.

Pages

Tuesday, June 30, 2015

காதிர் முகைதீன் கல்லூரி நடத்திய அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துக்கான தமிழ்நாடு மாநிலக் குழுவின் நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான நவீனத் தொழில் நுட்பங்கள், இயற்கை வேளாண்மை, உயிர் உரங்கள் மற்றும் நீர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிரை அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ ஜலால் தலைமை வகித்து உரை ஆற்றினார். காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் துணை முனைவர் ஏ.எம் உதுமான் முகைதீன் துவக்க உரை ஆற்றினார்.

புதுக்கோட்டை உள்ளூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.
வெங்கடாசலம், கவுன்சிலர் திலகவதி சுப்ரமணியன், காதிர் முகைதீன் கல்லூரி கணிதத்துறை தலைவர் எஸ். சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் குறிக்கோள் மற்றும் இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து கல்லூரி விலங்கியல் துறைத்தலைவர் முனைவர் பி. குமாராசாமி எடுத்துரைத்தார்.

முன்னதாக காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் எஸ். ரவீந்தரன் வரவேற்புரை ஆற்றினார்.

விவசாயிகளுக்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நவீனத் தொழில் நுட்பங்கள், இயற்கை வேளாண்மை, உயிர் உரங்கள் மற்றும் நீர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பட்டுக்கோட்டை விவசாய உதவி இயக்குனர் ( ஓய்வு ) எம்.எம் கணேஷன், காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஏ அம்சத், ராஜா சரபோஜி அரசு கலை கல்லூரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் ஜி. ஸ்ரீதரன், தென்னை ஆராய்ச்சி மைய மண்ணியல் துறை பேராசிரியர் முனைவர் எஸ். மோகன்தாஸ் ஆகியோர் விளக்க உரை அளித்தனர்.

நிகழ்ச்சி முடிவில் கல்லூரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் கே. முத்துகுமாரவேல் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கிராம விவசாயிகள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


லண்டன் குரைடனில் வசிக்கும் அதிரையரின் இஃப்தார் நிகழ்ச்சி [ படங்கள் இணைப்பு ] !

லண்டன் குரைடன் பகுதியில் வசிக்கும் அதிரையர்கள் இணைந்து இன்று மாலை இஃப்தார் நிகழ்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் அதிரையர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மக்கள் நலத்திட்ட சேவையில் அதிரை பைத்துல்மால் !

அதிரையில் பைத்துல்மால் துவங்கிய நாளிலிருந்து இன்று வரை பல்வேறு நலத்திட்ட சேவைகளை சிறப்பாக செய்து வருகிறது. இது தொடர்பாக அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 

 
மக்கள் நலத்திட்ட சேவையில் அதிரை பைத்துல்மால் ( தமிழில் )
 

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி !

சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் முதல்வரும், அதிமுக வேட்பாளருமான ஜெயலலிதா 1,51,252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் உள்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

17வது சுற்று முடிவில் ஜெயலலிதா 1,51,252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,60,921.இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் 9,669 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். மேலும், டிராபிக் ராமசாமி உள்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

மரண அறிவிப்பு !

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெப்பை கனி மரைக்காயர் அவர்களின் மகனும், செ.மு அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், லெப்பை கனி, நெய்னா முஹம்மது, சேக்தாவூது ஆகியோரின் தகப்பனாரும், கமால், நிஜாமுதீன் ஆகியோரின் மாமனாருமாகிய சேக் கனி மரைக்காயர் அவர்கள் இன்று காலை 8 மணியளவில் புதுத்தெரு வடபுறம் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

ஆம்பூர் கலவரம் உணர்த்துவது என்ன ?

