.

Pages

Monday, February 29, 2016

அதிரை ஜாவியா நிர்வாகத்திடம் ஜெனரேட்டர், 5 சீலிங் ஃபேன் அன்பளிப்பு !

அதிரை ஜாவியாவில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் மிகவும் பிரசித்தம் பெற்றது. வருடந்திரும் தொடர்ந்து 40 நாட்கள் நடத்தப்படும். இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து பலர் வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.

ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஜாவியாவில் தினமும் தொழுகை மற்றும் திக்ரூ மஜ்லீஸ் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமீரக கீழத்தெரு ஜமாத் தலைவரும், சமூக ஆர்வலருமாகிய எம். அப்துல் ஜலீல் அவர்களின் தீவிர முயற்சியின் கீழ் 2800 வாட்ஸ் ஹோண்டா நிறுவன ஜெனரேட்டர் ஒன்று,  சீலிங் ஃபேன் 5 ஆகியன கீழத்தெரு ஜமாத் நிர்வாகிகள் எம். சேக்தாவூது, என்.எம்.எஸ் மன்சூர் ஆகியோர் முன்னிலையில், அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாகச் செயலாளர் M.B. அபூபக்கர், பொருளாளர் சேக் அலி, நிர்வாக உறுப்பினர் எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உதவி வழங்கிய எம். அப்துல் ஜலீல் அவர்களுக்கு அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
 

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா - நர்சரி குழந்தைகளின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியின் 3 ஆம் ஆண்டு விழா மற்றும் நர்சரி குழந்தைகளின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் கலந்துகொண்டு நர்சரி குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர் பள்ளிக் குழந்தைகள் பங்குபெற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் முனைவர் செய்யது அஹமது கபீர், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், டாக்டர் செல்லப்பன், வழக்கறிஞர் பிரகாஷம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் பள்ளி, மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

இதில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பணமுடிப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக பள்ளி ஆண்டறிக்கையை பள்ளி முதல்வர் ஈஸ்வரன் வாசித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் ஆற்றிய சாதனைகள் மற்றும் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டார்.

வரவேற்புரையை நர்சரி பள்ளி தலைமை ஆசிரியை பாலாம்பிகா வழங்கினார். நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியைகள் ஸ்ரீதேவி, கவிதா, வேல்முருகன், யாஸ்மின் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். விழா முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 

Sunday, February 28, 2016

முன்னெடுக்கத் தேவை ஒரு முஸ்லிம் இயக்கம் !

தமிழக சட்டமன்றத்துக்கான அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன. அந்தந்த அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஏற்றவர்களை வளைக்கவும் தொடங்கிவிட்டன.

பத்தொன்பது வாக்குகளை மட்டுமே  வைத்திருக்கிற இனத்தவர் கூட தங்களது கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே வாக்களிப்பதாக ஒற்றுமையாக குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் முஸ்லிம் என்று ஒரு பலமான சமுதாயம் இருக்கிறது. ஆனால் இதனால் என்ன பயன் ? சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகப் பிரிந்து கிடக்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு கட்சி, இயக்கம் என்று தங்களின் சக்திகளை பல்வேறு திசைகளிலும் செலவிட்டு ஒரு பலமிழந்த  சமுதாயமாக  முஸ்லிம் சமுதாயம் வீழ்ந்து கிடக்கிறது.

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். “ பல்லக்கு ஏறிப்போக பவிசு உண்டு. ஆனால் அதில் ஏறிப் போக ஜீவன் இல்லை “ என்பதே அந்தப் பழமொழி. தமிழ்நாட்டின் இன்றைய முஸ்லிம் சமுதாயத்துக்கு இந்தப் பழமொழி அப்படியே பொருந்தும். ஏனென்றால் ஏறக்குறைய 150 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வலிமை முஸ்லிம் சமுதாயத்துக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் என்று மட்டுமல்ல பரவலாக எல்லா மாவட்டங்களிலும் இந்த வலிமை இருக்கிறது.

