Pages

Thursday, December 24, 2015

2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வுகள்: சிறப்பு பார்வை [ பகுதி 2 of 4 ]

கடந்த வருடங்களை போல் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நடப்பாண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நான்கு பகுதிகளாக தொகுத்து 'அதிரை நியூஸ்' வாசகர்களுக்கு வழங்க இருக்கிறோம்.

இந்த ஆண்டில் அதிரையில் நடந்த நிகழ்வுகள் ஏராளமாக இருந்தாலும், பதிவின் நீளம் கருதி குறிப்பிட்ட சில முக்கிய நிகழ்வுகளை மாத்திரம் பதிவதற்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இதில் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 1 எனவும், ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 2 எனவும், ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 3 எனவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 4 என வகை படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரை அதிரை நியூஸில் பதியப்பட்ட முக்கிய நிகழ்வுகள்:
April 1, 2015
அதிரையில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருபவர் முஹம்மது காசிம். ( வயது 65 ). உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். தகவலறிந்த அதிரை பேரூர் தமுமுக நிர்வாகிகள் நேரடியாக இல்லம்சென்று உடலை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தக்வா பள்ளியில் ஜனாஸா கடமைகள் முடிந்தவுடன் பள்ளியின் மையவாடியில் நல்லடக்கம் செய்தனர். தானாக முன்வந்து உதவும் அதிரை பேரூர் தமுமுகவின் மனித நேயத்தை கண்டு பொதுமக்கள் பலர் வியந்தனர்.
April 20,2015
அதிரை காட்டுப்பள்ளி தர்ஹா கந்தூரி ஊர்வலம் தர்ஹாவிலிருந்து புறப்பட்டு சென்றது. ஊர்வலம் பெரிய ஜும்மா பள்ளி அருகே வந்த போது அங்கு தயாராக நின்றுகொண்டிருந்த அதிரை சாகுல் தலைமையில் கந்தூரி எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான செயல் இவை என கூறி கந்தூரி விழாவிற்கு எதிராக கோஷங்கள் இட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. உடனே அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்றிருந்த காவல்துறையினர் கந்தூரி ஊர்வலம் கடந்து செல்லும் வரை ஆர்ப்பாட்டக்காரர்களை சுற்றி சூழந்து கொண்டனர்.
April 13, 2015
அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட புதுக்குடி பகுதியில் அமைந்துள்ள செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளத்தின் புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்தது. இதில் குளத்தின் முடிக்க வேண்டிய முக்கிய பணிகளில் சிலவற்றை கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அதிரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் சார்பில், செய்னாங் குளம் இங்கே, ₹ 50 லட்சம் எங்கே ? என கேட்டு அதிரை நகரில் ஒட்டப்பட்ட திடீர் போஸ்ட்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
April 25, 2015
கடந்த 01-04-2013 அன்று எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் காவல்துறை அதிகாரி ராஜ்கமல் மற்றும் காவல்துறையினரால் தாக்கப்பட்டது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று சாட்சிகளின் குறுக்கு விசாரணை நடைபெறுவதாக இருந்தது. இதில் போலீஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாமல் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க கோரி காவல்துறை அதிகாரி ராஜ்கமல் மற்றும் காவல்துறையினரால் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்க மறுத்த நீதிபதி போலீசாரை எச்சரித்து புகார் தாரரின் போக்குவரத்து செலவீனங்களுக்காக ₹ 600 அபராதமாக செலுத்த உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
May 2, 2015
செக்கடி குளத்தை சுற்றி நடை பயிற்சி பாதை அமைத்து, நவீனப்படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். செக்கடி குளம் நடைபயிற்சி பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நமதூரின் பிரபல தொழில் அதிபரும், சமூக ஆர்வலருமாகிய ஹாஜி ஜனாப் M.S தாஜுதீன் அவர்கள்  நடைமேடை பராமரிப்பு பொறுப்பை நமதூர் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
May 21, 2015
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு வெளியானது. இதில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவி புதுமனைத்தெருவை சேர்ந்த முஹம்மது தவ்பீக் மகள் M.T. பர்வின் சுல்த்தானா  497 / 500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை நிகழ்த்தினார்.

