Pages

Sunday, March 13, 2016

ஈசிஆர் சாலையில் மாட்டு வண்டி மீது லாரி மோதி விபத்து: 6 பேர் படுகாயம் !

தஞ்சாவூர் மாவட்டம் அதிரை அருகே உள்ள சம்பைபட்டினம் மறவன்வயல் பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுபேர், ஜபருல்லாஹ் மற்றும் தம்பி மரைக்காயர் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு மாட்டு வண்டிகளில் ஞாயிற்று கிழமை அதிகாலை நான்கு மணிக்கு வைக்கோல் ஏற்றுவதற்காக சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள வெளிமடம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் சம்பைபட்டினம் பள்ளிவாசல் அருகே சென்ற கொண்டிருந்த போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத பனைமரங்களை ஏற்றிவந்த லாரி பின்புறமாக மோதியது. இதில் மாட்டு வண்டியில் சென்ற தம்பி மரைக்காயர் (வயது 50), கூலு என்ற கருப்பையா ( வயது 45), ராஜேந்திரன் ( வயது 46), அய்யப்பன் ( வயது 35), மலர் ( வயது 28), மலரின் மகன் சின்ராசு ( வயது 7) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

மேலும் இவ்விபத்தில் இரண்டு மாட்டு வண்டிகளும் உடைந்து சிதறியது. 3 மாடுகளும் படுகாயமடைந்து உயிருக்கு போராடியது. சம்பவம் பற்றி அறிந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். காயமடைந்தவர்களை மீட்ட ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறை உதவியுடன் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த அய்யப்பன், ராஜேந்திரன், கருப்பையன் ஆகியோருக்கு காலில் முறிவும், தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. பேராவூரணி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் தஞ்சை இராஜா மிராசுதார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிகாலையில் நடைபெற்ற விபத்தில் நிலைகுலைந்து போன ஏழை கூலித்தொழிலாளிகளான காயமடைந்தோரும், அவர்களை காணவந்த உறவினர்களும் கைச்செலவிற்கு கூட பணமில்லாமல் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இச்சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் சேதமடைந்த வண்டி மற்றும் மாடுகளின் மதிப்பு ரூபாய் 2 இலட்சம் என்று கூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி கூறுகையில், பேராவூரணி தாலுகா அரசு மருத்துவமனையில்
போதிய மருத்துவர்கள் இல்லை. ஏராளமான காலிப்பணியிடங்களுடன் ஏனோதானோவென மருத்துவமனை இயங்கி வருகிறது. எலும்பு முறிவு மருத்துவர், இதய மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலமுறை கோரிக்கை விடுத்தும், சுகாதார துறை அலட்சியம் காட்டி வருகிறது. காயமடைந்த தொழிலாளர்கள் அபாயகரமான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லையா ? சுகாதார துறையும், மாவட்ட நிர்வாகமும் சிறப்பு கவனம் செலுத்தி உரிய மருத்துவர்களை பணியமர்த்தவேண்டும்" என்றார்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...