ஆம்பூர் என்றால் நினைவுக்கு வருவது பிரியாணிதான். ஆனால்   பிரியாணிக்கு பதில் மக்களின் கொந்தளிப்பால் உருவான 'கலவரம்' மட்டுமே இனி நினைவுக்கு வரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

போலீசாரால் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட இஸ்லாமியர் ஒருவருக்காக ஏற்பட்ட ஆர்ப்பாட்டமும், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்யாமல் பிடிவாதம் செய்த போலீசாரின் காலதாமதமுமே கலவரத்திற்கு காரணமாகிவிட்டது.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போன புகாரில், ஆம்பூரை சேர்ந்த சமீல் அகமது (26) என்பவரை காவல்துறையினர் விசாரணைக்காக கடந்த 15ஆம் தேதி அழைத்து சென்றனர். விசாரனையின் போது சமீல் அகமதை பள்ளிகொண்டா காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் கடுமையாக தாக்கியதால் சமீல் அகமது இறந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள், சமூகத்தினர் திரண்டு காவல் துறை ஆய்வாளர்  மார்ட்டின் பிரேம்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், அந்த ஆர்ப்பாட்டம் அடங்காத வன்முறைக் கலவரமாக மாறியது.

சுமார் 10 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டதாக அரசு தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு கலவரமாகப் பார்ப்பதை விட போலீசின் செயல்பாட்டிற்கு எதிராக, எதிர் வினைக்கு மக்கள் தயாராகி வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இறந்து போன சமீல் அகமது செய்த காரியம் சரியோ, தவறோ. அதற்காக உயிர் எடுக்கும் அளவிற்கு போலீசார் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே ராமநாதபுரத்தில் இஸ்லாமிய இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் போலீசார் தாக்கியதால் இறந்ததாக கருதப்பட்டதால், கலவரம் நிகழ போலீசார் காரணமாகி விட்டனர். போலீசாரின் செய்கைக்கு எதிராக பொது மக்களின் கலவரமும் நியாயமற்றது. இன்றைக்குள்ள நீதித்துறை, நவீன மருத்துவ அறிக்கைகள் மூலம் சம்பந்தப்பட்ட காவலரை கைது செய்து சிறையில் வைக்க முடியும்.

வழக்கம்போல காவல் துறையின் 'பெரிய தண்டனையான' இட மாறுதல் அளித்து பிரச்னையை முடித்து விடுவார்களோ என நினைத்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும், வன்முறையும் நடத்தும் அளவிற்கு தள்ளப்பட்டு, முடிவில் ஆம்பூர் நகரம் கலவரமாக மாறிய பிறகே சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பணி  இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பல கோடிக்கணக்கில் சேதமும், இயல்பு வாழ்க்கை பாதிப்பும், பல போலீசார், போராட்டக்காரர்கள் காயமுற்றும், கைது செய்யப்பட்டும் அடுத்த கட்டமாக அரசின் விசாரணைக்குழுவும் அரங்கேறும் நிலைக்கு போலீசார் பிரச்னையை பெரிதாக்கி விட்டனர் என்றே சொல்லத் தோன்றுகிறது. முடிவில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் இழப்பீடு ஏதும் வசூலிக்காமல், மக்களின் வரிப்பணத்தில் இழப்பீடு வழங்கி, உயிருக்கு விலை வைத்து வழக்கு முடிவுக்கு வரும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆரம்ப நிலையிலேயே சம்பந்தப்பட்ட ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்திருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாக மாறி இருக்காது. ஒரு காவல் ஆய்வாளரை காப்பாற்ற இவ்வளவு போராட்டமும், பொது மக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பையும் ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

ஆய்வாளருக்காக உயர் அதிகாரிகள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பொது மக்கள், போலீசார் நல்லுறவு பாதிக்கும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இறந்து போனவரின் உயிரை விட காவல் ஆய்வாளரின் பதவி பெரியதா? சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீசாரே சட்டம் ஒழுங்கு சீர் குலைவிற்கு காரணமாகி விட்டனர்.

போலீசாரால் தாக்கப்பட்ட சமீல் அகமது இறந்தவுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்டோரை, உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் மூலம் பேசி நடவடிக்கை எடுக்காமலும், முன் கூட்டியே போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த தவறியதும் இந்தக் கலவரத்திற்கு முக்கியமான காரணம்.

