான முன்­னேற்­றத்­திற்குக் காரணமாக அன்றும் இன்றும் சிரமம் பார்க்­காது உழைத்த நிரு­வாக சபை­யி­னரைப் பாராட்­டாமல் இருக்க முடி­யாது.

இக்­கல்­லூ­ரிக்­காக உதவி செய்த உள்ளூர், வெளியூர் மக்­க­ளையும் காத்­தான்­குடி கல்வி உலகம் மறக்­க­மாட்­டாது என்­பது உண்மை.

‘ஷைகுல் பலாஹ்”வின் வாழ்­வியல்
காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அதிபர் மௌலானா மௌலவி ‘ஷைகுல் பலாஹ்” எம்.ஏ. அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்கள் தென்­னிந்­தியா, தஞ்சை மாவட்டம் அதிராம் பட்­டி­னத்தில் 21.03.1932 இல் பிறந்­தார்கள்.

இவர்­களின் தந்தை அல்­லாமா அல்ஹாஜ் முகம்­மது அபூ­பக்கர் ஆலிம் ஆவார்கள்.

இப்­பெ­ரியார் 1950 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை மஹ­ர­கம மத்­ர­ஸதுல் கபூ­ரிய்யா அரபுக் கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றி­யுள்­ளார்கள்.

1955 ஆம் ஆண்டு முதல் 1965  ஆம் ஆண்டு வரை அட்­டா­ளைச்­சேனை ஷர்க்­கியா அரபுக் கல்­லூ­ரியில் அதி­ப­ராகக் கட­மை­யாற்றி பின்னர் இந்­தி­யாவில் கீழ்க்­கரை, காயல்­பட்­டினம் போன்ற இடங்­களில் கல்விப் பணி­யாற்­றி­னார்கள். இவர்கள்  உலமாக் குடும்­ப­மாகும்.

தந்தை வழியே தனயன்
தந்தை அபூ­பக்கர் ஆலிம் ஷாஹிப் போன்று தன­ய­னான மௌலானா மௌலவி அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­களும் ஆலி­மாக வெளி­வ­ரு­வ­தற்­காக சொந்த ஊர் அதிராம்பட்­டி­னத்தில் மத்­ர­ஸதுல் ரஹ்­மா­னிய்யா அரபுக் கல்­லூ­ரியில் சேர்ந்­தார்கள்.

தந்தை அபூ­பக்கர் ஆலிம் அவர்­களின் ஆசி­யோடும் அன்புத் தாயார் நபீஸா உம்மா ஆகி­யோரின் துஆ­வோடும் பாட­சாலை வாழ்க்­கையைத் தொடர்ந்­தார்கள்.

கல்­வி­மான்­க­ளான அல்­லாமா அஸ்­ஸெய்­யிது அலவி தங்கள் அஷ்­ஷைகு அஹ்­மது கபீர், அல்­லாமா முகம்­மது முஸ்­தபா (பாகவீ), மௌலானா மௌலவி எம்.எஸ்.எம். நெய்னா முஹம்­மது ஆலிம் போன்ற மேதை­க­ளிடம் கால்­ம­டித்து கல்வி பயின்­றார்கள். 01.04.1954 ஆம் ஆண்டு ரஹ்­மானி பட்­டத்­துடன் மத்­ரஸா வாழ்க்­கையை முடித்து வெளி­யே­றி­னார்கள்.

ஆரம்ப ஆசி­ரியர் பணி
ஆரம்ப ஆசி­ரியர் பணியை அதிராம்பட்­டினம் அல் மத்­ர­ஸதுல் ஸலா­ஹிய்­யாவில் அதி­ப­ராகப் பதவி ஏற்று நான்கு ஆண்­டுகள் நல­மாக நடத்­தி­னார்கள். அதன் பின்னர் தனது தந்­தை­யுடன் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் 03.05.1958 ஆம் ஆண்டு இலங்­கைக்கு வந்து அட்­டா­ளைச்­சேனை அரபுக் கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றினார்.

பின்னர் காத்­தான்­குடி மத்­ர­ஸதுல் பலாஹ் அரபுக் கல்­லூ­ரிக்கு தகுந்த விரி­வு­ரை­யாளர் தேவைப்­பட்­டதால் 13.10.1959 ஆம் ஆண்டு உப அதி­ப­ராக காத்­தான்­குடி மத்­ர­ஸதுல் பலாஹ்வில் கட­மையைத் தொடர்ந்­தார்கள். இவர்­களின் வரு­கையால் இக்­க­லை­யகம் அறி­வியல் ஒளி­பெற்றுத் திகழ்ந்­தது.

