Pages

Saturday, January 16, 2016

குழந்தைகளை கவர்ந்திழுக்கும் தஞ்சை பூங்கா ! [ படங்கள் இணைப்பு ]

சுற்றுலா பகுதி: தஞ்சை பூங்கா
அதிரை – இது சேது பெருவழிச் சாலையில் அமையப் பெற்றிருக்கும் கடற்கரையோர ஊர். இங்கிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தஞ்சாவூர். இவை வரலாற்று நகர், சுற்றுலா நகர், தொழில் நகர் போன்ற பல்வேறு சிறப்புகளைகொண்டுள்ளது. மேலும் 'தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

தஞ்சையின் பழைய பேருந்து நிலையத்தின் அருகே உள்ள 'சிவகங்கைப் பூங்கா' அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. நகராட்சியாக இருந்து வந்த தஞ்சையை கடந்த வருடம் தமிழக அரசு மாநகராட்சியாக தரம் உயர்த்தியது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்காவை நவினப்படுத்தும் பல்வேறு முயற்சியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பள்ளி விடுமுறையின் போது மாணவ மாணவிகள், சிறுவர்கள் என பொழுதை குதுகலத்துடன் கழிப்பதற்காக இங்கு தினமும் வருகின்றனர். தற்போது நாள் ஒன்றுக்கு 1000 முதல் 2000 பேர் வரை வருவதாக கூறுகின்றனர். அதுவும் வார இறுதி நாட்களில் ( சனி, ஞாயிறுகளில் ) இந்த எண்ணிக்கை கூடுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

குழந்தைகளுடன் பூங்காவை வலம்வந்த நாம் சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்க மான், வான்கோழி, பச்சைக்கிளி, வாத்து போன்ற பறவை இனங்களும், நரி, முயல், புறா, சீமை எலி, மான் போன்ற விலங்கினங்களை தனித்தனி கூண்டுகளில் அடைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதை அங்கு காணமுடிந்தது.

சிறுவர் சிறுமிகளுக்காக பிரத்தியோகமாக அமைக்கப்பட்டிருக்கும் சிறுவர் பூங்காவில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் விளையாட்டு, குடை ஊஞ்சல் ஆகியவற்றில் பெரும்பாலான குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர்.

வெயிலின் உஸ்ணத்தைப் போக்குவதற்கென்று பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஊற்று குளத்தில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் குளித்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக பெற்றோர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தது  நம்மை நெகிழ்ச்சியுறசெய்யும்.  மேலும் பெரியவர்கள் நீந்துவதற்காக தனியாக நீச்சல் குளமும் அங்கு காணப்படுகின்றன.

பூங்காவில் செயற்கை வடிவமைப்புடன் காணப்படும் எருமை சவாரி சுற்றுலா வந்தோர் அனைவரையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும். குறிப்பாக எருமையை அடக்க அதன் மீது உட்கார்ந்து பயணிகள் செய்யும் சேட்டைகளும், இறுதியில் எருமையை அடக்க முடியாமல் கீழே சாய்ந்து விழுவதும் காண்போரை சிரிப்பை வரவழைக்கிறது. அதன் அருகே உள்ள ராட்சஸ பலூன்களில் குழந்தைகள் துள்ளி குதித்து விளையாடுவது அங்கு நின்று வேடிக்கை பார்க்கும் பெற்றோரை ஆனந்தமடைய செய்கிறது.

பூங்காவை சுற்றிவர ரயில் சவாரியும் அங்கே அமைக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் வலம்வந்ததை காணமுடிந்தது. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து இளைப்பாற படர்ந்த புல்வெளி, போதுமான குடிநீர் வசதி, அரச மரம், ஆழ மரம், அசோகா மரம், யானைக்கால் மரம் ( !? ) போன்ற பழமைவாய்ந்த மரங்களும், அழகிய செடி வகைகளும் பார்ப்பதற்கு அழகுறக் காட்சியளிக்கின்றன.

பூங்காவிற்கு வருகை தரும் பெரும்பாலான குடும்பங்கள் உடல்நல சீர்கேட்டை ஏற்படுத்தும் ஹோட்டல் சாப்பாட்டிலிருந்து விலகி இருக்க தங்களின் வீட்டிலிருந்து பிரத்தியோகமாக தயாரித்து எடுத்து வந்த கட்டிச்சோறு, புளிச்சோறு, தயிர்ச்சாதம், பிரியாணி ஆகியவற்றை பூங்காவில் உள்ள நிழற்கூடத்தில் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதை அங்கே காண முடிந்தது.

பூங்காவில் நிறைகள் அதிகமாக காணப்பட்டாலும் குறைகளும் அங்கு இல்லாமலில்லை. குறிப்பாக கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் அனைவரையும் சுண்டி இழுத்து வந்த அந்தரத்தில் தொங்கியபடிச் செல்லும் 'தொங்கு பாலம்' மற்றும் பூங்காவில் உள்ள குளத்தை சுற்றிப் பார்ப்பதற்கென்றே மிதி படகு சவாரி, துடுப்பு படகு சவாரி ஆகியன செயல்படாமல் முடங்கி காணப்படுவது சுற்றுலா பயணிகளை ஏமாற்றமடைய செய்தது. அதே போல் ஆண்கள் - பெண்களுக்காக தனித்தனியே அமைக்கப்பட்டிற்கும் கழிவறை மிகவும் சுகாதாரமற்று காணப்பட்டன. உள்ளே சென்றுவிட்டு திரும்பிய பயணிகளில் பெரும்பாலானோர் வாந்தியுடன் வெளியே வந்ததை காணமுடிந்தது. நகராட்சி நிர்வாகத்தினர் - ஒப்பந்ததாரர்கள் இவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டு உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே பயணிகளின் விருப்பமாக இருக்கிறது.

குச்சி ஐஸ் சாப்பிடும் குட்டீஸ் முதல் குடை கொண்டு செல்லும் தாத்தா வரை பாதுகாப்பாக சென்று வரலாம் என்கின்றனர் அடிக்கடி அங்கு சென்று வந்தவர்கள். குறைந்த செலவில் மனம் நிறைந்த பட்ஜெட் சுற்றுலாவாக இருக்க எண்ணுவோர் இங்கு அதிகமாக படையெடுத்து வருவதாகவும் கூறுகின்றனர்.

அபூ இஸ்ரா
[ இது ஒரு மீள் பதிவு ]

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...