முஸ்லிம்களைப் போல சிறுபான்மையாக இருக்கக் கூடிய மற்ற சாதிகளுக்கு இத்தகைய பரவலான வலிமை கிடையாது. எடுத்துக் காட்டாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழகத்தின் வடமாவட்டங்களில்தான் அதிக செல்வாக்கு இருக்கிறது. விடுதலை சிறுத்தை கட்சிக்கோ கடலூர், சிதம்பரம் , பெரம்பலூர் ஆகிய பகுதிகளில்தான் செல்வாக்கு இருக்கிறது. புதிய தமிழகத்துக்கோ நெல்லை மாவட்டம், சமத்துவ மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கொங்கு பேரவைக் கட்சிகளுக்கு கோவை,  ஈரோடு ஆகிய மாவட்டங்களில்தான் செல்வாக்கு.

ஆனால் தமிழகத்தலைநகர் சென்னை திருவல்லிக்கேணியிலிருந்து திருவிதாங்கோடுவரை செல்வாக்குப் பெற்று இருக்கும் சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் மட்டும்தான். தளி தொகுதியில் இருந்து தருமபுரி தொகுதிவரை பரவலாக வாழ்பவர்கள் முஸ்லிம்கள்தான். ஆகவே  ஒற்றுமையாக செயல்பட்டால் ஒவ்வொரு பெரிய அரசியல் கட்சிகளும் முஸ்லிம் சமுதாயத்திடம் மண்டியிட்டு நிற்கவேண்டி இருந்து இருக்கும்.

1960, 1970- களில் தமிழகத்தின் அரசியல் வரலாறு அவ்வாறுதான் இருந்தது. முஸ்லிம்களின் கண்சாடைக்காக பெரிய அரசியல் கட்சிகள் காத்திருந்த காலம் இருந்தது. குறிப்பாக 1967 தேர்தலில் திமுகவுடன் அன்றைய கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களின் தலைமையிலான முஸ்லிம்லீக் கூட்டணி வைத்து இருந்தது. அறிஞர்  அண்ணா, கூட்டணியின் தலைவராக இருந்தாலும் தொகுதிப் பங்கீடு தொடங்கும் முன்பே தமிழ்நாட்டின்   234  தொகுதிகள் அடங்கிய பட்டியலை புத்ப்பெட்டையில் இருந்த காயிதே மில்லத் அவர்களின் இல்லத்துக்கு அனுப்பி அந்த 234 தொகுதிகளில் எந்தெந்தத் தொகுதிகளில் முஸ்லிம் லீக் போட்டியிட விரும்புகிறது என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொன்னார். காயிதே மில்லத் அவர்கள் நிச்சயமான வெற்றி என்று நம்பும் சில தொகுதிகளை டிக்  செய்து பட்டியலை அண்ணாவுக்கு அனுப்பினார். அவை மொத்தம்  7 தொகுதிகள் என்பது எனது நினைவு. பட்டியலைப் பார்த்த அண்ணா காயிதே மில்லத் அவர்களை தொலைபேசியில் அழைத்து அந்தத் தொகுதிகள் மட்டும் போதுமா என்று கேட்டார். காயிதே மில்லத் அவர்களும் போதும் என்று சொன்ன பிறகுதான் திமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டது. தேர்தலில் அந்தக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இன்று நமக்கு அந்த மரியாதை இருக்கிறதா என்பதையும் இதற்கு யாரெல்லாம் காரணம் என்பதையும்  தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நாம் சிந்திக்கக் கடமைப் பட்டு இருக்கிறோம். அன்று முதலிடம் கொடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் இன்று கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு காரணங்கள் யாவை? இயக்க, கட்சி வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோமா இல்லையா ? சிந்திக்கலாமா ? வேண்டாமா ? சிந்திப்பது அவசியமா ? அவசியம் இல்லையா ? இதற்கு என்னதான் பரிகாரம் என்பதைக் காணவேண்டியது முக்கியமா இல்லையா ?    
குறிப்பிட்ட சில தலைவர்களின் சுயநல, விளம்பர, நீயா நானா போட்டிக்கு இந்த சமுதாயம் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறது என்று நான் சொன்னால் அது தவறாக இருக்குமா? உண்மையாக இருக்குமா ? என்பதை மனசாட்சி உள்ளவர்கள் நெஞ்சில் கை வைத்து சொல்வார்களா ?