இல்­லறம்
அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் அதிராம்பட்­டினம் செ.மு.க. நூறு முஹம்­மது மரைக்­காயர் அவர்­களின் புதல்வி உம்முல் பஜ்­ரி­யா­ அ­வர்­களை 02. 09. 1961 ஆம் ஆண்டு மண­மு­டித்­தார்கள்.

இந்த இனிய வாழ்வில் மூன்று ஆண் குழந்­தை­களைப் பெற்­றெ­டுத்­தார்கள். முறையே மூத்த புதல்வர் முஹம்­மது  ரஹ்­ம­துல்லாஹ். அடுத்­தவர் முஹம்­மது முஸ்­தபா, மூன்றாம் மகன் முஹம்­மது பறக்­கத்­துல்லாஹ் ஆவார்கள்.

நீண்ட நாட்­களின் பின்­னர்தான் தனது மனைவி, பிள்­ளை­களை அப்­துல்லாஹ் ஹஸ்ரத் பார்க்கச் செல்­வார்கள்.

தொலை­பேசி வச­திகள் சீர் இல்­லாத காலத்தில் கடிதத் தொடர்­புடன் மாத்­திரம் தனது உற்றார் உற­வி­ன­ருடன் தொடர்பு வைத்து தனது வாழ்­நாளை ஜாமி­அதுல் பலாஹ்வின் சேவைக்­காக அர்ப்­ப­ணித்த அற்­புத மனி­தரின் இல்­லற வாழ்வின் பிந்­திய பக்கம் தனது அன்­புக்­கு­ரிய மனைவி பஜ்­ரிய்யா அவர்கள் இறை­யடி சேர்ந்­தார்கள்.

சோராத மனத்­திறன்
முஃமீன்கள் சோதிக்­கப்­ப­டு­வார்கள் என்­ப­தற்­கி­ணங்க சங்­கைக்­கு­ரிய உஸ்­தாத்னா ஷைகுல் பலாஹ் அல்­லாஹ்வின் சோத­னைக்­குள்­ளா­கிய போதும் சோர்ந்து போகாமல் தனது பிள்­ளை­களைக் கல்­வி­மான்­க­ளாக மாற்றும் முயற்­சி­யில் ஈடு­பட்­டார்கள்.

தனது மூத்த புதல்வர் முஹம்­மது ரஹ்­ம­துல்­லாஹ்­வையும் இளைய புதல்வர் பறக்­கத்­துல்­லாஹ்­வையும் காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ்வில் கல்வி பயில வழி செய்­தார்கள். அதன் சிறப்­பாக 1991 ஆம் ஆண்டு ரஹ்­ம­துல்லாஹ் மௌலவி பட்டம் பெற்று பின்னர் வாழைச்­சேனை ‘குல்­லி­யதுன் நஹ்­ஜதில் இஸ்­லா­மிய்யா’ அர­புக் ­கல்­லூ­ரியில் அதி­ப­ராகக் கட­மை­யாற்­று­கின்றார். இவர் பன்­னூ­லா­சி­ரி­ய­ராகத் திகழ்­கின்றார்.

உஸ்­தாத்­னாவின் இரண்­டா­வது மகன் முஸ்­தபா. நீண்ட கால­மாக நோய்­வாய்ப்­பட்­டி­ருந்து அண்­மையில் தாருல் பகாவை அடைந்து விட்டார். மூன்­றா­வது மகன் முஹம்­மது பறக்­கத்­துல்லாஹ்.

கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இயங்கும் ‘ஜாமிஆ மதீ­னத்துல் இல்ம்” கல்­லூ­ரியில் அல்­ஹாபிழ் பட்டம் பெற்று காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ்வில் மௌலவி பட்டப் படிப்பைத் தொடர்ந்து இதே கல்­லூ­ரியில் போதனாசி­ரி­ய­ராகக் கட­மை­யாற்­று­கின்றார்.

