Pages

Tuesday, March 15, 2016

முதுமையில் இனிமை!

இளமையில்தான் இனிமை என்பார்கள். இனிக்கும் இளமை என்றும் சொல்வார்கள். இளமை இதோ! இதோ! இனிமை இதோ! இதோ! என்று இளமையைக் கொண்டாடுவார்கள்.  இதற்குக் காரணம் இளம் கன்று பயமறியாதது. விளைவுகளை எடைபோடாமலேயே வினைகளை செய்யத் தூண்டுவது இளமை.

அத்துடன் இளமையில் நாம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறோம். பெற்றோர்,  நமது பங்களிப்பு இல்லாமலேயே  நமது தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள். ஆகவே இலவசமாக எல்லாம் கிடைப்பதால் இளமை இனிமையாகத் தெரிகிறது. ஆனால் முதுமையோ தனது வாழ்நாட்களை கல்வியிலும் காரியங்களிலும் குடும்பம் மற்றும் குழந்தைகளை ஆளாக்குவதிலும் செலவழித்துவிட்டு வாழ்க்கை புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் நின்று கொண்டு இருக்கிறது. தனது அடிகளை கவனத்துடன் எடுத்துவைக்கச் சொல்கிறது. இல்லாவிட்டால் சறுக்கிவிடும் என்று அபாயச் சங்கு ஊதுகிறது.

முதுமையிலும் இனிமை இருக்கும் என்பதை கேட்க மிகவும் ஆனந்தமாகத்தான்  இருக்கிறது. ஆனால் இந்த ஆனந்தத்தைத் தேடிக் கொள்வது நமது கரங்களுக்குள்தான் இருக்கிறது.

பொதுவாக எடுத்த எடுப்பிலேயே எல்லோரும் நினைப்பது போல் முதுமை ஒரு வெறுமை அல்ல; வெறுக்கப்படத்தக்கதும் அல்ல. “ பெருசு “ என்று கேலி பேசத்தக்கதும் அல்ல.

முதுமையையும் இனிமையாகவும் இயல்பாகவும் இயங்கும் வகையிலும் திட்டமிட்டு நடத்திக் கொள்ள இளமை முதலே  முயற்சி செய்தால் முதுமையும் இனிமையாகவும் அனைவரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் உரியதாகவே  இருந்து இனிமை தரும்.

தங்களுடைய  90 வயதுக்கு மேற்பட்ட வயதிலும் பணியாற்றி இன்றும் சரித்திரத்தில் இடம்பெற்று இருக்கிற பெரியார் ஈ. வெ. ரா . மற்றும் அவருக்கு இணையாக இருந்த அவரது அன்பர் மூதறிஞர்  இராஜாஜி, தமிழ்த்தாத்தா என்று பெயர் பெற்று நாடங்கும் சுற்றி தமிழ் இலக்கியங்களை தேடித்தேடி ஓலைச்சுவடிகளை எல்லாம் படிக்கும் வகையில் நூலாகப் பதிவு செய்த  உ. வே. சாமிநாத அய்யர், கர்மவீரர்  என்று பட்டம் பெற்ற காமராஜர் ஆகியோர் மட்டுமல்ல! இதோ! தனது முதுமையை இனிமையாக ஆக்கிக் கொண்டவர்களில் நமது கண்முன்னே இருக்கும் உதாரணம் கலைஞர் கருணாநிதி.  இவர்களெல்லாம் இளைஞர்கள் அல்ல.

முதுமையடைந்தவர்கள் தங்களின் எஞ்சிய வாழ்வை இனிமையாக ஆக்கிக் கொள்ளள இளைஞர்களுடன் கைகோர்க்கலாம் என்பதற்கு அண்மையில் வாழ்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அபுல் கலாம் சிறந்த உதாரணம். “இளைஞர்களின் எழுச்சி நாயகன்”  என்றே அந்த முதியவர் வர்ணிக்கப்படுகிறார். தனது  இறுதி மூச்சைக்கூட இளைஞர்களின்     கூட்டத்தில்,  அவர்களது மடியிலேதான் தாரைவார்த்தார் அபுல் கலாம். இதற்குக் காரணம் அவரைப் போன்றோருக்கு உடல்தான் முதுமையை உணரவைத்தது; மனமோ இளமையின் சுகந்தக் காற்றைத்தான் சுவாசித்துக் கொண்டிருந்தது.    

