Pages

Sunday, June 26, 2016

தங்கம்மாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!

தங்கம்மா,போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் பெருநாளைக்கு சேலை எடுக்க மதுரைக்கு போகலாம்னு இருக்கோம்.நீயும் வாறீயானு?தனது உயிர் தோழியை அழைக்கிறாள் செல்லம்மா.

தோழி செல்லம்மாவின் அழைப்புக்கு உடனே பதில் அளிக்க முடியாமல் திணறிய தங்கம்மா எதுக்கும் எங்க உம்மா வாப்பாகிட்ட கேட்டு சொல்றேன்டினு பதில் கூறிவிட்டு பெரும் யோசனையில் ஆழ்ந்தாள் தங்கம்மா.

இராமநாதபுரத்தின் கடலோர பகுதியில் தென்னை மரத்தின் சுற்று சூழலில் ரம்மியமாய் காட்சி தரும் அழகான கிராமத்தில் பிறந்து வளர்ந்து அதே ஊரில் வாக்கப்பட்டு வாழ்ந்து வரும் தங்கம்மாவும் செல்லம்மாவும் தொடக்கப்பள்ளி காலத்திலிருந்து உயர்வகுப்பு வரை ஒன்றாக படித்து உற்ற தோழியானவர்கள்.

எந்த விசயமானாலும் ஒளிவு மறைவில்லாமல் மனம் விட்டு பேசிக்கொள்ளும் நம்பிக்கைக்குரிய தோழிகள்.இவர்களின் நட்பில் லயித்து போன அவ்வூர் இளம்பெண்கள் இவர்களின் நட்பில் இணைவதையே பெருமையாக நினைப்பார்கள்.

சொல்லி வைத்தாற்போல தங்கம்மாவின் கணவனும்,செல்லம்மாவின் கணவனும் வளைகுடாவில் வேலை பார்ப்பவர்கள்.இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை விடுப்பில் வந்து செல்லும் தமது கணவன்மார்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் கவனித்து கொள்வதிலும் இருவரும் சளைத்தவர்களில்லை.

ஒவ்வொரு வருசமும் நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ்ஜு பெருநாளைக்கு  இராமநாதபுரத்தில் சேலை துணி எடுக்கும் இந்த தோழிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மதுரைக்கு போய் சேலை துணி எடுத்து வருகிறார்கள்.

தாங்கள் மட்டும் செல்லாமல் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும் ஆசை காட்டி வாடகைக்கு வேன் பிடித்து ஆளுக்கு இவ்வளவுனு சேரிங் செய்து மதுரை போய் வருவார்கள்.

காலையில் 9மணிக்கு கிளம்பும் இவர்கள் மதுரையின் பிரதான துணிக்கடைகளில் ஏறி இறங்கி மனதிற்கு பிடித்த ஆடைகளை வாங்கி கொண்டு இரவு 10 மணிக்கு ஊர் வந்து விடுவார்கள்.அந்த ஒரு நாள் மட்டும் இவர்களுக்கு நோன்பு பிடிப்பது விதி விலக்காகி விடும்.

கடந்த இரண்டு வருடமும் செல்லம்மா அழைத்த போது சம்மதம் சொன்ன தங்கம்மாவை பார்த்து ஏம்மா அந்த பொண்ணுதான் மதிகெட்டு கூப்பிடுதுன்னா உனக்குமா புத்தி இல்லை?.

பக்கத்து வீட்டு சுந்தர் 20 ஆண்டு துபாய் உத்தியோகத்தை முடித்து விட்டு வந்து தனது சக துபாய் தோழர்களுடன் பார்ட்னராகி இராமநாதபுரத்தில் துணிக்கடை வைத்திருக்கும் போது நாம அவர்களிடம் துணி எடுப்பதுதானே தர்மம்?நம் வசதிக்காகத்தானே பல லட்சம் ரூபாய்களை முதலீடு செய்து கடை போட்டுள்ளார்கள்.

பக்கத்து வீட்டு மனுஷா நாமளே அவர்களை புறக்கணிப்பது தப்புமா. எதற்காக அவ்வளவு தூரம் போய் துணி வாங்கணும்?விலையில் கொஞ்சம் நூறு இருநூறு வித்தியாசம் இருந்தாலும் வேனுக்கு செலவழிக்கும் பணத்தை ஒப்பிட்டு பார்த்தால் எல்லாம் சரியாத்தான் இருக்கும்.

