Pages

Sunday, December 20, 2015

அதிரை பேருந்து நிலையம்: அவசியமும், ஒத்துழைப்பும்

ரு காலம் இருந்தது. அதிரைக்கு வருகிற அல்லது அதிரை வழியாக செல்கிற பேருந்துகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ராஜாமடம் அக்னி ஆற்றுப் பாலம் கட்டப்படுகிறவரை மேற்குப் பக்கம் செல்லும் பேருந்துகள் ராஜாமடத்துடன் நிற்கும். மல்லிபட்டினத்துக்குக் கூட அதிரையிலிருந்து பேருந்து வசதி கிடையாது. கிழக்குப் பக்கம் முத்துப் பேட்டை,, நாகை போக வேண்டுமென்றால் பட்டுக் கோட்டை வழியாகத்தான்  போக முடியும்.

நமது  நினைவு சரியாக இருக்குமானால் தஞ்சாவூருக்கு KRT,  M.S MANIAM, TMT , சக்தி விநாயகர், அப்புறம்  MST,  AMA, அத்துடன் மதுக்கூர் வழியாக மன்னார்குடிக்கு  M.S MANIAM, & SDLT, புதுக்கோட்டைக்கு கரம்பக்குடி வழியாக  TVS .  1968 –க்குப் பிறகுதான் பட்டுக் கோட்டைக்கு  டவுன்பஸ்  No. 1.     SWAMI அப்புறம் அதுவே கைமாறி   ASM,  தம்பிக்கோட்டை முக்கூட்டுச்சாலை வரை அன்றைய CRC – NO.  12  நெடுநாட்கள் கழித்து,  அதுவே முத்துப் பேட்டை வரை நீடிக்கப்பட்டது. இடையில் ரேவதி என்று ஒரு பேருந்து துவரங்குறிச்சி வழியாக திருத்துறைப்பூண்டி வரை இயக்கப்பட்டது.

இவ்வாறு மிகக் குறைவான அளவு பேருந்துகள்தான் அதிரையில்  இயங்கிக் கொண்டு இருந்தன. இன்று இ சி ஆர் சாலை போடப்பட்ட பிறகு அதிரை வழியாகவும் நேரடியாகவும் , திருவனந்தபுரம்,  தூத்துக்குடி, திருச்செந்தூர், இராமநாதபுரம், தொண்டி, ஏர்வாடி, இராமேஸ்வரம், காரைக்குடி, புதுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி நாகூர் , நாகபட்டினம், சிதம்பரம், மயிலாடுதுறை , புதுச்சேரி என்று மட்டுமல்லாமல் சென்னைவரைக்கும்  பல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சரியான பேருந்து நிலைய வசதிகள் ஏற்படுமானால் இன்னும் அதிகமான ஊர்களுக்கும் பேருந்து வசதிகளை நாம் எதிர்பார்க்கலாம்;  அரசிடம் கோரிக்கையும் வைக்கலாம்.

இவ்வளவு பேருந்துகள் வந்து போக வசதியாக இடமும் தேவை. அந்தப் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் காத்திருக்க வசதியுடன் கூடிய இடமும் தேவை. இயற்கைக் கடன்களைக் கழிக்க நவீன வசதிகளும் சுற்றுச்சூழல் தூய்மையான அதிரையும் இயல்பான தேவைகள் என்பதையும் நாம் மறுக்க இயலாது.

இப்போது பேருக்காக இருக்கும் பேருந்து நிலையத்தில் வேறுவழியின்றி ஆக்கிரமிப்பின் காரணமாக, பலநேரங்களில் கல்லூரி மாணவர்களை விடுங்கள் ,  மாணவிகள் கூட  வெயிலில் நின்று கொண்டு இருக்கிறார்கள். மழை பெய்யும்போது முந்தானையை அல்லது துப்பட்டாவை இழுத்துத் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு மழையிலும் நனைந்து  கொண்டு நிற்கும் பரிதாபத்துக்குரிய  மாணவிகளையும் காண  நேரிடுகிறது.

பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் ஊரில் பெண்களுடைய வசதிகளை தனிப்பட நாம் கவனிக்கவும் வேண்டி இருக்கிறது. தமிழக முதல்வர் பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி இடம் தரப்பட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்கள். இந்த வசதி நமதூர் பேருந்து நிலையத்தில்  உள்ளதா?   குறையில்லை. காரணம் இடம் இல்லை.

பேருந்து நிலையத்தை டாக்சிகளும் வேன்களும் ஆட்டோக்களும் ஆக்கிரமித்து நின்று கொண்டு மக்களுக்கும் பேருந்துகள் வந்து திரும்புவதற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும்  டாக்சிகளும் வேன்களும்கூட போக்குவரத்து வசதிகளில் ஒருங்கிணையும் அங்கமே என்பதையும் நாம் ஒதுக்கிவிட  இயலாது. பேருந்துகளில் வந்து இறங்குபவர்கள் டாக்சி ஆட்டோ மற்றும் வேன்களைத் தேடி தங்களின் பயணச்சுமைகளைத் தூக்கிக்கொண்டு தொலை தூரம் போக இயலாது என்பதையும் கருணையுடனும் அறிவுபூர்வமாகவும்  ஏற்கத்தான் வேண்டும். அவைகளுக்கும் இடம் ஒதுக்கத்தான் வேண்டும். பல ஆண்டுகளாக இந்த பகுதியில் புழங்கிவரும் இவர்களின் கோரிக்கையும் கனிவுடன் பரிசிலித்து முடிவு எடுப்பது நமது கடமை. யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் மாற்று இடத்தை கண்டறிந்து வழங்குவது அவசியம்.

இவ்வாறு பலவித கோணங்களிலும் பார்க்கும்போது இந்தப் பிரச்னை ஒரு தலையாயப் பிரச்னையாகவும் அதிரையின் சேர்மன் அவர்கள்  தங்களின் பெரும்பாலான நேரத்தை இந்தப் பிரச்னையையில் செலவிட்டு தீர்க்கவேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் என்பதையும் உணர்ந்து அந்தப் பிரச்னையின் முக்கியத்துவத்தைக்  கருதி அனைவரும் அவருக்கும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் கருத்திடும் சில சகோதரர்கள் காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள இடத்தை டாக்சி ஸ்டாண்டாகப் பயன்படுத்தலாம் என்று கருதுகிறார்கள். அந்த இடத்தில் செல்லியம்மன் கோயிலும் திருமண மண்டபமும் அடுத்து பயணியர் மாளிகைக்கான இடமுமாக இருக்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் சாதக பாதகங்களை ஊர் பெருமக்கள் அனைவரும் கூடி ஆராயலாம். சட்டம் , வழக்கு, நீதிமன்றம், வாய்த்தகராறு, நீயா நானா  என்பன போன்ற மனமாச்சர்யங்களை மறந்து, விட்டுக் கொடுத்து ஒரு சரியான முடிவை ஒருமனதுடன்  எடுக்கவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.    .

