Pages

Sunday, September 27, 2015

வீண் பேச்சும்! வெட்டிப் பேச்சும்!!

வாங்களேன்!  இப்படி சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம் என்ற வார்த்தைகள் நமது காதுகளில் அன்றாடம் விழுபவைதான்.   மனித இனத்துக்கு மட்டும் இறைவன் கொடுத்த பேசும் ஆற்றலை எவ்விதப் ஆக்கபூர்வமான காரியங்களுக்காகவும்  பயன்படுத்தாமல் “ சும்மா “ பேசுவதுதான் வீண் பேச்சு! வெட்டிப் பேச்சு! .

“பயனில் சொல் பாராட்டுவானை மகனெனல் 
மக்கட்பதடி எனல்“

என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது பயன் தராத வீண் பேச்சுக்களையும் வெட்டித்தனமான பேச்சுக்களையும் பேசுபவர்களை மக்களுடைய பட்டியலில் சேர்க்கக் கூடாது ; அவர்களை ஒன்றுக்கும் உதவாத பதர்களின் பட்டியலில் சேர்க்கவேண்டுமென்பது திருவள்ளுவரின் கடுமையான கண்டனக் கருத்து.

இணைய தளங்கள் அறிமுகமாகி, தகவல் பரிமாற்றத்துக்காக  மக்கள் அவற்றைப்  பயன்படுத்தத் தொடங்கிய பிறகும் கூட  வாயால் பேசாவிட்டாலும் வார்த்தைகளால் தட்டச்சு செய்து பேச்சுக்களை பரிமாறிக் கொள்கிறார்கள். இவைகளில் பெரும்பாலும் ஆக்கபூர்வமான அல்லது தனக்கோ தன குடும்பத்துக்கோ தனது சமுதாயத்துக்கோ பயன்படும் சங்கதிகள் இருக்கின்றனவா என்று பார்த்தால் உருப்படியாக ஒன்றுமில்லை.

இன்னைக்கு என்ன பசியாற?
மீன்  வாங்கியாச்சா?
ஊரில் இப்போ ரால் வருதா? 
கொடுவாப் பிசுக்கு கூறு எவ்வளவு? 
மாமியாக்காரி அடங்கிட்டாளா?
இவளுக்கும் அவனுக்கும் தொடர்பாமே! 
அந்த மாப்பிள சரியில்லையாமே!
பெருநாளக்கி என்ன புடவை எடுத்தே? 

என்பது போன்ற  பயனற்ற வார்த்தைகள்தான் பெரும்பாலும் பரிமாறப்படுகின்றன .

ஒரு காலத்தில் குளத்தாங்கரைகளிலும், பள்ளிவாசல்களிலும் வயல்வெளிகளிலும் , மதகுகளின் சுவர்களிலும் அமர்ந்து பேசிக் கொண்டு காலத்தை வீணே கழித்தவர்கள் இன்று இணையங்களில் உறவாடும் அளவுக்கு எவனோ கண்டு பிடித்த அறிவியல்தான் உயர்ந்து இருக்கிறது.
ஆனால்  தனி மனித அறிவின் வீச்சு அந்த அளவுக்கு உயரவில்லை. மாறாக மனிதனை இயங்கவிடாமல் இணையங்கள் முடக்கிப் போட்டு இருக்கின்றன.

“ஆளும் வளரனும்! அறிவும் வளரனும் !
அதுதாண்டா வளர்ச்சி உன்னை 
ஆசையோடு ஈன்றவளுக்கு
அதுவே நீ தரும் மகிழ்ச்சி”

என்று பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் குறிப்பிட்டார். ஆனால் இன்று துரதிஷ்டவசமாக ஆள்கள்தான் வளர்ந்து இருக்கிறோம். அறிவு வளரவில்லை.

