Pages

Wednesday, September 9, 2015

'உயர் கல்வி: ஒதுக்கப்படும் இஸ்லாமியர்கள், தலித்துகள்!'

நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களில் முறையான இடஒதுக்கீடு அமல்படுத்துவதை, அரசுகள் கண்டும் காணாமலும் இருப்பதால் முஸ்லிம்கள் மற்றும் தலித் பிரிவினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா போன்ற நாட்டில்  இப்படி  நடப்பது ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் செயல் என்றும்   ஆய்வுமுடிவுகளை மேற்கோள் காட்டி விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் சாதி , மதம் மற்றும் பாலின வேறுபாடுகளினால் ஏற்படும் சமூக பிளவுகளை மிகவும் கவனமாகவும் பொறுப்பாகவும் கையாள வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.  எப்பொழுது ஒரு நாடு தொடர்ச்சியாக இது போன்ற சமூக ஏற்றத் தாழ்வுகளையும், பாகுபாடுகளையும் கவனிக்க தவறுகிறதோ, அப்பொழுது ஜனநாயகத்தின் அடித்தளம் ஆட்டம் காணும் நிலைவரும்.

அரசியல் அமைப்பு சாசனத்தின் வாயிலாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதிக்கான உடன்பாடுகள் இருந்தும்,  இன்றளவில் நாம் சமத்துவத்தை அடையவில்லை. இந்த கசப்பான உண்மை, கடந்த ஆண்டு வெளியான அகில இந்திய உயர் கல்வி கணக்கெடுப்பின் 2012 - 2013 (All India Survey on Higher Education [AISHE] ) அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மதம் என்றும் சாதி என்றும் பிரிந்து கிடக்கும் இந்த நாட்டில், சமூக நீதி ஒரு கனவாக மட்டுமே உள்ளது என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது இந்த அறிக்கை.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின், உயர் கல்வி துறை சார்பில்  இணையதளத்தின் மூலம் இந்தக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.இதில், 633 அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களும், 24,120 கல்லூரிகள் மற்றும் 6,772 தன்னாட்சி  கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. இந்தியா, பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்று 68 ஆண்டுகளாகியும், உயர் கல்வியில் ஆசிரியர் பணிகளில் இஸ்லாமியர்கள், பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகக் குறைவாக உள்ளனர் என்ற கனத்த உண்மை வெளிவந்துள்ளது.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை 16.6%, பழங்குடியினரின் மக்கள் தொகை 8.6%, இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 14.2% ஆகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லை என்பதால் கடந்த 1931 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பே ஆதாரமாக கொள்ளப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வெளியான மண்டல் அறிக்கையில் இந்துக்களும், இந்துக்கள் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை 52% ஆகும் மற்றும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனத்தின் (National Sample Survey Organisation [NSSO]) 2006 ஆம் ஆண்டு அறிக்கையின்படி 41% ஆகும். கீழ்க்காணும் அட்டவணை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் இஸ்லாமிய மக்களின் சதவிகிதத்தை குறிப்பிடுகிறது.

அகில இந்திய உயர் கல்வி கணக்கெடுப்பின்படி  தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய மற்றும் பெண்களின் சதவிகிதத்தை கீழ் உள்ள அட்டவணை குறிப்பிடுகிறது.
பாலின பாகுபாடுகளை பெருமளவிற்கு உடைத்தெறிந்த பெருமை கேரள மாநிலத்தையே சேரும். இதனை அடுத்து தமிழகமும், பஞ்சாப் மாநிலமும் நல்ல முன்னேற்றத்தைக்  கொண்டுள்ளது. தேசிய அளவில் உயர் கல்வியில் 50%  ஆக இருக்க வேண்டிய பெண்களின் பிரதிநிதித்துவம் 39% ஆக மட்டுமே உள்ளது. இதில் இஸ்லாமிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. இது  சாதி, மதம் போன்ற சமூக பாகுபாட்டில் ஆணாதிக்கம் நிறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் 3.09% ஆக உள்ளது. இது சச்சார் கமிட்டி அறிக்கையில் இந்திய அதிகாரத்துறையில் 2.5% மட்டுமே இஸ்லாமியர்கள் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளதை மேலும் உறுதி செய்கிறது. பல ஆண்டுகளாக முற்போக்கு ஆட்சிகளைக்  கண்ட மேற்கு வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்கள்கூட உயர் கல்வியில் இஸ்லாமிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு போதிய வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கவில்லை.

வளர்ச்சிக்குத்  தன்னை முன் மாதிரி என்று மார்தட்டிக்கொள்ளும் குஜராத், இதில் மிகவும் மோசமான முன் மாதிரியாக உள்ளது. இங்கு உயர் கல்வி ஆசிரியர்களில் இஸ்லாமியர்கள் 1.18%  மட்டுமே உள்ளனர். இந்த ‘குஜராத் மாதிரி’ மனப்பாங்கு இஸ்லாமியர்கள் பெருமளவிற்கு பின்னுக்கு தள்ளப்பட்டு சமூக நீதிக்கான ஏற்பாடுகளை தகர்த்தெறியும் ஆதிக்க சாதியினரின் அரசியலை மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறது எனலாம்.

