Pages

Wednesday, August 5, 2015

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் கொள்ளை நோய் சம்பந்தமான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்திரவின்படியும், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.ஆ.சுப்பிரமணி அவர்களின் வழிகாட்டுதல்படியும் 29.07.2015 அன்று பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான கொள்ளை நோய் சம்பந்தமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் பிச்சைமொய்தீன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சாந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலர் இளங்கோவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் தர்மலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள், எஸ்.வி.முத்துசாமி, எஸ்.சந்திரசேகரன், கா.பாஸ்கரன், வி.ரவிச்சந்திரன், கே.காசிநாதன், எஸ்.வெங்கடேஷ் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கும், இந்தியாவில் முதன் முறையாக எய்ட்ஸ் நோய் பாதிப்பை கண்டறிந்த டாக்டர்.சுனிதா சாலமன் அவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலர், டாக்டர் கு.அறிவழகன் பேசும்போது... 
“மழைக்காலம் துவங்கயிருப்பதால் நீரினால் பரவும் நோய்களான, டைபாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, காலரா, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் இருக்க பாதுகாப்பான குடிநீரை ஊராட்சி நிறுவனங்கள் வழங்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை கொதிக்க வைத்து ஆறவைத்து அருந்த வேண்டும். உள்ளாட்சி நிறுவனங்கள் 10, 25 தேதிகளில் மேல்நிலை, கீழ்நிலை குடிநீர் தொட்டிகளை பிளிச்சிங் பவுடர் கொண்டு தூய்மை செய்ய வேண்டும். குளோரினேஷன் செய்த குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். கொசுக்களினால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் ஒட்டுமொத்த தூய்மைப்பணி செய்திடல் வேண்டும். கடந்த வருடம் டெங்கு பாதித்த கிராமங்களில் அதிக கவனத்துடன் அனைவரும் பணியாற்ற வேண்டும். நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை துணி கொண்டு மூடி வைக்க வேண்டும். கிராமம் மற்றும் நகர்புறங்களில் கொள்ளை நோய் காணப்பட்டால் உடன் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

கூட்டத்தின் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) பட்டுக்கோட்டை வட்டாரத்தில் கொள்ளை நோய்களை தடுக்க, உள்ளாட்சி துறை, பொதுசுகாதாரத்துறை, கல்வித்துறை, குழந்தைகள் வளரச்சி திட்ட துறை, (அங்கன்வாடி) தன்னார்வ தொண்டு அமைப்புகள் இணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டது.

2) பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், ஒட்டுமொத்த துப்புரவு பணி செய்யவும்,

3) பள்ளிகூடங்களில் தொடர்ந்து சுகாதார உறுதி எடுக்கவும், பள்ளி  வளாகங்கள், குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகளை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்கவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

4) அனைத்து துறைகளும், பொது சுகாதாரத்துறைக்கு கொள்ளை நோய் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அளிக்கவும்,

5) காய்ச்சல் மற்றும் கொள்ளை நோய்கள் கண்காணிப்புப் பணிகள், நோயாளிகளுக்கு தக்க சிகிச்சை அளித்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல், நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணிகள் தொடர்ந்து முனைப்புடன் செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...