இன்னும் சொல்லப்போனால்  வீண் பேச்சுக்களைப் பேசுவதற்காகவே முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் தனி குழுமங்கள் ஏற்படுத்தி ஒன்றுக்கும் உதவாத செய்திகளைப் பற்றி பக்கம் பக்கமாக விவாதித்து வருகிறார்கள். அரட்டை அடிக்கும் நண்பர்கள், வாங்க பேசலாம், நீங்களும் வாங்களேன் நிம்மதியாப் பேசலாம் , சொந்தங்களே வருக , சுவை  சுவை தனிச்சுவை போன்றவைகள் எல்லாம் இணைய தளங்களில் வெட்டிப் பேச்சு பேசுவதற்காகவே உருவாக்கப்பட்டு உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு வயது வித்தியாசம் இல்லாமல்  பொன்னான பொழுதை மண்ணாக்கி வரும் குழுக்களின் பெயர்களாகும்.

இந்தக் குழுக்களின் வேலை என்னவென்றால் நடைமுறை சாத்தியமில்லாத விஷயங்களை வெட்டியாக விவாதிப்பதும் தனி மனித மத, இன, நிற, சாதி, மொழி, தெரு பாகுபாடுகளை வளர்த்துக் கொள்வதும் தவறுகளைக் கண்டிக்கிறோம் என்ற பெயரில் தனிமனித தாக்குதல்களை அரங்கேற்றுவதும்தான்.

கவிஞர் கா. மு. ஷரீப் அவர்களும் தன் பங்குக்கு
வாழ்ந்தாலும் ஏசும் 
தாழ்ந்தாலும் ஏசும் 
வையகம் இதுதானடா !”  – என்று பாடினார் .

ஒரு மனிதன் என்ன செய்தாலும் எப்படி வாழ்ந்தாலும்  அதில் குற்றம் கண்டுபிடித்து குறை சொல்லிப் புறமும் புரளியும்  பேசுவது வழக்கமாகிவிட்டது.    .

இறைவன் படைத்த நாக்கு மனிதனின் பொக்கிஷமாகும். சிந்தனையையும் அறிவையும் ஆலோசனையையும்  வெளிப்படுத்தும் தலைவாசல்தான் நாக்கு. ஆனால் அந்த நாக்கு பெரும்பாலும் வட்டிலப்பத்தின் ருசியையும் வாழைமீனின் சுவையையும்தான் அடுத்தவரிடம் அலசி ஆராய்கிறது.

நாட்டின் சாக்கடை அரசியலை சல்லடை போட்டு சலிக்கிறது. குறிப்பிட்ட நடிகர் நடித்த திரைப் படத்தின் காட்சிகளை விவரிக்கிறது. தனது அறிவுதான் உலகிய உயர்ந்து நான் சொல்வதுதான் சரியானதென்று தனது சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அடுத்தவர் முன் விவாதிக்கிறது.  தான் படைக்கப்பட்ட காரணத்துக்கான செயலை நாக்கானது  செய்கிறதா என்று கேட்டால் ஏமாற்றம் தரும் பதிலே கிடைக்கும்.

இடமறிந்து பேசுதல்- பொருளறிந்து பேசுதல்- அளவோடு பேசுதல் அடக்கமாகப் பேசுதல் போன்ற நல்ல குணங்களை கற்பதற்காக  நாக்கை கழற்றி எடுத்து ஒரு பல்கலைக் கழகத்துக்கா அனுப்பி வைக்க  முடியும்?

“ஒருவர் தனது இரு தாடைகளுக்கும் இரு தொடைகளுக்கும் இடையே உள்ள உறுப்புக்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டாரானால்   ( அதாவது நாவையும் மர்மஸ்தானத்தையும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றால் ) அவருக்கு சுவர்க்கத்தைப் பெற்றுத்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று பெருமானார் நபி ( ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ளுப்னு ஸாத் ( ரலி ) அவர்கள் அறிவிப்பதாக புகாரியில் பதிவாகி இருக்கிறது.