மாநில அளவில் சாதனை நிகழ்த்திய மாணவிக்கு அதிரை நியூஸ் கல்வி விருது வழங்கும் விழாவில் 4 கிராம் தங்க நாணயம் வழங்கி கெளரவிக்கபட்டது. இவற்றை மாவட்ட கல்வி அலுவலர் திரு. ராஜசேகரன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
19 May, 2015
அதிரை அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர் உடனடியாக நியமிக்க வலியுறுத்தி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில் கூடிய ஊர் பொதுமக்கள், மருத்துவமனை அருகே கடந்த [ 16-05-2015 ] உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர். மீனாட்சி, பட்டுக்கோட்டை வாட்டாசியர் சேதுராமன், மருத்துவர் எட்வின் ஆகியோர் உண்ணாவிரத பந்தலுக்கு நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அரசின் சார்பில் கூடுதல் மருத்துவர் நியமனம் செய்யப்பட்டதாக உறுதியளித்ததை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இரவு நேர பணிக்காக மருத்துவர் இராமசாமி அதிரை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார்.  அப்போது அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மருத்துவரை நேரடியாக சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
May 25, 2015
அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா இன்று [ 25-05-2015 ] மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்  ஹாஜி A.J. அப்துல் ரஜாக் தலைமை வகித்தார். அதிரை நியூஸ் நிர்வாகி மரைக்கா இத்ரீஸ் அஹமது முன்னிலை வகித்தார்.

சிறுவன் முஹம்மது ஃபாதில் கிராத் ஓதி நிகழ்ச்சி துவங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பிஎம் மன்சூர் 'சிகரம் தாண்டுவோம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

நமதூர் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் நான்கு இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் கோ. ராஜசேகரன், மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் D. மீனாட்சி, காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ ஜலால், துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன், அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன், மாவட்ட துணை இயக்குனர் ( தொழுநோய் பொறுப்பு ) டாக்டர் குணசீலன் ஆகியோர் விருதுகள் வழங்கி கெளரவித்தனர்.

முன்னதாக அதிரை நியூஸ் ஆலோசகர் இப்ராஹீம் அன்சாரி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி குறித்த அறிமுக உரையை காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் ஆற்றினார்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் நமதூர் பகுதியின் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் நமதூர் ஒவ்வொரு பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் ஆங்கிலப் பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழா முடிவில் அபுல் ஹசன் சாதலி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரை நியூஸ் கல்வி விருது குழுவினர் செய்து இருந்தனர்.
June 8, 2015
தஞ்சை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இரத்த வங்கி, உயிருக்கு போராடும் நபர்களுக்கு இரத்தம் வழங்குதல், இரத்த வகை கண்டறிதல், பேரிடர் மேலாண்மை திறன் குறித்த மேம்பாடு பயிற்சி முகாம் மற்றும் செயல் விளக்கம், இலவச பொதுநல மருத்துவ முகாம், அவசரகால முதலுதவி மற்றும் வரும் முன் காப்போம் பயிற்சி முகாம் குறிப்பாக முதலுதவி செயல்முறை மற்றும் பயிற்சி மற்றும் மயக்கம், தீ விபத்து, எலும்பு முறிவு, நீரில் மூழ்கியவர்கள் மற்றும் வலிப்பு நோய் குறித்தும், அவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டியின் அதிரை கிளை துவங்கப்பட்டது. இதில் 8 பேர் நிர்வாக பொறுப்புக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். இதில் அதிரை ரெட் கிராஸ் சேர்மனாக மரைக்கா இத்ரீஸ், துணை சேர்மனாக இர்ஃபான் சேக், செயலாளராக நிஜாமுதீன், துணை செயலாளராக அபூதாஹிர், பொருளாளராக ஹாஜி எஸ் ஏ அப்துல் ஹமீது, நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக சார்லஸ், ஆறுமுகச்சாமி, எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
June 9, 2015
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதூர் ரஹ்மான் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் காலுடன் நுழைந்து, தொழுது கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய நெல்லை உதவி ஆணையர் மாதவன், உதவி ஆய்வாளர் சேக் அப்துல் காதர் மீது வழக்குப் பதிவு செய்து, பணி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி TNTJ சார்பில் மதுரையில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொள்ள தக்வா பள்ளி அருகிலிருந்து 5 வேன்கள், விருப்பத்தின் பேரில் சொந்தமாக எடுத்து வந்த வாகனங்கள் மூலம் திரளானோர் போராட்ட களத்திற்கு பயணத்தை மேற்கொண்டனர்.
June 28, 2015
அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்தவர் வாவன்னா அஹமது மஹ்சின். இவரது மகன் முஹம்மது காமில். அதிரையின் முதல் மாணவராக சீனா டேலியன் பல்கலைகழகத்தில் 6- 1/2 ஆண்டுகள் மருத்துவ கல்வி பயின்று பட்டம் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...