.

Pages

Thursday, March 31, 2016

மரண அறிவிப்பு ! [ ஹாஜிமா ஆமினா அம்மாள் அவர்கள் ]

புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு முஹம்மது இபுராஹீம் அவர்களின் மனைவியும், அஹமது அஸ்லம் அவர்களின் தாயாரும், முஹம்மது சாலிஹ், அஹ்மது அன்சாரி, முஹம்மது மொய்தீன், அஹ்மது உதுமான் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஆமினா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை [ 01-04-2016 ] காலை 8 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

காதிர் முகைதீன் கல்லூரியில் 61 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 31-03-2016 ] காலை 10.30 மணியளவில் கல்லூரி கலையரங்கில் 61 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், எம்.கே.என் ட்ரஸ்டின் நிர்வாகியுமான நீதிபதி கே. சம்பத் அவர்கள் தலைமையுரையும், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக பதிவாளர் முனைவர் சி. திருச்செல்வம் வாழ்த்துரையும் வழங்கி மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவித்தனர். பல்வேறுப் பாடப்பிரிவுகளில் தரங்கள் மற்றும் பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம் 650 இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி ஆகிய பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பட்டங்கள் வழங்குவதற்கு முன்பாக மாணவ மாணவிகளுக்கான உறுதிமொழியை கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் எடுத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் உதுமான் மொய்தீன், துறை சார்ந்த தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஏ. கலீலுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லுரி தமிழ்துறை பேராசிரியை சாபிரா பேகம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியர் நீலகண்டன் தொகுத்து வழங்கினார்.

விழாவில் ஊர் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், பெற்றோர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிரை அருகே வாகனம் மரத்தில் மோதி டிரைவர் பலி: 6 பேர் காயம் !

அதிராம்பட்டினம் மார்ச்-31
திருவாரூர் மாவட்டம், தில்லை விளாகம் அருகே உள்ள செங்கங்காடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 40 ). சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவரை திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்கு அழைத்து வர நேற்று இரவு இவரது தந்தை பக்கரிசாமி ( வயது 65 )  தாய் ஜெகதாம்பால் ( வயது 60 ) , மனைவி சுமதி ( வயது 35 ), குழந்தைகள் கனிதா ( வயது 12), சாரதி ( வயது 7 ), வர்ஷினி ( வயது 6 ) ஆகியோர் அம்பாஸ்டர் வாகனத்தில் சென்றனர். வாகனத்தை ரகுவரன் ( வயது 22 ) என்பவர் ஓட்டினார்.

ஏர்போர்ட்டில் லோகநாதனை ஏற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிரை அருகே உள்ள பரக்கலக்கோட்டை சாலையில் வந்த போது எதிரே உள்ள பனை மரத்தில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகன ஓட்டுனர் ரகுவரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வாகனத்தில் பயணம் செய்த மற்ற அனைவருக்கும் காயங்கள் ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிராம்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிரைவர் அயர்ந்து தூங்கியதே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.

Wednesday, March 30, 2016

முத்துப்பேட்டை லகூன் குட்டித் தீவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு !

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே அது மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்தி காடுகளின் இயற்கை அழகும் அதே போல் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகும், ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தமும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது தமிழகத்தில் கடுமையான வெப்பம் அக்னி நட்சத்திரத்திற்கு முன்பாகவே அதிகரித்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்திலும் வெயில் தாக்கம் ரொம்பவே அதிகமாக உள்ளது. இருந்தாலும் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை.

இந்த நிலையில் நேற்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும், அரசு அலுவலர்கள் உட்பட அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். தற்பொழுது கடும் வெப்பத்திலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துக் கொண்டு இருப்பதால்; ஆசாத்நகர் மற்றும் ஜாம்புவானோடை படகு துறையில் சுற்றுலா பயணிகளை ஏற்றுவதற்காக தனியார் மீன்பிடி படகுகள் அணிவகுத்து நிற்கிறது.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை

அஜ்மான் தீ விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அஜ்மான் அரசு உதவி!