அரசு ஊழியர், பொதுமக்கள் அனைவருக்கும் ஒரே குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ள போது காவலர்களுக்கு மட்டும் ஏன் விதி விலக்கு அளிக்கப்பட வேண்டும்? ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு கூட அபராதம் விதித்தோம் எனச் சொல்லும் போலீஸ் செய்திகள், ஒரு உயிரைக் கொல்லும் அளவிற்கு துன்புறுத்தி உயிர் போக காரணமாக இருப்பதை மட்டும் விதி விலக்காக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

இந்த நாட்டில் நீதிமன்றங்களும், சிறையும் எதற்காக உள்ளது என்ற விபரத்தை போலீசாருக்கு சொல்லித் தர வேண்டியது நீதிபதிகளின் கட்டாய கடமைகளுள் ஒன்று.

இந்தியாவில் 2008 முதல் 2013 வரை சுமார் 12,000 பேர் போலீஸ் நிலையத்தில் அல்லது சிறையில் கொல்லப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய குற்றப்புலனாய்வு (NCRB) அறிக்கையின்படி 2013 ஆண்டு போலீசாரின் பாதுகாப்பில் இருந்து கொல்லப்பட்டவர்களில் முதலாம் இடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்திற்கு (34 பேர்) அடுத்தபடியாக தமிழகம் இரண்டாமிடத்தில் (15 பேர்) உள்ளது.  நீதிமன்றப் பாதுகாப்பில் உள்ளவர்கள் கூட போலீசாரால் அழைத்துச் சென்று கொல்லப்பட்டிருக்கின்றனர். நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளார் என்பதன் அர்த்தம் என்ன என்பதை நீதிபதிகள் தான் சொல்ல வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக குற்றம் சுமத்தப்பட்டவரை தனியார் விடுதியில் விசாரிப்பதும், பின் அவரின் மரணச் செய்தியும் தொடர்கதையாகி வருகிறது. குற்றவாளிகளை  திருத்தவேண்டிய சிறைக்கூடம் சித்ரவதைக்கூடமாக மாறி உயிர் எடுத்து வருகிறது.

எத்தனையோ பெண்கள், காவல் நிலையத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்; பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். உடுமலைப்பேட்டையில் 50 வயது பெண்ணை 7 போலீசார் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ததை மறந்திருக்க முடியாது. அவர்களையும் இதேபோல அடித்துக் கொல்ல முடியுமா என்பதை போலீஸ் மனசாட்சி சொல்ல வேண்டிய பதில்.

இந்தியாவின் சரப்ஜித் சிங், பாகிஸ்தான் சிறையில்  கொல்லப்பட்டதற்கு எதிராக கொதித்து பேசுகிறோம், மரண தண்டனைக்கு எதிராக கடுமையான குரல் கொடுக்கிறோம். ஆனால், உள்ளூர் போலீசார் ஆண்டுக்கு பல பேரை சட்டத்திற்கு பயப்படாமல் பலி வாங்குவதை கேள்வி கேட்க முடியாமல், தடுக்க முடியாமல் சட்டமும், பொது மக்களும் போலீஸ் சொல்லும் 'சட்டத்திற்கு'   உட்பட்டு வாழ்கிறோம் என்பதே உண்மை.

ஆண்டுக்காண்டு போலீஸ் நவீனமயமாக்கல், சீர்திருத்தம் என்ற பெயரில் பல கோடிகள் செலவுகள் கூடும். அதே நேரத்தில் போலீஸ் மீதான லஞ்சம், பாலியல், கொலை, கொள்ளை, திருட்டு, லாக் அப் மரண வழக்குகளும் அதிகமாகி வருவது, மக்களின் வரிப்பணம் மக்களை காப்பதற்கா இல்லை, வீண் செலவிற்கா என்பதை நீதிமன்றம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்பதே பொதுவான கருத்து.

என்னதான் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா வைத்தாலும், கண்ணியம் இல்லாத வரை கேமராவால் ஒன்றும் சாதிக்க முடியாது. சுமார் 7.4 கோடி பேர் உள்ள தமிழகத்தில் பொதுமக்களின் குற்றச்  செய்தி விகிதம் குறைவாகவும், 1.2 லட்சமுள்ள போலீஸ் மீதான  குற்றச் செய்தி அதிகரித்தும் வருகிறது.

என்னதான் உயர் அதிகாரிகள் நேர்மையுடன் இருந்தாலும் கண்டிப்புடன் தவறு செய்யும் போலீசாரை உடனடி பணி நீக்கம் செய்யாதவரை, ஆம்பூர் கலவரம் தமிழக வரலாறில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விரிசலின் ஆரம்ப எச்சரிக்கையே.

போலீசார் மீதான நல்லெண்ணத்தை மேம்படுத்த வேண்டியது, நல்லெண்ணம் கொண்ட உயர் அதிகாரிகளே...!

எஸ். அசோக்
நன்றி: விகடன்

தமாகாவின் அதிரை பேரூர் தலைவராக M.M.S அப்துல் கரீம் அறிவிப்பு !

அதிரையை சேர்ந்தவர் M.M.S அப்துல் கரீம். இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், ஜி.ஆர் மூப்பனார், சுரேஷ் மூப்பனார், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் ஆகியோரின் நன்மதிப்பை பெற்றவர்.

இந்நிலையில் தமிழ்மாநில காங்கிரசின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜிஆர் மூப்பனார், சுரேஷ் மூப்பனார் ஆகியோரின் பரிந்துரையின் படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்களின் ஒப்புதலோடு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரசின் தலைவருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் தலைவராக M.M.S அப்துல் கரீம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து M.M.S அப்துல் கரீம் அவர்களுக்கு கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராக சிங்கார வேலுவும், பொதுக்குழு உறுப்பினராக பொன்னம்பலமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமாகாவின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக அதிரை மைதீன் அறிவிப்பு !

அதிரையை சேர்ந்தவர் அதிரை மைதீன். இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், ஜி.ஆர் மூப்பனார், சுரேஷ் மூப்பனார், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் ஆகியோரின் நன்மதிப்பை பெற்றவர்.

இந்நிலையில் தமிழ்மாநில காங்கிரசின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜிஆர் மூப்பனார், சுரேஷ் மூப்பனார் ஆகியோரின் பரிந்துரையின் படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்களின் ஒப்புதலோடு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரசின் தலைவருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக அதிரை மைதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அதிரை மைதினுக்கு கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காஸ் விநியோகத்திற்கு கூடுதல் வசூலா ? மாவட்ட ஆட்சியர் இன்று நடத்தும் குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் அளிக்க அழைப்பு !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.

எரிவாயு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் சிரமங்கள், எரிவாயு உருளை வழங்குவதில் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

எனவே, எரிவாயு இணைப்பு குறித்த தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர் மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு சிங்கப்பூர் அமைச்சர் பாராட்டு !

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 27-06-2015 அன்று சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு மற்றும் சமய இன நல்லிணக்க நிகழ்ச்சியை நடத்தியது. சிங்கப்பூரின் ஒற்றுமை, சமய மற்றும் இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றிய இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர் ஆகிய துறைகளுக்கான மாண்புமிகு அமைச்சர் திரு லாரன்ஸ் வோங் கலந்து கொண்டார். “ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்களைப் போன்ற கல்வியாளர்களும், பணியாளர்கள் ஒவ்வொருவரும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்ய வேண்டும். திறன் சார்ந்த தொண்டூழியத்தில் ஈடுபட அதிக அளவில் சிங்கப்பூரர்கள் முன்வர வேண்டும். ரமலான் மாதத்தில் மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் இச்சங்கம் பல்வேறு சமூகப்பணியாற்றி வருகிறது. சிண்டாவுடன் இணைந்து பின்தங்கிய மாணவர்களுக்கான இலவச கணிதப் பட்டறைகளை இச்சங்கம் நடத்தியது பாராட்டுக்குரியது. இதுபோன்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளால், நம் சமூக உறவுகள் மேம்பட்டு, நாம் அனைவரும் ஒன்றுபட்ட பலஇன சமூகமாகத் தொடர்ந்து திகழமுடிகிறது” என்று குறிப்பிட்டார் அமைச்சர் திரு லாரன்ஸ் வோங்.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்காக, சிங்கப்பூரிலுள்ள ஜாமியா குழந்தைகள் இல்லத்தில் வசிக்கும், 68 ஆதரவற்றக் குழந்தைகளுக்கு இலவசப் புத்தாடைகளை இச்சங்கம் வழங்கியது. இதுபோன்ற நற்பணிகள் பாராட்டுக்குரியது என்றார் அமைச்சர்.

வரவேற்புரை வழங்கிய சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் முனைவர் ஹாஜி முஹிய்யத்தீன் அப்துல் காதர், “சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களையும், மிரட்டல்களையும் இளையர்களுக்கு எடுத்துச்சொல்லி, சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் நாம் ஒவ்வொருவரும் நம் கடமையைச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

எம்.இ.எஸ். (MES) குழுமத்தின் தலைமை நிர்வாகி அல்ஹாஜ் எஸ். எம். அப்துல் ஜலீல், அமைச்சருக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார். தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் ஆர். தேவேந்திரன் அமைச்சருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் கணிதப் பேராசிரியர் ஹாஜி அமானுல்லா நிகழ்ச்சியை வழிநடத்தினார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் ஜனாப் ஃபரீஜ் முஹம்மது இறை வசனங்களை ஓதினார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் ஜனாப் அப்துல் நஜீர் நன்றியுரை கூறினார். சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலின் இமாம் ஹாபிழ் மௌலவி கலீல் அஹ்மது ஹசனி நோன்பின் மாண்புகளை எடுத்துரைத்தார்.

சிண்டா, ஜாமியா சிங்கப்பூர், இந்திய முஸ்லிம் பேரவை, நற்பணிப் பேரவை, வளர்தமிழ் இயக்கம், தமிழர் பேரவை, தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், சிங்கை தமிழ் சங்கம், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம், தமிழர் பேரவை பன்னோக்குக் கூட்டுறவுக் கழகம், தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம், நாகூர் சங்கம், காயல்பட்டின நலஅபிவிருத்தி சங்கம், முத்துப்பேட்டை சங்கம், கூத்தாநல்லூர் சங்கம், பொதக்குடி சங்கம், தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்,  மற்றும் பல சமூக அமைப்புகளிலிருந்து சமூகத் தலைவர்களும், சமூகப் பிரமுகர்களும், சங்க உறுப்பினர்களும் சுமார் 300 பேர்  கலந்து கொண்டனர். ஒற்றுமையையும், சமய இன நல்லிணக்கத்தையும் பறைசாற்றிய வண்ணம், இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

செய்தி மற்றும் படங்கள்:
முதுவை ஹிதாயத்
 
 

இலவச கொலஸ்ட்ரால் பரிசோதனை முகாம் !

பட்டுக்கோட்டை மயில்பாளையம் மரியா சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் மும்பை எம்க்யூர் பார்மாசூடிகல்ஸ் நிறுவனம் இணைந்து இலவச கொலஸ்டிரால் பரிசோதனை முகாமினை நடத்தியது.
     
நிகழ்ச்சிக்கு மூத்த வழக்கறிஞர் முருகு.துரைசாமி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர் ராதா கண்ணன், ராஜேந்திரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
           
சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.எட்வின், "கொலஸ்டிரால் பாதிப்பினால் ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் பற்றியும், அதை தவிர்த்து நலமுடன் வாழ" விளக்கி பேசி மருத்துவ ஆலோசனைகளையும்
வழங்கினார்.
   
வழக்கறிஞர் பிரேம் கிருஷ்ணன், ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் மோகன்தாஸ், அணைக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் சுதாகரன் ஆகியோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். 50 க்கும் அதிகமான நோயாளிகளுக்கு இலவச கொலஸ்டிரால் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. பண்ணைவயல் கோவிந்தராஜூ நன்றி கூறினார்.

துபாயில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி !

துபையில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி Dubai Holy Quran Award, Awqaf Dubai என்ற துபை அரசுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 02.07.2015 வியாழன் (பின்னேரம்) இரவு சுமார் 10.15 மணியளவில், தாயகத்திலிருந்து வருகைதரும் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி அவர்கள் கலந்து கொண்டு 'முஸ்லிகளின் ஒற்றுமையும், ரமளானின் சிறப்புகளும்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றவுள்ளார்கள்.

அதுபோது, தமிழ் பேசும் அமீரகவாசிகள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பரிந்துரை: அதிரை அமீன் 

கவர்ச்சி ஆடைகள் அணியக்கூடாது - மாணவிகளுக்கு முஸ்லிம் கல்லூரி அதிரடி உத்தரவு!


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள முஸ்லிம் கல்லூரி ஒன்றில் இறுக்கமாக, கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், நடக்காவு பகுதியில் முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு பயிலும் மாணவிகள் இனி இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்களையும், தொப்புளை காட்சிப்பொருளாக்கும் குட்டை மேல்சட்டைகளையும் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவிகளுக்கு வரும் ஜூலை 8-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. அன்றிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு சீருடையாக சுரிதார்- சல்வார் மற்றும் துப்பட்டாவுக்கு பதிலாக ‘ஓவர்கோட்’ கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்து, தலைக்கு துப்பாட்ட அணிந்து வரலாம் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவிற்கு சீனியர் மாணவிகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய கல்விக்கழகத்தால் நிர்வகிக்கப்பட்டுவரும் இக்கல்லூரியின் உத்தரவிற்கு பெற்றோர்கள் அதிக ஆதரவளித்துள்ளனர்.

அதிரையர்களே இந்த இடம் எந்த இடம் என்று உங்களால் சொல்ல முடியுமா?


எனதருமை அன்பு அதிரையர்களே, இந்தப் புகைப் படத்தில் காணும் இடம் எந்த இடம் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

ஒன்னாங்கிளாசிலே படிச்ச நினைவு வருதா?

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.

Monday, June 29, 2015

அதிரையில் மின் தடை வெறும் 50 நிமிடங்கள் மாத்திரமே.

நமது கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்த தமிழ்நாடு மின்வாரிய உயர் அதிகாரிகள் அதிரைக்கு இன்று 29.06.2015 - திங்கள் கிழமை நடக்க இருந்த மின் தடையை 100% சதவிகிதம் வாபஸ் வாங்கிக் கொண்டனர்.

AE Town Adirampattinam town and rural.
TNEB – Adirampattinam.

Chief Engineer,
TNEB – Thruchirappali.

ADE Town (Pattukkottai and Adirampattinam)
TNEB – Pattukkottai.

ADE Town (Madukkur and Vadikkaadu Sub Station)
TNEB – Madukkur.

மதுக்கூர் வாடியக்காடு துணை மின் நிலையத்தில் தவிர்க்க முடியாத சில வேலையின் காரணங்களால் இன்று காலை மணி 11.05am முதல், 11.55am மணி வரை அதிரையில் மின் தடை இருந்தது.

இன்ஷா அல்லாஹ், அதிரையில் அடுத்த மின் தடை ஜூலை மாதம் 29.07.2015 அன்று நடைபெறும்.

இது வரை நமக்கு உதவியாக இருந்த தமிழ்நாடு மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அதிரை நோன்பாளிகள் பொது மக்கள் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.

துபையில் வேலை வாய்ப்பு: ஒரு சிறப்பு பார்வை !

துபை – பெரும்பாலான இளைஞர்களின் கனவு நகரம். உலகில் வளர்ந்து வரும் முன்னணி நகர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் உயர்ந்து நிற்கும் துபையும் ஒன்று.

வளைகுடா நாடுகளின் பெரும்பாலான நகரங்கள் எண்ணெய் வளம் மற்றும் அவை சார்ந்த தொழில்துறை நம்பியிருந்தாலும் துபை எண்ணெய் வளம் சார்ந்த தொழில்துறை மட்டுமல்லாது பல்வேறு பிற தொழில்துறைகளில் உயர்ந்து நிற்கிறது. பன்னாட்டுத் தொழிலதிபர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் முகமாக Free Zone எனும் திட்டத்தை ஏற்படுத்தி அதில் ஊடகம் (Media) மருத்துவம், கணினி, ஆபரணம் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகள் வளர்வதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

இதன் காரணமாய வேலை வாய்ப்புகளும் பெருகி வருவதால் பல்வேறு நாட்டைச் சேர்ந்த இளைஞர்களும் துபையை நோக்கி படையெடுத்து வருவது அதிகரித்து வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் விதி விலக்கல்ல.

