Pages

Tuesday, April 26, 2016

நாம் எந்த மரத்தின் கிளையைப் பிடிப்போம்?

ஒரு ஊரில் ஈரோட்டு ஜமுக்காளத்தில்    வடி கட்டிய கஞ்சன் ஒருவன் இருந்தான். இவனது முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்தில் இருந்து கணிசமான வருமானம் வந்தும்,   அவற்றில் இருந்து செலவு  செய்து தனது சொந்தத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள மாட்டான். இல்லாதோர்க்கு ஈய மாட்டான். இவனது இந்த கருமித்தனம் ஊர் அறிந்த கதை.  இவனது கஞ்சத்தனம், இமயமலையின்   கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு ஈடானதாக இருந்தது.

தன்னிடம் இருக்கும் பணத்தை ஒரு மண் கலயத்தில் போட்டு பூமியில் புதைத்து வைப்பான். இதை கவனித்துக் கொண்டிருந்த மற்றொருவன் இந்த கஞ்சனுக்குத் தெரியாமல் அவன் புதைத்து வைத்திருந்த கலயத்தைத் பணத்துடன் தோண்டி எடுத்துக் கொண்டுபோய் செலவு செய்துவிட்டு கலயத்தை போட்டு உடைத்துவிட்டான்.

அடுத்த நாள்,  தான் புதைத்து வைத்து இருந்த பணத்தைத் தேடிய கஞ்சன் பணத்துடன் இருந்த மண் கலயம் காணாமல் போய்விட்டதால் அதிர்ச்சி அடைந்தான்.   அதுபற்றி அரசர்  இடம் போய் முறையிட்டான்.   அரசர் அவனிடம் இவ்வாறு விசாரணை செய்தார்.

“பணத்தை எங்கே வைத்து இருந்தாய்?

“மண் கலயத்தில்  போட்டு மண்ணில் புதைத்து வைத்து இருந்தேன்”

“அந்தப் பணம் இப்போது உனக்குத் தேவைப்படுகிறதா? ”

“இல்லை தேவை இல்லை! ஆனால் அது என் பணம்”

“யாருக்கும் கொடுக்கப் போகிறாயா? எதுவும் வாங்கப் போகிறாயா?

“இல்லை”

“ உனக்கு திருமணமாகிவிட்டதா?”

“இல்லை”

“இத்தனை வயதாகியும் ஏன் இன்னும் மணமாகவில்லை”

“அவளுக்கு வேறு சோறு போடவேண்டும் துணிமணி எடுத்துக் கொடுக்கவேண்டும். நகைநட்டு  வாங்கிக் கேட்பாள். வீடு வேறு கட்டவேண்டிவரும்.  ”

“உன் உடைகள் ஏன் இவ்வளவு  அழுக்காக  இருக்கின்றன?”

“அவைகளை துவைக்க செலவாகும்”

"தலையில் கூட எண்ணெய் தேய்க்காமல் பரட்டையாக இருக்கிறாய். முகமெல்லாம் தாடி மீசை மழிக்காமல் இருக்கிறாய். அது சரி காலையில் சாப்பிட்டாயா?”

“அதற்கெல்லாம் செலவாகும். பணத்தை இழந்த கவலையில், தினமும் பிச்சை எடுக்கும் வீடுகளுக்குப்  போய் பழைய சாதம்  வாங்கி சாப்பிட மனம் இல்லாமல்  போய்விட்டது அதனால் சாப்பிடவில்லை. “

“உன்  அம்மா அப்பா எங்கே?”

“அவர்கள் வேறொரு ஊரில் பிச்சை எடுத்து வாழ்கிறார்கள்”

“ஏன் பேசும்போது இப்படி இருமுகிறாய்? மூச்சுத் திணறுகிறது?

“பனி நேரம் வெட்டவெளியிலும் அடுத்தவர் வீட்டுத் திண்ணையிலும்  படுத்துக் கிடப்பதால்  உடம்பு நல்ல சுகம் இல்லை”

“மருத்துவரிடம் போனாயா?”