நேற்று அதிகாலை அஜ்மானில், அஜ்மான் ஒன் டவரில் மிக பெரிய தீ விபத்து ஏற்பட்டது. டவர் 8 - ல் எரிந்த தீ காற்றின் வேகத்தால் அடுத்துள்ள டவர் - 6 லும் பரவியது. உடனடியாக போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அந்த கட்டிடத்தின் பார்கிங் ஏரியாவில் பார்க் செய்த கார்களில் 5 கார்கள் முற்றிலும் தீக்கரையாகின.

இந்த விபத்தால் சுமார் 300 க்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் உடைமைகளை இழந்து வீதியில் நின்றனர். சில பேர் கார்களில் தங்கினர். உடனடியாக அஜ்மான் அரசு தலையிட்டு இவர்கள் அனைவருக்கும் உணவு, தங்க இட வசதி செய்து கொடுக்கப்பட்டது. அஜ்மான் சுற்றுவட்டார சில ஹோட்டல்களில் இவர்களுக்கு சலுகை விலையில் ரூம்களும் வழங்கப்பட்டது. 

அனைத்து அவசர உதவிக்கும் 112 விரைவில் அமல் !

அனைத்து அவசர உதவிக்கும் மக்கள் ஒரே எண்ணை தொடர்பு கொள்ளும் வகையில் நாடு முழுவதும் விரைவில் எண் ‘112’ அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் காவல்துறைக்கு 100, தீயணைப்பு துறைக்கு 101, ஆம்புலன்ஸ் சேவைக்கு 102, பேரிடர் நிர்வாக உதவிக்கு 108 என பல்வேறு எண்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதுதவிர பல்வேறு மாநிலங் களும் தனித் தனியே அவசர உதவி எண்களை பயன்படுத்தி வருகின்றன.

உதாரணத்துக்கு டெல்லியில் அவசர உதவி கோரும் பெண்களுக்கு 181, பெண்கள், குழந்தை கள் காணாமல் போனது தொடர்பான புகார்களுக்கு 1094, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 1096 என பல்வேறு எண்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் அனைத்து அவசர உதவிகளுக்கும் 112 என்ற ஒரே எண்ணை தொடர்பு கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த எண் நடைமுறைக்கு வந்தபின், இதுகுறித்து விழிப்புணர் வின் அடிப்படையில் ஓராண்டுக்குள் மற்ற அனைத்து எண்களும் முடக் கப்படும் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி:தமிழ் தி இந்து 

பட்டுக்கோட்டை கரிக்காடு அருகே அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிப்பு!

பட்டுக்கோட்டை அருகே உள்ள நாடியம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மலர்விழி (47). இவர் நேற்று இரவு 7 மணியளவில் பட்டுக்கோட்டை வந்தார். அங்குள்ள கரிக்காடு ஸ்டேட் பாங்க் காலனியில் ஆட்டோவை வாடகைக்கு பேச சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மலர்விழி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

பட்டுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ். இவரது மனைவி சந்தார்க் (51). இவர் அங்குள்ள ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் கடைக்கு நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சந்தார்க் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இந்த இரு சம்பவத்திலும் ஒரே நபர்கள் தான் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு விசாரணை நடத்தி வருகிறார்.

நன்றி:மாலை மலர்

அஜ்மான் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

ஐக்கிய அரசு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் மிகச்சிறியது, அஜ்மான் ஆகும். இது துபாயில் இருந்து 14 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அங்குள்ள சோவான் பகுதியில், 12 பிரிவுகளாக 3 ஆயிரம் வீடுகளை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. அவை பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், வானைத் தொடும் அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்பட்டவை ஆகும்.

அந்த பிரிவில் ஒன்றின் பக்கவாட்டில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென தீப்பற்றியது. இந்த தீ மின்னல் வேகத்தில் பிற பிரிவுகளுக்கும் பரவி எரியத்தொடங்கியது.