துபையில் நாளுக்கு நாள் பெருகி வரும் கட்டிடங்களின் காரணமாய் கட்டுமானத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் ஏராளமாய் இருந்து வருகின்றன. இதில் பொறியாளர், சர்வேயர், கொத்தனார் (Mason), மேற்பார்வையாளர், உதவியாளர், கார்பெண்டர், ஓட்டுநர், காவலாளி, கணக்காளர், உள்ளிட்ட பணிகள் முக்கியமானவை.

இது மட்டுமல்லாது வங்கிப்பணிகள், விற்பனைப் பிரதிநிதி, மருத்துவம் மற்றும் அவை சார்ந்த துறைகள் ஆபரண வடிவமைப்பு, டெய்லரிங், கேட்டரிங், ஊடகத்துறை என பணி வாய்ப்புகள் பரந்து விரிந்து செல்கின்றன.
துபையில் இத்தகைய பணி வாய்ப்புகள் எல்லாம் இருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும்பாலோர் சாதிக்க முடியாததற்கு காரணம் தன்னம்பிக்கையின்மையே.

தமிழகத்தின் தரம் வாய்ந்த கல்வியின் காரணமாகவும், தமிழர்கள் மீதுள்ள நன்மதிப்பு மற்றும் நம்பிக்கையின் காரணமாகவும் பல்வேறு நிறுவனங்கள் தமிழர்களை வேலைக்கு அமர்த்திட முன்னுரிமை அளித்து வருகின்றன என்றால் அது மிகையல்ல.

துபைக்கு வருகை தரும் இளைஞர்களுக்கு இதோ சில ஆலோசனைகள்
நிறுவனங்களின் நேரடி நேர்முகத் தேர்வுகள் மட்டுமன்றி பலர் துபை சென்று வேலை தேடிக் கொள்ளலாம் என்று உறவினர்கள் மூலமாகவோ அல்லது பிறரிடம் அதிக அளவு பணம் கொடுத்தோ விசிட் விசா (Visit Visa) மூலம் என்று வருகின்றனர்.

எனினும் சிலர் Employment விசா என்று கூறி Visit விசாவில் ஏமாறி வரும் பரிதாபக் கதைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. படிக்காதவர்கள் தான் ஏமாற்றப்படுகின்றனர் என்றால் படித்த சிலரும் விசாவை தெரிந்த நபர்களிடம் விசாரிக்காமல் வந்து விடும் அவலமும் தொடரத்தான் செய்கின்றன.

2. தமிழகத்தின் நகரங்களில் படித்து வரும் சிலர் ஆங்கிலப்புலமை பெற்றிருந்தாலும் பெரும்பாலோர் ஆங்கில புலமையில் போதிய தகுதியின்றிக் காணப்படுவது ஒரு குறையே. இதன் காரணமாய் Marketing உள்ளிட்ட துறைகளில் உள்ள நம்மவர்கள் அதிகம் பிரகாசிக்க இயலாதது வருத்தத்திற்குரியது.

3. இந்தியாவின் தேசிய மொழி இந்தி தெரிந்திருந்தால் அது ஒரு சிறப்புத்தகுதி. தெரியாவிட்டால் அதனை வளர்த்துக்கொள்ள முயல வேண்டும். இதன் காரணமாய் நமக்கு வேலையே கிடைக்காது என முடிவுக்கு வந்து விடக்கூடாது.

4. அரபி மொழிப் புலமையை வளர்த்துக் கொள்ளுதல் நலம். இதற்காக எகிப்து வானொலி இலவச அரபி மொழி சேவையினை சிற்றலை சேவையில் வழங்கி வருகிறது. நேயர்களுக்கு இலவச நூல்களையும் வழங்கி அரபி மொழியில் அதிக ஞானம் பெற உதவு வருகிறது.

மேலதிக விபரங்களுக்கு
Arabic by Radio
Radio Cairo
p.o.box. 325
cairo – A.R. Egypt எனும் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.

5. துபையில் உறவினர்கள் இல்லாத பட்சத்தில் ஏதேனும் அவசியத் தேவை ஏற்படின் Consul General அலுவலகத்தை அணுகலாம்.

அதன் தொடர்பு முகவரி
Consulate General of India
Al Hamriya, Diplomatic Enclave
P.O. BOX 737, DUBAI
UNITED ARAB EMIRATES
Tel: +3971222/3971333
Fax: +3970453
Tlx.: 46061 CGIND EM
Email: cgidubai@emirates.net.ae

இறுதியாக எத்தகைய சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை இழந்து விடாது செயல்பட்டால் வெற்றி நமதே.

