.

Pages

Monday, November 30, 2015

கண்கள் தானம் செய்த முதியவரின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்பு !

அதிரை அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி ( வயது 92 ). ஐஎன்ஏ சங்கத்தலைவராக இருந்தார். கடந்த [ 25-11-2015 ] அன்று இயற்கை எய்தினார். இவரது கண்களை மகன்கள் ஜெயராமன், காமராஜ் ஆகியோர் தானம் செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து திருமக்கோட்டை லயன்ஸ் சங்கத்தலைவர் நிரஞ்சன் அளித்த தகவலின் பேரில் அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் ஆறுமுகச்சாமி, பொருளாளர் இர்பான் சேக், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், மேஜர் முனைவர் கணபதி, பேராசிரியர் அல் ஹாஜி, சாரா அஹமது உள்ளிட்டோர் விரைந்து சென்று இறந்த முத்துசாமியின் இரண்டு கண்களை தானமாக பெற்று கும்பகோணம் அரவிந்த் கண் வங்கிக்கு அனுப்பினர்.

இந்த நிலையில் அதிரை லயன்ஸ் சங்கம் மாதாந்திரக் கூட்டம் அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க செயலாளர் பேராசிரியர் அல் ஹாஜி, பொருளாளர் எஸ்ஏசி இர்ஃபான் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கண்களை தானமாக வழங்கிய முத்துசாமி குடும்பத்தினருக்கும், கண்களை தானம் பெற உதவியாக இருந்த திருமக்கோட்டை லயன்ஸ் சங்கத்தலைவர் நிரஞ்சன் ஆகியோருக்கு அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

லயன்ஸ் சங்க செயலர் பேராசிரியர் அல் ஹாஜி லயன்ஸ் சங்கம் நடப்பாண்டில் ஆற்றிய சேவை குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் மேஜர் முனைவர் கணபதி வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக லயன்ஸ் சங்கத் தலைவர் ஆறுமுகச்சாமி வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சி முடிவில் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் - உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

சென்னையில் சிகிச்சை பெரும் அதிரை வாலிபருக்கு ரூ 44 ஆயிரம் மருத்துவ நிதி உதவி !

அதிரை எம்எஸ்எம் நகரை சேர்ந்தவர் எம். முஹம்மது புஹாரி. இவரது மகன் ஜெஹபர் சாதிக் ( வயது 30 ) இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக கடந்த 8 ஆண்டுகளாக தட்டு வண்டி ஓட்டி வந்தார். இதன் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் பெற்றோருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திடீரென இவரது கால்கள் இரண்டும் செயல் இழந்து நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளானர். போதிய வசதிமின்மையால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார். இந்த நிலையில் இவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசாமாகி வருவதை அறிந்த இவரது குடும்பத்தினர் நமதூர் மருத்துவர் டாக்டர் அப்துல் ஹக்கீம் அவர்களிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அப்துல் ஹக்கீம் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு கடந்த இரண்டு வாரங்களாக தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஏழ்மை நிலையில் இருக்கும் வாலிபரின் பெற்றோர் சார்பில் நிதி உதவி கோரி இருந்தனர். இதுதொடர்பாக அதிரை நியூஸில் செய்தி வெளியிடப்பட்டது. இவற்றை பார்வையிட்ட உலகங்கிலும் உள்ள அதிரை மற்றும் வெளியூர் அன்பர்கள் நிதிஉதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜித்தா வாழ் அதிரையர் எஸ். தஸ்லீம் மூலம் சவூதி ஜித்தா வாழ் நண்பர்கள் வழங்கிய ரூ 25 ஆயிரம், வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ நிதி உதவிகளை ஏழை எளியோருக்கு தொடர்ந்து வழங்கி வரும் லண்டன் வாழ் சமூக ஆர்வலர் அதிரை எஸ்.ஏ இம்தியாஸ் மூலம், லண்டன் நண்பர்கள் வழங்கிய ரூ 11 ஆயிரம், அமெரிக்கா கலிபோர்னியாவில் பைசல் மூலம் திரப்பட்டப்பட்ட ரூ 5 ஆயிரம், செக்கடி மேடு நண்பர்கள் வழங்கிய ரூ 3 ஆயிரம், ஆகக்கூடுதல் ரூ 44 ஆயிரத்தை வாலிபரின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.

இந்த நிதியை எம்.எஸ்.எம் நகர் ஜமாத் நிர்வாகி வாப்பு மரைக்காயர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் அஹமது, சமூக ஆர்வலர் சமியுல்லாஹ் ஆகியோர் வழங்கினார்கள். மருத்துவ நிதிஉதவியை பெற்றுக்கொண்ட வாலிபரின் பெற்றோர் நிதிஉதவி வாரி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
 

அதிரையில் தொடர் மழை: 44.20 மி.மீ பதிவு !

