Pages

Wednesday, October 14, 2015

என்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே !

மெரிக்காவின் இரட்டைக் கோபுரம் 11.9.2001 அன்று தாக்கப் பட்டதிற்கு பின்பு ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டு அமெரிக்கக் கூட்டுப் படை ஆப்கானிஸ்தான் 2001 ஆண்டு   படையெடுப்பின் போதும், இராக் 2003 ஆண்டு படையெடுப்பின் போதும் தனது நாட்டுப் படைகளை ஆஸ்திரேலியாவும்  அனுப்பியது அனைவரும் அறிவர்.  அதன் எதிரொலியாக முஸ்லிம்களை கறுப்புக் கண்ணாடியோடு பார்க்க ஆரம்பித்தனர் ஆஸ்திரேலிய மக்கள். அப்படிப் பட்ட நாட்டில் 'கிப்ஸ் லாண்ட்' என்ற சிறு நகரத்தில் வாழும் சாரா ப்ரைஸ் என்ற கிறுத்துவ மதப் பெண்மணி பிற்காலத்தில் ஏன் முஸ்லிமாக மாறினேன் என்ற கதையினைச் சொல்ல, அதனை  உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்!

மரியா பிரைஸ் ஆஸ்திரேலியா நாட்டில் மனாஸ் பல்கலைக் கழகத்தில் பத்திரிக்கைப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று பத்திரிக்கையாளராக உலகில் பல நாடுகளுக்குச் சென்று செய்திகள் தயாரிப்பவர் ஆவார். அவர் கிருத்துவ மதத்தில் மிகுந்த நம்பிக்கையும், இயேசு பெருமான் மீது அளவற்ற பாசத்தினையும் கொண்டவராவார். ஏனெறால் மனித இனத்திற்குத் தேவையான -பரிவு, இரக்கக் குணம், அன்பு, பாசம் ஆகியவை கிருத்துவ மதத்தில் போதிப்பதாலும், சமூக சேவையில் அதனைக் காட்டுவதாலும் அதன் மீது பிடிப்புடன் இருந்தார். கிருத்துவ மதத்தின் மீது இருந்த அசைக்க முடியா நம்பிக்கை அவர் ஒரு முறை மலேசியா சென்றது வரை இருந்தது.

மலேசியாவிற்கு மாணவர் பண்பாடு பரிமாற்றத்தின் அடிப்படையில் ஒரு முறை சென்றார். அந்த நாட்டிற்கு செல்வதிற்கு முன்பு அவருக்கு முஸ்லிம்கள் பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவை தெரியாது. அதுவும் முஸ்லிம் பெண்கள் என்றால் கருப்பு ஆடை தலை முதல் கால் வரை அணிபவர்கள், மேற்காசியா நாட்டினைச் சார்ந்தவர்கள், நாகரீகத்திற்கும் அவர்களுக்கும் ஒரு காத தூரம், ஆண்களால் நசுக்கப் படுபவர்கள், கணவர் இல்லாமல் வெளியில் செல்ல மாட்டார்கள், கல்வி அறிவு இல்லாதவர்கள், வெளி வேலைக்குச் செல்வது அபூர்வம் என்று எண்ணி இருந்தார்.
ஆனால் மலேசியா சென்ற பிறகு அவர் கண்ட காட்சி முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணத்தினை மாற்ற ஆரம்பித்தது. அப்படி என்ன அவர் அங்கே கண்டார் என்று நீங்கள் கேட்கலாம்.

அவைகள்: 
1) முஸ்லிம் பெண்கள் வித வித மான கலர் கொண்ட ஹிஜாப் மற்றும் ஆடைகளை அணிந்து உலா வந்தனர். 

2) பல்கலைக் கழக மேல் படிப்பினை தொடரும் ஏராளமான பெண்களைக் கண்டார். 

3) பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதினைக் கண்டார். 

4) சிலர் மட்டும் முகத்திரையினை அணிந்திருந்தார்கள். 

5) இஸ்லாமிய மார்க்கத்தில் பற்றுடன் இருந்தனர்.

பத்திரிக்கை மாணவரான மரியாவிற்கு முஸ்லிம் பெண்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களைப் பற்றியும் வெளி உலகிற்கு தெரிய எழுத தூண்டியது. அவர் எழுத, எழுத செய்திகள் நீருற்று போல வெளியே பீறிட்டு கிளம்பின.

அவைகளில் சில: 
1) முஸ்லிம் பெண்கள் திருமணம் அவர்கள் சம்மதத்தோடு தான் நடந்தது.

2) சொத்துரிமை, பணபரிமாற்ற உரிமை மேற்கத்திய நாட்டு பெண்களுக்குக் கூட இல்லாத அளவு முஸ்லிம் பெண்களுக்கு இருந்தது.

3) இஸ்லாமிய மார்க்கத்தின் மீது அசைக்க முடியா நம்பிக்கை கொண்டு இருந்தனர்.

ஆகவே மரியா அல் குரானையும் பல்வேறு ஹதீதுக்களையும்  அர்த்தத்தோடு படிக்க ஆரம்பித்து, அவைகளை தன் எழுத்துத் திறன் மூலம் வெளி உலகிற்கு தெரியப்படுத்தினார்.

