Pages

Thursday, January 7, 2016

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையது மறைவு !

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையது உடல் நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலை மறைந்தார். அவருக்கு வயது 79. அவரது மறைவை அம்மாநில கல்வி அமைச்சர் நயீம் அக்தார் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அண்மைகாலாமக உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்த அணுக்கள் குறைபாடு மற்றும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை காலை காலமானார்.

முப்தி முகமது சையத் மறைவை ஒட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில், தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப் படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்தி முகமது சையதுவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஸ்ரீநகரில் வைக்கப்படுகிறது. பின்னர் ஸ்ரீநகரில் இருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ள அவரது சொந்த ஊரான பிஜ்பெஹராவில் நல்லடக்கம் நடைபெறும் எனத் தெரிகிறது.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 2014 டிசம்பரில் நடைபெற்றது. 87 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களைப் பெற்றன.

பெரும்பான்மை பலம் இல்லாததால் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதனால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைக்க முடிவு செய்தன.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 12-வது முதல்வராக முப்தி முகமது சையது பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக, 2002-ம் ஆண்டில் முப்தி முகமது சையது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மூன்று வருடங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது இரங்கல் செய்தியில், "முப்தி முகமது சையது ஜம்மு-காஷ்மீர் நலனுக்காக ஆற்றிய தொண்டுகளும் பொது வாழ்வில் அவரது பங்களிப்பும் என்று நினைவு கூரப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, "முப்தி முகமது சையது ஒரு சிறந்த ராஜதந்திரி. அவரது நீண்ட அரசியல் வாழ்வில் அரசியல் தொலைநோக்குப் பார்வைகளுக்காகவே அவர் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டார்" என தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முப்தி முகமது மறைவுச் செய்தி வந்தவுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு அவரது குடும்பத்தினரை நேரில் சந்துத்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மிக நுட்பமான பிரச்சினைகளைக்கூட ஆழமாக புரிந்து வைத்திருந்தவர் முப்தி. சாமான்ய மக்கள் அதுவும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறை பாராட்டத்தக்கது" என்றார்.

முப்தி முகமது சையது மறைவுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையதின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மனைவி மற்றும் மகளுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையை பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையது மறைவால் இத்தேசம் ஒரு பெருந்தலைவரை இழந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். முப்தி முகமது தன்னிகரற்ற அரசியல் தலைவர் எனவும் சோனியா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

நன்றி:தி தமிழ் இந்து

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...