உஸ்­தா­துனா அவர்­க­ளுக்கு ஏற்­பட்ட சோதனை என்­பது 55 வருட கால­மாக பெற்ற தாயை பிறந்த பொன்­னாட்டை உற்­றாரை, உற­வி­னரை, சுற்­றத்­தாரைப் பிரிந்து கடல் கடந்து வந்து கல்விப் பணி­யாற்­றிய அன்னார் சொந்த ஊரில் தங்­கிய காலம் கொஞ்­சம்தான். அப்­படி இருந்தும் அன்பு மனை­வி­யாரும் மர­ணித்து இறை­யடி சென்­று­விட்­டார்கள். வாழ்வே சோத­னை­யா­னது.

ஹஸ்­ரத்தின் கல்­வி­யூற்று
அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­க­ளிடம் காணப்­பட்ட கல்­வியின் ஊற்று பரம்­பரை அறி­வி­யலின் தாக்­க­மாகும். இந்­திய நாட்டின் மலை­யாளப் பிர­தேசம் கொச்­சிப்­பட்­ட­ணத்தை தாய­க­மாகக் கொண்ட அஷ்­ஷைகு கோஜா அலவி அவர்­களின் பரம்­ப­ரையைச் சேர்ந்­த­வர்கள். இவர்­களே ஒரு பெரிய கல்வி மகா­னாகும்.

அது மாத்­தி­ர­மின்றி இந்­தியா தஞ்சை மாவட்டம் அதிராம் பட்­டி­னத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் அறி­வுப்­பட்­ட­ணத்­தி­லேயே பிறந்­தார்கள். இங்கு அறி­ஞர்­களை மிகவும் மதிப்­பார்கள்.

அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­களின் பாட்­டனார் அல்­லாமா ஷேகு அப்துல் காதிர் சூபி அவர்­க­ளா­வார்கள். இவர்கள் ஆக்­கிய நூல்கள் தான் முஹிம்­மாதுல் முத்­அல்­லிமீன், அஹ்­ஸனுல் மவாஇழ், மஜ்­மூஉல் கவாயித் தோன்­ற­வை­யாகும்.

இந்த அற்­புத நூலா­சி­ரி­யரின் பேரன்தான் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் என்றால் அவர்­களின் அறிவின் கரு­வூ­லத்தைக் கேட்­கவும் வேண்­டுமா?

இத்­த­கைய மதிப்­புள்ள ஊரின் மகான் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள், இலங்கை மண்ணில் ஆற்­றிய பணி­களைச் சமு­தாயம் மறந்­து­விட முடி­யாது.

பன்­முகத் தன்மை!
எதையும் சமு­தா­யத்­துக்­காகச் சிந்­திக்­கின்ற தன்மை மௌலானா மௌலவி அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­க­ளிடம் காணப்­பட்­டது. தனக்­கென இல்­லாமல் பிற­ருக்­காக யோசிக்­கின்ற மனப்­பான்மை அவர்­களின் பரம்­பரை வழி­யாகும்.

இதனை சற்றுப் பார்ப்­போ­மானால் இலங்கைத் தலை­நகர் கொழும்பு 2 ஆம் குறுக்குத் தெரு சம்­மாங்­கோட்டார் ‘ஜாமிஉல் அழ்பர்’ பள்­ளி­வா­யலைக்  கட்­டு­வ­தற்கு நிலம்­கொ­டுத்து அதனை அழ­காகக் கட்டி முடித்­த­வர்கள் அப்­துல்லாஹ் ஹஸ்­ரத்தின் பாட்­டனார் அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் அவர்­க­ளையே சாரும்.

இந்தப் பரம்­ப­ரை­யினர் இன்­று­வரை இப்­பள்­ளியை நிரு­வ­கிப்­பதும் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­களும் இப்­பள்­ளியில் பிர­தான நிரு­வா­கி­யாக இருப்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

ஆத்­மீக வாழ்க்கை!
மௌலானா மௌலவி அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் ஒரு அறி­வாளி மட்­டு­மல்ல  ‘ஆபித்’ வணக்­க­வா­ளியும் ஆவார்கள்.

