Pages

Wednesday, October 28, 2015

மீத்தேன் பாதிப்பை விளக்கி படமெடுத்த இயக்குநருக்கு பாராட்டு விழா !

மீத்தேன் பாதிப்பை விளக்கி அண்மையில் வெளிவந்த கத்துக்குட்டி திரைப்பட இயக்குநர் இரா.சரவணனுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்( சிபிஐ), கிராம பொதுமக்கள், நண்பர்கள் சார்பில் பாராட்டு விழா தஞ்சை மாவட்டம் அதிரை அடுத்துள்ள திருச்சிற்றம்பலம் சாமி நடேசா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
     
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாவட்ட தலைவர் பா.பாலசுந்தரம் தலைமை வகித்தார். சிபிஐ ஒன்றியச்செயலாளர் ப.காசிநாதன், வழக்கறிஞர் செருவை பாலசுப்பிரமணியம், கவிஞர் மு.ரெ.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
                   
திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் ஏற்புரையாற்றினார். அவர் தனது உரையில், 
"அடிப்படையில் ஒரு விவசாயக் கூலியின் மகன் நான். விவசாயத்தைப் பற்றி படம் எடுத்து நல்ல பெயர் வாங்க நான் நினைக்கவில்லை. விவசாயக் கூலி வேலை பார்த்துதான் நான் படித்தேன். நாளுக்கு நாள் விவசாயம் எந்தளவுக்கு நலிந்து கொண்டிருக்கிறது என்பது பொறுக்காமலே நான் படம் எடுத்தேன். 2003-ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பட்டினிச் சாவுகள் நடந்தபோது ஒரு பத்திரிகைக்காரனாக என்னால் முடிந்த மட்டும் போராடினேன். அப்போதைய அரசு என் மீது வழக்குப் போட்டது. சுப்ரீம் கோர்ட் வரை போய் விவசாய சாவுகளுக்கான நியாயத்துக்காக அப்போதே போராடி இருக்கிறேன். ஊருக்கே படியளக்கும் மண்ணை மீத்தேன் அரக்கன் நாசமாக்கத் துடித்ததை ஒரு விவசாயியின் மகனாகத் தாங்க முடியவில்லை. மீத்தேன் திட்டம் வந்தால் கோயில்கள் இடியும் என்பதை என் படத்தில் கிராபிக்ஸ் காட்சியாக வைத்தேன். அதற்கு தணிக்கை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தார்கள். 'நான் கற்பனையாக செய்ததையே உங்களால் தாங்க முடியவில்லையே... இவை எல்லாம் எங்கள் மண்ணில் நிஜமாகவே நடக்கப் போகிறதே, நாங்கள் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்' எனக் கேட்ட பிறகுதான் தணிக்கை அனுமதி கிடைத்தது. கத்துக்குட்டி படம் நீதிமன்ற தடை காரணமாக வெளிவர தாமதம் ஆன போது சுந்தரபரிபூரணன் என்ற விவசாய ஆர்வலர் தான் மொத்த சுமையையும் தானாக தாங்கி படம் வெளிவர வைத்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எங்களுக்காக போராடினார். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் உறுதுணையாக நின்றார். எங்களுக்கு உதவிய அனைத்து தரப்பினரையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.      இப்படம் திடீர் தடை காரணமாக தாமதமான போது பல தரப்பினரும் தொடர்பு கொண்டு விசாரித்த போது தான் எல்லோரும் நம்மை கவனிக்கின்றனர் என தெரிந்து கொண்டேன். என் மீதான நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொண்டேன்.         மீத்தேன் திட்டம் எவ்வளவு கொடுமையானது என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. இன்று கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அதனை எதிர்த்து போராடி வருகின்றன. கத்துக்குட்டி படத்துக்கு கிடைத்த வரவேற்பு எதிர்காலத்திலும் என்னைப்  போன்றவர்களை நல்ல படைப்புகளை எடுக்க வைக்கும். இப்படத்திற்கு முதல் நாளிலேயே தமிழக அரசு வரிவிலக்கு அளித்தது. அதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன்" இவ்வாறு பேசினார்.
           
விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் வட்டாரச்செயலாளர் என்.வி.செல்லையா, திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆரோ.அருள், ஓய்வு பெற்ற தலைமையாசியர் கோவிந்தராசு, ஊராட்சி மன்றத்தலைவர் மணிமேகலை பிரமநாதன், வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி, ஜோதிடர் சுப்பிரமணியன், தொழிலதிபர் சத்தியமூர்த்தி, தென்னங்குடி ஏ.கே.பழனிவேலு, எஸ்.ஏ.ஜெயகாந்தன், பத்திரிக்கையாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.
               
திரைப்பட இயக்குநர் சரவணன் திருச்சிற்றம்பலம் அருகேயுள்ள புனல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர். நீண்டகாலமாக விகடன் பத்திரிக்கை நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...