ஐக்கிய நாடுகள் பொதுச சபை ஆண்டுதோறும் அக்டோபர் 1 ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனம் செய்துள்ளது. அந்த வகையில் கடந்த 1 ம் தேதி உலகெங்கும் முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக அறிவித்திருக்கின்றன. ஜப்பானில் மூத்தோருக்கு கௌரவம் செலுத்தும் தினமாகவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகின்றது.
உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும்.
(இந்தக் கட்டுரையும் முதியோர் தினத்தின் நினைவாக முதியோரின் முக்கியத்துவத்தையும் அவர்கள் மீது நாம் காட்ட வேண்டிய அன்பையும் அரவணைப்பையும் வலியுறுத்தி கடந்த 1 ம் தேதியே வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் இந்தக் கட்டுரையை எழுதும் நானும் ஒரு முதியவன் என்பதால் நேரத்துக்குள் பதிவுக்கு அனுப்பித்த தர இயலவில்லை. இந்த முதியவனை இந்த தாமதத்துக்காகப் பொறுத்திடுவீர்கள் என்ற நம்பிக்கையில் சில கருத்துக்களை விவாதிக்கலாம்).
"பெரியோரைப் பேணுக!”, “மூத்தோர் வாக்கு முது நெல்லிக் கனி!” என்றெல்லாம் முதியோர் பெருமைகளை மதித்து நாம் பேசுகிறோம். ஆனால் நடைமுறையில் முதியோர் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியை நமது மனசாட்சியை நோக்கிக் கேட்டால் பலர் தங்களது தலையைக் கீழே தொங்கப் போட நேரிடும்.
பொதுவாக நமது வட்டாரங்களில் ஒரு பழமொழி நிலவுகிறது. அந்தப் பழமொழியை வெறும் பழமொழி என்று மட்டும் ஒதுக்கிட இயலாது. பல முதியவர்களின் வாழ்வை விரக்தியுடன் வெளிப்படுத்தும் விளம்பரம் அது.
“பெத்தபுள்ளே தராவிட்டாலும்
வச்ச புள்ளே தரும்“ என்பதுதான் அந்தப் பழமொழி.
பெற்று வளர்த்து கல்வி கொடுத்து ஆளாக்கிய தனது பிள்ளைகள் , வயதான காலத்தில் தங்களை கவனிக்கா விட்டாலும் தாங்கள் நட்டு வளர்த்த தென்னம்பிள்ளைகள் தங்களது தேவைகளை கவனித்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையின் வெளிப்பாடுதான் அது.
அதனால்தானோ நாலடியாரின் “நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் “ என்று தொடங்கும் செய்யுள் , தென்னை மரத்தைப் பற்றி சொல்லும்போது “ தாழுண்ட நீரை தலையாலே தான் தருதலால்” என்று குறிப்பிடுகிறது.
அதாவது தனது கால்புற வேர் வழியாக குடித்த நீரை தென்னை மரம் நன்றி செலுத்தும் வண்ணம் தலையாலே தாங்கி இளநீராகத் தருகிறது என்று குறிப்பிடுகிறது. பெற்று வளர்த்த பிள்ளைகளிடமிருந்தும் இத்தகைய தன்மைகளை பெற்றோர் எதிர்பார்ப்பது இயல்புதானே! ஆனால், மரத்துக்குள்ள தன்மைகள் கூட மறத்துப் போன மனிதர்களிடம் இல்லாமல் போனதுதானே நடைமுறை நிதர்சனமாக இருக்கிறது.
அதேபோல்
“தென்னையைப் பொத்தா தண்ணீரு
பிள்ளையை பெத்தா கண்ணீரு“ என்பதும் ,
“அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ! ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே! ” என்பதும் கைவிடப்பட்டோர் கதறுவதாக கண்ணதாசன் குறிப்பிடும் விரக்தியின் வெளிப்பாடுகள்.
மிகச் சிறு வயதிலேயே நமது பள்ளிப் பாடங்கள் நமக்கு ஒரு கதையை சொல்லித் தந்தன. அது நம்ம பாட்டி வடை சுட்ட கதைதான் அந்தக் கதையின் சம்பவங்களுக்குள் நாம் செல்ல விரும்பவில்லை.
