Pages

Saturday, September 12, 2015

ஆடம்பர திருமண மோகம் !

ஆடம்பர திருமண மோகம் நிறைய நடுத்தர குடும்பங்களை மீளா கடனில் தள்ளி, வாழ்க்கையைச் சுமையாக மாற்றியுள்ளது. வாழ்வில் ஒருமுறை நடக்கும் திருமணம் பலரின் வாழ்வில் பெரும் கடன் சுமையைக் கொண்டு வரும் ஒன்றாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத யதார்த்தமாக உள்ளது ஆழ்ந்து யோசிக்கவேண்டிய விஷயமே.    

ஊர் கூடி, உறவுகள் கூடி மகிழும் கல்யாணம்  உறவுகளையும், நட்பு வட்டாரத்தையும் பலப்படுத்துவதற்கு பதிலாக  ஊரின் முன் பண பலத்தை நிரூபிக்கும் விதமாக இருக்கின்றன. இன்று  திருமண விழாக்கள் பல லட்சங்கள், கோடிகளை  கரைத்து வருகிறது.  முன்பெல்லாம் திருமண விழாக்களில்  நண்பர்கள்,  உறவினர்களின் சிரிப்புச் சத்தம்  கேட்ட காலமெல்லாம் கடந்து இன்று  ஊர் நடுங்கும் வெடிச் சத்தமும், காது கிழியும் சினிமாப் பாடல்களும் நடப்பது திருமணமா இல்லை சினிமா பாடல்  நடக்கும் கச்சேரிக் கூடமா என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மாறிப்போய்விட்டது.

திருமணங்கள் உறவுகளின் ஒற்றுமை  அடையாளமாக இருந்த காலமெல்லாம் கடந்து  வீண் செலவுகளும், ஆடம்பரமும் காண்பிக்கும்   சமூக அந்தஸ்திற்கான அடையாளமாக திசை திருப்பி விட்டனர்.

ஜாதியில் தொடங்கி ஜாதகப் பொருத்ததில் முடிவாகி கல்யாண மண்டபத்தில் வைப்பதே நமக்கு பெருமை என்று நினைத்து நம் சமூக அந்தஸ்திற்கு  சவால் விடும் உணவு வகைகளோடு, உறவுகள் கூடி மகிழும் இடமாக இருக்க வேண்டிய திருமணம் உறவின் முன் பண பலத்தையும், நகை இருப்பையும் காண்பிக்கும் இடமாக திருமணம்  என்னும் சுப நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன.

எளிமையாக இருப்பவர்கள் கூட பண வலிமையை காட்டாவிட்டால் நமக்கென்ன மரியாதை என்ற போலியான பந்தாவிற்கு பல லட்சம் கொட்டுவதும் ஒரு நாள்   சந்தோஷத்திற்கு  ஊர்ப் பெருமைக்கு செய்யும் வீண் செலவுகளால்  பல ஆண்டுகள் கடனாளியாகி கடனை அடைக்க   நிம்மதி இழப்பதும் திருமணத்தால்தான் என்றால் மிகையாகாது.

தற்போதைய திருமணம் வீடியோ,மெகா டி.வி  திரை சாட்சியாக கல்யாணம் நடக்கிறது.   கிரிக்கெட் போட்டிகள் போல நேரடி ஒளிபரப்பும் பண பலத்தால் நடந்து வருகிறது. இந்தியாவில்   நடக்கும் பல ஆயிரம் கோடிகளில் நடத்தப்படும் திருமணத்தை வைத்து தமிழகத்திற்கு பட்ஜெட் போடும் அளவிற்கு திருமணங்கள் கோடிகளில் புரள்கின்றன .

யானையைப் பார்த்து பூனை போட்டி போட்ட கதையாக பணக்கார சமூகம் செய்யும் வீண் விரயம் போல நடுத்தர  மக்களும்   கல்யாணச் செலவுகள் செய்யும் போது கல்யாணக் கடன்கள் அவர்களை காணாமல் போக வைக்கின்றன.

கல்யாணம் மகிழ்ச்சியான சம்பவம் என்ற நிலையில் இருந்து கட்டாய  கடன்   வாங்கி நடத்தும் நிலைக்கு இன்றைய நடுத்தர குடும்பத்தினர்  தள்ளப்பட்டு வருகின்றனர். மேல் தட்டு மக்கள் தவிர பெரும்பான்மையான   நடுத்தர மக்கள் கல்யாணக் கடனை அடைக்க  சொத்துக்கள் விற்பதும், வட்டிக்குப் பணம் வாங்கி பல ஆண்டுகள் கடனைச் செலுத்துவதில் காலம் தள்ளுவதும் தொடர் கதையாகி வருகிறது.