கோலாலம்பூர் நகரில் உள்ள துங்கு அப்துர் ரஹ்மான் பெரிய பள்ளிவாசலுக்கு ஒரு முறை சென்றார். அவர் அங்கு கண்ட காட்சி அமைதி, நிசப்தம், ஆடம்பர மில்லாத அமைப்பு அவரது உள்ளத்தினை கொள்ளைக் கொண்டது. அப்போது பாங்கு சப்தம் கேட்டு தொழுகைக்கு அழைப்பதினை அறிந்தார். வாழ்க்கையில் முதல் முறையாக காபாவினை நோக்கி தலை சாய்த்தார். ஆனால் மலேசியா இருந்தது வரை அவர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறவில்லை.

இஸ்லாம் பற்றி இன்னும் ஆழமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணினார். அப்போது தான் ஐக்கிய நாட்டு சபையால் அந்த ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருது மலேசியாவினை 27 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் மகாதீர் மூத்த மகள் மரினா மகாதீருக்கு கிடைத்திருந்தது. அவர் சமூக சேவைக்கான அந்த விருதினைப் பெற்றிருந்தார்.  உடனே அவரை அணுகி இஸ்லாம் பற்றிய பல்வேறு கேள்விக் கணைகளை விடுத்தார். அத்தனைக்கும் மிக விரிவான பதில்களை மரினா கொடுத்தார்.  அவரிடமிருந்து விடை பெறும்போது மரினா, 'நாமெல்லாம் ( கிருத்துவர்கள், முஸ்லிம்கள் ) ஒன்று பட்டவர்கள்  ஆனால் பல்வேறு நாட்டில் வாழ்வதினால், இனம், மொழி, நிறம் ஆகியவற்றால் மாறு பட்டுள்ளோம். ஆனால் நாம் சிந்தும் ரத்தமும், சுவாசிக்கும் காற்றும் ஒன்றே என்று தினம், தினம் நினைவு கொள் என்று சொன்னது ஆஸ்திரேலியா திரும்பிய பின்னரும் அவர் காதுகளில் ரீங்காரம் இட்டு ஏதோ ஒன்று அவர் மனதினை நெருடியது.

நாடு திரும்பியதும் கிருத்துவ மற்றும் முஸ்லிம் மார்க்கத்தினை பற்றிய பல்வேறு ஒற்றுமை, வேற்றுமையினை புனித புத்தகங்களான பைபிள், அல் குரான்  மூலமும், வராற்று புத்தகங்கள் மூலமாகவும், கிருத்துவ, முஸ்லிம் பெரியவர்களிடையே நடந்த பட்டி மன்றம் மூலமும்  ஆராய ஆரம்பித்தார்.

அதில்: 
1) குர்ஆனில் கிருத்துவர்கள், யூதர்கள் புனித நூல்களின் மக்கள் என்று கூறியிருப்பதினை அறிந்தார்.

2) கிருத்துவர்களும், யூதர்களும் இப்ராஹிம்(அலை) அவர்களின் வழிதோன்றல்கள் என்று அறிந்தார்.

3) இயேசு பிரான் பற்றி அல் குர்ஆனில் முகமது(ரசூலல்லா) விட அதிகமான இடத்தில் சொல்லப் பட்டத்தினையும் அறிந்தார்.

4) முஸ்லிம்கள் எப்படி கிருத்துவர்களை நடத்த வேண்டும் என்று ரசூலுல்லா கூறியிருப்பதாவது, 'கிருத்துவர்களை மரியாதையுடன் நடத்துங்கள், எந்த அளவிற்கு என்றால் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவப் பெண்ணை திருமணம் செய்யும் போது அவள் கிருத்துவ மதத்தினை வழிபடுவதிலிருந்து தடுக்காதீர்கள் என்பது வரை' என்றார்கள்.

5) இயேசு பிரானை முஸ்லிம்கள் தூதராக ஏற்றுக் கொண்டார்கள், ஆனால் கிருத்துவர்கள் இயேசு பிரானை கடவுளாக கண்டார்கள்.

தனது ஆராய்ச்சியின் முடிவில் இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்றுக் கொண்டார். கிருத்துவ மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தில் மாறிய பின்பு பல்வேறு சிரமங்கள் இருந்தன.

அவைகள்: 
1) புற சுத்தம், உள  சுத்தத்துடனான ஐவேளை தொழுகை.

2) பெண்களின் பாலின வெளித் தெரியா ஆடை

3) ஏழைகளுக்கு கொடுக்கப் படும் சக்காத்து, சதக்கா

4) குடும்ப, சமூக மாறுபட்ட கண்ணோட்டம்

5) முக்கியமாக இது வரை பயன் படுத்தி வந்த மது ஒழித்தல் 

அத்தனை வேதனைகளையும் தாங்கிக் கொண்டு இஸ்லாமில்லாத அந்நிய நாட்டில் இன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஈர்க்கப் பட்டு இஸ்லாம் பற்றி மிக உயர்வாக தனது பத்திரிக்கை தொடர்பினை  வைத்துக் கொண்டு வெளி உலகிற்கு பறை சாட்டுகிறார், மரியா பரிஸ்.