ஆனால் அந்தக் கதை , ஒரு பாட்டி, மரத்தடியில் வடை சுட்டுக் கொண்டு இருந்தாள் என்றுதான் தொடங்குகிறது . அதாவது ஒரு வயதான –ஆதரவற்ற- அனாதையான பாட்டி தனது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தானே உழைத்து வடை சுட்டு விற்றுத்தான் வயிற்றைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்ற நிலையை இந்த நாடு ஏற்படுத்தி இருக்கிறது என்ற நாணத்தக்க செய்தியை அந்தக் கதை நமக்கு சொல்லித் தருகிறது.
சந்தைகளில் சாலை ஓரங்களில் வயதான பாட்டன் பாட்டிகள் கீரைக்கட்டு, மாம்பழம் , பப்பாளிபழம், காய்கறிகள், போன்றவைகளை விற்று, தங்களின் வயிறு வளர்ப்பதை மட்டுமல்ல அந்தப் பாட்டன் பாட்டிகளிடம் கூட ஒரு ரூபாய்க்கு ஒரு மணிநேரமாக பேரம் பேசும் பெரிய மனிதர்களையும் நாம் பார்க்கலாம்.
சரியாகக் கண் தெரியாத அவர்கள், பத்து ரூபாய் பாக்கி தருவதற்கு பதிலாக ஐம்பது ரூபாயைத் தவறாகத் தந்தாலும் இன்று குவார்ட்டருக்கு காசு கிடைத்தது என்று பாக்கெட்டில் திணித்துக் கொண்டு போகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதைவிடக் கொடுமை இப்படி சாலை ஓரங்களில் கடைபரப்பும் தள்ளாத முதியவர்களிடம் காய்கறிகளை இலவசமாக வாங்கிச் சென்று தனது தொந்தியை வளர்க்கும் காவல்துறையின் கண்ணியவான்களைக் கூட நாம் காணலாம். இவைகளெல்லாம் இந்த சமுதாயத்தின் சகிக்க முடியாத சாபக்கேடு. நாட்டில் மழைபெய்யாததற்கு காட்டுக் கருவைகள் மட்டும் காரணமல்ல; இதுபோல் மண்டிப்போய் வளர்ந்திருக்கும் மனிதாபிமானமற்ற மனிதர்களும்தான் காரணம். இதற்கு மேலும், “ பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு “ என்று நாம் பாடத்தான் வேண்டுமா ?
முதியோர்கள் வாழத் தகுந்த நாடு எது என்பது குறித்து சர்வதேச அளவில் குளோபல் ஏஜ் வாட்ச் ( Global Age Watch ) என்ற அமைப்பு உலகில் உள்ள 96 நாடுகளில் வாழும் முதியவர்களின் வாழ்க்கைத் தரம் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில் நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் குடும்பப் பண்பாட்டில் சிறந்தது என்று போற்றப்படும் இந்தியாவிற்கு 69 வது இடம்தான் கிடைத்துள்ளது.
முதியோர் நலன் பற்றி உலகுக்கு அறிவுறுத்த வந்த ஐக்கிய நாடுகள் அவை 1991 -ம் ஆண்டிலேயே முதியோர்களுக்கான நலன் கருதி சில விதிமுறைகளையும் வரையறுத்தது.
1. அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை, உறைவிடம் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும்.
2. வாழ்வதற்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
3. அவர்களை பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களையும் கேட்டு அவைகளுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும்.
4. சமூக சேவை புரிய விரும்பும் முதியோருக்கு அதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.
5. முதியோர்களுக்கு சமூக மற்றும் சட்டரீதியான பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
6. முதியோர்களும் மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை அனுபவிக்க வழிவகை வேண்டும்.
ஆகிய இந்த குறிக்கோள்கள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக ஐக்கிய நாடுகள் அவை செய்த நெறிமுறைகள் ஆகும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புக்காக 2007 – ஆம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டு அவர்களின் பராமரிப்பை சட்டப்படி உறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டது.
இதுவரை 23 மாநிலங்கள், மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளன. இவற்றுள் தமிழ்நாடும் அடக்கம்..
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற முதியோருக்கு அரசின் சார்பில் மாதாமாதம் பணவிடை மூலம் ஒரு சிறு தொகை அனுப்பப்பட்டு வந்தது. இப்போது பலருக்கு அந்த உதவியை ஏனோ திடீரென்று நிறுத்திவிட்டார்கள். சிலருக்கு மிகவும் தாமதமாக வருகிறது. அரசுக்கு என்ன முடையோ தெரியவில்லை.