பல கடவுள்களை வணங்கும் சகோதரர்களைக் கொண்ட கட்சிகள் அல்லது இயக்கங்கள் எல்லாம் ஒன்று பட்டு தங்களுக்காக குரல் எழுப்பும் நிலையில், ஒரே இறை ஒரே  வேதம் என்ற உயர் நிலையைக்  கொண்ட இஸ்லாத்தில் பல பிரிவுகளைக் கொண்ட ஜமாத்கள்-. இயக்கங்கள்-. பிரிவுகள்-. மற்றும் பிரிவினைகள் இருப்பதும் . ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு வசைபாடலும்  கல்வி அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்று, அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீணடித்துக் கொண்டும் இல்லையா ?

புதிய இயக்கங்கள் தோன்றியதன் மூலம் ஒரு புத்துணர்வு தோன்றியதையும் ஒருவித  மறுமலர்ச்சியும் உத்வேகமும் ஏற்பட்டதையும் நாம் ஏற்றுக்கொள்வோம்.  அதேநேரம் இந்தக் கருத்துக்களை முன்னெடுத்து சென்றவர்களின், தான் என்ற ஆணவமும், சுயவிளம்பர  தம்பட்டங்களும், முன்வரிசை தலைவர்களின் பதவி ஆசையும், மிக குறுகிய காலத்தில் வெட்டவெளிச்சமாகி நீ பெரியவனா நான் பெரியவனா என்று இயக்கங்கள் ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி போட்டி இயக்கங்களாகி நமது முக்கிய நோக்கங்களைச் சிதைத்து, இன்று நமது போட்டியாளர்கள் நாம் போடும் சண்டையைப் பார்த்து எள்ளி நகையாடும் நிலைமைக்கு தள்ளிவிட்டது. ஊர் இரண்டுபட்டதால் பல கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் ஆகிவிட்டது. தலைவர்கள் என்று கொண்டாடப்பட்டவர்களின் தன்னலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் பிரிந்து செல்லும் இயக்க சொந்தங்களை பிணைத்துவைக்கும் தகுதியை இழந்து நின்றனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தலையை தொங்கப்போட்டார்கள்; கோபப்பட்டார்கள். சில தேர்ந்தெடுத்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து அவர்கள் எதைச் சொன்னாலும் நம்பவைத்து ஆட்டுவித்தார்கள்..

சுயநல தலைவர்களின் பின் சென்ற இந்த சிறிய சமுதாயத்தின் முத்கெலும்பாக திகழ வேண்டிய இளைஞர்கள் திக்காலுக்கு திக்கால் பிரிந்து நின்று மார்க்கம் போதித்த முறைகளுக்கு மாறாக ஒருவரை ஒருவர் மனம் புண்பட பேசுவதும், ஏசுவதும் ஊடகஙகளில் வசை பாடிக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.

பிற மதத்தவர் நம்முடைய சகோதரத்துவம் சார்ந்த சமூக வாழ்வையும் நமது அன்பு, அறம், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பண்பையும் கண்டு வியந்து நம்மை நோக்கி வந்து நம்மை தழுவினார்கள். இன்றோ சந்தி சிரிக்கிறது நமது சகோதரத்துவம்.! எதிரிகள் எள்ளி நகையாடுகின்றனர்!. இதற்கு நாமே இடம் கொடுத்து விட்டோம்!