பெருநாளைக்கு புது துணி எடுக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ ஏழைகளுக்கு மத்தியில் அல்லாஹ் இந்த அளவுக்காவது நம்மை வைத்திருக்கானேனு சந்தோஷப்படணும்.

புது துணி எடுக்க போறேன்னுட்டு ஒரு நாள் நோன்பையே பிடிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய அநியாயம்?இதை அல்லாஹ் மன்னிப்பானா?கொஞ்சம் யோசித்து பாரும்மான்னு தனது தரப்பு அறிவுரையை தவறாமல் கொடுத்து விடுவார் தங்கம்மாவின் வாப்பா.

தனது வாப்பாவின் அறிவுரைகளை ஒதுக்கி விட்டு மதுரையில் துணி எடுப்பதை சமூக அந்தஸ்தென கருதிய தங்கம்மா இரண்டு ஆண்டும் செல்லம்மாவோடு மதுரை போய் துணியெடுத்து வந்து தமது உறவினர்களிடம் காண்பித்து பெருமைப்பட்டு கொண்டாள்.

தற்போது இந்த வருட செல்லம்மாவின் அழைப்புக்கு எப்படி பதில் சொல்வதென்று புரியாமல் தவித்தாள் தங்கம்மா.என்னடி எப்பவும் கூப்பிட்டால் சட்டென வருகிறேனு பதில் சொல்லும் நீ இப்போ மட்டும் உம்மா,வாப்பாக்கிட்ட கேட்டு சொல்றேன்கிறே?

உன்புருஷன் கிட்ட இருந்து இன்னும் பணம் வரலையா?கவலையை விடு நான் தாறேன்.பணம் வந்ததும் திருப்பிகொடுனு உற்சாகமூட்டிய செல்லம்மாவின் வார்த்தையில் கொஞ்சமும் ஈர்ப்பு காட்டாமல் மௌனம் காத்தாள் தங்கம்மா.

சரிடி நாம மதுரை போக இன்னும் ஒருவாரம் இருக்கு அதுக்குள்ளாற யோசித்து சொல்லுனு கூறிவிட்டு போனை துண்டித்தாள் செல்லம்மா.
தனது மகளின் போன் உரையாடலை ஓரளவுக்கு புரிந்து கொண்ட தங்கம்மாவின் வாப்பா ஏம்மா செல்லம்மா மதுரைக்கு கூப்பிடுறாளா?

கடந்த இரண்டு வருசமா உம்மா,வாப்பாக்கிட்ட கேட்டுட்டா நீ மதுரை போனே?இந்த வருசம் மட்டும் ஏம்மா இப்படி பதில் சொன்னேனு கேட்ட வாப்பாவை ஒருமுறை ஏற இறங்க பார்த்த தங்கம்மா கொஞ்சம் நிதானமாய் சொன்னாள்.

இல்ல வாப்பா,பக்கத்து வீட்டு சுந்தர் அண்ணனின் கடையில் துணி வாங்காமல் மதுரை போய் எடுத்தது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்து விட்டேன்.என்ற தன் மகளின் கூரிய வார்த்தையில் மறைந்துள்ள ஆயிரமாயிரம் அர்த்தங்களை புரிந்து மௌனமாய் புன்னகைத்தார் தங்கம்மாவின் வாப்பா.

தங்கம்மாவின் கணவன் வளைகுடா வாழ்க்கையை முடித்து விட்டு இன்னும் ஓராண்டில் ஊர் வந்து இராமநாதபுரத்தில் ரெடிமேட் கடை வைக்க போகும் கடிதத்தின் உண்மை தங்கம்மாவுக்கும் அவளது வாப்பாவுக்கும் மட்டுமே தெரியும்.

இந்த உண்மை தெரியாமல் இன்னும் ஒரு வாரத்துக்கு தங்கம்மாவின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பாள் செல்லம்மா.

சமூக சிந்தனையுடன்
கீழை ஜஹாங்கீர் அரூஸி. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...