12.12.1969 ஆம் ஆண்டு அன்புத் தாயுடன் ஹஜ்ஜுக் கட­மையை நிறை­வேற்­றிய அன்னார் பல ஹஜ்­ஜுக­ளையும் உம்­றாக்­க­ளையும் நிறைவு செய்­த­துடன் தஹஜ்ஜுத், வித்ர், லுஹா, அவ்­வாபீன் போன்ற தொழு­கை­க­ளையும் தவ­றாது தொழக்­கூ­டிய சிறந்த ஆபி­தா­வார்கள். அவர்­களின் அமல் அவர்­களின் அக­மா­கி­யது. இதுவே அவர்­களின் முகப் பிர­கா­ச­மா­கி­யது.

ஹஸ்­ரத்தின் கடைசி அவா!
ஜாமி­யதுல் பலா­ஹுக்­காக இயக்­குனர் சபையில் உழைத்த முஹம்­மது காசிம் ஹாஜியார் அஷ்­ஷஹீத் அஹ்மத் லெப்பை ஜே.பி. , அப்துல் கபூர் ஆலிம் ஹாஜியார்,  எம்.ஐ.ஏ. முகைதீன் ஜே.பி. ,ஆதம் லெப்பை ஹாஜியார், இப்­றாஹீம் ஹாஜியார், இஸ்­மாயில் ஹாஜியார், முஸ்­தபா ஜே.பி. (காழியார்), எம்.பி. மஜீத் ஹாஜியார் ஜே.பி., அசனார் ஹாஜியார், அல்ஹாஜ் மௌலவி ஜுனைத் (பலாஹி), மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) , மௌலவி எம்.எச்.எம். புஹாரி பலாஹி, அல்ஹாஜ் கே.எம்.ஏ.எம். சலீம் பீகொம், மௌலவி ஏ.எல்.எச். பது­றுத்தீன் பலாஹி, மௌலவி ஏ.எம். அலியார் (றியாழி),எம்.எஸ். அப்துல் அஸீஸ், கே.எம்.எம். கலீல், அல்ஹாஜ் எம். சம்சுத்தீன், ஈ,எல். முஸ்தபா, ஏ.எல். அப்துல் ஜவாத் பீ.ஏ. (சட்டத்தரணி), எம்.எல்.ஏ. முகைதீன், எம்.எஸ்.எம். அமீர், மௌலவி எம்.ஐ.எம். முபாறக் (பலாஹி),  ஏ.எல். பதுறுத்தீன், என்.எம். எம். முபாறக், எம்.ஐ.எம். முனீர் ஆகியோருடன் இன்றைய ஜாமிஆ தலைவர் மௌலவி ஏ.எம். அலியார் (றியாழி), எஸ்.எல். அலியார் பலாஹி (காதி நீதிபதி), எம்.ஐ.எம். முகைதீன் ஹாஜியார் போன்ற உதவித் தலைவர்களுக்கும்  நன்றி கூறி, துஆ செய்வதுடன் 2015 வரை ஜாமிஆவில் இருந்து வெ ளியேறிய 404 உலமாக்களுக்கும் 377 ஹாபிழ்களுக்கும் துஆ செய்து, ஸலாம் கூறி, ஞாபகம் வருவதும் போவதுமான நிலையில் காத்தான்குடி ஜாமிஆ அறையில் தொழுத வண்ணமும் ஓதிய வண்ணமும் துஆ செய்த வண்ணமும் அமல்களில் ஈடுபட்ட வண்ணமிருக்கிறார்கள்.

முழு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உதாரண புருஷரான அப்துல்லாஹ் ஹஸ்ரத்தின் சேவையை அல்லாஹுத்தஆலா கபூல் செய்வானாக! ஆமீன் யாறப்பல் ஆலமீன்!!

மௌலவி காத்­தான்­குடி பௌஸ்
அதிபர், அல்­பலாஹ் குர்ஆன் மத்­ரஸா பாணந்துறை

நன்றி: http://vidivelli.lk/

இந்திய வாலிபருக்கு துபாயில் மரண தண்டனை !

மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த மும்பையை சேர்ந்த நபருக்கு துபாயில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவருடைய அப்பீல் மனுவை துபாய் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். மும்பையை சேர்ந்தவர் அதிப் போபெரே. மும்பையில் இருக்கும்போது மாட்டுங்கா கல்லூரி ஒன்றில் படித்த மினி தனஞ்சயன் என்ற மாணவியை காதலித்தார். இருவரும் கடந்த 2008ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு மினி தனஞ்சயன் தன் பெயரை புஷ்ரா என மாற்றினார். இருவருக்கும் 2009ல் பெண் குழந்தை பிறந்தது.