ஐம்பது குடும்பங்கள் இருக்கும் ஒரு சிறிய ஊரில் கூட ஒரே பள்ளியில் நாம் ஒன்று சேர்ந்து தொழமுடியாமல் போனோம். நூற்றண்டுகளாக ஊர் நடுவே இருந்துவரும் பள்ளிவாசல்களில் ஒன்று சேர்ந்து தொழ முடியாமல் ஊருக்கு வெளியே ஓலைக்குடிசைபோட்டு தொழுது வருகிறோம் .குடும்பங்களில் தந்தை ஒரு இயக்கம், தம்பி மறு இயக்கம், மகன் வேறொரு இயக்கம் என்று பிரிந்து பெருநாள்களைக்கூட ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு ஜமாத் ஒரே நாளில் கொண்டாடி கட்டி தழுவி சலாம் கூறும் பண்பு கூட பாழ்பட்டுப்போனது. பிறை கண்டால் பெருநாள் என்பது எல்லாம் பழங்கதை. இயக்கங்கள் ஒலிபெருக்கியில் அறிவித்தால்தான் அன்று பெருநாள் என்பது புதுக்கதை. திருமணங்களில் ஊர் ஒன்று கூடி வாழ்த்த முடியவில்லை. மைய்யத்களை அடக்கம் செய்வதில் கூட அடிதடி நடக்கிறது. அனைத்தும் மார்க்கத்தின் பெயரால். ஒன்றாக பழகிய நண்பர்கள் இந்த பாகுபாடுகளால்  ஒரே ஊரில் வாழ்ந்தும்,  முகங்களைத்  திருப்பிக் கொண்டு போகும் மூமின்களாக (?) காட்சி தருகின்றனர். ஒரே மரத்தில் ஒன்பது கொடிகள் பறக்கின்றன. அதனால் அந்த மரமும் பட்டுப்போகிறது. நமது மார்க்கமும் எள்ளி நகையாடப்படுகிறது. சிற்றூர், பேரூர் எங்குமே இன்னிலை. யாரும் மறுக்கமுடியாத நிலை - இன்றைய அவல நிலை.

அரசியல் களத்தில் பொது எதிரிகளை வீழ்த்த வேண்டிய நாம் அந்த எதிரிகளின் கூடாரத்துக்கு  முட்டு கொடுத்து தாங்கும் அவலநிலைக்கும் ஆளானோம். பொதுதேர்தல்களில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காக பேரம் பேசும் தகுதியை நமது ஒற்றுமையின்மையினால் இழந்து அவர்கள் போட்டதைப் பெற்று பெருமை பேசினோம். நமது இரத்த  சொந்தங்களை நாமே தோற்கடித்து அடுத்தவர்களை வாழ்த்தி  சுவரொட்டி ஒட்டும் அளவு நமது வன்மத்தைக்  காட்டிக்கொண்டோம். நமது ஆதிக்கத்தில் இருந்த சென்னை துறைமுகத்தில், சேப்பாக்கத்தில் முஸ்லிம்  தோற்க நாமே  காரணம் ஆனோம். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும்  வாணியம்பாடியில் நாம் தோற்கவும் நாமே  காரணம் ஆனோம். நமக்குள் வாக்குகளை பிரித்துக்கொண்டு முத்துப்பேட்டையிலும், மேட்டுப்பாளையத்திலும் பேரூராட்சி மற்றும் நகர மன்றங்களை இழந்தோம்.

தற்போது சொத்துக்களுக்காக பங்காளிகள் சண்டையை அரங்கேற்றவும் முஷ்டி மடக்கி தயாராகிவிட்டோம். நமது சொந்தங்களை நாம் அழைக்கும் பெயர்களைக் கேட்டால் வெட்கி தலை குனியவேண்டி வரும் . “மாமா கட்சி” , “ பொய்யன் ஜமாத்” “ டவுசர் ஜமாத்” “ அண்ணண் ஜமாத்” “ பொறம்போக்கு”      “ வாத்தியார் கட்சி” “ ஹஜரத் கட்சி” என்றும் “ போடா, வாடா , தறுதலை, பொறுக்கி  என்றும் சொல்லக்கூசும் வார்தைகளால் பொதுத்தளங்களில் அர்ச்சனை செய்துகொள்கிறோம். காவல் நிலையங்களில் ஒருவரை எதிர்த்து ஒருவர் புகார் தருகிறோம். சுருக்கமாக சொல்லப்போனால் சொந்தப் பகமை அல்லது பொறாமையால் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கவும் தயங்குவதில்லை. எனக்கு ஒரு கண்  போனாலும் பரவாஇல்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்று எண்ணும் இழிவை நியாயப் படுத்துகிறோம்.

