.

Pages

Sunday, July 31, 2016

அதிரையில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் பள்ளத்தூர் அணி சாம்பியன் !

அதிராம்பட்டினம், ஜூலை 30
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 22 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 16 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த [ 07-07-2016 ] அன்று முதல் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.

கடந்த சில வாரங்களாக நடந்து வந்த தொடர் ஆட்டத்தில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கரம்பயம், காரைக்குடி, புதுக்கோட்டை, காரைக்கால், நாகூர், திருச்சி, தஞ்சாவூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 28 அணிகள் கலந்துகொண்டு விளையாடியது. இதில் தஞ்சாவூர், கண்டனூர், பள்ளத்தூர், அதிராம்பட்டினம் எஸ்எஸ்எம்ஜி ஆகிய நான்கு அணிகள் அரை இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றது.

இந்த நிலையில் இன்று மாலை தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் கண்டனூர் அணி, இராமநாதபுரம் மாவட்டம் பள்ளத்தூர் அணி ஆகியன மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் பள்ளத்தூர் அணி சாம்பியன் பட்டதை தட்டிச்சென்றது.

இன்றைய ஆட்ட நடுவர்களாக வேலுசாமி, மூர்த்தி ஆகியோர் பணியாற்றினார்கள். நிகழ்ச்சிகள் அனைத்தையும் கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் தொகுத்து வழங்கினார்.

இதையடுத்து வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அதிரை கால்பந்தாட்டக் கழக செயலாளர் கவுன்சிலர் பசூல்கான் தலைமை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அக்பர் ஹாஜியார், ஜலீலா முஹம்மது முகைதீன், ஜமாலுதீன் ஹாஜியார் ஆகியோர் தொடர் போட்டியின் வின்னர், ரன்னர் அணிகளுக்கு ரொக்கப்பரிசு, சுழற்கோப்பை பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும் தொடர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்க்கப்பட்டன.

கடந்த காலங்களில் கால்பந்தாட்ட போட்டிகளில் சாதனை நிகழ்த்திய அதிராம்பட்டினம் பகுதியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் விழா மேடையில் கெளரவிக்க்கப்பட்டனர். இதில் சிராஜுதீன் ( தண்டையா), அஹமது ஹாஜா, சேக் நூர்தீன், கனி, பஷீர் அஹமது ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக அதிரை கால்பந்தாட்டக் கழக தலைவர் அதிரை அஹமது ஹாஜா அனைவரையும் வரவேற்றார். விழா முடிவில் பொருளாளர் அதிரை மைதீன் நன்றி கூறினார்.

விழா ஏற்பாட்டினை சாரா அஹமது, ரபீக், ஜம்சித், புர்கானுதீன், மாலிக், சைபுதீன், அப்பாஸ், புஹாரி, சாகுல்ஹமீது ஆகியோர் செய்தனர். இன்றைய இறுதி ஆட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வருகை தந்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
என். முஹம்மது ரபீக்


அதிரையில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணியினை விரைவுப்படுத்தக்கோரி ஆலோசனைக்கூட்டம் !

அதிராம்பட்டினம், ஜூலை 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணியினை விரைவுப்படுத்தக்கோரி ஆலோசனைக்கூட்டம் சாரா திருமண மஹாலில் இன்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சங்க ஆலோசகர் வ. விவேகானந்தம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக முத்துப்பேட்டை சமூக ஆர்வலர்கள் கே.எஸ்.எச் சுல்தான் இப்ராஹீம், எல்.ஐ.சி ராஜ்மோகன், கோட்டை ரோட்டரி சங்க தலைவர் மா.வீரபத்திரன், ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் ஜி. ஜெயசீலன், தஞ்சை மாவட்ட தொழிலாளர் நல சங்க தலைவர். ஆர். முத்துகுமரவேல், அதிராம்பட்டினம் வர்த்தக சங்க பொறுப்பாளர் என்.ஏ முஹம்மது யூசுப், சுற்றுச்சூழல் சங்க செய்தி தொடர்பாளர் எஸ். லாசர்,
சவூதி ஜித்தாவில் உள்ள அய்டா சேவை அமைப்பின் செயலாளர் சம்சுதீன், துணைச் செயலாளர் மீராஷா ராபியா, சேக்கனா நிஜாம், சகாபுதீன், நூருல், அஃப்ரீத், சேக், அப்துல் ஜப்பார், நிஜாமுதீன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
இருப்பு பாதை பயணிகள் நலனுக்காகவும், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணியினை விரைந்து முடிப்பது தொடர்பான கோரிக்கையை எடுத்துச்செல்ல அதிராம்பட்டினத்தில் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர் அமைப்பது.

அகல ரயில் பாதை பணி விரைவுப்படுத்துவது தொடர்பாக சவூதி ஜித்தாவில் உள்ள அய்டா சேவை அமைப்பினர் இந்திய தூதரகம் மூலம் மேற்கொள்ளும் முயற்சிக்கு ஆதரவளிப்பது, இருப்பு பாதை கோரிக்கை பணிக்கு உதவி செய்வதை வரவேற்பது என முடிவு செய்யப்பட்டது.

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை விரைவில் அமைந்திட மத்திய, மாநில அரசுகளின் மக்கள் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை சந்தித்து முறையிடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரண்ட் மட்டுமல்ல கரண்ட் பில்லும் ஷாக்கடிக்கும் - இது மஹாராஷ்டிரா கூத்து

கி.மு.5000 ஆம் ஆண்டைச் சேர்ந்த அறிவாளிகள் ஆட்சி செய்யும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் பன்வேல் தாலுகா, வத்கார் கிராமத்தை சேர்ந்த சமூக சேவகரும் கட்டிடத் தொழிலாளியுமான தாஹிர் அலி ஜூபைர் கான் என்னும் எளியவருக்கு 5.53 லட்சம் மின்சாரக் கட்டணம் கட்டச் சொல்லி 'ஓலை' வர மனிதன் மின்சாரம் தாக்கியவரைப் போல் 'வெரண்டு' போய் உள்ளார்.