உத்தரபிரதேசம், பீகார் மற்றும் தமிழ் நாடு, போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆதிக்க சக்திகளாக இருக்கும் மாநிலங்களிலும் இஸ்லாமிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் பின்னுக்குத்  தள்ளப்படுவதைத் தெளிவாகக்  காணமுடிகிறது. இந்தப்  போக்கு அண்ணல் அம்பேத்கரின், “தரப் படுத்தபட்ட ஏற்றத்தாழ்வு என்றும் ஏற்றத்தாழ்வின் மீதான பொதுவான அதிருப்தியை தூண்டாமல் சமூக நீதிக்கான ஒன்றிணைந்த புரட்சிக்கு வழிவகுக்காது ” என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது.

தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெரும் அளவில் பயனடைந்துள்ளனர். இவர்கள் 54.47% உயர் கல்வி ஆசிரியர்களாக உள்ளனர். எனினும் இது இஸ்லாமிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினரை  பெரும் அளவிற்குச்  சென்றடையவில்லை. தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனத்தின் அறிக்கையை எடுத்துக் கொண்டால் கூட தமிழ்நாட்டினை தவிர மற்ற மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் மிகக்  குறைவாகவே உள்ளது.

உயர்கல்வியில் மாணவ மாணவியரின் சதவிகிதமும், நமது சாதிய மற்றும் மத  வேறுபாட்டினை பிரதிபலிக்கிறது. 12.2% தாழ்த்தப்பட்ட வகுப்பினரும், 4.4% பழங்குடியின வகுப்பினரும், 30.05% பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், 3.9% இஸ்லாமியர்களும் கொண்ட மாணவ சமுதாயத்திலும் சாதிய மற்றும் மத ரீதியான ஒடுக்குமுறை இருப்பதை தற்செயலான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளமுடியாது.

உயர் கல்வியில், பெண்களின் சேர்க்கை அதிகரித்திருந்தாலும் பாலின சமநிலையை அடைய இந்தியாவிற்கு இன்னும் நெடுந்தூரம் உள்ளது. அகில இந்திய உயர் கல்வி கணக்கெடுப்பின்படி, உயர் கல்விச் சேர்க்கையில் தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் இஸ்லாமியர்களே மிகவும் குறைவாக உள்ளனர்.

மாநில வாரியான மாணவர் சேர்கை – வெவ்வேறு சமூக பிரிவினர்
அட்டவணை 3 -

‘தகுதி’ , ‘தரம்’ என்று இடஒதுக்கீட்டினை எதிர்ப்பவர்கள்,  நாட்டின் மக்கள் தொகையில் பெருமளவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நிலையினை காண மறுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களில், பொருளாதாரத்தில் மேலுள்ள வகுப்பினர் (creamy layer), இடஒதுக்கீட்டின் எல்லா பலன்களையும் அனுபவிக்கிறார்கள் என்ற வாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏனெனில் சட்டப்பூர்வமாக அவர்களுக்குக்  கொடுக்க வேண்டிய 27% இட ஒதுக்கீட்டினை இன்னும் முழுமையாக அமல்படுத்தவில்லை. தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இது போன்ற இட ஒதுக்கீடுகள் இல்லை என்ற நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களின் பரதிநிதித்துவம் மிகவும் குறைவே என்று இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
காலம் காலமாக நடைமுறையில் உள்ள ஏற்றதாழ்வு மிகுந்த இந்த சமுதாயத்தை இப்போதும், இனி வரும் காலங்களுக்கும் மாறாத வண்ணம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் சிறுபான்மையினரையும் வளர்ச்சியில் இருந்து ஒதுக்கிவிட்டு, தங்களின் மேலாதிக்கத்தை  தக்கவைத்துக் கொள்ளும் தீர்மானத்தில் இருப்பது தெளிவாக்குகின்றன இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகள்.

அதுமட்டுமல்லாமல் உயர் சாதியினர் மட்டுமே மற்றவர்களுக்கு கல்வியைப்  போதிக்கும் தகுதியும், திறமையும் உள்ளவர்கள் என்ற சாதி ஆதிக்க கருத்தினை மீண்டும் உறுதிபடுத்துகிறது இந்த அறிக்கையின் முடிவுகள்.

கல்வியை வழங்கும் பொறுப்பிலிருந்து தன்னை மெதுவாக விலக்கிக்கொண்டு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உதவியாக மாறிகொண்டிருக்கும் அரசுகளிடம் சமூக நீதியை எதிர்பார்ப்பது எட்டாக் கனியாகவே உள்ளது.

- எஸ்.வி.நாராயணன்(சமூக செயற்பாட்டாளர்)
நன்றி:விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...