Pages

Monday, May 2, 2016

செந்தில்குமாரை ஆதரித்து அதிரையில் எம்.எல்.ஏ ரெங்கராஜன் பேச்சு ! [ முழு விவரம் ]

அதிராம்பட்டினம் மே-2
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக-தமாகா-மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என். செந்தில் குமாரை ஆதரித்து பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அதிரை பகுதிகளில் பிரசார பணியில் ஈடுபட்டார்.

பட்டுக்கோடை சட்டமன்ற தொகுதி தேமுதிக-தமாகா-மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் என். செந்தில் குமாரை ஆதரித்து பேசியதாவது:
'பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை வேட்பாளராக தேர்வு செய்த வாய்ப்பளித்த தொகுதி மக்களுக்கு எனது நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக அதீத பாசம் கொண்ட சிறுபான்மை மக்களுக்கு எனது நன்றி. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி மூலம் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக அதிரை பகுதி பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அதிரை பேரூராட்சி மற்றும் இதனை சுற்றியுள்ள ஏரிபுறக்கரை, நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைத்தல், சிமெண்ட் சாலைகள் அமைத்தல், பயணிகள் நிழற்குடை, அங்கன் வாடி அமைத்தல், சமுதாயக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு 2011-2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி சுமார் ரூ 60 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது.

'அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்னழுத்த ஏற்ற தாழ்வுகளை குறைக்கும் வகையிலும், அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரத்தை சீராக கொண்டு செல்லும் வகையில் நான் மேற்கொண்ட முயற்சியின் கீழ் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் அதிரையில் 110 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தேர்தல் முடிந்து இதன் பணிகள் தொடங்க உள்ளன.

அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதி வீடுகளின் எண்ணிக்கை பெருகி வருவதால், மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு அடிக்கடி, 'ஓவர்லோடு' ஏற்படுகிறது. அதிரை வளர்ந்து வரும் பகுதி, இங்கு பல இடங்களில் மின்கம்பிகள் ஆபத்தான நிலைமையில் உள்ளது, குறிப்பாக பிலால் நகர் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. அரசு இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமா ? என கடந்த [ 23-09-2015 ] அன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் நான் எழுப்பிய கேள்வி தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சரிசெய்யும் நடவடிக்கையை மின்சார வாரியம் மேற்கொண்டது.

அதிரை நியூஸ் இணையதளம் குழுவினர் கடந்த [ 01-06-2013 ] அன்று நேரில் சந்தித்து என்னிடம் நேர்காணல் நடத்தினர். இதில் அதிரை பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதன் அடிப்படையில் நான் மேற்கொண்ட தீவிர முயற்சியின் கீழ் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரையிலான பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கிராம இணைப்பு சாலை ரூ 61 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் நீளத்தில் மறு சீரமைக்கப்பட்டது.

மேலும் அதிரை அரசு பொதுமருத்துவமனையில் கூடுதல் மருத்துவர் வசதியுடன் 24 மணி நேர சேவை செயல்படுத்த வலியுறுத்தி கடந்த 01-06-2013 அன்று அதிரை நியூஸ் இனையதள ஊடகம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 18-11-2013 அன்று சென்னையில் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் திரு ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப அவர்களை நேரடியாகச் சந்தித்து முறையிட்டேன்.

அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளை தடுக்கும் நோக்கிலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் புழங்கி வரும் ஈசிஆர் சாலை காலேஜ் முக்கத்தில் வாகன வேகத்தடுப்பு அரண் அமைத்து தர கோரி மாவட்ட ஆட்சியர் முனைவர் என். சுப்பையன்,  தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி.சஞ்சய்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் ஆகியோரை பட்டுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்து முறையிட்டேன். எனது கோரிக்கை காவல்துறை சார்பில் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தம்பிக்கோட்டை மற்றும் காலேஜ் முக்கம் ஆகிய இரண்டு இடங்களின் சாலையின் இருபுறங்களிலும் வாகன வேகதடுப்பு அரண் ( பேரிகாட் ) அமைக்கப்பட்டது.

நான் மேற்கொண்ட முயற்சியின் கீழ் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து சேர்மன்வாடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையை 800 மீட்டர் தூரத்தில், 7 மீட்டர் அகலத்தில் மேம்படுத்தும் விதத்தில் சுமார்  ₹ 1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த [ 13-11-2014 ] அன்று டெண்டர் விடப்பட்டு இதற்கான பனி தமிழக அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டன.

'கடும் மழை காரணமாக பழுதடைந்த அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மெயின் சாலை, தம்பிக்கோட்டை சாலை, துவரங்குறிச்சி சாலை,நாட்டுச்சாலை வரை உள்ள சாலை, பரக்கலக்கோட்டையிலிருந்து கல்யாண ஓடை வரையிலான சாலை, பட்டுக்கோட்டை பாளையம் பகுதி சாலை ஆகியவற்றை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் குறிப்பிட்ட சாலைகள் மேம்படுத்தப்பட்டன.

அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லையில் ஏரிபுறக்கரை ஊராட்சியின் ஒரு பகுதியான பிலால் நகரில் கடும் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு காரணமாக உள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இந்த பகுதி மக்கள் நிர்வாக எல்லை பகுதி தெரியாமல் ஒரே தெருவில்  ஒருவர் ஏரிபுறக்கரை ஊராட்சிக்கும், மற்றொருவர் அதிரை பேரூராட்சிக்கும் வரியை செலுத்தி வருகின்றனர். இதனால் முறையான தூய்மைபணிகள் இந்த பகுதியில் நடைபெறவில்லை. எனவே வருவாய்துறை மூலம் இப்பகுதி எல்லைகளை வரையறுத்து ஒழுங்குபடுத்த வேண்டும்' என மாவட்ட ஆட்சியருக்கு நான் வைத்த கோரிக்கை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளபட்டன. மேலும் பிலால் நகர் பகுதி பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பிலால் நகரில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிகழும் இன்ப-துன்ப நிகழ்வுகளில் பங்கெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளேன். பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக-தமாகா-மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என். செந்தில் குமார் எளிமையானவர். கடின உழைப்பாளி. இதே தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். மூன்றாவது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை அனைவரும் தவறாமல் முரசு சின்னத்தில் வாக்களித்து செந்தில்குமாரை வெற்றி பெற செய்ய வேண்டும். வெற்றி பெற்றால் தொகுதியில் விடுபட்ட பணிகளை செய்துகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவார்' என இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...