Pages

Wednesday, December 2, 2015

மண் ! - வரமா? சாபமா?

மண் என்று “சிம்பிளாக”   நாம் உச்சரிக்கும் ஒரு சொல் ,  பல அடையாளங்களை நமக்குத் தருகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ‘தாய் மண்’ என்று தாய்நாட்டைச் சொல்கிறோம்;  ‘பிறந்த மண்’ என்று பூர்விக ஊரைச் சொல்கிறோம்; ‘மண்ணின் மைந்தர்கள்’ என்று ஒரு குறிப்பிட்ட    வட்டாரத்தைச் சேர்ந்தவர்களை அடையாளப்படுத்துகிறோம்; ‘இந்தமண்ணுக்குச் சொந்தக்காரன்’ என்று உரிமையை நிலைநிறுத்துகிறோம்.

இவ்வாறு , நாம் மண் என்று சொல்லும் ஒரு சொல்,  ஒரு சொல் மட்டும்தானா? இல்லை. அது ஒரு அடையாளம்; உரிமை; உணர்வு; உத்வேகம்; ஊக்கம்.
“கண் மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போகட்டும்” என்று ஒழிக்கப்பட வேண்டிய மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் உணர்வை ஊட்டவும் மண்ணைத்தான் கவிஞர்கள் பயன்படுத்தப் பழக்கிக் கொண்டார்கள்.

இதே மண்ணை,  பிறர் மீது சாபத்தையும் வெறுப்பையும் உமிழவும் நாம் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். நமது வெறுப்புக்குள்ளானவரை அல்லது நமக்கு துரோகம் இழைத்தவராக நாம் கருதுபவர்களை நோக்கி சாபமிட,  ‘மண்ணாகிப் போய்விடுவான்’ என்று கூக்குரலிடுகிறோம்.       அத்தகையோரின்  வீடுகளின் முன்பு மண்ணை வாரி இறைப்பவர்களும் உண்டு. வழிபாட்டுத் தளங்களின் வாயிலில் நின்று கூட ஒருவரின் பெயரைக் குடும்பத்துடன் குறிப்பிட்டு அவர்கள்  அழிந்து போகட்டும் என்று குமுறும் உள்ளத்துடனும் கொட்டும் கண்ணீருடன் ஒருவித கோபத்தின் வெளிப்பாடாக கைகளால் அள்ளித் தூற்றுவதும் மண்ணைத்தான்.

இவ்வாறு சாபமிடுவதற்காக மண்ணை அள்ளித் தூற்றுவதை  இஸ்லாமிய வரலாற்று விழுமியங்களிலும் விதிவிலக்கின்றி  காண முடிகிறது.
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு , இறைநிராகரிப்பாளர்களான     குறைஷிகளுக்கெதிரான பத்ருப் போரில் கலந்து கொள்வதற்காக கவச ஆடை அணிந்து கூடாரத்திலிருந்து வெளிப்பட்ட பெருமானார் ( ஸல்) அவர்கள் ,

“அதிசீக்கிரத்தில் இக்கூட்டம் தோற்கடிக்கப்படுவார்கள் , (பிறகு) புறங்காட்டி ஓடுவார்கள் “ ( அல் குர்-ஆன் 54: 45) .  . .

என்ற  வசனத்தைக் கூறியவர்களாக பொடிகற்கள் நிறைந்த மண்ணை “ முகங்கள் மாறட்டும் “ என்று கூறி எதிரிகளின் முகத்தை நோக்கி எறிந்தார்கள். அது எதிரிகளின் கண், தொண்டை, வாய் என்று      அனைத்தையும் சென்றடைந்தது

அதுமட்டுமல்ல, பெருமானார் ( ஸல்) அவர்கள் மண்ணை அள்ளித் தூற்றிய இந்த சம்பவம் குறித்தே ,

“ நீங்கள் எறியும் போது உண்மையில் அதை நீங்கள் எறியவில்லை. எனினும் அதை நிச்சயமாக அல்லாஹ்தான் எறிந்தான் “ ( அல் குர்—ஆன்  9: 17)  என்ற வசனமும் இறங்கியது. ( அர் ரஹீக் அல் மக்தூம் page 272 ) . என்று அறிகிறோம்.
மனித குலத்தின் மூலப் பிதாவான நபி  ஆதம் ( அலை ) அவர்கள் மண்ணால்தான் படைக்கப்பட்டார்கள்.

“ மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான்”   ( அல்  குர் – ஆன் 32:7 )

( காய்ந்தால் கன்,  கன் என்று ) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான  களிமண்ணால் நிச்சயமாக நாமே மனிதனைப் படைத்தோம் “ (  அல்  குர் – ஆன் 15:26  ) என்றும் அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகிறான்.
அல்லாஹ் இந்த பூமியின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மண்ணை சேகரித்து அதன் ஒரு பிடியிலிருந்து ஆதம் ( அலை) அவர்களைப் படைத்தான். அதனால்தான் பூமியின் (பலதரப்பட்ட) தன்மைக்கேற்ப ஆதமின் மக்கள் வந்துள்ளனர். அந்த மக்களில் கருப்பர், வெள்ளையர், சிவப்பு நிறத்தவர் (என பலதரப்பட்டநிறமுடையவர்களும்)  நல்லவர், கெட்டவர், மென்மையானவர், கவலை கொள்பவர் என பலதரப்பட்ட பண்புகளை உடையவர்களும் ஆகியோர் உள்ளனர்.

