.

Pages

Friday, July 31, 2015

கல்லூரி தோழர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சேனா மூனா அழைப்பு !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 1996 - 1999 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடப் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 08-08-2015 அன்று காதிர்  முகைதீன் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மேற் குறிப்பிட்ட ஆண்டில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொள்ள இருக்கின்றனர். அழைப்பு கிடைக்க பெறாதவர்கள் இவற்றை அழைப்பாக ஏற்றுக்கொண்டு நெஞ்சம் நெகிழ வகிக்கும் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் மாணவர்களின் சார்பில் 'சேனா மூனா' என்கிற ஹாஜா முகைதீன் அழைப்பு விடுத்துள்ளார். நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு 'சேனா மூனா' ஹாஜா முகைதீன் 9944286062 மற்றும் தவாரிஸ் அன்சாரி 8438383834

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி 1996 - 1999 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடப் பிரிவில் கல்வி பயின்ற மாணவர்கள்:
 

வெஸ்டர்ன் பார்க் நடத்திய பிரிமியர் 4 லைன் கிரிக்கெட் போட்டி !

அதிரை வெஸ்டர்ன் பார்க் சார்பில் பிரிமியர் 4 லைன் பிரிமியர் கிரிக்கெட் போட்டி மேலத்தெரு பூங்காவில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. நட்பு ரீதியில் நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்துகொண்டு விளையாடியது.

இதில் கபூர் தலைமையிலான ரெட் புளு அணியினரும், அல் அமீன் தலைமையிலான ஸ்டார் அணியும் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் ரெட் புளு அணி வெற்றி பெற்றது. குறுகிய நேரம் கொண்ட ஆட்டம் என்பதால் கிரிக்கெட் பிரியர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மூன்றாம் பரிசு சம நிலை பெற்ற சம்சுல் மற்றும் ஜவாஹிர் ஆகியோர் தலைமையிலான இரு அணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட WCC அணியின் நிறுவன மேலாளர் ஏ. சிக்கந்தர் பாதுஷா வீரர்களுக்கு கைகுலுக்கி இன்றைய இறுதி ஆட்டத்தை துவக்கி வைத்தார். ஆட்ட முடிவில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சம்சுல் கலந்துகொண்ட ஏ. சிக்கந்தர் பாதுஷா, M.Y யூசுப், ஹாஜி முஹம்மது வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இன்றைய இறுதி போட்டியை காண இந்த பகுதியின் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( தங்க மரைக்கான் )
 
 
 
 
 

'மாமேதை' கலாமிற்கு பேச இயலாத - காது கேளாத நலச்சங்கத்தினர் நடத்திய சிறப்பு பிரார்த்தனை !

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மறைவையொட்டி, அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கத்தின் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். நல சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷெரிப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மறைந்த மாமேதை ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் நல சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
 
 

செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய சசிபெருமாள் திடீர் மரணம்!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காந்தியவாதி சசி பெருமாள், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது அவர், திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை கோயில், பள்ளி இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் அதனை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அந்த ஊர் மக்களுடன் கடந்த ஆண்டு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் அந்த ஊர் மக்களும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதிமொழி அளித்துள்ளனர். இதனால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

ஆனால், அதிகாரிகள் அளித்த உறுதிமொழிபடி டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. தொடர்ந்து டாஸ்மாக் கடையை தமிழக அரசு நடத்தி வந்தது.

இதனிடையே, டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஊர்மக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் டாஸ்மாக் கடையை தமிழக அரசு அகற்றவில்லை. இதனால் மீண்டும் ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சசிபெருமாளும் போராட்டத்தில் குதித்தார். அப்போது, ஜூலை 31ஆம் தேதிக்குகள் டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் மீண்டும் உறுதி அளித்தனர். ஆனால், 31ஆம் தேதியான இன்று டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

இந்நிலையில், காந்தியவாதி சசிபெருமாள் மற்றும் உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் ஊர்மக்கள் இன்று போராட்டத்தில் குவித்தனர். அப்போது, மண்எண்ணெய் மற்றும் தீப்பெட்டியுடன் காலை 9.30 மணிக்கு சசிபெருமாள் 500 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறினார். அவரைத் தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலனும் டவரில் ஏறினார்.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் ஜெயசீலன் டவரில் இருந்து கீழே இறங்கிவிட்டார். ஆனால், சசிபெருமாள் மட்டும் டவரில் இருந்துள்ளார். சுமார் ஐந்தரை மணி நேரம் டவரில் இந்த அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக சசிபெருமாளை காவல்துறையினர் மீட்டனர். அப்போது, சசிபெருமாள் ரத்த வாந்தி எடுத்ததாக தெரிகிறது. அவர் சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது. உடனடியாக சசிபெருமாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோரித்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2013ஆம் ஆண்டில், 34 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். மேலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி டெல்லியிலும் சசிபெருமாள் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

-த.ராம்
நன்றி:விகடன்

மரண அறிவிப்பு !

காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் செய்யது முஹம்மது அவர்களின் மகளும், கமால் அவர்களின் மாமியாரும், மர்ஹூம் சாதிக் குலாம் அவர்களின் தாயாருமாகிய அஹமது நாச்சியா அவர்கள் இன்று மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9 மணிக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரை அருகே பெண் குண்டர் சட்டத்தில் கைது !