போபெரே பின்னர் வேலைக்காக துபாய் சென்றார். கடை மானேஜராக வேலை செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புஷ்ராவும் துபாய் சென்று கணவருடன் வசித்து வந்தார். குழந்தைக்கு மூன்று வயதானபோது அதை ராய்கட் மாவட்டத்தில் வசித்து வரும் போபெரேயின் பெற்றோரிடம் கொண்டு விட்டனர். புஷ்ராவின் சகோதரர் நிகில் என்பவர் துபாய் அருகே உள்ள ஒரு இடத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2013ம் ஆண்டு போபெரேயின் பெற்றோர் நிகிலை போனில் கூப்பிட்டு புஷ்ரா எங்கே இருக்கிறாள் என்று கேட்டிருக்கின்றனர். இதைக் கேட்டதும் நிகில் உடனே துபாய் புறப்பட்டுச் சென்றார். அங்கே தன் சகோதரியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். போலீசில் இது குறித்து புகார் செய்தார். மறுநாள் அதாவது 2013 மார்ச் 13ம் தேதி புஷ்ராவின் உடல் துபாயின் அல் புக்கா பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக நிகிலிடம் போலீசார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையில் புஷ்ரா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. புஷ்ராவின் உடல் கண்டெடுக்கப்பட்டதில் இருந்து கணவர் போபெரேயை காணவில்லை. தலைமறைவாகி விட்டார். கூட்டாளி ஒருவர் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார். எனினும் 2013 ஜூன் மாதம் மீண்டும் துபாய் திரும்பி போலீசில் சரணடைந்தார். இந்த வழக்கில் போபெரேக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அவர் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தார். மரண தண்டனைய ஆயுளாக குறைக்கும்படி கோரியிருந்தார். ஆனால் அவருடைய அப்பீல் மனுவை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் நிராகரித்து விட்டது. இதையடுத்து போபெரேவுக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது. அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவார்.

துபாய் சட்டதிட்டங்களின்படி புஷ்ராவின் பெற்றோர் போபெரேயை மன்னித்தால் மட்டும் அவர் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். அப்போது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படும். ஆனால் புஷ்ராவின் தாயார் உமா தனஞ்சயன் அவனை மன்னிக்க தயாராக இல்லை. உமா இது குறித்து கூறும்போது, “இதுவரை எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும்கூட அவனை நான் கண்டிப்பாக மன்னிக்க மாட்டேன்” என்றார். புஷ்ராவின் திருமணத்துக்கு முன்பு உமா தன் மகன் மற்றும் மகளுடன் டோம்பிவலியில் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் துபாய் சென்ற பிறகு உமா கேரளாவுக்கு சென்று விட்டார். தற்போது கேரளாவில்தான் இருக்கிறார். இதற்கிடையே தற்போது 6 வயதாகும் பெண் குழந்தையை போபெரேயின் பெற்றோரிடம் இருந்து தங்கள் வசம் பெறுவதற்காக புஷ்ராவின் பெற்றோர் போராடி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நன்றி:தினகரன்

வாட்ஸ் அப்: உஷாராக இருங்கள்!

இன்று வரை 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் 'வாட்ஸ் அப்' பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்படுகிறது. இந்த 'வாட்ஸ் அப்'பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன.

இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வலைத்தளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும். அதனால் ESET நிறுவனம், தங்களது சுய விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படாதவாறு பாதுகாக்க சில முக்கிய குறிப்புகளை அளித்துள்ளனர்.

1.) வாட்ஸ்அப் லாக்
வாட்ஸ் அப்-ஐ லாக் செய்வதில் முக்கியமான விஷயம் முதலில் ஒரு பாஸ்வேர்டு அல்லது 'பின்' பயன்படுத்துதலே சிறந்தது. வாட்ஸ் அப்பிற்கென பிரத்யேகமாக எந்த ஒரு லாக்கும் இல்லை. இதற்கென ஆப் லாக்கை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், மூன்றாவது மனிதர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். ஆனாலும், செல்போன் தொலைந்துபோகும் பட்சத்தில் அதை தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 'சாட் லாக்', 'வாட்ஸ் அப் லாக்', 'செக்யூர்சாட்' இவை மூன்றையும் ஆண்ட்ராய்டு போன்களில் எளிதாக பயன்படுத்தலாம். எனவே இவற்றை பயன்படுத்தி யாரும் உங்களது தகவல்களை திருடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