இதுதான் நாம் கற்ற இஸ்லாமா? இதைத்தான்  இஸ்லாம்    சொல்லித்தந்ததா ? இதற்காகத்தான் இறைவன் சிறந்த உம்மத் என்று சான்றிதழ் வழங்கினானா? இதற்காகவா  பெருமானார் ( ஸல்) அவர்களும் சஹாபாக்களும் கண்ணீர் சிந்தி, ரத்தம் சிந்தினார்கள்? இத்தகைய  செயல்களில் பெயருக்குகூட மனித நேயமும் தென்படவில்லை- முஸ்லிம்களை முஸ்லிம்கள் வார்த்தைகளால் காயப்படுத்தாமல் கண்ணியப்படுத்தும் தவ்ஹீதும் இல்லை.

போகட்டும். இன்று நமது நிலையை இனியாவது ஏற்றமுடையதாக ஆக்கிக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
இருக்கிற இத்தனை இயக்கங்களில் ஏதாவது ஒரு இயக்கத்தின் தலைவருக்கு ஒற்றுமை வேண்டும் என்கிற சிந்தனை உரம்பட வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற  மன உறுதி வேண்டும். இருக்கும் அனைத்து இயக்கங்களின் தலைவர்களையும் வீடு தேடிப் போய் சந்திக்க வேண்டும். முஸ்லீம்களுக்கு எதிரான அணி ஒன்று சேர்ந்து கொண்டே போகிறதே முஸ்லிம்  சமுதாயம் மட்டும் பிரிந்து கொண்டே போகிறதே என்ற உள்ளக்கவலை வேண்டும். ஒற்றுமையை உருவாக்கிட  ஒரு உண்மை முஸ்லிம் வேண்டும். பல பக்கங்களிலும் திரும்பிக் கொண்டிருக்கும் இந்தப் பூனைகள் அனைத்தின் கழுத்திலும் ஒற்றுமை மணியைக் கட்ட ஒரு முஸ்லிம் இயக்க முனைப்பாளர்தான் இன்றைய தேவை.

இன்று சமுதாயத்தின் முக்கிய கோரிக்கைகளாக நாம் கருதுவது ஒன்று இட ஒதுக்கீடு இரண்டு அப்பாவி சிறைவாசிகளின் விடுதலை ஆகியவையே. இந்தக் கோரிக்கைகள் நிறைவேற தனித்தனியாக குரல் கொடுத்தாலோ போராடினால் போதுமா? தேர்தல் நேரத்தில் ஆளும் பொறுப்புக்கு வரும் என்று நாம் கணிக்கும் கட்சிகளைத் தேடி அவர்களின் கோட்டைக் கதவுகள் எப்போது திறக்கும் என்று  காத்துக் கிடப்பதைத்தவிர்த்து அவர்கள் நம்மைத் தேடி வர வைக்க வேண்டுமானால் நாம் ஒன்று பட வேண்டும்.

