Pages

Saturday, December 12, 2015

பிலால் நகரில் தனி நபர் கழிப்பறை கட்ட 25 பயனாளிகளுக்கு அரசு மானியம் !

திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2015-16-ம் ஆண்டு வரவு-செலவு திட்ட உரையில் 15 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 25 ஆயிரத்து 800 கழிப்பறைகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 48 ஆயிரத்து 48 கழிப்பறைகளும் 2015-16-ம் ஆண்டில் கட்டப்படும். ஒவ்வொரு வீடுகளிலும் கழிப்பறை கட்டுவதற்காக தகுதிவாய்ந்த பயனாளிக்கு ₹ 12 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என கடந்த [ 20-04-2015 ] அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர் என்.சுப்பையன் அவர்கள் அறிவித்தார்.

இந்த நிலையில் அதிரை அருகே உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி மொத்தம் 9 வார்டுகளை உள்ளடக்கியது. இதில் 1 வது வார்டு பிலால் நகர், 2 வது வார்டு எம்.எஸ்.எம் நகர் உள்ளது. இதில் நடப்பாண்டில் ( 2015 ) ஏரிபுறக்கரை ஊராட்சியின் அனைத்து வார்டுகளை சேர்ந்த மொத்தம் 83 பயனாளிகளுக்கு கழிப்பறை கட்ட ஊராட்சி மன்றம் சார்பில் அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் 1 வது வார்டு பிலால் நகர் பகுதியில் மொத்தம் 25 பயனாளிகளுக்கு கழிப்பறை கட்ட மானியம் வழங்க இருப்பதாக ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் திறந்தவெளி கழிப்பிடமற்ற ஊராட்சிகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பயிற்சி பட்டறையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார். இதில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி பகுதிகளில் ஏரிபுறக்கரை ஊராட்சி நடப்பாண்டின்(2015) பட்டியலில் இல்லை என்றாலும் அடுத்த ஆண்டு ( 2016) தேர்வில் ஏரிப்புறக்கரை ஊராட்சியும் பட்டியலில் இடம்பெரும் எனவும், அப்போது அனைத்து வார்டுகளை சேர்ந்த கழிப்பறை வசதி இல்லாத குடும்பங்களுக்கு கழிப்பறை கட்ட அரசின் சார்பில் மானியம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

2 comments:

 1. அரசு அதிகாரிகள் , தலைவர்கள் லஞ்சம் வாங்காமல் இருந்தால் நல்ல திட்டம் தான்; மானியம் பெற பயனாளி நேரிடையாக பெறவேண்டும் இதன் மூலம் ஊழல் தடுக்கப் படும். ஆட்சி முடியப்போவதால் சும்மா இருந்தவனெல்லாம் இனி பாய ஆரம்பிப்பார்கள் ; கிடைத்த வரை லாபமென்று!

  ReplyDelete
 2. தமிழகத்தில் கழிப்பறை உபயோகத்தை அதிகரிக்க மாநில ஊரக வளர்ச்சித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 7.71 லட்சம் கழிப்பறைகளும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 7.34 லட்சம் கழிப்பறைகளும் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  கழிப்பறை கட்டுவதற்கு முன்வரும் பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரம் அரசால் வழங்கப்படுகிறது. ஆனால் கழிப்பறை முழுவதுமாக கட்டி முடித்து அதை ஆய்வு செய்த பிறகே நிதி வழங்கப்படும்.

  ஏரிப்புறகரை பிலால் நகரை பொறுத்தவரையில் மிகவும் ஏழ்மையான மக்களே வாழுகின்றனர். இதனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் முதலில் பணத்தை செலவு செய்து கழிப்பறை கட்டுவதற்கு சிரப்படுகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டி பயனடைய விரும்பும் பயனர்கள் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை அப்பகுதி இளநிலை பொறியாளர் ஆய்வு செய்த பிறகே ரூபாய். 12 ஆயிரத்தை பெற முடிவும் என சட்டம் சொல்கிறது. இதே திட்டத்தின் இவர்கள் கழிவறைகள் கட்டினால் அடுத்த ஆண்டில் அரசின் மானியத்தை பெறலாம்.

