Pages

Monday, April 25, 2016

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய “மனதில் உறுதி வேண்டும்” நிகழ்ச்சி !

தமிழ் மொழி விழா 2016ன் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை 24-04-2016 அன்று, சிங்கப்பூரிலுள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில், விஜய் தொலைகாட்சி “நீயா நானா” புகழ் திரு கோபிநாத் வழங்கிய “மனதில் உறுதி வேண்டும்” என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை எடுத்துச் செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு, தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இச்சங்கம் தமிழ் மொழியில் பயிற்சியளித்து, “மாணவர்கள் வழங்கும் கவிதை மாலை” என்ற புதிய அங்கமும் இளையர்களை ஈர்க்கும்வண்ணம் இடம்பெற்றது.

“மனதில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பில் திரு கோபிநாத் சிறப்புரையாற்றினார். எதிர்மறையான சிந்தனைகளுக்கு எப்போதும் இடமளிக்கக் கூடாது என்றும், தமிழ் மொழியின் சிறப்புகளையும், தமிழர்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டுப் பின்னணிகளையும் நம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தன்னம்பிக்கை என்பது நம்மிடமே இருக்கிறது; அதை நாம் சரியாக  வெளிக்கொணர வேண்டும் என்றும்,  கடந்த காலக் கசப்பான நினைவுகளை முற்றிலும் களையவேண்டும் என்றும், அப்போதுதான் பிரகாசமான வாழ்வுக்கு அது வழிவகுக்கும் என்றும் நகைச்சுவைக் கலந்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் அவரது தன்முனைப்புச் சொற்பொழிவு அமைந்திருந்தது.

சிங்கப்பூரிலுள்ள செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழ் மொழி பேசுவதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் கடந்த ஆறு ஆண்டுகளில் 52 நிகழ்ச்சிகள் நடத்தி கல்வி சார்ந்த சமுதாயப்பணிகள் சிங்கப்பூரில் ஆற்றியிருப்பதைப் பாராட்டினார். சிறப்பு விருந்தினர் கவிதை மாலை வழங்கிய மாணவ மாணவியர்களுக்கும், GCE “A” LEVEL தேர்வில் உயர்தமிழ் உட்பட பல பாடங்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

 முனைவர் திரு சுப.திண்ணப்பன் ஆற்றிய தமிழ்ப்பணிகளைப் பாராட்டி, இச்சங்கம் அவருக்கு “ஜமாலியன் விருது” வழங்கி கௌரவித்தது.

சங்கத்தின் தலைவர், சிங்கப்பூர் பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் ஹாஜி மு.அ. காதர் ஆற்றிய தலைமையுரையில், “நாம் ஒவ்வொருவரும் இன்று முதல் தமிழ்மொழியிலேயே வீட்டில் பேச வேண்டும் என்றும், நாம் தமிழ் மொழியைக் காப்பதுபோல, பயங்கரவாத மற்றும் தீவிரவாத மிரட்டல்களிலிருந்து நமது சிங்கப்பூர் தேசத்தை அதிக விழிப்புணர்வோடும், ஒற்றுமையோடும் ஒருங்கிணைந்துக் காக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

சங்கத்தின் செயலவை உறுப்பினர் ஜனாப் ஃபரீஜ் முஹம்மது நிகழ்ச்சியை வழிநடத்தினார். சங்கத்தின் துணைத் தலைவர் ஜனாப் மு. கலந்தர் மைதீன் நன்றி கூறினார்.

சுமார் 500க்கும் மேற்பட்ட சமூகத் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும், மாணவர்களும் கலந்து பயன் பெற்றனர். நேர நிர்வாக ஒழுங்கோடு, குறித்த நேரத்தில் நிகழ்ச்சி துவங்கி கலந்துகொண்ட அனைவரும் பாராட்டும் வண்ணம் குறித்த நேரத்தில் இனிதே நிறைவுற்றது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...