நமது கருத்து இந்த ஒற்றுமை முன்னெடுப்பை முஸ்லிம்களின் தாயச்ச்சபை என்று சுதந்திரப் போராட்ட காலத்திலேயே அழைக்கப்பட்ட முஸ்லிம் லீக்தான்  முன்னெடுக்க வேண்டும். அனைத்து இயக்கத்தலைவர்களையும் தேடிப்போய் அவர்களுடன் பேச வேண்டும். இதனால் சில அவமானங்களும் அலட்சியங்களை தாண்டிப்போக வேண்டிய நிலைமைகளும் அவர்களுக்கு ஏற்படலாம். அந்த சவுக்கடிகளை சமுதாயத்துக்காக சகித்துக் கொள்ள வேண்டும்.  ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பல தொகுதிகளைப் பெற்று இணைந்து இருக்கும் அனைத்து இயக்கங்களுக்கும் நீதியான முறையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில் பிரித்துக் கொடுக்கும் பெருந்தன்மையும் வேண்டும்.  அரசியலில் ஈடுபடமாட்டோம் என்று தங்களின் நிலைப்பாட்டை வைத்து இருக்கும் சகோதர இயக்கங்கள் கூட இந்த முயற்சிகளுக்கு     ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

அமையப் போகும் சட்டமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளுடைய குரல்   ஒலிக்கவேண்டுமென்று உண்மையிலேயே  விரும்பினால் இந்தப் பணிகளை முன்னெடுக்க நமக்கு ஒரு முஸ்லிம் இயக்கம் மட்டுமே தேவை. இல்லாவிட்டால் பெரிய கட்சிகள் கைகளில் முஸ்லிம்கள் பகடைக் காய்களாகவே பயன்பட்டு அவர்கள் வெற்றி பெற்று ஆட்சியமைக்க  உதவி செய்துவிட்டு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கைபார்க்கும் விந்தையே நிகழும்.

யாரையும் காயப்படுத்துவதோ, மனம் நோகச்செய்வதோ, அறிவுரை பகர்வதோ இந்தப்பதிவின் நோக்கமல்ல. நாம் ஒன்றுபட வேண்டும். நமது சமுதாயம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நமது மக்களுக்கு வேண்டியவற்றை உத்தரவிட்டு நாம் வாங்க முடியும்.

நம்முடைய சக்தி ஆற்றல் மிக்கது . அந்த சக்தி சிறுசிறு கிளை வாய்க்கால்களாக பிரிந்து ஓடினால் ஒரு பயனும் இல்லை. ஒரு பெரிய பிரவாகமாக. ஒரு ஜீவநதியாக நாம் உருவெடுத்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏனைய சமுதாயத்தினரும் நம்மை நோக்கி வருவார்கள். அவர்களையும் நம்மோடு இணைத்துக்கொண்டு ஒரு நல்ல தலைமையை நாம் வகிக்க முடியும். நாம் போய் மாற்றாருக்கு பூச்செண்டு கொடுக்கவும், போர்வை போர்த்தவும் வேண்டியதில்லை. நம் சமுதாயத்தை தேடி அவர்கள் வரும் நாள் வரும்.

தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை நேற்று போல இன்றாகட்டும். இன்று போல நாளையாக வேண்டாம்.

மாறுபட்ட கொள்கையுடைய அரசியல் கட்சிகள் கூட வரும் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் ஒரே குடையின் கீழ் இணைந்து சந்திக்கும் போது, ஒர் இறை கொள்கையுடைய இஸ்லாமிய அமைப்புகள் 'இஸ்லாமிய நலக்கூட்டணி' என்ற பெயரில் இணைந்து நமது கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்லலாம்.

இப்ராஹீம் அன்சாரி 
கல்லூரி முதல்வர் 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

புதிய கட்சி தொடங்கினார் தமீமுன் அன்சாரி...

மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்த தமீமுன் அன்சாரி, ’மனிதநேய ஜனநாயக கட்சி’யை தொடங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து சென்னையில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதிரையில் வட்டிக்கு எதிராக ADT யின் விழிப்புணர்வு பிரச்சார பிளக்ஸ் பேனர் !