வாழும் நாட்களில் பலர் பல அதிகாரம் மிக்க பதவிகளை வகித்திருப்பார்கள். உதாரணமாக , காவல்துறைத் தலைவர், நீதிபதி, வணிகவரி, வருமானவரித் துறைகளின் தலைவர்கள் போன்றவை நிறைய அதிகாரங்களைக் கொண்ட பதவிகள் . ஆனால் அந்தப் பதவிகளில் இருந்து ஒய்வு பெற்றதும் அத்தகையோர் தங்களை இரண்டு விதமான  நிலைகளுக்குத் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். ஒன்று இதுநாள்வரை தான் அனுபவித்து வந்த அதிகாரபோதை அதன் காரணமாக எழும் ஆணவம் என்கிற ஈகோ விலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும். . அடுத்தது தங்களது அனுபவங்களை வளரும் சமுதாயத்துடன் பகிர்ந்துகொண்டு அரவணைக்கும் பண்பை நிதர்சனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முதுமையில் ஏற்படும் உடல் நோயை விட மன நோய்தான்  மோசமானது. முதுமையில் இனிமை வேண்டுமென்று விரும்புவோர் தங்களின் மன அழுத்தங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மேலே குறிப்பிட்டுள்ள ஈகோ என்கிற அகங்கார இழப்பு அவசியமானதொன்றாகும்.
முதுமையில் இனிமையைத் தருவதற்கு  குடும்பச் சூழல் ஒரு முக்கிய காரணமாகும். அதிலும் கணவன்- மனைவி உறவின் இடையே இழையோடும் அன்பின் இழை காலத்துக்கும் அறுந்து போகாததாக இருக்க வேண்டும்.
இளமையில் திருமணம் நிகழும் காலத்தில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் அன்பு , இனக்கவர்ச்சியின் அடிப்படையிலானது. இது இயல்பானது; இயற்கையானது.குற்றப்படுத்த இயலாதது.

ஆனால் முதுமையில் இனக்கவர்ச்சி என்ற எண்ணமே மறந்து போய் ஒருவருக்கொருவர் காட்டும்  அன்பும் அக்கறையும்  அரவணைப்பும் புரிதலும் தேடுதலுமே மேலோங்கி நிற்கும். உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்ற அத்தகைய  குணங்கள் உடைய கணவனுக்கும் மனைவிக்கும் முதுமை ஒரு பிரச்னையே அல்ல. அத்தகையோர் வாழ்வில் முதுமையும் இன்பமே.

“தன்னந்தனிமையிலே உடல்
தள்ளாடும்வயதினிலே உன்
புன்னகையைப் பார்த்திருந்தால்
போதாதோ எந்தனுக்கு “ – என்ற  கவி வரிகளும் .  
“ உன் மூச்சில் நான் வாழ்ந்தால் 
முதுமை ஆனந்தம் –என் 
காதுவரைக்கும் கம்பளி போர்த்தும் 
கருணை ஆனந்தம் ”  - என்றும் கணவன் மனைவிக்கிடையில் முதுமையில் ஏற்படும் அன்பையும் அரவணைப்பையும் கவிஞர்கள் காட்டுகிறார்கள். இந்த வரிசையில் பாரதியாரின் சில வரிகள் சாகா வரம் பெற்றவை .

“ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன 
வேரென நீயிருந்தால் – அதில் வீழ்ந்துவிடாதிருப்பேன். 
காலச் சுமைதாங்கி போல மார்பில் எனைத்தாங்கி 
வீழும் கண்ணீர் துடைப்பாய்!  அதில் என் விம்மல் தணியுமடி 
பேருக்குப் பிள்ளையுண்டு! பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு! 
என் தேவைகள் யாரறிவார்?  உன்னைப் போல தெய்வம் ஒன்றே அறியும்” 

என்றெல்லாம் ஒரு முதுமையடைந்த  கணவன் தனது மனைவியைப் பார்த்து புகழும் இந்த கவி வரிகள் நமது வாழ்வில் உண்மையானால் நிகழ்ந்துவிட்டால் முதுமை இனிமைதானே!  மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தானே!

அடுத்து நாம்  பெற்று வளர்த்த பிள்ளைகள் நல்லவர்களாக அமைந்துவிட்டால் அதுவும் முதுமையில் இனிமை தருவதுதானே.

திருமறை குர் ஆன்,  பெற்றோரை சீ! என்று கூட சொல்லாதீர்கள் அவ்விருவரிடமும் கனவான,  கண்ணியமான பேச்சையே பேசுங்கள்!  என்று கட்டளையிடுகிறது.   ( 17:23)

மேலும், இரக்கம், பணிவு எனும் இறக்கைகளை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! நான் சிறுவராக இருந்த போது, என்னை அவ்விருவரும் பரிவோடு வளர்த்ததுபோல் நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக என்று பிரார்த்திப்பீராக! (17:24.) – என்று திருமறை காட்டும் வழியில் நல்ல பிள்ளைகள் அமைந்துவிட்டால் முதுமை என்றென்றும் இனிமையே. மனிதனை விரைவான,  நிரந்தர வயோதிகனாக்குவது பிள்ளைகளைப் பற்றிய கவலைதான் என்று சொல்கிறார்கள்.

முதுமையடைந்த தாய்தந்தையர்கள் தங்களின் குழந்தைகள் என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். இத்தகைய பிள்ளைகள் இறைவன் தரும்  ஒரு வரம். குழந்தைகள் எப்படித் தங்கள் மீது பெற்றோர்  கவனமும் அன்பும் செலுத்தப்பட வேண்டும் என்ற விரும்புவார்களோ, அதே போல முதியவர்களும் இயல்பிலேயே விரும்புவார்கள்; எதிர்பார்ப்பார்கள்.

தான் நட்டு வைத்த செடி நன்றாக பூத்து காயத்து பழுத்து பலன் தந்தால் ஒரு தனிமனிதனின் மனம் எவ்வாறு மகிழுமோ அவ்வாறு பிள்ளைகளின் அரவணைப்பு முதுமையில் இனிமைதருவதாகும் அவ்வாறு ஒரு வாய்ப்பு அமைந்துவிட்டால் பிறகு தென்னையைப் பொத்தா தண்ணீரு!  பிள்ளையைப் பெத்தா கண்ணீரு! பெத்தவன் மனமே பித்தம்மா! பிள்ளைகள் மனமே கல்லம்ம்மா! என்று பாடவேண்டிய அவசியம் முதியோருக்கு இருக்காது.
சொந்தங்கள்,  பலருக்கு வசந்தகாலக் கோலங்களாக மாறி இருக்கும் . சிலருக்கு சுமையாகவும்  இருக்கும். புரிந்துணர்வுடன் கூடிய சொந்தக்காரர்கள்- தங்களின் சுமைகளை மற்றவர்கள் மீது ஏற்றிவிட்டு இன்பம் காணும் அற்ப எண்ணம் கொண்ட  சொந்தக்காரர்கள் இல்லாமல் அமைந்துவிட்டால் முதுமையில் அதுவும் இனிமையே. பல முதியவர்களுக்கு சொந்தக்காரர்கள் கொடுக்கும் குடைச்சல்,  மன நிம்மதியை  இழக்கச் செய்துவிடுகின்றன என ஆய்வுகள் சொல்கின்றன.  