முதுவை ஹிதாயத் 

சவூதியில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்லாமியர்களாக மாறிய 220 பிலிப்பைன்ஸ் நாட்டினர் !

சவூதி மக்கா நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நிறுவனமொன்றில் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 220 பணியாளர்கள் அங்குள்ள இஸ்லாமிய வழிகாட்டி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

Source: sabq daily

அமீரக தமுமுக பொதுச்செயலாளராக அதிரை அப்துல் ஹாதி தேர்வு !

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமீரகத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் அதிரை அப்துல் ஹாதி பொதுச்செயலாளராகவும், யாசின் நூருல்லாஹ் பொருளாளராகவும், அமீரக துணை செயலாளர்களாக ஹூசைன் பாஷா, டாக்டர். அப்துல் காதர், மதுக்கூர் அப்துல் காதர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நன்றி:முத்துப்பேட்டை முகைதீன்
* File Photo

துபாயில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நட்ட தமிழக மாணவ, மாணவியர்

துபாயில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழக மாணவ, மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர். ஷார்ஜாவைச் சேர்ந்த பள்ளி மாணவி நித்யஸ்ரீ சங்கரன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகளை நடும் பணியினை மேற்கொண்டார்.
அவருடன் மரக்கன்று நடும் விழாவில் திவ்யஸ்ரீ சங்கரன்,சுந்தரேஷ்,    ஆரன், கின்சுக், அட்விக், அஸ்வின், ரகிதா மற்றும் பிரசிதா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மரம், செடி, கொடிகளை பாதுகாத்து இந்த கிரகத்தை காப்பாற்ற வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Sunday, June 28, 2015

சீனாவில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற அதிரையின் முதல் மாணவர் !

அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்தவர் வாவன்னா அஹமது மஹ்சின். இவரது மகன் முஹம்மது காமில். அதிரையின் முதல் மாணவராக சீனா டேலியன் பல்கலைகழகத்தில் 6- 1/2 ஆண்டுகள் மருத்துவ கல்வி பயின்று பட்டம் பெற்றுள்ளார்.

சீனாவில், எம்பிபிஎஸ் படித்து வெளிவரும் மாணவர்கள், இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள, இந்தியன் மெடிக்கல் கவுன்சிலின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஸ்கிரீனிங் தேர்வு எழுத வேண்டும்.

இதுகுறித்து மருத்துவர் 'முஹம்மது காமில்' நம்மிடம் கூறுகையில்...
'சிறுவயது முதல் நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தேன். எனது ஆர்வத்திற்கு எனது பெற்றோர்கள் - சகோதரர்கள் மிகுந்த ஒத்துழைப்பை எனக்கு வழங்கினார்கள். இவை மருத்துவம் படிக்க மிகவும் உதவியாக இருந்தது. இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க விரும்பும் நாடுகளில் சீனாவும் ஒன்று. கடந்த 6 - 1/2 ஆண்டுகளாக சீனாவில் உள்ள டேலியன் மாகாணத்தில் தங்கி மருத்துவ கல்வி பயின்று வந்தேன். நேற்று [ 28-06-2015 ] பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மருத்துவத்திற்கான பட்டம் பெற்றேன். எனது மருத்துவ சேவையை எனது பிறந்த ஊரிலிருந்து துவங்க திட்டமிட்டுள்ளேன். இதற்கான பயிற்சியை நமதூர் மருத்துவர் ஹெச். அப்துல் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டுதல் படி மேற்கொள்ள இருக்கிறேன்' என்றார்.
 

ஜப்பானில் அதிரையர் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி ![ படங்கள் இணைப்பு ]

ஜப்பான் நாட்டில் வசித்து வரும் அதிரையர்கள் சம்சுல் ரஹ்மான், தவ்பீக், ப்ரோஸ் ஆகியோர் இணைந்து தங்களின் இல்லத்தில் இ ஃ ப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் ஜப்பானில் வசிக்கும் அதிரை சகோதரர்கள் மற்றும் இலங்கை சகோதரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.