உடனடியாக ஷார்ஜா மற்றும் அஜ்மான் சிவில் பாதுகாப்பு படையினரும், தீயணைப்பு படையினரும், போலீஸ் படையினரும் அங்கு விரைந்தனர். அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். தீ விபத்து நடந்த அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் இருந்து மக்களை பத்திரமாக வெளியேற்றினர். பல மணி நேரம் போராடிய பின்னர்தான் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. இருந்தபோதிலும் 5 பேர் தீக்காயம் அடைந்தனர்.

Tuesday, March 29, 2016

அதிரையில் 'தீயணைப்பு நிலையம்' அமைக்க கோரி பேராசிரியர் அனுப்பிய கடிதம் !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஏ. ஹாஜா அப்துல் காதர். அதிரை நடுத்தெருவில் வசித்து வருகிறார்.

பிறந்த ஊர் மீது அதிக அக்கறை கொண்ட இவர் அதிரை பொதுநலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக அவ்வப்போது 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் வாசகர் பக்கத்திற்கு கடிதங்கள் அனுப்பி வருகிறார். இவரது பல கோரிக்கைகள் அவ்வபோது பிரசுரமாகி வருகிறது.

இதில் அதிரை உள்ளிட்ட பகுதிகளில் ஆமை வேகத்தில் நடந்து வரும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்ட பணியை துரிதப்படுத்தக் கோரி இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை கடந்த 17-02-2016 அன்று வெளிவந்த 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகியது. மேலும் அதிரையில் அதிகரித்து வரும் பொதுமக்கள், வர்த்தகம், கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் குறிப்பாக செக்கடி மேடு, மேலத்தெரு, சிஎம்பி லேன், கடற்கரைத்தெரு, முத்துப்பேட்டை ரோடு உள்ளிட்ட பிரதான பகுதிகளில் ஏடிஎம் சேவையை தொடங்க வலியுறுத்தி இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை கடந்த 08-03-2016 அன்று வெளிவந்த 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகியது.

இந்த நிலையில் அதிரை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் அடிக்கடி நிகழும் தீ விபத்தை கருத்தில் கொண்டு அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரி இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை கடிதம் இன்று [ 29-03-2016 ] வெளிவந்த 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகியது.

பட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்ட மன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களை அமைப்பதற்கான இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் வைப்பறை, செய்தியாளர்களுக்கு ஊடக மையம் அமைப்பதற்கான இடங்களை  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பின்னர் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கான சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்கள்.  மேலும், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொருட்கள் வைப்பறை, சேவை மையத்தில் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணியினையும், வாக்காளர்கள் பூர்த்தி செய்த  விண்ணப்பப்  படிவத்தினையும்   மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வின் போது சார் ஆட்சியர் திரு.டி.எஸ்.ராஜசேகர்,  நில அளவை உதவி இயக்குநர் குழந்தைவேலு, வட்டாட்சியர்கள் குருமூர்த்தி, ரகுராமன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 
 

குடிபோதைக்கு எதிராக அதிரையில் வீடு, வீடாக துண்டு பிரசுரம் !

அதிராம்பட்டினம், மார்ச்-29
தமிழகத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி ஆங்காங்கே தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை வட்டாரம் சார்பில் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் குடிபோதைக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மாரிமுத்து, வட்டார குழு உறுப்பினர் முனியாண்டி, வட்டார பொறுப்பாளர் பாலு உள்ளிட்டோர் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மாரிமுத்து நம்மிடம் கூறுகையில்...
'குடிபோதைக்கு எதிராக கடந்த 3 நாட்களாக அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகிறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'குடிபோதைக்கு எதிரானது எங்கள் குடும்பம்' என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரத்தை ஒவ்வொரு வீட்டின் முன்புற பகுதிகளில் ஒட்டிக்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம். மேலும் போதையால் ஏற்படும் தீமை குறித்து விளக்கி வருகிறோம். மக்கள் அதிகாரம் சார்பில் 'மூடு டாஸ்மாக்கை' போராட்டம் தொடர்ந்து நடைபெறும்' என்றார்.
 