“நான் உறுதியாக கடைப் பிடிக்கும்படியான ஒரு செயலை எனக்கு சொல்லித் தாருங்கள் என்று பெருமானார் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் தமது நாவைக் காட்டி “ இதை உமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வீராக “ என்று கூறினார்கள் என்று ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த நபி மொழி தப்ரானி, மஜ்முஜ்ஜவாயித் ஆகிய நூல்களில் பதிவாகி இருக்கிறது.

அனஸ் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் “ நாங்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் வீட்டு வாசலில் அமர்ந்து எங்களுக்குள் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். ஒருவர் ஒரு ஆயத்தையும் மற்றவர் இன்னொரு ஆயத்தையும் தத்தமது வாக்குவாதத்துக்கு ஆதாரமாகக் கூறிக் கொண்டிருந்தார்கள் .அப்போது அங்கே வந்துவிட்ட பெருமானார் (ஸல்) அவர்களின் முகம் மாதுளம் பழத்தைப் பிளந்ததுபோல் கோபத்தால் சிவந்துவிட்டது இவ்வாறு தர்க்கம் செய்து சண்டையிட்டுக் கொண்டு ஒருவர் தலையை ஒருவர் வெட்டிக் கொண்டு நிராகரிப்பாளராகிவிடாதீர்கள் “ என்று கோபமாகக் கூறினார்கள் என்று அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் தப்ரானியில் பதிவாகி இருக்கிறது.

ஆனால் இன்றோ பலரும் பார்க்க அரங்குகள் அமைத்து வீண் விவாதங்கள் வெட்டிக் கருத்துக்கள் விதண்டாவாதங்கள் பேசுவதையும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்வதையும்  நமது பல இயக்கங்கள் வருடந்தோறும் வழக்கமாக வைத்திருக்கின்றன.

அந்நாளில் பெரியவர்கள் வாய் பதனம்; கை பதனம் என்று பிள்ளைகளுக்கு அறிவுரை பகர்வார்கள். அதாவது உனது நாவை வீண் பேச்சுக்களிலிருந்து தடுத்துக் கொள்; உனது கரங்களை திருட்டிலிருந்து காப்பாற்றிக் கொள் என்பது இதன் பொருளாகும்.

வெட்டிப் பேச்சுக்கள் எந்த விளைவையும் தராது . ஆக்கபூர்வமாக செய்யவேண்டுமென்றால் செயல்களில் இறங்க வேண்டும். இதைத்தான் பெரியவர்கள் அமல் என்றார்கள்.

வாயாலே கட்டுகிற கோட்டைகளுக்குள் ஒரு வண்டு கூட நுழைய முடியாது. நாவாலே பரப்புகிற அவதூறுகளுக்கும் வதந்திகளுக்கும்  முன்னால் சாம்ராஜ்ஜியங்கள் கூட சரிந்து போகும். வெறும் கை முழமும் போடாது வெறும் வாய் பந்தலும்  போடாது. நல்லதை எண்ணி  நடப்பதையும் நடத்த இயன்றதையும் பேசினால் மட்டுமே நாடும் நாமும் நலம் பெற இயலும்.

நகைச்சுவைக் கதையொன்று சொல்வார்கள். நாக்கும் பல்லும் பேசிக் கொண்டார்களாம்.

நாக்கு பல்லிடம் கேட்டதாம் . “ ஏ பல்லே ! நீ ரெம்ப நல்லவன்டா . நான் உணவுப் பண்டங்களை சுவைத்து ருசித்து சாப்பிட நீதான் நல்லவிதமாக அரைத்து அரைத்துத் தருகிறாய் . உனக்கு நான்   நன்றிக்கடனாக ஏதாவது உதவி செய்ய வேண்டுமா ? “ என்று கேட்டதாம்.

அதற்கு பல் சொன்னதாம். நீ  ஒரு உதவியும் செய்ய வேண்டாம். யாரையும் தவறாகப் பேசாதே! காரணம் நீ ஏதாவது பேசிவிடுகிறாய்;  அவன் பல்லை உடைத்து விடுவேன் என்று என்னை உடைக்க வருகிறான் “ என்றதாம்.
இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த கால் சொன்னதாம்,  அதே நிலைமைதான் எனக்கும்- “ பல நேரங்களில் நாக்கே!  நீ  பேசும் தவறான வார்த்தைகளால் காலை வெட்டிவிடுவேன்” என்கிறார்கள் என்றதும் இந்த அணியில் கண்ணும் சேர்ந்து கொண்டு “ஆமாம்!