அதிரை தாருத் தவ்ஹீத் ( ADT ) சார்பாக அதிரையின் பிரதான இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கடந்த மாதம் முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்த மாத பேனர் லோன், வட்டி போன்ற தீமைகள் குறித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாத பிளக்ஸ்களுக்கான ஸ்பான்ஷர் செலவை அதிரை மற்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த 2 நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டுள்ளன. வரும் மாதத்திற்கான பிளக்ஸ் செலவை ஏற்றுக்கொள்ள முன்வருவோர் கமாலுதீன் அவர்களை 9543577794 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மரண அறிவிப்பு ! ( செ.அ துல்கருணைன் அவர்கள் )

சேதுரோட்டை சேர்ந்த மர்ஹூம் செ.அ முஹம்மது அலியார் அவர்களின் மகனும், மர்ஹூம் தண்டையார் வீட்டு முகம்மது அலி அவர்களின் மருமகனும், மர்ஹூம் செ.அ முஹம்மது பாருக், செ.அ சரபுதீன் ஆகியோரின் சகோதரரும், ஹமீது சுல்தான், இஷ்ஹாக் ஆகியோரின் மருமகனும், புர்கானுதீன், சபி ஆகியோரின் மாமனாரும், அப்துல் சமது அவர்களின் சகலையும், அஹமது மன்சூர், பகுருதீன், அன்சர்கான் ஆகியோரின் தாய் மாமாவும், செ.அ சாரா அஹமது அவர்களின் சிறிய தந்தையும், செ.அ சாதிக், செ.அ சேக் முஹம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய செ.அ துல்கருணைன் அவர்கள் இன்று காலை 6 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிரையில் நடந்த பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு !

அதிராம்பட்டினம், பிப்-28
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை - 2 சார்பாக அல் ஹிக்மா மகளிர் அரபிக் கல்லூரியில் பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு நடந்தது.

இதில் கல்லூரி மாணவிகளின் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடந்தது. பின்னர் நபிவழியில் ஜனாஸாவை குளிப்பாட்டி கபன் இடுவது பற்றி செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அல் ஹிக்மா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி ஜனாஸா கடமைகள் குறித்து உரை நிகழ்த்தினார். இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
 

மரண அறிவிப்பு ( நபிஸா அம்மாள் அவர்கள் )

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது ஹனீபா அவர்களின் மனைவியும், மர்ஹூம் உமர் அலி, அஹமது ஜலீல் ஆகியோரின் மூத்த சகோதரியும், பரீது ஜமால், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், ஜஹபர் உசேன் அவர்களின் தாயாருமாகிய நபிஸா அம்மாள் அவர்கள் இரவு 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் கடற்கரைதெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Saturday, February 27, 2016

அதிரை பேருந்து நிலைய கடைகள் ஏலம்: பேரூராட்சி விதிக்கும் நிபந்தனைகள் !

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட 24 வர்த்தக கடைகள் பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொதுஏலம் எதிர்வரும் 03-03-2016 வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை அதிரை பகுதிகளில் ஆட்டோ ஒலிப்பெருக்கி அறிவிப்பு செய்யப்பட்டன.

கடைகளை ஏலத்தில் எடுக்க உள்ளவர்களுக்கு அதிரை பேரூராட்சி நிர்வாகம் கீழ்கண்ட நிபந்தனைகளை அறிவித்து உள்ளது.

1. ஏலதாரர்கள் முன்வைப்பு தொகையாக ரூ 1 லட்சத்திற்கான டிடியை 'செயல் அலுவலர், பேரூர் மன்றம், அதிராம்பட்டினம்' என்ற பெயரில் அளிக்க வேண்டும்.

2. அதிரை பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் 2015-16 ஆம் ஆண்டிற்கு முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும்.

3. ஒருவருக்கு ஒரு கடை, உறவினர்களுக்கு அனுமதியில்லை

4. கடையை உள் வாடகைக்கு விட அனுமதியில்லை

5. பேருந்து நிலையத்தில் கவரிங் கடை, பெட்டிக்கடை, முடி திருத்தும் கடை, பழக்கடை, செருப்பு கடை, டீ கடை, டிபன் கடை, ஜவுளி கடை உள்ளிட்டவை மாத்திரமே நடத்த வேண்டும். வேறு கடைகள் நடத்தக்கூடாது.