 

வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோன்களுக்கு பேசும் வசதி விரைவில் அறிமுகம்!

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் செல்போன், இணையதளம், வாட்ஸ் அப், சாட்டிங், வீடியோ அழைப்பு போன்றவற்றால் ஒரு நொடியில் தொடர்பு கொண்டு பேசும் வசதி உள்ளது.

ஆரம்பத்தில் கம்ப்யூட்டர், லேப்–டாப் போன்றவற்றின் மூலம் பேசுபவர்களின் உருவத்தை பார்த்து கொண்டே பேசும் வசதி இருந்தது.

இப்போது செல்போன், ஐபோன், டேப் போன்ற சாதனங்கள் மூலமாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து பேசும் உணர்வை ஏற்படுத்தும் தகவல் தொழில்நுட்பம் பரிணாமம் பெற்றுள்ளது.

‘வாட்ஸ் அப்’ என்னும் நவீன தகவல் தொடர்பு சாதனம் தற்போது உலகம் முழுவதும் ஒரு குடைக்குள் கொண்டு வந்து விட்டது.

உலகின் எந்த பகுதியில் ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை படத்துடன் உடனே பரிமாறிக் கொள்ளும் இந்த வசதி நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை வெகுவாக சென்றடைந்துள்ளது.

செல்போன் மூலம் ‘வாட்ஸ் அப்’ வசதியை பயன்படுத்துவதற்கு தற்போது கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. முற்றிலும் இலவசமாக்கப்பட்ட இந்த வசதியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

வாட்ஸ் அப் வசதி தற்போது செல்போன்களுக்கு இடையே மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. விரைவில் வாட்ஸ் அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் (டெலிபோன்) பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோனுக்கு பேசும் வசதியை செயல்படுத்த தீவிரம் காட்டுகிறார்.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் டெலிபோன்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘டிராய்’ முடிவு செய்து இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் டெலிபோன் சரண்டர்களை குறைப்பதோடு புதிய இணைப்புகளுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று பி.எஸ்.என்.எல். கருதுகிறது.

நன்றி:மாலை மலர்

Monday, March 28, 2016

திமுக மாவட்ட செயலாளருடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்திப்பு !

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியினர் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ்,மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி சேக், மாவட்ட பொருளாளர் சேக் ஜலாலுதீன், மாவட்ட செயலாளர் அபுல் ஹசன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது அசாருதீன், தஞ்சை தெற்கு மாவட்ட சட்ட மன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் செய்யது முஹம்மது, அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் இடம்பெற்றனர்.

மணமக்களுக்கு அதிரை சேர்மன் வாழ்த்து!

அதிரை அடுத்துள்ள துவரங்குறிச்சி ஏ.ஆர் பாலகிருஷ்ணன் இல்லத்திருமண வரவேற்பு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணா துரை, பட்டுக்கோட்டை திமுக பொறுப்பாளர் மனோகர், திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.


திமுக சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு !

அதிராம்பட்டினம், மார்ச்-28
திமுக மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் அதிரை அருகே உள்ள ராஜாமடம் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை மேற்கு பகுதி ஒன்றிய செயலாளர் ஏனாதி பா. இராமநாதன் தலைமை வகித்தார்.  அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி முடிவில் காப்பக பொறுப்பாளர் ஆர்.எஸ்.மணிவண்ணன் நன்றி கூறினார்.

இதில் திமுக அதிரை பேரூர் பொருளாளர் கோடி முதலி, துணை செயலாளர் அன்சர்கான், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, மீனவரணி பொறுப்பாளர் சுப்பிரமணி, வார்டு பொறுப்பாளர்கள் முஹம்மது செரீப், முத்துராமன், ஜஹபர் அலி, பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.