“அவர் பணம் கேட்கிறார் செலவாகும் “

“இப்போது நீ இழந்த பணம் எவ்வளவு இருக்கும் ?”

“நேற்றுத்தான் எண்ணிபார்த்து கட்டுக்கட்டி   வைத்தேன். மொத்தம் பத்து லட்சம்”

“அப்படியா? அடப்பாவமே! இருந்தாலும் பரவாயில்லை. நீ  ஒரு வேலை செய்!  நீ புதைத்து வைத்த பணம்  மண் கலயத்தோடு மண்ணிலேயே புதைக்கப் பட்டே இருக்கிறது என்று நினைத்துக் கொள். மனதை சமாதானப் படுத்திக்கொள்.  காரணம், அந்தப் பணம் இந்த நாட்டின் பூமியில்தான் புதைக்கப்பட்டு இருந்தது. உனது எந்தத் தேவைக்கும் நீ அந்தப் பணத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை. எந்த செலவும் செய்யவில்லை. உண்டு, உடுத்தி, உதவி  சொந்தத் தேவைகளுக்குக் கூட நீ அந்தப் பணத்தை அனுபவிக்கவில்லை. இப்போதும் உனக்கு  அந்தப் பணத்தால் எந்தத் தேவையுமில்லை.  உனது நடவடிக்கைகளைப் பார்க்கும்போது  இனியும் அந்தப் பணம் உனக்குத்  தேவைப்படாது.

வேறு  யாரோ தேவை உள்ளவன் - பணத்தை செலவு செய்பவன் எடுத்துக் கொண்டு போய்விட்டான். ஆகவே அது உன் கையில் இருந்தாலும் ஒன்றுதான் மண்ணின் கீழே இருந்தாலும் ஒன்றுதான்  மண்ணில் புதைக்கப்பட்டு அந்தப் பணம் மண்ணுக்கு அடியிலேயே பத்திரமாக இருப்பதாகவே நினைத்து  மனம் திருப்தி அடைந்து  கொள் ! “

பரட்டைத்தலைக் கஞ்சன் தனது தலையில் கைவைத்துக் கொண்டு போனான்.

இத்துடன் சபை கலையலாம் என்று அரசர்  தீர்ப்பளித்தார்.

யாருக்கும் ஈயாதவனின் செல்வம் ‘ஈயார் தேட்டை தீயார்கொள்வர்’ என்று போய்விடும்.  “பாடுபட்டுப் பணத்தை தேடி சேர்த்துவைத்த பாவிகளே! கேளுங்கள் கூடுவிட்டு ஆவிதான் போனபின்னர் யார்தான் அனுபவிப்பர் பாவிகாள் அந்தப்பணம்?”

பாடுபட்டுப் பணத்தை தேடிவைத்த பலரின் நிலை இப்படித்தான் இருக்கிறது. பணம் என்பது பலர் கைகளுக்கு மாறும் இயல்புடையதாக இருந்தால்தான் பொருளாதார நடவடிக்கைகளையும் சுழற்சியையும்  ஏற்படுத்தும். தூங்கும் பணம் குறட்டை விடுமே தவிர கொள்முதலுக்கு உதவாது.

இறைவன் மனிதனுக்கு செல்வத்தை வழங்குவது,  அவன் அந்த செல்வத்தை செலவு செய்து சுகம் தேடவும், மனமகிழ்வு கொள்ளவும், தர்மம் செய்து நன்மைகளைத் தேடிக் கொள்ளவுமே. பணத்தைப் பூட்டி வைத்திருப்பது அந்த பணம் படைக்கப்பட்டதற்கே அர்த்தம் இல்லாமல் ஆக்கிவிடும். இப்படிப்பட்ட கஞ்சர்களை இதனால்தான் சரியான இரும்புபெட்டி என்று வர்ணிக்கிறார்கள்.