உள்ளிட்ட மொத்தம் 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதிரை பேரூராட்சி 16, 17 வது வார்டு பகுதிகளுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி அதிரை நகர முஸ்லீம் லீக் கோரிக்கை !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டு பகுதிகளுக்கு மிலாரிக்காடு பகுதியில் உள்ள பம்ப் மோட்டார் மூலம் நீர் பெற்று மேலத்தெரு நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து மறுநாள் காலை விநியோகம் செய்யப்படும்.

இந்நிலையில் மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள பம்ப் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் இந்த பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் சீராக வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதியின் கவுன்சிலர்களிடம் புகார் தெரிவித்தனர். பம்பில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய கோயமுத்தூருக்கு பம்ப் அனுப்பப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில தினங்களில் பழுது சரிசெய்யப்பட்டு வந்துவிடும் என பொதுமக்களிடம் கவுன்சிலர்கள் மற்றும் பேரூர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிரை நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அதன் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் மற்றும் துணை செயலாளர் சேக் அப்துல்லா மற்றும் முஸ்லீம் லீக் அதிரை நகர நிர்வாகிகள் இன்று காலை அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் 16,17 வார்டு பகுதிகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு விளக்கம் கேட்டும், உடனடியாக குடிநீர் வினியேகம் செய்யக் கோரி மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி நிர்வாக உதவியாளர் நாளை அல்லது நாளை மறுநாள் சாம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கிவிடுவோம் என கூறியதாக தெரிகிறது. எனினும் அதுவரையில் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்க பேரூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் வரும் திங்கட்கிழமைக்குள் குடிநீர் சீராக கிடைக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கையாக மாவட்ட அதிகாரி, முதல்வர் என இப்பிரச்சனை கொண்டு செல்லப்படும் என்று வார்டு பொதுமக்கள் சார்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகர நிர்வாகிகள் கூறிச்சென்றனர்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகர சார்பில் அதிரை பேரூராட்சியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
 
 
 

பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் நடத்திய தேங்காய் உடைப்பு போராட்டம் !

பட்டுக்கோட்டை அறந்தாங்கி முக்கம் காந்திசிலையில் இருந்து தென்னை விவசாயிகளின் கோரிக்கையினை வலியுறுத்தி பேரணியாக புறப்பட்டு பேருந்து நிலையத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தென்னை உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த பழனிவேல், தென்னை விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பழனிவேல், மாவட்ட கவுரவ தலைவர் சுப்பையன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர், விவசாய ஆலோசனை குழுவை சேர்ந்த பாலசுப்ரணமயின், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்கள் ராஜரெத்தினம், பாலசுப்ரமணியன், செல்வராஜ், செல்லப்பன், பழனிவேலு, சீனிவாசன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் உள்ளிட் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தென்னை விவசாயிகள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் பேராவூரணி, சேதுபவாசத்திரம், ஒரத்தநாடு, மதுக்கூர், திருவோணம் மற்றும் பட்டுக்கோட்டை தென்னை விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளர் துரைமாணிக்கம் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்ரமணிய தேவர் பேரணியை துவக்கி வைத்தார்.

போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்: 
தேங்காய் கொப்பரை கிலோ ரூபாய் 120 என நிர்ணயம் செய்ய வேண்டும், உரித்த தேங்காய்களை கிலோ 40 ரூபாய் என விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும், பாமாயில் மற்றும் சமையல் எண்ணெய் இறக்குமதியை காட்டுப்படுத்தி வரியினை உயர்த்திட வேண்டும், எண்ணெய்களில் கலப்படம் செய்ய பயண்படும் பார்ம் கர்னல் எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும், அரசு மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், சீனி, வெல்லத்திற்கு மாற்றாக தேங்காயில் இருந்து நீரா என்ற பொருளை தயாரிக்கு தொழிற்சாலையை துவங்க வேண்டும், தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் அமல் படுத்த வேண்டும், உற்பத்தி செய்யப்படும் அனைத்து கொப்பரைகளையும் கார்டு முறையின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கேரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை