Pages

Monday, February 15, 2016

துபாயில் "சங்கமிப்போம்" ஒன்றுகூடல் விழா: ஆயிரக்கணக்கனோர் பங்கேற்பு !

அமீரகத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் "சங்கமிப்போம்" என்கிற சங்கம விழா 12/02/2016 வெள்ளிக்கிழமை அன்று துபை அல் கிஸைஸ் கிரசெண்ட் இங்கிலீஷ் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கானோர் இவ்விழவில் பங்கேற்றனர்.

தாயகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) பொதுச் செயலாளர்கள் முஹ்யித்தீன் குட்டி ஃபைஸி (கேரளா), முஹம்மது ஷாஃபி (இராஜஸ்தான்), SDPI தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் ஆகியோர் விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இரவு 7:30 மணிக்கு துவங்கிய இவ்விழாவுக்கு இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் அமீரகத் தலைவர் அலீயார் சாஹிப் அவர்கள் தலைமை தாங்கினார்.

விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கணிதத்திலும், இன்னபிற துறைகளிலும் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பன்மொழிக் கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தமிழ், மலையாளம், கன்னடம், உருது மொழியில் பல சகோதரர்கள் பாடல்கள் பாடியும், கவிதை படித்தும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

SDPI கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்களான முஹம்மது ஷாஃபி அவர்களுக்கும், முஹ்யித்தீன் குட்டி ஃபைஸி அவர்களுக்கும், SDPI கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

SDPI கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது ஷாஃபி அவர்கள் தனது சிறப்புரையில், இந்திய தேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் நிலவி வரும் சகிப்பின்மையைப் பற்றி விவரித்து இதனை எதிர்த்து மக்கள் ஒருங்கிணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்தாக சிறப்புரையாற்றிய SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முன்பும் பின்பும் இந்திய முஸ்லிம்களின் நிலையைச் சுட்டிக்காட்டி அதிகார சபைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வருகின்ற 4 மாநிலத் தேர்தல்களில் SDPI கட்சிக்கு முழு ஆதரவைத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய SDPI கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முஹ்யித்தீன் குட்டி ஃபைஸி அவர்கள் தனது சிறப்புரையில், வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த நரேந்திர மோடி அரசு நாட்டு மக்களின் வளர்ச்சியைப் பற்றி கவனம் செலுத்தாமல் அம்பானிகள் மற்றும் அதானிகளின் வளர்ச்சிக்கு பாடுபடுவதை தோலுரித்துக் காட்டினார்.

விழாவில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்கள் முறையே தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 3 மொழிகளில் முன்மொழியப்பட்டன. தமிழ் மாநிலத் தலைவர் திருச்சி முபாரக் அவர்கள் தமிழ் தீர்மானத்தைவாசித்தார்.

விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தலித் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் கவலையளிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சிறுபான்மை மற்றும் தலித்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக வன்முறை செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மத்திய அரசு மீது சந்தேகங்களை எழுப்புகிறது. ஆதலால் இது போன்ற செயல்களை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி வேண்டுகோள் விடுக்கின்றது.

2. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டையும் நீதியையும் விரைந்து வழங்கிட வேண்டும் என்று இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி கேட்டுக் கொள்கிறது.

3. இந்திய மக்கள் வருகின்ற 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இந்துத்துவ BJP போன்ற மதவாத சக்திகளை ஜனநாயக உணர்வோடு புறந்தள்ள வேண்டும் என இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி கேட்டுக் கொள்கிறது.

நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு மாநில மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தன்னார்வத் தொண்டர்கள் விழாவின் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...