முழியைத்தோண்டிவிடுவேன் என்றும் சொல்கிறார்கள் என்றதாம். உடனே குடலும் தன்னை இணைத்துக் கொண்டு “ குடலை சரித்துவிடுவேன்”  என்று என்னையும்தான் சொல்கிறார்கள் என்று.

ஆகவே  ஒரு சிறைக்குள் இருக்கும் நாக்கு செய்யும் தவறுக்கு உடலின் அத்தனை உறுப்புகளும் சம்பந்தமில்லாமல் குற்றமிழைக்காமலேயே தண்டனைக்கு இலக்காகி ஆளாகி விடுகின்றன. ஆறடி உயரமுள்ள மனிதனின் வாழ்வை அவனது ஆறு அங்குல நாக்கு நிர்ணயிக்கிறது.

ஒரு நூலில் படித்தேன். அதை அன்புடன் பகிர விரும்புகிறேன். 
தாயிடம் - அன்பாக பேசுங்கள்..!
தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..!
ஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..!
துணைவியுடன் - உண்மையாக பேசுங்கள்..!
சகோதரனிடம் - அளவாக பேசுங்கள்..!
சகோதரியிடம் - பாசத்தோடு பேசுங்கள்..!
குழந்தைகளிடம் - ஆர்வத்தோடு பேசுங்கள்..!
உறவினர்களிடம் - பரிவோடு பேசுங்கள்..!
நண்பர்களிடம் - உரிமையோடு பேசுங்கள்..!
அதிகாரியிடம் - பணிவோடு பேசுங்கள்..!
வியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..!
வாடிக்கையாளரிடம் - நேர்மையாக பேசுங்கள்..!
தொழிலாளரிடம் - மனிதநேயத்தோடு பேசுங்கள்..!
அரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக பேசுங்கள்..!
இறைவனிடம் - மெளனமாக பேசுங்கள்..!

எனவே  நாவைப் பேணுவோம். வீண் பேச்சுக்களைத் தவிர்ப்போம். வீண் விவாதங்களை விட்டொழிப்போம். சொல்லில் மட்டும் சுகத்தைக் காட்டாமல் செயலிலும் காட்டுவோம் ! எங்கே யாரிடம் எப்படிப் பேசுவது என்றறிந்து பேசுவோம்.  இத்தகைய சிறந்த   சிந்தனைகளை வளர்ப்போம்!


இப்ராஹீம் அன்சாரி 
கல்லூரி முதல்வர் 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

6 comments:

 1. இன்றையநிலையைபடம்பிடித்துக்காட்டும்நல்லகட்டுரை!வெட்டிபேச்சுக்கள்மூலம்கிடைப்பதுபாவமும்இ ழ ப்பது பிரானணுமே.

  ReplyDelete
 2. காலசூழலுக்கேற்றற பதிவு.

  நாட்டுப்பிரச்சனையும் சமுதாயப்பிரச்சனையும் எத்தனையோ இருக்க அதையெல்லாம் சிந்திக்காமல் சில வெட்டிப்பேச்சு பேசுவதற்கென்று சில இடங்களை தேர்ந்தெடுத்து வீணாக பொழுதை கழிப்பதுடன் சில தேவையில்லாத பிரச்சனைகளை கூட ஏற்படுத்தி விடுகின்றனர்.

  ReplyDelete
 3. ஹதீஸ் மேற்கோள்களுடன்,அருமையான கட்டுரை.

  ReplyDelete
 4. நாவைப் பேண நல்ல்ல்ல்ல பதிவு.....!

  ReplyDelete
 5. நாவைப் பேண நல்ல்ல்ல்ல பதிவு.....!

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...