இந்தப் பிரச்னையில் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பொதுவான நன்மையை நாடி எடுக்கப்படும் முடிவுகளுக்கு சற்று சிரமங்கள் இருந்தாலும் அவற்றைத் தாங்கிக் கொண்டு அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்னை தொடர்பாக இன்னும் சில கருத்துக்களை சிந்தனைக்கு வைக்க விரும்புகிறோம்:
சென்னையில் பேருந்து நிலையம் முன்னர் உயர்நீதிமன்றம் இருந்த பகுதியில் இருந்தது. அது கோயம்பேடுக்கு மாற்றப்பட்டுவிட்டது. மதுரையில் பேருந்து நிலையம் மதுரை ஜங்சன் எதிரே இருந்தது;  மாட்டுதாவணிக்கு மாற்றப்பட்டது. பெரிய நகரங்கள் மட்டுமல்ல, நமக்கு அருகில் உள்ள ஊரான திருத்துறைப் பூண்டி பேருந்து நிலையம் முன்பு எங்கே இருந்தது ? இப்போது எங்கே வசதியாக மாற்றப்பட்டுள்ளது என்பதையும் அதேபோல் தஞ்சை பேருந்து நிலையமும், மன்னார்குடி பேருந்து நிலையமும் நாகப்பட்டினம் கும்பகோணம் பேருந்து நிலையமும்கூட  சகல வசதிகளையும் உள்ளடக்கிய பகுதிகளுக்கு மாற்றப்பட்ட உதாரணங்கள் நமது கண் முன்னால் இருக்கின்றன. இப்போது திருவாரூர் பேருந்து நிலையம் கூட புதிதாக கட்டப்பட்டு வருகிறது. முத்துபேட்டை பேருந்து நிலையம் கூட ஊரைவிட்டு சற்று வெளியே விஸ்தீரணமான பகுதியில் அமைக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு இடம் மாற்றப்படும் வாய்ப்புகளையும் நாம் விவாதிக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்க விரும்புகிறேன்.  இந்தக் கருத்து தவறாகக் கூட இருக்கலாம். சகல தரப்பினரும் விவாதித்து முடிவு எடுக்கப்பட வேண்டியது.
வளர்ந்து வரும் அதிரை இன்னும் வளர்ந்து, ஊரின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் எந்த முடிவுகளும்  எதிர்காலத்துக்கும் ஏற்றபடி  சேர்த்து எடுக்கப்படும் முடிவுகளாக இருக்கவேண்டும்.

தனிமனிதன் தன்னைபற்றியே சிந்திப்பான் ஆனால் தலைவன் தனது தலைமுறையைப் பற்றியும் எதிர்காலத் தலைமுறையைப் பற்றியும் சிந்திப்பான். பொதுப் பிரச்னை தொடர்பான பிரச்சனைகளில் ஊரின் ஒவ்வொரு தனிமனிதரும் தங்களையும் தலைவர்களாகக் கருதி தலைமுறைக்காக சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்ராஹீம் அன்சாரி 
கல்லூரி முதல்வர் 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

6 comments:

 1. தனிமனிதன் தன்னைபற்றியே சிந்திப்பான் ஆனால் தலைவன் தனது தலைமுறையைப் பற்றியும் எதிர்காலத் தலைமுறையைப் பற்றியும் சிந்திப்பான். பொதுப் பிரச்னை தொடர்பான பிரச்சனைகளில் ஊரின் ஒவ்வொரு தனிமனிதரும் தங்களையும் தலைவர்களாகக் கருதி தலைமுறைக்காக சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

  ReplyDelete
 2. அதிரை முன்னெர அழகான யோசனை நன்றி காக்கா.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. நம்மிடம் ஒற்றுமை இல்லை. ஒற்றுமை இருந்திருந்தால் இந்த ஊரு எப்பவே முன்னேறி இருக்கும். இப்பகூட பிரச்சனை இல்லை ஒற்றுமையாக செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. பேரூராட்சி அலுவலகம், மாட்டாஸ்பத்திரி இடத்தை மாற்றியமைத்து பேரூந்து நிலையம் விசாலப்படுத்தலாம்

  ReplyDelete
 6. //பேரூராட்சி அலுவலகம், மாட்டாஸ்பத்திரி இடத்தை மாற்றியமைத்து பேரூந்து நிலையம் விசாலப்படுத்தலாம்// Bro. Riyaz Ahamed அவர்கள் கூறி இருப்பதும் ஒரு நல்ல விவாதத்துக்குரியதும் ஆலோசனைக்கும் பரிசீலனைக்குரியதுமான கருத்துத்தான்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...