Pages

Wednesday, November 11, 2015

டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் அருந்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வைரஸ் (டெங்கு) காய்ச்சல் தடுப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள்.

ஏடிஎஸ் என்னும் வகையைச் சேர்ந்த வைரஸ் மூலம் டெங்கு காய்ச்சல் பரவக் காரணமாக இருக்கின்றது. இது மழைக்காலம் என்பதால், காய்ச்சல் வராமல் இருப்பதற்கு பொது மக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.   கடுமையான காய்ச்சல், உடல் சோர்வு, கண்களின் பின்புறத்தில் வலி, கை, கால் கணுக்களில் வலி, சுவையில் மாற்றம், வறண்ட தொண்டை, பல் ஈறுகளில் இரத்தம் கசிவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏடிஎஸ், எஜிப்டி வகை கொசுக்கள் வீட்டிற்குள்ளும், வீட்டைச் சுற்றியும் மனிதனால்  ஏற்படுத்தப்பட்ட நீர்த்தேக்கங்களிலும், புதிய கட்டுமானப் பகுதிகள், தண்ணீர் சேகரிக்கும் பாத்திரங்கள், பூந்தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள், மண்பாண்டங்கள், மரச்சாமான்கள், மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் கப், கொட்டாங்கச்சி (தேங்காய் ஓடு), முட்டை ஓடு, டயர்கள், பயன்படுத்தப்படாத மாவரைக்கும் குடகல் மற்றும் பாத்திரங்கள், தென்னை மரத்தின் பாளைகள் மற்றும் தண்ணீர் தேங்கி இருக்க வாய்ப்பு உள்ள அனைத்து சாதனங்களிலும் இவ்வகை கொசுக்கள் உற்பத்தியாகிட பெருமளவு வாய்ப்புள்ளது.  எனவே, மேற்கண்ட பொருட்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகதவாறு பொது மக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

வீட்டைச் சுற்றி வீணாக கிடக்கும் தண்ணீர் தேங்கும் பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்.   தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளையும், பாத்திரங்களையும் வாரம் ஒரு முறை சாம்பல், பிளச்சீங் பவுடர் கொண்டு பிரஷ் கொண்டு சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை கொசு புகுந்து முட்டையிடாதவாறு மூடி வைக்க வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் டெமிபாஸ் அல்லது அபேட் கொசுப் புழு மருந்து ஊற்ற வரும் போது புகை மருந்து அடிக்க வரும் பொழுதும் பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது.  கழிவு நீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்படும் வகையில் பிளாஸ்டிக் கப் போன்ற குப்பைகளை போடாமல் உரிய குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை கொட்ட வேண்டும்.

மாண்புமிகு முதல்வர் அவர்களின் உத்தரவின்படி, திரையரங்குகள், உள்ளுர் கேபிள் டிவி, தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி வாயிலாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்படுகிறது.  கடந்த மாதம் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வீடியோ வாகனம் மூலம் வைரஸ் (டெங்கு) காய்ச்சல் விழிப்புணர்வு குறும் படம் திரையிட்டு விழிப்புணர்வு குறும் படம் திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒவ்வொரு வட்டாரத்திலும் களப்பணியாளர்களும், பேரூராட்சி பகுதிகளில் களப் பணியாளர்களும், மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர்களும், கிராம சுகாதார செவிலியர்கள், கிராமப் பணியாளர்கள், களப் பணியில் ஈடுபட்டு, வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு மருந்துகள் மற்றும் புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இப்பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர்கள் மேற்பார்வை செய்து வருகின்றனர்.  மாவட்ட பூச்சியியல் வல்லுநர் மற்றும் இளைநிலை பூச்சியியல் வல்லுநர்கள் மாவட்டம் முழுவதும் சென்று களப்பணியாற்றி வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.  குழந்தைகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் நிலவேம்பு கசாயம் அருந்த வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து டெங்கு போன்ற காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.

மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்கு வரும் ஒவ்வொரு நபர்களையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான அனைத்து பரிசோதனை வசதிகளும் உள்ளது.  அதற்கான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.  பொது மக்கள் காய்ச்சல் கண்டவுடன் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையிலோ, ஆரம்ப சுகாதார மையத்தில் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். உடல் எப்போதும் போல் இயல்பாக இல்லாமல் சோர்வுடன் இருந்தாலோ அல்லது பசி எடுக்காமல் இருந்தாலோ அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் சேவை மனப்பான்மையுடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வைரஸ் (டெங்கு) காய்ச்சல் ஏற்படாமல் இருக்க போர் கால அடிப்படையில் அனைத்து முன்னேற்பாடு தடுப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, களப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதுடன், பொது மக்களும் விழிப்புணர்வுடன் இருந்து வைரஸ் காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ம.சிங்காரவேலு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொது மக்கள்  ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...