வாகன ஓட்டிகளை பதம் பார்க்க தயாராகும் ஜாதி,கட்சித் தலைவர்களின் , நடிகர்களின்  ப்ளெக்ஸ் போர்டுகள்,  நடிகர்கள்  அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பும் இல்லாத திருமண விழாவை பார்ப்பது  அவ்வளவு எளிதான காரியமல்ல என்று சொல்லுமளவிற்கு “நாகரீக “ கல்யாணங்கள் அரங்கேறி   வருகின்றன.

தலைவர் வரும் வரை திருமணம் நடத்த முடியாமல் தவிக்கும் மணமகனும், ராகு காலம் வருவதற்குள்ளாவது தலைவர்  தாலி எடுத்துக்  கொடுப்பாரா   எனக் கேட்கும் பெற்றோர் நிலையும் இப்போது திருமண பரபரப்பாக இருக்கிறது. பெரும்பான்மையான திருமணங்கள்  அரசியல் கட்சிகளின் பிடியிலேயே நடக்கின்றன.  இதெல்லாம்  போக  சாலையில்  செல்வோரை மிரட்டும் வாண வேடிக்கையும், காதைச் செவிடாக்கும்  வெடி போடும் கலாசாரமும் பெருகி பணத்தை அழிப்பதுடன்  கலாசார  சீரழிவும் தொடர்கதையாகி வருகிறது.

திருமண செலவுகளைக் கேட்டால் மயக்கமே வரும் அளவிற்கு இருக்கிறது. மண்டபச் செலவு இன்றைக்கு நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் முதல் 5  லட்சத்திற்கும் மேல், திருமண  மண்டபங்களின் வாடகை, சாப்பாட்டுச் செலவிற்கு நிகராக அதிகரித்து வருகின்றன .

அதேபோல நம் பத்திரிகை நம் கல்யாண அழைப்பிதழாக இருப்பதற்கு பதில் பணத்தின் பலத்தை பத்திரிகைகளில் காட்டி வருகின்றனர். ஒரு பத்திரிகையின் விலை ரூ 10 என்றாலும் ரூ. 1000 என்றாலும் கல்யாணத்திற்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் வரத் தான் போகிறார்கள். இதில் எதற்கு வீண் விரயம்?

அதனால் பத்திரிகை  எளிமையாக  இருப்பது செலவைக் குறைக்கும். இரு வீட்டார் அழைப்பிதழ்  இன்னமும் செலவைக்  குறைக்கும். போட்டோ, வீடியோ செலவுகளை இரு வீட்டாரும் சேர்ந்து செய்துகொள்வதால் செலவும் குறையும்.

ஒரு நாள் சில மணி நேரங்கள் கட்டிக்கொள்ளும் கல்யாண பட்டுப்   புடவைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து அதை மீண்டும் கட்டிக்கொள்ள முடியாமல் பத்திரமாக வீட்டு பீரோவில் தூங்க வைப்பதால் நம் பணமும் தூங்க வைக்கப்படுகிறது  என்று தான் சொல்ல வேண்டும். சேலைகள் மட்டுமல்ல ஆண்கள் அணியும் ஆடம்பர மேல்நாட்டு ஆடைகளும் அன்று ஒரு நாள் அணிந்த மாதிரி  போட்டோவில்   தான் பார்க்க முடியுமே தவிர இதர நாட்களில் அணிய முடியாத நிலையில் இருக்கின்றன.

எனவே உடைகள் லட்சணமாக இருந்தால் போதும். பல லட்சத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.  விருந்து  நம் விருந்தில் உறவினர்களும் ஊரும் வியக்க வேண்டும் என வகைவகையான உணவுகள் மூலம் சுமார் 15% உணவு உற்பத்தி, திருமணம் போன்ற  விழாக்களில் வீணாகக் கொட்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம் பாரம்பரிய சாப்பாடு  மட்டுமே நமக்கு போதும்.  20 வகையான உணவுகளைக்  கொடுத்தேன் என்று பெருமை பேச வைக்க எத்தனை பேர் அத்தனை உணவு வகைகளையும் உண்டு நம் உணவு வகையின் சிறப்பை சொல்ல முடியும்.வருபவர்களில் சிலர் வேறு இல்ல விழாக்களில் சென்று அங்கு விருந்து உண்டிருந்தால் நம் சாப்பாடும், நம் பணமும் வீண் விரயமே.