ஏற்கனவே பணம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள் கிராம நல அலுவலரை அணுகிக் கேட்டால் அவர்கள் அந்த முதியோரை நடத்தும் விதம் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியினரை ஆளும் கட்சி நடத்துவதைவிட மோசமாக இருக்கிறது. பசி பட்டினி கிடந்தது பல சமயங்களில் பிச்சை எடுத்துக் கூட முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு இலஞ்சம் தரும் நிலைக்கு முதியோர்கள் தள்ளப்படுகின்றனர். இப்படி இயலாத முதியோர்கள் தரும் இலஞ்சப் பணத்தின் ஒரு பங்கு பகுதி ஆளும்கட்சிச் செயலாளருக்கும் செல்கிறது. அநாதரவற்ற இந்த முதியவர்களிடம் கறக்கும் காசு விஷத்துக்கு ஒப்பானது. ஆனால் இந்த விஷத்தையும் பருக இவர்கள் யாருக்கும் வெட்கமில்லை.
தங்களது தள்ளாத வயதில் தங்களின் கைகளில் பல காகிதங்களை வைத்துக் கொண்டு கண்களில் சோகத்தை சுமந்து கொண்டு பல வயதானவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களின் மரத்தடிகளில் அன்றாடம் காணலாம். மக்கள் நல அரசுகள் என்ற மாண்புடைய சொல்லுக்கே, இந்த முதியவர்களை இப்படி அலுவலகங்களுக்கு அலையவைத்து கலங்க வைப்பது ஒரு களங்கமாகும். இதற்கு ஒரு கலங்கரை விளக்கம் தேவை.
அரசுதான் இவ்வாறு அலட்சியம் காட்டுகிறது என்றால் பெற்ற பிள்ளைகள் முதியோரைப் படுத்தும்பாடுகளின் பல கதைகள் குடும்ப மானம் கருதி வெளிவராமலேயே இருக்கின்றன.
இன்றைய உலகப்பொருளாதார சூழலில் கணவனும் மனைவியும் ஒன்றாகவே வெளிநாடுகளுக்கு பொருளீட்டக் கிளம்பி விடுகிறார்கள். கவனிக்க ஆளின்றி அவர்களின் இருதரப்புப் பெற்றோர் படும் அவதிகளை எழுத்தால் வடிக்க இயலாது. இறுதியில் அவர்களை அரவணைப்பது , பண வசதி உள்ளோருக்கு முதியோர் ஒய்வு இல்லம் வசதி இல்லாதோர்க்கு அநாதை இல்லம் ஆகியவைதான்.
கோயில் வாசல்களில், தர்காக்களில் இப்படி கைவிடப்பட்ட முதியோர்களின் கூட்டம் கொட்டிக் கிடக்கிறது. பெற்ற பிள்ளைகள் லட்சாதிபதிகளாக உலகெங்கும் வலம் வர, அவர்களைப் பெற்று ஆளாக்கியவர்கள் பிச்சை எடுத்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறார்கள் என்பது ஒரு கசப்பான உணமை .
புகழ்பெற்ற புதுக்கவிதை ஒன்று உண்டு.
“வீட்டுக்குப் பெயரோ அன்னை இல்லம்
அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்”
- என்பதுதான் அந்தக் கவிதை . இந்த இருவரிக் கவிதை பல சொல்ல முடியாத கதைகளைச் சொல்லும்.
பெற்ற பிள்ளைகளால் அநாதரவாக விடப்படுவதனால்தான் பரவலாக முதியோர் பிரச்னை நாட்டில் ஏற்படுகிறது. அவரவர் பெற்றோர்களை அவரவர்கள் பேணிக் கொண்டால் இப்படி ஒரு ஆதரவற்ற பட்டாளம் தளர்ந்து தள்ளாடும் நிலையில் நாட்டில் ஆதரவு தேடி அலையாது. ஆகவே ஒரே ஒரு முதியோர் கவனிக்கப்படாமல் விடப்பட்டாலும் நாம் விரல் நீட்ட வேண்டிய குற்றவாளிகள் நன்றியும் பாசமும் மறந்த பிள்ளைகளே.