2.) வாட்ஸ் அப் புகைப்படங்கள், போட்டோ ரோலில் சேர்வதை தடுக்க...
புகைப்படங்களை பரிமாறும்பொழுது, அவை பொதுவாக உங்கள் போட்டோ ரோலில் சேகரிக்கப்படுகிறது. அதனால் அவை திருடப்பட வாய்ப்புகள் அதிகம். இவற்றை ஐபோனில் எளிதில் தடுக்கலாம். போன் செட்டிங்கில் உள்ள மெனுவில் சென்று, பிரைவசியில் உள்ள புகைப்படத்தை 'டீசெலக்ட்' செய்ய வேண்டும். இதனால் அவை போட்டோ ரோலில் சேர்வது எளிதில் தடுக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பயனாளர்கள், இதனை 'பைல் எக்ஸ்ப்லோரர் ஆப்' மூலம் தடுக்கலாம். இதில், நோ மீடியா எனும் பைலை உருவாக்குவதின் மூலம் தடுக்கப்படுகிறது. வாட்ஸ் அப் இமேஜை லாக் செய்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கலாம். ஆனால், போன்கள் திருடப்படும்போது 100% பாதுகாப்பைத் தரும் என கூற முடியாது.

3.) லாஸ்ட் சீனை மறைப்பது
நீங்கள் கடைசியாக எப்போது ஆன்லைனில் இருந்தீர்கள் என மற்றவர்களுக்கு தெரியும். இது மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வழிவகை செய்யலாம். இந்த லாஸ்ட் சீன்  மற்றவர்கள் அறியாதவாறு தடுக்க 'ஹைடு லாஸ்ட் சீனை' பயன்படுத்தலாம். ஆனால் இதை செய்தால் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்களின் லாஸ்ட் சீனையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது.

4.) ப்ரொஃபைல் பிக்சரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க...
உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை நீங்கள் பயன்படுத்தும்போது அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு அதிகம். அதோடு இந்த ப்ரொஃபைல் புகைப்படத்தை பயன்படுத்தி கூகுள் சர்ச்சில் உங்களது விவரங்களை பெற முடியும். அதனால், பிரைவசியில் உங்கள் புகைப்படத்தை தொடர்புகளில் மட்டும் பொருத்த வேண்டும்.

5.) போலி தகவல்களிடம் விழிப்போடு இருங்கள் 
வாட்ஸ் அப் எப்பொழுதும் நேரடியாக உங்களோடு தொடர்பு கொள்வதில்லை என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் நேரடியாக உரையாடல்கள், ஆடியோ தகவல்கள், புகைப்படங்கள், மாற்றங்கள், வீடியோக்களை எப்பொழுதும் மின்னஞ்சல் உதவியில்லாமல் உங்களுக்கு அனுப்பாது. குறிப்பிட்ட இலவச நன்கொடைகள் பற்றிய தகவல்கள் வந்தால் நிச்சயம் அது போலியாகத்தான் இருக்கும். இவை நம்பத்தகுந்தது அல்ல.

6.) தொலைபேசி தொலைந்தால் வாட்ஸ் அப்பை செயலிழக்கச் செய்யுங்கள்
செல்போன் தொலைந்தால், வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு எளிய மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. சிம் கார்டை லாக் செய்வது பற்றிய வசதிகளை அளிக்கறது. தொலைபேசி தொலைந்து போனால் உடனே அதே எண்ணில் மற்றொரு தொலைபேசியில் வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை திறந்தால் தானாகவே தொலைந்த வாட்ஸ் அப் அக்கவுண்ட் செயலிழக்கப்படும். இதன் மூலம் வாட்ஸ் அப் அக்கவுண்ட் தானாகவே செயலிழக்கப்படும்.

7.) எதைப்பற்றி பேசுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள் 
இது கடைசி, இதுவே முடிவல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சுய தகவல்களை எப்பொழுதும் பகிர்வதை தவிர்த்திடுங்கள். முகவரி, தொலைபேசி எண், வங்கி விவரம், கிரெடிட் கார்டு விவரம், பாஸ்வேர்டுகளை வாட்ஸ் அப்பில் பகிராதீர்கள்.