இந்திய வேளாண் பல்கலைக் கழகம் பெங்களூருவில்  நடத்திய ஆராய்ச்சியில் சுமார் 339 கோடிகள்  மதிப்புள்ள உணவுப்பொருள்கள் வீணாக திருமண காலத்தில் விரயமாவதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதனால் சாப்பாட்டை விதவிதமாக கொடுப்பதற்கு பதில் குறைந்த வகைகளில்  தரமாக அமைத்து  திருப்தியுடன் சாப்பாடு போடலாம். சாப்பாட்டிற்கு பின் பழ ரசம், ஐஸ் கிரீம் போன்ற மெனுக்களை தவிர்ப்பது நல்லது.  இந்த மெனுக்கள் குழந்தைகளை இதர உணவு உண்ண முடியாமல் செய்து விடுகிறது.

அண்டாவும் கட்டிலும் இல்லாத வீட்டிலா நாம் பெண்ணை கொடுக்கிறோம் என்ற எண்ணமும், ஒன்றும் இல்லாத வீடா நாம் சீர் வரிசை  என்ற பெயரில் பெண் வீட்டாரை கஷ்டப்படுத்த வேண்டும் என்றும்  மாடியில் மூட்டை கட்டிப்போடவா  பாத்திரமும், கட்டிலும் என்பதை இரு வீட்டாரும் நினைத்தாலே போதும் வீண் செலவுகள் தவிர்க்கப்படும்.  ஊருக்கு தெரிய வேண்டும் என கிராமங்களில் கடன் வாங்கியாவது மாப்பிள்ளை வீட்டிற்கு  எட்டோடு ஒன்பதாவது கட்டிலைச் சேர்ப்பதும், பாத்திரங்களை அடுக்குவதும் மக்கள் பெருமைக்கு கடன் பட்டு வாழ வேண்டுமா எனபதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அவசியமாக வாங்க வேண்டும் என்பவர்கள் வெளியூரில் வசிப்பவர்களாக இருந்தால் தங்குமிடத்தில் உள்ள கடைகளில் வாங்கிக்கொண்டால் போக்குவரத்து செலவும்  மிச்சம்.  நண்பர்கள்,உறவினர்கள் ஆகியோரைத் தங்க வைக்க நல்ல விடுதி,ஹோட்டல் அறைகள் வசதி செய்து  தருவது அவசியம்தான். அதே நேரத்தில் தேவை அற்ற பிரச்சனைகளைத் தரும் மது தேவையா என்பதை சிந்திக்க வேண்டும். இதனால்  பணமும்,நிம்மதியும் பறி போகும்.

மாப்பிள்ளை அழைப்பிற்கு விதவிதமான பூக்கள்,யானை, குதிரை வண்டி சவாரி என வீண் விரயம் செய்வதை தடுக்கலாம். பழங்களும் ,இனிப்பு வகைகளும் தேவை அறிந்து வாங்க வேண்டும் பெட்டி பெட்டியாக வாங்கப்படும் இனிப்பு வகைகள் பண விரயத்தோடு சர்க்கரை  நோயையும் தரும்.

உறவுகள் ,ஊர் பெருமைக்கு ஆடம்பரம் செய்து திருமணம் நடத்தி  கடனில் வாழ்வதைக் காட்டிலும் நம் தகுதிக்கு ஏற்றது போல  நம் நிம்மதியைப் பாதிக்காத வகையில் எளிமையாகத் திருமணம் நடத்துவதே புத்திசாலித்தனம். கடன் மரண தணடனையை விட கொடுமையானது. யார் மூலம் கடன்  என பின்னாளில் சண்டை போடுவதைக் காட்டிலும் கடன் ஏற்படாமல் சிக்கனமாக வாழ்வது நிரந்தர நிம்மதியைத் தரும்.

ஆடம்பர செலவுகள் செய்வதைக் காட்டிலும், திருமண தினத்தன்று நம்மால் முடிந்த அளவு கண்பார்வையற்றோர், உடல் குறைபாடு உடையவர்களுக்கு , ஆதரவற்றோர்  இல்லத்திற்கு  உணவும், உடையும் கொடுத்து  அவர்களின் மகிழ்ச்சிக்கு வழியாக இருக்கலாம்.

S.அசோக்
நன்றி:விகடன் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...