கருமித்தனமும் கஞ்சத்தனமும் மிகவும் கெட்டிகாரத்தனமென்று சிலர் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். பொருளை செலவிடாமல் சேமித்து சமுதாயத்தின் முன்பு  பணக்காரர்களாக காட்டிக் கொள்வதற்கு கருமித்தனம் கை   கொடுக்குமென்று கருதுகின்றனர்.

கருமித்தனத்தையும்   ஷைத்தான்தான்  தூண்டுவதாக அல்லாஹ் தனது அருள் மறையில் இப்படி சொல்லிக் காட்டுகிறான்.

(தர்மம் செய்வதால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சமூட்டி (கஞ்சத்தனம் என்னும்) அருவருப்பானதைக் கொண்டு ஏவுவான். ஆனால் அல்லாஹ்வோ தன்னுடைய மன்னிப்பையும் செல்வத்தையும் உங்களுக்கு வாக்களிக்கிறான். ( அல் பகரா – 268).

இப்படி கவனப் படுத்துவதுடன் மேலும்  அல்லாஹ் எச்சரிக்கிறான்.

“இன்னும் அல்லாஹ் தனது அருளினால் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு கஞ்சத்தனம் செய்கின்றவர்கள் , அது அவர்களுக்கு நல்லதென்று நிச்சயமாக எண்ணிக்கொள்ள வேண்டாம். அவ்வாறல்ல. அது அவர்களுக்குத் தீங்கே யாகும். எதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தனரோ , அது மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் அறிகண்டமாக அணிவிக்கப்படும்” (ஆலு இம்ரான் : 180)

மேலும் நபி மொழி சுட்டிக்காட்டுகிறது,

“கொடையானது சுவர்க்கலோகத்தின் ஒரு மரமாகும். எனவே கொடையாளிகள் அந்த மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு சுவர்க்கம் புகுந்துவிடுகிறார்கள்.  கஞ்சத்தனம் என்பது நரகத்தின் ஒரு மரமாகும் . கஞ்சனாக இருப்பவர்கள் அதன் கிளைகளைப் பிடித்துகொண்டு நரகத்தில் புகுந்துவிடுகிறார்கள்.” (அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி) - மிஷ்காத்)  .

இப்ராஹீம் அன்சாரி 
கல்லூரி முதல்வர் 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

4 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்.

  கஞ்சனை பற்றி கச்சிதமான வரிகள்.

  இந்த மாதிரி கஞ்சன்கள் இதை படிக்கவே யோசனை பன்னுவான்களே காக்கா?

  இதை படிக்கிற நேரம் வீணாகுமென்று.

  ReplyDelete
 2. தம்பி அபூபக்கர் ! வ அலைக்குமுஸ்ஸலாம்.

  ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான்.

  ReplyDelete
 3. பதிவுக்கு நன்றி.

  காக்கா, இது மிகவும் அருமையான மேலும் ஆராய்ந்து எழுதின கட்டுரை, இதை படிப்பதற்கு சற்று வித்தியாசமாக இருந்தாலும், படிப்பவர்களின் மனதை பொறுத்தே அமையப் பெற்றுள்ளதாக இந்த கட்டுரை இருக்குது.

  இன்னும் ஒரு விஷயத்தையும் நான் கூறியே ஆகவேண்டும், அதாவது உங்களுடைய ஆக்கம் எப்பொழுதெல்லாம் வெளிவருகின்றதோ..............?

  அன்றைக்குத்தான் பெண் பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு ஆண் பிள்ளை பிறந்தது மாதிரி இருக்குது.

  நிறைய ஆண் பிள்ளைகள் பெறப்படட்டும்.

  K.M.A. Jamal Mohamed.
  President – PKT Taluk.
  National Consumer Protection Service Centre.
  State Executive Member
  Adirampattinam-614701.

  ReplyDelete
 4. தம்பி ஜமால் முகமது ,

  இன்ஷா அல்லாஹ் வாரம் ஒரு ஆண்பிள்ளை பிறக்கலாம். ஹஹஹா.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...