Pages

Tuesday, July 7, 2015

ஆம்பூர் வாலிபர் சாவில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம் !

பள்ளிகொண்டா இளம்பெண் பவித்ரா மாயமாக இருந்த வழக்கில் வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஷமில்அகமது என்பவரை பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் 6 போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஷமில்அமகதுவை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஷமில்அகமது கடந்த 26–ந்தேதி சென்னை அரசு மருத்துவமனையில் இறந்தார். இந்த சம்பவத்தால் ஆம்பூரில் பெரிய கலவரம் வெடித்தது. உடனடியாக புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி தலைமையில் கடந்த 1–ந்தேதி முதல் வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக சஸ்பெண்டு செய்யப்பட்ட மார்ட்டின் பிரேம்ராஜ் 6, 7, 8 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் வேலூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் இன்ஸ்பெக்டர் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசார் விசாரணைக்கு ஆஜராக கோரி காட்பாடியில் உள்ள அவரது வீட்டின் கதவில் சம்மன் ஒட்டினர்.

நேற்று சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் விசாரணைக்கு வருவார் என்று போலீசார் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். மாலை வரை இன்ஸ்பெக்டர் வரவில்லை. அப்போது அவரது செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டனர். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதன் மூலம் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பயந்து தப்பி ஓடி தலைமறைவானது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் களமிறங்கினர். நேற்று காட்பாடியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று தேடினர். வீடு பூட்டப்பட்டிருந்தது.

மார்ட்டின் அங்கு இல்லை என்பதை அறிந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் பள்ளிகொண்டா சென்றனர். அங்கு மாணவர் விடுதி பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் மார்ட்டினுக்கு வீடு உள்ளது.

அந்த வீடும் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு முக்கிய ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆம்பூர் வாலிபர் ஷமில் அகமதுவின் உறவினர்கள் அளித்த புகாரில் பள்ளிகொண்டா போலீஸ் குடியிருப்பு வீட்டில் வைத்து தான் ஷமில்அகமதுவை இன்ஸ்பெக்டர் தாக்கினார் என தெரிவித்துள்ளனர்.

அந்த வீட்டில் ஷமில் அகமது அடைத்து வைக்கப்பட்டதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா அவரை தாக்கிய போலீஸ் ஆயுதங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் வீட்டை பூட்டிய சி.பி.சி.ஐ.டி. போலீசார் சீல் வைத்தனர். இதனால் அந்த வீடு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் மார்ட்டின் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஆம்பூர் கலவர பின்னணியில் உள்ள பவித்ரா மீட்கப்பட்ட நிலையில் வாலிபரை தாக்கியதாக கூறப்படும் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி:மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...