அபூமூஸா அல்  அஷ்ஹரி ( ரலி) அவர்கள் முஸ்னத் அஹமத் 19811, 19876, 19812 நபி மொழிப்பதிவுகளில்  மேற்கண்டவாறு  அறிவிக்கிறார்கள் . ( குர் ஆன் கூறும் நபிமார்கள் வரலாறு – ஜைனப் காதர் சித்தீக்கியா )
மேலும்,  மனிதர்கள் மரணமடைந்தபிறகு மண்ணிலேயே அடக்கம்           செய்யப்படுகிறார்கள்.  மீண்டும் மண்ணிலிருந்தே எழுப்பப்படுவார்கள். அடக்கம் செய்யும் நேரத்தில் , பிடிமண்ணை பிடித்து மரணமடைந்த  உடலுடன் ஒட்டி வைக்கிறோம். ஆகவே நம்முடன் மண்தான் இறுதிவரை பயணிக்கிறது. அந்த நேரத்தில்   “ மண்ணாலேயே படைக்கப்பட்டோம்; இந்த மண்ணிலேயே அடக்கப்பட்டோம் ; மீண்டும் இந்த  மண்ணிலிருந்தே எழுப்பபடுவோம் “ என்று உணர்கிறோம். ஆகவே மண்ணை மண்தானே என்று தரம் குறைத்துப் பார்க்க இயலாது.

அது மட்டுமா?
பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றில் நிலம் அல்லது மண்ணுக்கு,  இறந்தவற்றை உயிர்ப்பிக்கும் தன்மை உண்டு. உயிரற்ற விதைகள்,  மண்ணோடு சேர்ந்து “மகா கூட்டணி” அமைத்தால் அந்த விதைகள் மரமாகி வளர்ந்து மனித குலத்துக்கு தனது தன்மைகளை வாழ்நாளெல்லாம்  வாரி வழங்குகின்றன.

மழைக் காலங்களில் மழை நீரை 57%  வரை உறிஞ்சி,  தன்னுடைய சேமிப்பு வங்கியில்  மண்தான் வைத்துக் கொள்கிறது. பிறகு மனிதன் தனது தண்ணீர் தேவைக்காகத் தோண்டினால் ஊற்று நீராக, அந்த   சேமிப்பிலிருந்து  “செக்” கேட்காமலேயே  திருப்பித் தருகிறது.

இந்து சமய சகோதரர்கள் மண்ணை புனிதமாகக் கருதுகிறார்கள். மண்ணை எடுத்து “ திருமண் ” என்று சிறப்புப் பெயர் சூட்டி தங்களது நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனது  “சிலிகான் சில்லுப் புரட்சி”  என்ற படைப்பில்  சிலிகான் என்றால் என்ன என்று விளக்கமாகக்  குறிப்பிட்டு இருக்கிறார்.  மண்ணில் உள்ளூர ஊடுருவி  இருக்கும் ஒரு சிறப்புத் தன்மைதான் சிலிக்கான். அந்த சிறப்புத் தன்மை இன்று உலகை ஆள்கிறது. . இன்றைக்கு மெமரிகார்டுகளில் மூலப் பொருளாக பூசப்படுவது இந்த மண்தான். இந்தத் தன்மையைப் பக்குவப்படுத்தியும் பயன்படுத்தியும்   வானொலி, தொலைகாட்சி, கைபேசி போன்ற சாதனங்களால் தொழில், போக்குவரத்து, செய்திப் பரிமாற்றம், விண்வெளி ஆய்வு போன்ற பல துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. சிலிகான் உடைய சகோதரிதான்   சிலிகேட். இதன்  தன்மை வாய்ந்த மண்ணால்தான் கண்ணாடிகள் வார்த்தெடுக்கப்படுகின்றன என்பது உபரித் தகவல். .

வெறிநாய்கள் கடித்துவிட்டால் அதற்கு முதல் உதவியாக பரிந்துரைக்கப்படுவது என்ன தெரியுமா? கொஞ்சம் தெரு மண்ணை எடுத்து தண்ணீரில் கரைத்து அந்தக் கரைசலை வெறிநாய் கடித்த இடத்தில் ஊற்றிக் கழுவ வேண்டும் என்பதுதான்.

இன்று செய்தித்தாள்களில் அடிபடும்  செய்தி,  “தாதுமணல் கொள்ளை” என்பதாகும். தாதுச்சத்துக்கள் நிறைந்த மணலைக்   கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்து தங்களை வளமாக்கி,  வைகுண்டம் அளவுக்கு உயர்ந்த செய்திகள் மண்ணில் மறைந்து இருக்கும்  வளம் எத்தகையது என்பதை நமக்குச் சொல்கின்றன.    