ஆயிரம்தான் ஐ.நா அவையும் பற்பல நாடுகளும் மாநிலங்களும் முதியோர்களை அரவணைப்பது பற்றி சட்டங்களை இயற்றினாலும் இஸ்லாமிய நெறிமுறைகள் இது பற்றி எடுத்துரைக்கும் எச்சரிக்கைகள் இங்கு குறிப்பிடத் தக்கவை. அதே போல மற்ற மதங்களும் மாதா, பிதா, குரு என்று மரியாதை செலுத்தப்பட வேண்டியவர்களை வரிசைப்படுத்துகிறது.
இஸ்லாமிய நெறிமுறைகளின்படி முதியோரைப் பேணுதல் இறைவனுக்குப் பிரியமான அவனை வணங்கும் வழிபாடான இபாதத் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இறைவனைத் தொழும் பள்ளிகளில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற ஏற்றத்தாழ்வு இல்லை என்பது இஸ்லாத்தின் நெறிமுறை. ஆனாலும் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தும் வரிசைகளில் முதியோருக்கு முதல் வரிசையில் இடம்தரவேண்டுமென்பது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நெறிமுறையாகும்.
ஜிஹாத் என்றால் என்ன என்று இன்று பலர் பல விளக்கங்களை மனம்போனபடி கொடுக்கிறார்கள். ஆனால் ஜிஹாத் என்ற இந்த வார்த்தைக்கு நபி மொழியில் பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஜிஹாத் என்றால் பெற்றோருக்கு பணிவிடை செய்வது என்று புகாரியில் பதிவாகி இருக்கிறது.
“உங்களது பெற்றோர்களை சீ ! என்று கூட சொல்லாதீர்கள் “ என்று திருமறை குர் ஆன் நெறி கற்பிக்கிறது ( 17: 23) .
“உங்கள் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் “ ( 2: 83) என்றும்
“நீங்கள் எதனை செலவு செய்தாலும் அதை தாய் தந்தையருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப் போக்கருக்கும் கொடுங்கள் ( 2: 215) என்றும் திருமறை அறிவுரை பகர்கிறது. இத்தகைய போதனைகளை , திருமறை எண்ணற்ற இடங்களில் வலியுறுத்துகிறது;
பெற்றோருக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை சாபமிடுகிறது; எச்சரிக்கிறது. பெரியவர்களை பெரிசு ! என்று கேலி பேசும் பிள்ளைகள் இந்த எச்சரிக்கைகள் பற்றி அச்சம் கொள்ள வேண்டும்.
“தந்தை என்பவர் சுவர்க்க வாசல்களில் சிறந்த வாசல் ஆவார். நீங்கள் விரும்பினால் அவருக்கு மாறு செய்து வேதனை கொடுத்து அவ்வாசலை அழித்துவிடுங்கள் . அல்லது அவருக்கு கீழ்ப்படிந்து நடந்து அவ்வாசலை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று பெருமானார் ( ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர்தா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( திர்மிதி) .
“ அல்லாஹ்வின் பொருத்தம் தந்தையின் பொருத்தத்திலும் , அல்லாஹ்வின் வெறுப்பு தந்தையின் வெறுப்பிலும் உள்ளது “ என்று பெருமானார் ( ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் ஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( திர்மிதி).
“ தனது ஆயுள் அதிகமாக்கப்பட வேண்டும் , தான் துய்க்கும் செல்வம் விரிவாக்கப்படவேண்டுமென்றும் எவர் விரும்புவாரோ அவர் தனது பெற்றோருடன் அழகிய முறையில் நடந்து கொள்ளட்டும் , “ என்று நபி ( ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்னத் அஹமத் ).
“ எவர் தன் பெற்றோருடன் நல்ல முறையில் நடந்தாரோ, அவரது ஆயுளை அல்லாஹ் அதிகரிப்பான் என்ற நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளட்டும் “ என்று நபி ( ஸல்) அவர்கள் கூறியதாக மு ஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்தரக் ஹாகிம் )
தாயின் பாதத்தில் சொர்க்கம் இருக்கிறது என்று பெருமானார் ( ஸல் ) அவர்கள் கூறியது உலகோர் அனைவரும் போற்றும் பொன்மொழியாகும்.
பெற்றோரைப் பேணுவோம்! முதியோரை பாதுகாப்போம் ! உலக முதியோர் தினச் சிந்தனையின் வெளிப்பாடாக இந்த எண்ணங்கள் நமது இதயங்களில் துளிர் விடட்டும்.
இப்ராஹீம் அன்சாரி
கல்லூரி முதல்வர்
எழுத்தாளர்
சமூக ஆர்வலர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.