ஆனால் நாம் முஸ்லிம்களாக பெயரளவில் இருந்து கொண்டு, இயக்கங்களிடையே நானா நீயா என்று பதவி வேட்கையில் இறங்கி, நாலு காசு சம்பாதிக்க நினைப்பதும், நம் வீட்டுப் பெண்கள் தடம் புரள்வதினை கண்டும் காணாது இருப்பதும், சகோதரிடையே சொத்து சுகத்திற்காக சண்டை இடுவதும், பெண்களுக்கு கல்வியினை மறுப்பதும், பொது நிறுவனங்களில் பதவிக்கு வந்தவர்கள் சுரண்டுவதிற்கு வழி தேடுதலும், உலக முஸ்லிம்கள் கூடாரத்திற்குள்ளே குத்து வெட்டு நடப்பதும்  சரியா சகோதர சகோதரிகளே!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

11 comments:

 1. இப்பதிவின் சார அம்சத்தை ஜமீர் உத்தின் ஷா அவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் அவர் முன்னாள் மாணவர்களிடம் பேசும்போது தவறான கருத்தை பதியவைத்தார். அதாவது

  உ.பி.,யின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஜமீர் உத்தின் ஷா, உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். முஸ்லிம் மக்கள்தொகையில் பாதியாக இருக்கும் பெண்களை, முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது தான் இதற்கு காரணம்.
  பெண்களை அடிமைப்படுத்தி, வீட்டுக்குள் பூட்டி வைத்திருப்பதால் தான், முஸ்லிம்களால் முன்னேற முடியவில்லை. இதற்கு வேறு யாரையும், குறைசொல்லத் தேவையில்லை. ஆண்டின், 12 மாதங்களில், 11 மாதங்கள் தான் முஸ்லிம்கள் உழைக்கின்றனர். இதனால் பொருளாதாரத்திலும் முன்னேற முடியவில்லை என்கிறார். மதரசா ஓதிய இவர் இஸ்லாத்தை பற்றி முழுமையாக தெரியாமல் இருக்கிறார் . முஸ்லிம் பழமைவாதிகள்தான் இல்லாத சட்டங்களை சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .இப்போது முஸ்லிம்கள் ஆண்களைப போல் பெண்கள் அனைவரையும் கண்டிப்பாக படிக்க வைக்கிறார்கள் என்பது இவருக்கு தெரியவில்லையே!

  தேர்தல் நெருங்குவதால் அமைப்பு பிளவுபட்டது அதற்க்கு சாட்டைஅடியாக ஒரு ஆழமான பதிவு - வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. தேர்தல் நெருங்குவதால் அமைப்பு பிளவுபட்டது அதற்க்கு சாட்டைஅடியாக ஒரு ஆழமான பதிவு - வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. உங்கள் கதையை (வாசித்தேன்) கேட்டேன். நல்லாத்தான் புட்டுபுட்டு வைத்து இருக்கிறீர்கள்.
  அருமை.

  ReplyDelete
 4. உங்கள் கதையை கேட்பது எங்கள் கடமை.படித்தோம் உணர்தோம் உள்ளத்தால்.தாடிகள் கொடுக்கும் கதையை ஆறு கோடி தமிழ்நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்த இந்த முறுக்கு மீசை சஹோதரர் கொடுத்தது மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 5. உலகத்திலேயே தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் என்று இஸ்லாத்தை சொல்வார்கள். தவறான புரிதல்தான் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

  ஆகவே அழைப்புப் பணி என்கிற தாவா வின் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இந்த உணர்வினை இந்தக் கட்டுரை தூண்டி விடுகிறது . மிகுந்த மரியாதையோடும் அன்போடும் முகமது அலி சார் அவர்களை பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 6. உலகத்திலேயே தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் என்று இஸ்லாத்தை சொல்வார்கள். தவறான புரிதல்தான் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

  ஆகவே அழைப்புப் பணி என்கிற தாவா வின் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இந்த உணர்வினை இந்தக் கட்டுரை தூண்டி விடுகிறது . மிகுந்த மரியாதையோடும் அன்போடும் முகமது அலி சார் அவர்களை பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 7. காலத்திற்க்கேற்ற சரியான பதிவு.

  ReplyDelete
 8. அன்பு மிகு ஆசிரியர் குழுவினருக்கு எனது கட்டுரைகளை பிரசுத்ததிற்கு மிக்க நன்றி.
  இந்தக் கட்டுரையினை படித்துக் கருத்துக்களை வழங்கிய சகோதரர்கள் ஹாஜா சரிப், ரியாஸ்கான், அப்துல் ஜலீல் , மெய்சா, ஜப்பார், இப்ராஹிம் அன்சாரி, ஜமால் முகமது, அஹ்மத் தௌபிக் ஆகியோருக்கும் எனது நன்றி.
  குறிப்பாக மஸ்த்தான் கனி அவர்கள் அலிகார் பல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவித்தக் கருத்திற்கு பதிலடி தந்தது மெச்சத் தக்கது.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...