குளங்களில் இருக்கும் பட்டு மணல் என்கிற மென்மையான மண்ணைக் கைகளில் எடுத்து பல் துலக்குவதும் நமது பரம்பரைப் பழக்கம். இன்றும் கிராமங்களில் பற்பசையைப்  பயன்படுத்தாமல் நீர்நிலைகளின் மண்ணைப் பயன்படுத்தும் பெரியவர்கள் இன்னும் ஆடாத பற்களோடு பளிச்சென்று சிரிப்பதைக் காணலாம்.

இன்று நாம் சலவைக்குப் பயன்படுத்தும் இரசாயனங்கள் நிறைந்த டிட்டர்ஜென்ட் சோப் வகைகள் அறிமுகமாகும் முன்பு , ஆற்றுப் படுகைகளில் இருக்கும் உவர்  மண் என்ற வகை மண் தான் நமது பாரம்பரிய சலவைத் தொழிலாளர்களால் துணிகளை வெளுக்கப்பயன்பட்டன.

குளிப்பதற்குக் கூட, குளங்களில் படிந்து இருக்கும் களிமண் கலந்த வண்டல் மண்ணை  உடல்களில் பூசி ஊறவைத்துக் குளித்த வரலாறுகள் எல்லாம் நிறைய உள்ளன. பெரியவர்களிடம் கேட்டால் இது பற்றிய பயன்களைக்   கதை கதையாக சொல்கிறார்கள்.

ஒரு காலத்தில், சமையல் பாத்திரங்களை சுத்தபடுத்த அடுப்பு சாம்பலுடன் மணலைக் கலந்து தேங்காய்ச் செம்பில் வைத்துத் தேய்த்தே கழுவுவார்கள். காரணம், உடல்நலத்துக்கு நலம் பயக்கும்  மண்பாண்டங்களே       சமையலுக்காகப் பயன்படுத்தப்பட்டன. அதன் பின் அலுமினியப் பாத்திரங்கள் அமுலுக்கு வந்தன. மண்பாண்டங்கள், அலுமினியப் பாத்திரங்கள் ஆகியவை மண் மற்றும் சாம்பல் கலந்த கலவையால்தான் தூய்மைப்படுத்தபட்டன. எவர்சில்வர்  பாத்திரங்களும் நான் ஸ்டிக் வகை சமையல் பாத்திரங்களும் பயன்பாட்டுக்கு வந்த பின்தான் இன்று நாம் பயன்படுத்தும் விம், ப்ரில், FAIRY போன்ற லிக்விட்கள் பாத்திரங்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப் படுகின்றன. இன்றும் கூட SABENA  என்கிற பாத்திரம் கழுவும்  தூள் கூட ஒருவகை மண்னின் மூலப்பொருளால் உருவானதுதான்.      

ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவு கியுஷு. அங்கே வெந்நீர் ஊற்றுகள் ஏராளமாக இருக்கின்றன. இங்கே நிலவும் பருவநிலைக்காகவும் வெந்நீர் ஊற்றுகளுக்காகவும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். இங்குள்ள SPA ஸ்பாக்களில் மண் குளியல் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. எரிமலைப் பகுதிகளில் இருந்து எடுத்து வந்த ஈரமண்ணை ஒரு பெட்டியில் கொட்டுகிறார்கள்.

பெட்டிக்கு அடியில் ஊற்றுகளில் இருந்து கிடைக்கும் நீரைச் சூடேற்றுகிறார்கள். மண் சூடாக இருக்கும்பொழுது, மனிதர்களைப் பெட்டிக்குள் படுக்க வைத்து, மேலே மண்ணைக் கொட்டி மூடி விடுகிறார்கள். மண்ணில் உள்ள வெப்பம் குறைந்தவுடன் மனிதர்களை வெளியில் எடுக்கிறார்கள். பிறகு வெந்நீர் ஊற்று நீரால் குளிக்க வைக்கிறார்கள். இந்த மண் குளியலால் குழந்தையின்மை, சர்க்கரை நோய், ஆஸ்த்மா போன்ற பிரச்சினைகள் சரியாகும் என்றும் உடல் எடை குறையும் என்றும் சொல்கிறார்கள். நோய் சரியாகிறதோ, இல்லையோ மண் குளியலால் புத்துணர்ச்சி கிடைப்பதாகப் பலரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

மண் குளியல், முறைகள்  மற்றும் இது தொடர்பான இன்னும் பல வரலாற்றுத் தொடர்புடைய,  உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களும்  நிரம்ப இருக்கின்றன. இதற்காக ஜோர்டான் நாட்டுக்கெல்லாம் நாம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது; பைபிளின் பக்கங்களை புரட்ட வேண்டி இருக்கிறது. .

ஆகவே இந்தத் தலைப்பைப் பற்றிய தகவல்களை அடுத்தவாரமும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுதவேண்டும்.

இப்ராஹீம் அன்சாரி 
கல்லூரி முதல்வர் 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

1 comment:

  1. மண் பற்றியதகவல்பிரமிக்கவைக்கிறது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...