முதுமையில் இனிமை தருவதில் முதலிடம் வகிப்பவர்கள் பேரக்குழந்தைகள். பேரக் குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் முதியோருக்கு தங்களின் இதயங்களை புத்துணர்வு பெற வைக்கின்றன என்பதுடன் பாட்டி சொல்லும் கதைகள், தாத்தா உடன் விளையாட்டு குடும்பத்தில் ஒட்டுறவையும் குழந்தைகளின் இளம் நெஞ்சங்களில் பாசத்தையும் பண்பையும் அனுபவப் பகிர்வையும் ஊட்டுகிறது. முதியோரை பாசநீரில் குளிப்பாட்டுகிறது.

மது, புகைப் பிடித்தல், சீட்டாட்டம்  போன்ற தீய பழக்கங்களை ஏற்கனவே குடிகொண்டு இருந்தால் அவைகளை முதுமையில் விட்டொழிப்பது முதியோருக்கு இனிமை தருவதாகும்.  இவற்றுக்கு பதிலாக இறைவழிபாடு, பொதுநல சேவை, எழுத்துப் பணி, அனுபவங்களைப் பகிரும் நிகழ்வுகளில் பங்கேற்பது ஆகிய செயல்கள் முதுமையில் இனிமை தரும் .
புன்னகையை அணைகட்டித்  தேக்கிய முகம், முதுமையின் முகச்சுருக்கங்களை பார்ப்போரின் கண்களுக்கு மறைத்துவிடும்.

சுண்டிப்போன முகம், சிடுசிடுவென்று எரிந்து விழும் இயல்பு  அடுத்தவரை அணுகவிடாமல் தடுக்கும் ஆயுதங்களாகும். முதியவர்கள்,  உம்மணா மூஞ்சிகளாக இருந்தால் அவர்கள் பக்கம் இனிமை,  எட்டி கூட பார்க்காது.
அதேபோல் முதுமையில் இனிமை தரும் செயல்களில் முக்கியமானது கூடிவாழும் முறையாகும். மற்றவர்களிடமிருந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு வாழும்  முதியவர்கள் ஒரு காலமும் இனிமையை நுகரவே இயலாது. அத்துடன் அத்தகைய வாழ்வு முறை முதியவர்களுக்கு பாதுகாப்பானதும் அல்ல.

மனச் சோர்வு, மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோம் என்கிற உணர்வு முதியோரின் மனதில் இருந்து களையப்பட வேண்டும். பிள்ளைகள், மருமகள்கள், மருமகன்கள், சம்பந்திகள், பேரப்பிள்ளைகள் , நண்பர்கள்தான் இந்த நம்பிக்கையை முதியோருக்குத் தர இயலும்.

இவ்வளவு தூரம் பட்டியல் இட்டு இருக்கிற நாம் முதியோர்கள் தங்களின் இள வயது பால்ய நண்பர்களுடன் பொழுது போக்கும் சூழலை புறந்தள்ளிவிட இயலாது. இது முதியோருக்கு உண்மையிலேயே அவர்களின் மனங்களுக்கு இனிமை தரும் செயல்களில் தலையாயது ஆகும்.  பால்ய நண்பர்களுடன் பழைய கதைகளை அசைபோடுவது ஒரு அற்புதமான  விஷயமாகும்.
எப்போதும் ஏதாவது ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருப்பதும் முதுமையில் இனிமை தரும் செயல்தான். சமூக சேவைகளில் ஈடுபடுவது முதியோரின் இயக்கத்தை இனிமையாக்குவதுடன் அவர்களின் அனுபவங்கள் சமூகத்துக்கும் பயன்படும். வருடத்துக்கு ஒருமுறையாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது, சொந்தக்காரர்களின் இல்லங்களுக்கு வருகை தருவது, காலை மாலை இலகுவான நடைப் பயிற்சி ஆகியவை முதுமையை இனிமையாக்கும்.