8.) வாட்ஸ் அப்பை 'லாக் அவுட்' செய்ய மறக்காதீர்கள்:
வாட்ஸ் அப் தற்போது நிறைய சேவையை வழங்கி வருகிறது. பல பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் லாக் அவுட் செய்வது பற்றிய விவரம் தெரிவதில்லை. இதை தொலைபேசி மூலமோ பிரவுசர் மூலமோ செய்யலாம்.

உஷாராக இருங்கள்!

- மு.ஜெயராஜ்
(மாணவ பத்திரிக்கையாளர்)
நன்றி:விகடன்

எம்.எல்.ஏ ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவிப்பு !

அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையின் போது வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்த பிலால் நகர் உள்ளிட்ட அதிரையின் பகுதிகளை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், தமாகா கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவருமாகிய என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் சாலைகளை சீரமைத்து தரக்கோரியும், அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லையில் ஏரிபுறக்கரை ஊராட்சியின் ஒரு பகுதியான 'பிலால் நகர்' என்ற பகுதியில் கடும் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு காரணமாக உள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இந்த பகுதி மக்கள் நிர்வாக எல்லை பகுதி தெரியாமல் ஒரே தெருவில்  ஒருவர் ஏரிபுறக்கரை ஊராட்சிக்கும், மற்றொருவர் அதிரை பேரூராட்சிக்கும் வரியை செலுத்தி வருகின்றனர். இதனால் முறையான தூய்மைபணிகள் இந்த பகுதியில் நடைபெறவில்லை. எனவே வருவாய்துறை மூலம் இப்பகுதி எல்லைகளை வரையறுத்து ஒழுங்குபடுத்த வேண்டும்'  மாவட்ட ஆட்சியர் முனைவர் என் சுப்பையன் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எம். முஹம்மது இப்ராஹீம், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், சமூக ஆர்வலர் அரபாத், லுத்துபுலா ஜி ஆகியோர் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் அவர்களை இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

அதிரை சேர்மன் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வருகை தரும் டி.ஆர் பாலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு !

அதிரை பேரூராட்சியின் பெருந்தலைவராக பொறுப்பில் இருப்பவர் எஸ்.ஹெச் அஸ்லம். இவரது குடும்ப திருமண விழா நாளை 31-12-2015 மாலை 4.30 மணியளவில் செக்கடி பள்ளி வளாகத்தில் உலமாக்கள், மஹல்லா நிர்வாகிகள், குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய டி.ஆர் பாலு, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எல். கணேசன், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிரை அனைத்து மஹல்லா சங்கங்களின் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மணமக்களை வாழ்த்த வருகை தரும் டி.ஆர் பாலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க விழா குழுவினர் சார்பில் முடிவு செய்துள்ளனர். வண்டிப்பேட்டை பகுதியிலிருந்து வாகனங்கள் சூழ அழைத்து வர ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக வண்டிப்பேட்டை முதல் திருமணம் நடைபெறும் செக்கடி பள்ளி பகுதி வரையிலான இரு புறமும் அமைக்கப்பட்டுள்ள கம்பங்களில் திமுக கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. மேலும் அதிரை சேர்மனின் ஆதரவாளர்கள், நண்பர்கள் பலர் திருமண நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தும், நிகழ்ச்சிக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்று அதிரையின் பிரதான பகுதிகளில் ஆங்காங்கே பிரமாண்ட ப்ளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.

வாகன நெருக்கடியை தவிர்க்கவும், சீராக வந்து செல்லவும் வாகனங்கள் நிறுத்துவதற்கென்று விழா குழுவினர் சார்பில் பிரத்தியோக இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 

2015ல் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள் !

2015ல் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகளில் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
உலகை அதிர்ச்சியடைய வைத்த அய்லான்
அய்லான் என்ற சிறுவன் அகதிகள் சென்ற கப்பலில் இருந்து தவறி விழுந்து பலியானான். அது தொடர்பான புகைப்படம் உலகின் மனசாட்சியையே உலுக்கியது. இந்த புகைப்படம் உலகம் முழுவதும் பலரால் பகிரப்பட்டதை அடுத்து பலரும் கண்ணீர் வடித்தனர்.
கேளிக்குள்ளான டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலம் முடியவுள்ள நிலையில், வரும் 2016 ஆண்டுக்கான அதிபர் தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். டொனால்ட் டிரம்பையும் அவரது முடியையும் அமெரிக்கர்கள் கிண்டல் செய்து இணையத்தில் அதிகளவில் மீம்களை பரப்பி வந்தனர்.

பட்டுக்கோட்டையில் நூதன முறையில் கார் திருட்டு!

பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த வாடகைக்கார் உரிமையாளர் ஆர். சரவணன் (35). பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலுள்ள வாடகைக்கார்கள் நிறுத்துமிடத்தில் தனக்குச் சொந்தமான ரூ. 4 லட்சம் மதிப்புள்ள காரை வாடகைக்கு ஓட்டி வந்தார்.

இந்நிலையில், 23.8.2015 அன்று சரவணனிடம் சென்னையைச் சேர்ந்த அன்பு (30) என்பவர் தன்னை கார் ஓட்டுநராக சேர்த்துக் கொள்ளும்படி கூறினாராம். அந்த நபர் தனது ஓட்டுநர் உரிமத்தையும் சரவணனிடம் கொடுத்துள்ளார். இதை நம்பிய சரவணன் அந்த நபரை தனது கார் ஓட்டுநராக வைத்துக் கொண்டார்.

அந்த நபர் கடந்த 31.8.2015-ம் தேதி மாலை காருடன் மாயமாகி விட்டாராம். பல இடங்களில் தேடியும்  கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த நபர் சரவணனிடம் கொடுத்திருந்த கார் ஓட்டுநர் உரிமமும் போலியானது என்பது தெரியவந்தது.

இதுபற்றி சரவணன் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை நகர குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்தனர். இதில்  காரை திருடிச் சென்ற நபர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நன்றி:தினமணி

Tuesday, December 29, 2015

10581 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில்...

கள்ளச்சாராயம் மற்றும் மதுவிலக்குக் குற்றங்கள், குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை பொதுமக்கள் இலவச தொலைப்பேசி 10581 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம் மயில்வாகனன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கள்ளச்சாராயம் மற்றும் மதுவிலக்குக் குற்றங்கள், குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை பொதுமக்கள் இலவச தொலைப்பேசி 10581 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் பொதுமக்கள் மற்றும் தகவல் தருபவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும். மேலும் உடனுக்குடன் காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும்' என இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அதிரையில் 110 KVA துணை மின் நிலையம் அமைக்க முடிவு: எம்.எல்.ஏ ரெங்கராஜன் தகவல் !

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் எண்ணிக்கை பெருகி வருவதால், மின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு அடிக்கடி, 'ஓவர்லோடு' ஏற்படுகிறது.

அதிரை வளர்ந்து வரும் பகுதி என்றும், இங்கு பல இடங்களில் மின்கம்பிகள் ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும், குறிப்பாக பிலால் நகர் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. அரசு இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமா ? என பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ கடந்த [ 23-09-2015 ] அன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் சம்பந்தபட்ட பகுதிகளில் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு குறைகளை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்' என்றார்.

இந்த நிலையில், அதிரையில் சுமார் 2 கோடி ரூபாய் செலவில், 110 கி.வோ., துணை மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் துவங்க இருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ கூறுகையில், 'அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்னழுத்த ஏற்ற தாழ்வுகளை குறைக்கும் வகையிலும், அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரத்தை சீராக கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் அதிரையில் 110 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் பணிகளை விரைவில் துவங்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது' என்றார்.

அதிரையில் சாலை விபத்தில் கவுன்சிலர் முஹம்மது செரீப் காயம் !

அதிரை பேரூராட்சி 14 வது வார்டு உறுப்பினராக இருப்பவர் என்.கே.எஸ் முஹம்மது ஷெரீப் ( வயது 37 ). இந்நிலையில் இன்று காலை தனது இல்லத்திலிருந்து ஈசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணமானார். வாகனம் அதிரை தவ்ஹீத் பள்ளி அருகே வந்த போது திடீரென சாலையின் குறுக்கே கடந்தசென்ற நபரால் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளனர். இதில் முழங்கால், கைகளில் காயங்கள் ஏற்பட்டது. உடனே அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது. தகவலறிந்த இவரது நண்பர்கள் மருத்துவமனையில் முகாமிட்டு இவருக்கு வேண்டிய உதவிகளை உடனிருந்து செய்தனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.