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிரையில் 44.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணி முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரை பேருந்து நிலையப் பகுதியில் இன்று பகல் எடுத்த படங்கள்
 

மரண அறிவிப்பு [ சேக்கனா நிஜாம் தந்தையின் சகோதரி ]

நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் செ.மு ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது ஹசன், மர்ஹூம் முஹம்மது புஹாரி, முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் உமர் தம்பி, மர்ஹூம் அபூபக்கர், அஹமது ஹாஜா ஆகியோரின் மாமியாரும், சேக்கனா நிஜாம் அவர்களின் தந்தையின் சகோதரியுமாகிய செய்யது பீவி அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சேர்மன் வாடி அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று பகல்11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Sunday, November 29, 2015

'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களுடன் அதிரை சேர்மன் மரியாதை நிமித்த சந்திப்பு !

அதிரையை சேர்ந்தவர் இப்ராஹீம் அன்சாரி. முத்துப்பேட்டை அல் மஹா மகளிர் அரபிக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். இணையதள எழுத்தாளர். 'மனுநீதி மனித குலத்திற்கு நீதியா ?' என்ற புத்தகம் இவரது முதல் வெளியீடாக வெளியிடப்பட்டது, இவரது அடுத்த வெளியீடாக 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு' என்ற நூல் பிரபல 'சாஜிதா புக் சென்டர்' சார்பில் அச்சில் தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த நூல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான வெளியீட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இப்ராஹீம் அன்சாரி அவர்களை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் இன்று மாலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். சந்திப்பின் போது திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், இந்தியன் ரெட் கிராஸ் அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் அஹமது, முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் மாஷா முஹம்மது மாலிக், 'நிருபர்' முகைதீன் பிச்சை, அதிரை அஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்திப்பு குறித்து எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் நம்மிடம் கூறுகையில்...
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதிரை பேரூராட்சி தலைவர் தம்பி எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களை நானே சந்தித்து பேச வேண்டும் என நினைத்தேன். அவர் என்னை சந்தித்து பேசியதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுமார் 1/2  மணி நேரம் நீடித்த எங்களது சந்திப்பில் ஊர் பொதுநலன் குறித்து கலந்தாலோசித்தோம். மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது' என்றார்.
 
 
     

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற திருமணம் !

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று ( 29-11-2015 ) காலை நபிவழி முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரெஜாக் அவர்களின் மகன் தானுல் ஆதில் மணமகன், கீழத்தெருவை சேர்ந்த சேக்தாவூது அவர்களின் மகளை 18 கிராம் தங்க நகையை மணமகளின் சிறிய தந்தை அயூப்கான் அவர்களிடம் மஹராக கொடுத்து மணமுடித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பேச்சாளர் முஜாஹீத் கலந்து கொண்டு 'நபிவழித் திருமணம்' என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், மணமக்கள் உறவினர்கள் - நண்பர்கள் கலந்துகொண்டனர். முடிவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் மணமகனை வாழ்த்தினர்.

அதிரை அருகே ஈசிஆர் சாலையில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் காயம் !

அதிராம்பட்டினம், நவம்பர் 29,
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகில் உள்ள கருங்குளம் பாலத்தின் அருகே இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாகனங்களில் பயணித்த 5 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. உயர் சிச்சைக்காக தஞ்சை மருதுவக்கல்லூரி மருத்துவமனையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் ரமேஷ் ( வயது 44 ). வாகன ஓட்டுனர். இவரது மனைவி சித்ரா ( வயது 35 ). இவர்கள் இருவரும் திருச்சியில் ராஜ்குமார் ( வயது 45 ), இவரது மனைவி காஞ்சனா ( வயது 42 ) இவர்களது மகன் ஆதேஷ்வர் ( வயது 10 ) ஆகியோரை ஏற்றிக்கொண்டு முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடையில் உள்ள உறவினர் மேகாலா ( வயது 52 ) வீட்டில் தங்கிவிட்டு இன்று காலை அதிராம்பட்டினத்தில் உள்ள உறவினரின் வீடு குடிபுகுதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டி ஈசிஆர் சாலையில் வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அதே சாலையில் இராமநாதபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி மற்றொரு வாகனம் வந்து கொண்டிருந்தது. வாகனத்தை முத்துப்பேட்டையை சேர்ந்த பகுருதீன் மகன் சீமான் ( வயது 28 ) ஓட்டினார். இந்த வாகனத்தில் முத்துப்பேட்டையை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் உமர் ( வயது 29 ) பயணித்தார்.  இரண்டு வாகனங்களும் அதிராம்பட்டினம் அருகில் உள்ள  கருங்குளம் பாலம் அருகே வந்த போது எதிரே வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சீமானுக்கு மார்பு பகுதியிலும், ரமேஷுக்கு முகம், கால், மார்பு பகுதிகளிலும், ராஜ்குமாருக்கு இடுப்பு, கால், மார்பு பகுதிகளிலும், மேகலாவிற்கு தலை, காலிலும், ஆதேஷ்வரருக்கு வயிற்றிலும் காயங்கள் ஏற்பட்டது.

தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், உதவி ஆய்வாளர் ரவீந்தரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் சம்பவ இடதிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயங்கள் அடைந்தவர்களை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த சீமான், ரமேஷ், ராஜ்குமார் ஆகியோர் உயர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமுமுக ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக வாகன ஓட்டுனர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சேதமடைந்த இரண்டு வாகனங்களும் காவல்நிலையத்திற்கு கொண்டு வர ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடந்துவருவதால் காவல்துறையின் சார்பில் வாகன வேகத்தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், அரசின் சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை வசதியை இந்த பகுதியில் தயார் நிலையில் நிறுத்திவைக்க வேண்டும் எனவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க கூடுதல் மருத்துவர்கள், போதிய முதலுதவி உபகரணங்கள், உயிர் காக்கும் மருந்துகள் ஆகிய வசதிகளை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
 
 
 
 
 
 
 
 

அதிரையில் அதிக வயதுடைய மூதாட்டி வஃபாத் !

மேலத்தெவை சேர்ந்த மர்ஹூம் தொ.கா.மு முஹம்மது முகைதீன் ராவூத்தர் அவர்களின் மகளும்,மர்ஹூம் எம்.ஹெச் ஹாஜா முகைதீன் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி எம்ஏசி பக்கீர் முஹம்மது, மர்ஹூம் ஏஎம் முஹம்மது யூசுப், மர்ஹூம் எஸ்எம் சேக் அலி, மர்ஹூம் தொ.கா முஹம்மது முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் மாமியாரும், எம்.ஹெச் ஜமால் உசேன், எம்.ஹெச் பஷீர் அஹமது, எம்.ஹெச் சம்சுதீன் ஆகியோரின் தாயாருமாகிய தண்ணிக்குமா என்கிற ஜெமீலா அம்மாள் அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இவர் அதிரையில் 106 வயதுடைய மூதாட்டி ஆவார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, November 28, 2015

கோரிக்கைகள் நிறைவேற்றி தரும் அரசு அலுவலர்களுக்கு போஸ்ட் கார்டில் நன்றி தெரிவிக்கும் அதிரை ஆர்வலர் !

அதிரையை சேர்ந்தவர் ஹாலிக். சமூக ஆர்வலரான இவர் அதிரையின் பிராதன பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வான மின்கம்பிகள், குடியிருப்பு பகுதிகளில் எரியாத மின் விளக்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக பிரபல நாளிதழ் பத்திரிகைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு போஸ்ட் கார்டில் கோரிக்கைகளை எழுதி அனுப்பி நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக்கொண்டு வருகிறார். இவரது கோரிக்கைகள் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.

இந்த புதிய முயற்சியால் ஊருக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. இவரது கோரிக்கைகள் சில நிறைவேற்றப்பட்டதை அடுத்து சம்பந்தபட்ட அரசு அலுவலர்களுக்கு குறிப்பாக மாவட்ட ஆட்சியர், மின்சார வாரிய செயற் பொறியாளர் உள்ளிட்டவர்களுக்கு போஸ்ட் கார்டில் தனது கைப்பட நன்றி தெரிவித்து கடிதங்கள் எழுதி அனுப்பி வருகிறார். சுயநலமில்லாத இவரது பொதுநலத்தை அதிரையர் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

சிஎம்பி லேன் பகுதியில் புதிதாக 2 மின்கம்பங்கள் அமைப்பு !

அதிரை பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பிரதான சாலையோரத்தில் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள மின்கம்பிகள் தொங்கி காணப்பட்டது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.

'3 பேஸ் இணைப்புகளை கொண்ட இந்த மின்கம்பிகள் பொதுமக்களின் தலையில் மீது எந்தநேரமும் விழக்கூடிய சூழலில் அபாயகரமாக தொங்கி காணப்பட்டது. பலத்த காற்று வீசினாலோ அல்லது மின்கம்பத்தில் வாகனங்கள் மோதினாலோ மின்கம்பிகள் அறுந்து பொதுமக்கள் மீது விழும் சூழல் இருந்தது. இந்த பகுதியில் அதிகமாக விளையாடி வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என இப்பகுதியினர் பெரும் அச்சப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற் பொறியாளர் ஆகியோரிடம் தொடர் கோரிக்கை வைத்தார். அதில் அதிக இடைவெளி கொண்ட மின்கம்பங்கள் இடையே புதிய மின்கம்பங்களை நடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை சிஎம்பி லேன் பிராதான சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கி காணப்பட்ட இரு இடங்களில் புதிய மின்கம்பங்கள் நடும் பணியில் அதிரை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் மேற்பார்வையில் மின்சார வாரிய 14 ஊழியர்கள் தீவிர பணிகளில் ஈடுபட்டனர்.

அதிரை பேரூராட்சி 21 வது வார்டு உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம்
நடந்து வரும் பணியை நேரில் பார்வையிட்டு, தனது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.