Pages

Friday, January 8, 2016

கருணைக் காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் இறை விசுவாசிகளின் கடமை!

பெருமானார் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், 'பூமியில் உள்ளோர் மீது கருணைக் காட்டுங்கள், வானத்தில் உள்ள அல்லாஹ் உங்களுக்கு கருணைக் காட்டுவான்'(முஹ்ஜமுத் தப்ரானி)

அது போன்ற கருணையினை உத்திரப் பிரதேச ‘ரே பரேலி’  நகரில் வெளி உலக வெளிச்சத்தினைக் காணாது வெங்கொடுமை சிறையில் வாடிய 15 முஸ்லிம் அல்லாத கைதிகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்கள் இஸ்லாமிய இளைஞர்கள்.

சிறையில் வசதியுள்ளவர்களின் வாழ்க்கையில் சக்கரைப் பொங்கலாகவும், வசதியில்லாதவர் வாழ்வில் நொந்து நூலான வாழ்வாகவும் அமைந்திருப்பதினை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சிலருக்கு சிறை வாசம் மாமியார் வீட்டுக்குச் சென்று விருந்து சாப்பிட்டது போலாகவும் இருக்கும். ஆனால் ரே பரேலி நகரின் சிறையில் சிறு வழக்குகளில் சம்பத்தப் பட்டு இருந்த 15 ஹிந்து சிறைவாசிகள் தங்கள் தண்டனைக் காலத்தினை முடித்து விட்டாலும், தங்களுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை கட்ட முடியாமல் சிறையில் வாடியதினை அறிந்த ஒரு தன்னார்வ முஸ்லிம் இளைஞர் அமைப்பினர் அந்த 15 சிறைவாசிகளும் கட்ட வேண்டிய அபராதத் தொகையான ரூபாய் 50,000/ த்தினை வசூல் செய்து அந்தப் பணத்தினை அபராதமாக 2015 ஜூன் மாதம் செலுத்தி வெளிக் கொணர்ந்தனர்.

அந்தக் கைதிகள் சிறை வாசலை விட்டு வெளியேறும் போது, அந்த முயற்சியில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர்களை கண்ணீர் மல்க நெஞ்சோடு கட்டியணைத்து தங்களது நன்றியினை சொன்னதும் தான் தாமதம், அந்த இளைஞர்கள் சிறை வாசிகளிடம் அந்த நன்றி எங்கள் அல்லாஹ்விற்கே தகும் என்றார்களாம் பாருங்களேன்!

தானத்தில் சிறந்தது அண்ண தானம்:
அன்றாடம் உண்பதிற்கு உணவில்லாமல் அல்லல் படும் பல மக்களை நாம் காண்கின்றோம். அதே போன்று உ.பி. மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சிற்பங்கள் அமைந்த அஜந்தா-எல்லோரா குகைகள் கொண்ட நகரம் ஔரங்கதாபாத் ஆகும். அந்த நகரத்தில் ஒரு வாய் உணவிற்குக் கூட தாளம் போடும், கட்டிய கைகளும், ஒட்டிய  வயிர்களும் கொண்டு முடங்கிக் கிடக்கும் முஸ்லிம்களைக் கண்டு, 'ஹாருன் இஸ்லாமிக் செண்டெர்' நடத்தும் யூசுப் முகாதி வேதனைப் பட்டார். உடனே தன் மனைவி கௌசர், திருமணமான தன் 4 சகோதரிகளிடம் பசி என்ற ஆராப் பிணிப் போக்குவது பற்றி ஆலோசனை நடத்தினார். அதன் பயனாக டிசெம்பர் , 2015ல் ஆரம்பிக்கப் பட்டது தான், 'ரொட்டி வங்கி'.

அந்த வங்கியில் 250 உறுப்பினர்கள் இது வரை சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு தனித்தனியே ஒரு உறுப்பினர் எண் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் இரண்டு ரொட்டி, அத்துடன் சைவ அல்லது அசைவ கூட்டு கொடுக்க வேண்டும். வங்கியின் அலுவல் நேரம் காலை 11 மணியிலிருந்து இரவு 11 மணி வரை. அப்படிக் கொடுக்கப்படும் உணவின் தன்மை ஆராயப்படும். அதன் பின்பு ஏழை எளிய மக்களுக்கு ஒரு தூக்குப் பையில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர் வேறுபாடு இல்லாமல் கொடுக்கப்படும். 'ஆனால் நிச்சயமாக அந்தப் பையில் இங்கு உள்ள இலவச  பைகளில் உள்ளது போன்று எந்தப் படமும் இல்லை என்று நம்புங்கள்'.

இந்த வங்கியில் 700 உணவுப் பொட்டலங்களை சேகரித்து வைக்கக் கூடிய குளிர் சாதனப் பெட்டி உள்ளது. இந்த வங்கியின் குறுகியகால  சிறப்பினை அறிந்த முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர் விசேச நிகழ்ச்சியின் போது தயாரிக்கப்படும் உணவில் ஒரு பங்கினை இந்த வங்கியினுக்கு வழங்கி விடுகின்றனர். அதனை அறிந்து சில உணவு விடுதிகளும் தங்கள் விடுதியில் மிஞ்சிய உணவினை இந்த வங்கியினுக்கு வழங்குகின்றனர். இது போன்ற உதவியினால் கணவனால் கைவிடப்பட்ட, விதவைப் பெண்கள் பலர் பயன் படுவதாக யூசுப் அவர்களின் மனைவி கௌசர் கூறுகிறார். யூசுப் நடத்தும் , 'ஹாருன் நடத்தும் இஸ்லாமிக் செண்டரில் பயிலும் 2000 மாணவிகள் தங்களோடு படிக்கும் மாணவிகள் உணவு இல்லாதவர்களுக்கு மத வேறுபாடு இல்லாமல் உணவு எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வுலகத்தினை அல்லாஹ் ஒரு நாள் அழித்து விட்டு எல்லா மனிதர்களையும் மீண்டும் உயிர்பித்து மனிதர்களின் நன்மை, தீமைகளுக்கு ஏற்ப விசாரணை நடத்துவான். நன்மை, தீமைகளுக்கு ஏற்ப கூலியும் வழங்குவான் என்று இறை நம்பிக்கையாளர்களுக்குத் தெரியும். நாத்தீகர்கள் நம்புவதில்லை என்பதினை ஒதுக்கி விடுவோம்.

அல்லாஹ்  அப்படிக் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்றாக எம்பெருமானார் நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது; 'மானிடனே உன்னிடம் நான் உணவு கேட்டு வந்த போது எனக்கு உணவு அளிக்க மறுத்து விட்டாயே' என்று கேட்பானாம் அல்லாஹ். அப்போது மனிதன், 'நீயே அகிலத்தையும் படித்துப் பராமரிப்பவனாக இருக்கின்றாய், நான் உனக்கு எவ்வாறு உணவளிக்க இயலும்?' என்று மனிதன் கூறுவான். அப்போது இறைவன், 'என் அடியான் உன்னிடம் உணவு கேட்டு வந்தபோது அவனுக்கு நீ உணவளிக்க மறுத்தது உனக்குத் தெரியாதா? என்று கேட்பானாம். மேலும் எல்லா  வல்ல நாயன் கூறுவானாம், 'நீ அவனுக்கு புசித்திருந்தால் அங்கேயே என்னைக் கண்டிருப்பாய்' என்றும் கூறுவானாம்.

மனிதனுக்கு உதவுவது தான் இறைவனுக்குச் செய்யும் வணக்கம் என்பது இந்த விசாரணை முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாமே!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

3 comments:

 1. நுமான் இப்னு பஷீர் ( ரலி ) அவர்கள் புகாரியில் ஒரு அற்புதமான நபி மொழியை அறிவிக்கிறார்கள்.
  “ ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவர் மற்றவரைச் சார்ந்து நிற்பதிலும் இறை நம்பிக்கையாளர்கள் ஓர் உடலைப் போன்றவர்கள். அந்த உடலின் ஓர் உறுப்புக்கு நோய்கண்டுவிட்டால் அதனால் உடலின் மற்ற உறுப்புகளும் இருப்புக் கொள்ளாமல் அதன் துன்பத்தில் பங்கு கொள்கின்றன. ஓர் இறை நம்பிக்கையாளன் அதைப் போன்றே பிறரின் துயர் கண்டு வாடவேண்டும். “ – என்பதே அந்தப் பொன்மொழி .
  பெருமானார் ( ஸல்) அவர்கள் சொன்ன அற்புதமான உவமைகளில் ஒன்றாக இந்த நபி மொழி கருதப்படுகிறது. சமுதாயத்தையும் சமூகத்தையும் ஒரு முழு உடலுக்கு ஒப்பிட்டார்கள். காலில் முள் குத்தினால் வாய் ஆ! என அலறுகிறது; கை அந்த இடத்தைத் தடவி விடுகிறது; கண்கள் வலி தாங்காமல் கண்ணீரைச் சொரிகின்றன; மூளை அதற்கான மருந்தைத் தேடுகிறது. காலில் தானே முள் குத்தியது! அதனால் மற்ற உறுப்புகள் ஏன் பதற வேண்டும்? பதைக்கவேண்டும்?
  தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று நம்மில் பலர் இருக்கிறோம். விஷமுள்ள கொடிய பாம்பு , அடுத்த வீட்டுக்குள் புகுந்துவிட்டால் அது நமது வீட்டுக்குள்ளும் வர எவ்வளவு நேரம் ஆகும்? தீயின் துளி ஒன்று அடுத்த வீட்டுக் கூரையில் பட்டுவிட்டால் தொடர்ந்து நமது வீட்டுக்கும் பற்றிப் பரவி எரிய பல ஆண்டுகளா ஆகும்? ஆகவே ஒருவருக்கு ஒன்று சம்பவித்தால் அது அவரை மட்டுமே சார்ந்தது அவரை மட்டுமே பாதிக்கக் கூடியது என்று விட்டுவிட இயலாது. ஒரு உடல் உறுப்பைப் போல செயல்பட்டு ஒருவருக்குத் துன்பம் ஏற்பட்டால் அடுத்தவர்களும் அந்தத் துன்பத்தைக் களைய ஒன்றிணைந்து நடவடிக்கைகளை எடுப்பது நம்மையும் அழிவிலிருந்து காப்பாற்றும் என்பது நாம் படிக்காமலேயே கற்றுக் கொள்ள வேண்டிய பாலபாடமாகும். இந்தக் கருத்தைதான் பெருமானார் (ஸல்) அவர்களின் அமுதமொழி நமக்கு சொல்லித்தருகிறது. அழைப்புப் பணியாளரும் இதை அடிப்படையாகக் கற்றுக் கொள்ள வேண்டிய கருத்தாகும்.

  ReplyDelete
 2. மனிதர்களுக்கு மற்ற மனிதர்களின் உதவிகள் தேவைப்படும் இடங்கள் என்று நாம் சில இடங்களைத் தேர்வு செய்தால் அவற்றுள் மருத்துவ மனை, சிறைச்சாலை, காவல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில்வே நிலையங்கள் ஆகியவை நிச்சயம் இடம் பெறும். காரணம் இங்கெல்லாம் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிர்பாராதவகையில் மனித உதவிகள் அவசியம் தேவைப்படும்.
  சாலைவிபத்துக்களில் எதிர்பாராமல் சிக்கிக் கொள்பவர்கள் எவ்வளவு பெரிய வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய உறவினர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்வரை அவர்கள் அனாதைகள்தான். சில நேரங்களில் அவர்களால் தங்களின் முகவரியைக் கூட சொல்ல இயலாத நினைவிழப்பு, கோமா போன்ற சிக்கல்களில் அவர்கள் மாட்டிக் கொள்வார்கள். இதே மாதிரி நிலைகள் மனிதர்களுக்கு காவல் நிலையங்களிலும் சிறைச்சாலைகளிலும்கூட ஏற்பட்டு விடுகின்றன. அப்பாவிகள் சிலர் சந்தேக வழக்குகளில் கைது செய்யப்பட்டு தங்களுடைய நிலைமைகளை விளக்க சந்தர்ப்பமின்றி தடுத்துவைக்கப்படுகின்றனர். நிலுவையில் உள்ள பொய்வழக்குகள் அவர்கள் மீது புனையப்படுவதையும் நாம் அறிந்து இருக்கிறோம். அத்தகைய சூழ்நிலைகளில் இன மத பேதமின்றி மனிதர்கள் அனைவரையும் தேடிப்போய் உதவுவதில் அழைப்புப்பணியாளருக்கு ஆயிரம் வேலைகள் உள்ளன.
  ( அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? - கட்டுரைத் தொடரிலிருந்து )

  ReplyDelete
 3. ரொட்டி வங்கி போல தமிழகத்திலும் உணவு வங்கி உள்ளது அதில் மெம்பராக இருப்பவர்கள் தங்கள் பகுதியில் உணவுக்காக; காத்திருப்போருக்கு குறைந்தது 2 வேலையாவது உணவு வழங்கிவருகிறார்கள் இது மனித நேயம் சாகவில்லை என்பதை உணர்த்துகிறது; அவ்வமைப்பை சேர்ந்தவர்கள் ஸ்டிக்கர் ஒட்டுவதில்லை!!!. தினமும் ஏதோவொரு வழியில் உணவு வீணாக போய்கிறது அதனை வேண்டியவருக்கு கொடுப்பதால் நன்மை ஒருபக்கம் கிடைத்தாலும் மனதிருப்தி அலாதி தான். ஒரு நிமிடம் சிந்தித்தால் நல்லது செய்யலாம் என்பதொரு ஆக்கம்; வாழ்த்துக்கள்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...