Pages

Saturday, July 4, 2015

காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை: ஆம்பூர் கலவரத்தில் மேலும் 17 பேர் கைது

ஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை வேனில் ஏற்றிச் செல்லும்போது அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆம்பூர் கலவரம் தொடர்பாக போலீஸார் நேற்று ஒரே நாளில் 17 பேரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பவித்ரா என்ற பெண் காணாமல் போன வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆம்பூர் இளைஞர் ஷமீல்அஹ்மது உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜூன் 27-ம் தேதி ஆம்பூரில் பயங்கர வன்முறை ஏற்பட்டது.
இந்நிலையில், ஆம்பூர் ரெட்டி தோப்பு, பெத்லககேம் பகுதியைச் சேர்ந்த 20 பேரை கலவரத்தில் தொடர்புள்ளவர்களாக கருதிய போலீஸார் அவர்களை விசாரணைக்காக ஆம்பூர் டவுன் காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். அவர்களிடம் வேலூர் எஸ்பி செந்தில்குமாரி, டிஎஸ்பி கணேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அவர்களில் கலவரத்தில் தொடர்புடையவர் களாக கருதி 17 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதையறிந்த அவர்களது உறவினர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, விசாரணை என்ற பெயரில் கலவரத்தில் தொடர்பில்லாதவர் களை போலீஸார் கைது செய்வ தாகக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் களை போலீஸார் சமாதானப் படுத்தினர். ஆம்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 135 பேரை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வாளருக்கு சம்மன்
ஆம்பூர் இளைஞர் தாக்கப்பட்ட வழக்கில் 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என பள்ளிக்கொண்டா காவல் ஆய் வாளராக இருந்த மார்ட்டீன் பிரேம் ராஜுவுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் சபாரத்தினத்திடமும் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆம்பூர் கலவரம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்த மார்க்ஸ் தலைமையிலான தேசிய மனித உரிமை கூட்டமைப்பு குழுவினர் நேற்று வேலூர் வந்தனர். இக் குழுவினர் பள்ளிகொண்டா, ஆம்பூர் பகுதிகளில் விசாரணை நடத்தினர். அதன்பின்னர், வேலூரில் செய்தியாளர்களிடம் மார்க்ஸ் பேசும்போது, ‘‘ஆம்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் 50 சதவீதம் பேர் அப்பாவிகள். உண்மையானவர்களை மட்டும் போலீஸார் கைது செய்ய வேண்டும் என எஸ்பி செந்தில்குமாரியிடம் கூறியுள்ளோம். கலவரத்தில் தாக்கப்பட்ட போலீஸார் மற்றும் பொதுமக்களை விரைவில் சந்தித்து அவர்களது கருத்துகளையும் கேட்க உள்ளோம்’’ என்றார்.

மனைவியை ஆஜர்படுத்த கணவர் மனு
சென்னை
ஆம்பூர் கலவரத்துக்கு காரணமானவராகக் கருதப்படும் பவித்ரா என்ற பெண்ணின் கணவர் பழனி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: எனது மனைவி பவித்ராவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை வேலைக்கு அனுப்பவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் 24-ம் தேதி அவர் திடீரென காணாமல் போய்விட்டார். எனது மனைவியும் ஆள் கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கக்கூடும். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மனைவியைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி: ஹிந்து தமிழ்
சனி, ஜூலை 4, 2015

1 comment:

  1. அப்பாவிகளை கைது செய்கிறார்கள் ஆனால் நிரபராதி தண்டிக்கப் பட்டு அதற்க்கு காரணமான பவித்ரா என்ற பெண்ணை இது வரை கைது செய்யவில்லை தேடவும் இல்லை ஆனால் சில அமைப்புகள் குற்றவாளிக்கு துணை போகிறார்கள், சில நாட்களுக்கு முன்பு வட நாட்டில் மனுவாங்க மறுத்த போலீஸ் அதிகாரியை சம்பந்தப்பட்ட மனுதாரர் அடித்து துவசம் பண்ணியது சாதாரண செயலாக எடுத்துக் கொள்கிறார்கள் ஆனால் விசாரணை என்ற பெயரில் உயிர் வாங்கிய காவல் ஆய்வாளரை தாக்கிய செயல் மதச் சாயம் பூசப்பட்டு கலவரத்தை தூண்டுகிறது இந்து முன்னணி அமைப்பினர். இவர்களை தான் முதலில் கைது செய்ய வேண்டும்.

    காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் மனித உரிமைகள் மீறப்படுகிறது அனைத்து காவல் நிலையத்திலும் கண்காணிப்பு காமரா பொருத்தி மேற்பார்வை செய்ய வேண்டும், விதிமுறைகள் தவறும் அதிகாரிகள் மீது தாக்க நடவடிக்கை எடுப்பதோடு போலீஸ் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை வளரும். நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு விடுமா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...