அதிரை அருகே உள்ள ஏரிபுறக்கரை கிராமம், காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் அல்லாபிச்சை மனைவி பாத்திமா ( வயது 55 ) என்பவர் கள்ளத்தனமாக சாராயம் விற்பனை செய்துவந்த குற்றத்திற்காக, தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. தர்மராஜன் அவர்களின் பரிந்துரையின் பேரில், பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு ( பொறுப்பு ) காவல் ஆய்வாளர் திரு. கணேசன் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்து திருச்சி மகளிர் தனிச்சிறையில் அடைக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட குற்றவியல் நடுவர் டாக்டர் என். சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். 

அதிரையில் நடந்த அமைதி பேரணி !

அதிரையில் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த மாமேதை அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள், நகை தொழிளாலர்கள் நல சங்கம், கரையூர் தெரு கிராம மீனவர்கள், மகிழங்கோட்டை கிராம ஊராட்சி மன்றம் ஆகியவற்றின் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.

தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் நல சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பேரணியை தங்கம், வெள்ளி நகை உரிமையாளர்கள் நல சங்க அமைப்பாளர் ஓ.கே.எம் சிபஹத்துல்லா துவக்கி வைத்து அப்துல் கலாம் அவர்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார். தங்கம், வெள்ளி நகை உரிமையாளர்கள் நல சங்க செயலாளர் தேவந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காந்திநகர் கவுன்சிலர் காளிதாஸ் அப்துல் கலாம் குறித்து சிறப்புரை வழங்கினார்.

முன்னதாக பேரணி பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி, பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, கடைத்தெரு, ஜாவியா ரோடு வழியாக ஈசிஆர் சாலை வரை புறப்பட்டு இறுதியில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த பேரணியில் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள், நகை தொழிளாலர்கள் நல சங்கம் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கரையூர் தெரு கிராம மக்கள் நடத்திய அமைதி பேரணி:
கரையூர்தெரு கிராமத்தினர் சார்பில் நடத்தப்பட்ட அமைதி பேரணியில் கரையூர் தெரு கிராம பஞ்சாயத் தலைவர் கிருஷ்ணன், துணைத்தலைவர் பாஞ்சாலன், பொருளாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் கிராம பஞ்சாயத்தினர் தலைமை வகித்தனர். பேரணி மாரியம்மன் கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதில் கரையூர் தெரு கிராமத்தினர், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் அப்துல் கலாம் மறைவையொட்டி இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

மகிழங்கோட்டையில் நடைபெற்ற அமைதி பேரணி:
அதிரை அடுத்துள்ள மகிழங்கோட்டை ஊராட்சி மன்றம் சார்பில் நடத்தப்பட்ட அமைதி பேரணியில் மகிழங்கோட்டை ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவாஜி என்கிற சுப்பு ஆறுமுகம் தலைமை வகித்தார். பேரணி ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து புறபட்டு அப்பகுதியின் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று திரும்பியது. பேரணி முடிவில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மகிழங்கோட்டை கிராம பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Thursday, July 30, 2015

மரியாதை செலுத்த வந்தவர்களுக்கு உதவிய அதிரையர்கள் !

மாரடைப்பால் காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஜனாஸா அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

மரியாதை செலுத்துவதற்காக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்திற்கு வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். 

'மாமேதை' அப்துல் கலாம் அவர்களின் ஜனாஸாவில் கலந்துகொள்வதற்காக அதிரையிலிருந்து புறப்பட்டு சென்ற காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அஹமது கபீர், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி, ரெட் கிராஸ் அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், முஹம்மது மற்றும் நிஜாம் ஆகியோர் இந்தியா முழுவதும் வந்திருந்த பொதுமக்களுக்கு தானாக முன்வந்து உதவினார்கள். குறிப்பாக கூட்டத்தில் ஏற்படும் தள்ளு முள்ளுவை தவிர்க்க உதவினர். ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்களுக்கு மாமேதை அப்துல் கலாம் அவர்களின் இல்லத்தின் முகவரியை கூறி அனுப்பி வைத்தனர். மேலும் ஜனாஸா தொழுகையின் போது ஏற்படும் தள்ளுமுள்ளுவை கட்டுப்படுத்தினர். இரவு முழுவதும் கண் விழித்து இந்த பணிகளை மேற்கொண்டனர்.
 
 
  

'மாமேதை' அப்துல் கலாம் ஜனாஸா நல்லடக்கத்தில் அதிரையர்கள் பங்கேற்பு !

மாரடைப்பால் காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஜனாஸா, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் பார்வைக்காக அப்துல் கலாம் அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இன்று காலை 9.30 மணியளவில் ராமேஸ்வரம் முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளி வாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. இதில் அதிரையர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர், இதையடுத்து ஜனாஸா ஊர்வலம் பேக்கரும்பு என்ற இடத்திற்கு ராணுவ வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டது.

அங்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கய்யா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், உதயகுமார், தமுமுக மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ், விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹசன் அலி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா நல்லடக்கத்தில் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இராமேஸ்வரத்திற்கு வந்து கலந்துகொண்டனர்.