  இந்நிலையில் பின்தங்கிய பிலால் நகர் பகுதிவாசிகளின் வாழ்க்கை தரம் குறித்து அதிரை தன்னார்வ இளைஞர்கள் சிலர் ஒன்றினைந்து சோசியல் ஸ்டெடி ஃபோர்ம் என்னும் கள ஆய்வை மேற்கொண்டனர். அதில் பலர் அன்றாடம் செய்யும் கூலிவேலைகள் மூலம் கிடைக்கும் பணத்தை பெருவாரியான பகுதியை வட்டிக்கு வாங்கிய கடனுக்காக செலுத்திவிடுகின்றனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.

  மேலும் மேற்கூறிய திட்டத்தின் கீழ் பிலால் நகர் பகுதியில் வீடுகளுக்கு கழிவறை கட்ட அரசு பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்குமுன் 88 வீட்டிற்கு ஊராட்சியில் மொத்தம் கழிவறைகள் இத்திட்டதின் கீழ் கட்டியுள்ளனர். இதில் அரசு 83 வீட்டிற்கு அரசு மானியம் வழங்கயுள்ளது. இந்நிலையில் இத்திட்டதின் கீழ் தற்சமயம் கழிவறை கட்டும் பெயர் பட்டியலில் உள்ள பயனாளிகள் அடுத்தாண்டு அரசின் மானியம் பெறமுடியும் என்ற சூழல் நிலவி வருகின்றது.

  இதுகுறித்து ஏரிப்புறகரை கிளர்க் கூறுகையில் " தற்பொழுது அரசு ஏரிப்புறகரை ஊராட்சிக்கு கொடுத்த 83 கழிவறைகளைவிட கூடுதலாக 5 கழிவறைகள் கட்டிகொடுத்துள்ளோம். இருப்பினும் இத்திட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் தாராளமாக கழிவறைகள் கட்டலாம் அதற்கான அரசு மானியத்தொகை அடுத்தாண்டு இத்திட்டதில் வழங்கப்பட்டுவிடும். ஏனெனில் அடுத்தாண்டு நமது ஏரிப்புறகரை ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் கழிவறை கட்டிகொடுக்க உள்ளோம். ஆகையால் பொதுமக்கள் தாராளமாக கழிவறைகள் கட்டலாம். மேலும் எந்த இடத்தில் நீங்கள் கழிவறை கட்ட திட்டமிட்டுள்ளீர்களோ அந்த இடத்தில் கழிவறை கட்டுவதற்கு முன் ஒரு புகைப்படம் எடுத்துகொள்ள வேண்டும். அதன்பின் கழிவறை கட்டும்பொழுது ஒரு புகைப்படமும். இறுதியாக கட்டி முடித்தபின் ஒரு புகைப்படமும் எடுக்க வேண்டும். அரசின் மானியம் பெற குடும்ப அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை, வங்கி பாஸ்புக் தேவை" என்றார்.

  நிலைமை இவ்வாறு இருக்க இவர்களால் அரசு கூறுவது போன்று எப்படி கழிவறை கட்ட முடியும் அதுவும் ரூபாய். 12 ஆயிரம் என்ற நிலைமாறி 15 ஆயிரம் இருந்தால் தான் கழிப்பறை கட்டமுடியும் என்ற நிலை விலைவாசி உயர்வால் வந்துவிட்டது. அன்றாடம் கூலி தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் இவர்கள் எப்படி முன்கூட்டியே பணம் போட்டு கழிப்பறை கட்ட முடியும்?! இந்த நிலைமாற முயற்சிக்கும் தன்னார்வ இளைஞர்களுக்கு நாம் கரம்கொடுப்போம்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...