ஒவ்வொரு மனிதரும் சம்பாதிக்கும் சொத்து அவர்களது வாரிசுகளுக்குத்தான் இறுதியில் சேரும்;  சேர வேண்டும். முதுமையை இனிமையாக கடக்க வேண்டும் என்றால் முதியோர்கள் அவர்கள் தேடிய சொத்துக்களையும், பணத்தையும் அவர்கள் பெயரிலே வைத்துக்கொள்ளவேண்டும். இதில் வாரிசுகளின் கவலை, கண்ணீர், சிபாரிசு, நிர்பந்தங்களுக்கு பணிந்து தூக்கிக் கொடுத்துவிட்டால் முதியோர்களின் இனிமையையும் தூக்கிக் கொடுத்துவிட்டதாகவே அர்த்தம். பிறகு உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்று திண்ணையில் உட்காரவேண்டியதுதான். நம்மிடம் இருக்கும்வரைதான் அல்லது கறக்கும்வரைதான் சொந்தங்கள் முதியோரை சுற்றி வரும். இது உலக இயல்பு.  பசு,  இனி கறக்காது என்ற நிலை வந்துவிட்டால் புல்லும் கிடைக்காது ;  பூண்டும் கிடைக்காது. இது பலரின் அனுபவத்தை அறிந்ததன் எதிரொலி.

பலர் முதுமையை அடைந்த பிறகே சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தாமல் விட்டதைப் பற்றி சிந்திக்கவே ஆரம்பிக்கிறோம். வயது என்பது, வருடங்களை மட்டும் பொறுத்தது அல்ல; உள்ள உணர்வுகளைப் பொறுத்தது. சிலர் பிறக்கும்போதே வயதானவர்களாகப் பிறக்கிறார்கள்; சிலருக்கு வயதாவதே தெரிவது இல்லை. நாமும் அவ்வாறே முதுமையை இனிமையாக்கி வாழ்வோம். ஆமீன்.

இப்ராஹீம் அன்சாரி 
கல்லூரி முதல்வர் 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

2 comments:

 1. முதுமை வயதிலும் இனிமை எது என்று ஒரு சர்வே நடத்தினால், அது வந்து ஆளாளுக்கு மாறுபடும்.

  வயது முதிர்வை அடைந்தவர்களில்,

  சிலர், இளைஞர்களை பார்த்து பொறாமைப் படலாம்.

  சிலர், நாம் சற்று தாமதித்து பிறந்து இருக்கலாமே என்று நினைக்கலாம்.

  சிலர், நம்ம வாழ்ந்த்தைப்போல் இந்தக் கால இளைஞர்களால் வாழமுடியுமா என்று நினைப்பார்கள்.

  இப்படி சிலர் சிலர் என்று போனால் முடிவு இருக்காது.

  ஆனால், என்னைப் பொறுத்த மட்டில், முதியவர்கள் எழுதும் இளைமையான எழுத்து வடிவங்களுக்கு ஈடு இணை ஏதும் கிடையாது.

  ReplyDelete
 2. " சொத்து " சேர்க்க வேண்டுமென்று தான் இளைமையில் முதுமையை அடைகிறோம்; பருவத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சி தவற விடுவதாலும் மற்றொரு காரணமாக இருக்கு. பிள்ளைகளுக்காக உழைத்து விட்டு சொத்தே இல்லாதவர்களின் நிலைமை பரிதாபம். கடந்ததை நினைத்து வருந்துவதை விட இருக்கும் நேரத்தில் ஆரோக்கியமான உணவு விருப்பமான பயிற்சி மேற்கொண்டால் முதுமையிலும் இளமையாக இருக்கலாம். 50 வயதை கடந்தவர்களுக்காக மராத்தான் போட்டி நடத்தி மன உற்சாகத்தை கொடுத்தேயமனால் நோயில்லா வாழ்வை அடைவார்கள் அதோடு தினமும் தனக்கு பிடித்த தியாக / விளையாட்டு பயிற்சி மேற்கொள்வார்கள் .

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...