கடந்த 30 வருடங்களாக தனது மனைவி ஜரீனா கான் மற்றும் பிள்ளைகளுடன் அங்கு வாழும் தாஹிர் அலி கான் மாதந்தோறும் சுமார் 500 முதல் 1500 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தி வருபவர். இந்நிலையில் 5.53 லட்சம் செலுத்த சொல்லும் பில்லை தூக்கிக் கொண்டு மஹாராஷ்டிரா மின்சார வாரியத்திற்கு (MSEB) ஓட, அவர்கள் 2.02 லட்சம் கட்டச் சொல்லி தள்ளுபடி சலுகை வழங்கியுள்ளனர்.

நொந்து போன கான், இது என்ன என் வீட்டிற்கான கட்டணமா? அல்லது என் கிராமத்திற்கான மின் கட்டணமா? எனக் கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஆனால் கடமை வீரர்களான மஹாராஷ்டிர மின்வாரிய அதிகாரிகள் பணத்தை கட்டினால் தான் மீண்டும் மின் இணைப்பு தரப்படும் என ப்யூசை பிடிங்கிச் சென்றுள்ளனர், இதில் 100 யூனிட் ஒட வேண்டிய மீட்டரில் 700 முதல் 1000 யூனிட் வரை தவறுதலாக ஒடுகிறது என வியாக்கியானம் வேறு.

அட அப்பரன்டிசுகளா! ப்யூச புடுங்கிற வேகத்த உங்க பாஷாயில தவறாக ஓடும் மீட்டர சரி செய்றதுல காட்டியிருக்கலாமேடா!

Source: Mid Day
தமிழில்: நம்ம ஊரான்

டிராபிக் ஃபைன் கட்டாமல் இனி அமீரகத்தை விட்டு விடுமுறைக்காக கூட வெளியேற முடியாது

அமீரகத்தின் மத்திய போக்குவரத்து சபையின் (Federal Traffic Council) அறிவித்தலின்படி, போக்குவரத்து துறை சம்பந்தப்பட்ட அபராதங்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் அமீரக குடியேற்றத்துறையுடன் (இமிக்கிரேசன்) இணைக்கப்படும் இதன்வழி போக்குவரத்து சம்பந்தப்பட்ட அபராதங்கள் செலுத்தப்படாமல் இருக்கும் நிலையில் நாட்டை விட்டு விடுமுறையிலோ அல்லது நிரந்தரமாகவோ வெளியேற அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள், நில வழி (All Kinds of Air, Sea & Land Ports) இமிக்கிரேசன் அலுவலகங்கள் என அனைத்திலும் அனுமதி மறுக்கப்படும்.

போக்குவரத்து அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு செல்லும் பயணிகளின் வசதிக்காக அனைத்து விமான நிலையங்களிலும் தானியங்கி இயந்திரங்கள் (Smart Devices & ATM) நிறுவப்பட்டு அதன்வழி அபராதங்களை செலுத்த வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

மோட்டார் பைக் ஒட்டுனர் லைசென்ஸ் இனி 2 வகையில் பிரித்து வழங்கப்படும். 200 CC வரை எஞ்சின் திறனுள்ள பைக்குகளை ஓட்ட 18 வயது பூர்த்தியானவர்களுக்கும், 200 CC க்கு மேல் அதிக எஞ்சின் திறனுள்ள மோட்டார் பைக்குகளை ஒட்ட 21 வயது பூர்த்தியானவர்களுக்கும் லைசென்ஸ் வழங்கப்படும்.

தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு லைசென்ஸ் அனுமதி இனி 5 ஆண்டுகளாக குறைக்கப்படுவதற்கும், கனரக வாகனங்களான பஸ், டிரக் மற்றும் டேக்ஸிக்கள் அனுமதிக்கப்பட்ட வேக அளவை விட 20 km/h அதிகமாக செல்லலாம் என்பதும் ரத்து செய்யப்பட்டு 10 km/h வரை மட்டுமே அனுமதிக்கப்படவும் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் இறுதி உத்தரவுக்காக காத்துள்ளன.

மேலும், அமீரகம் முழுவதும் டிரக்குகளை இயக்குவதற்கான தடை செய்யப்பட்ட நேரங்கள் சீரான, ஒரேவிதமான நேரத்திற்கு மாற்றப்படவுள்ளன.அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் கூடுதலாக 50 சதவிகித வேகத்தில் செல்பவருடைய வாகனங்கள் பறிமுதல் செய்யவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

இளம் வயதில் சவூதி மன்னர் சல்மான்

மன்னர் ஃபைசல் அவர்களுக்கு பின், அமெரிக்கா எனும் வல்லரசின் அதிபர் பாரக் ஓபாமா அவர்களையே காத்திருக்க வைத்த, ஏமனில் ஷியா ஹவ்தி பயங்கரவாதிகளை கதிகலங்க வைத்துக் கொண்டுள்ள, சென்ற வருடம் சிரியா விவகாரத்தில் அமெரிக்காவையே துணிந்து எதிர்த்த, பாலஸ்தீனம் மற்றும் துருக்கியில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா அகதிகளுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்வதில் முன்னனியில் நிற்பது போன்ற பல நடவடிக்கைகள் மூலம் உலகின் சக்திவாய்ந்த ஆட்சியாளர்களில் ஒருவராக திகழும் சவூதி மன்னர் சல்மான் அவர்களின் இளம் வயது அரிய புகைப்படம்.

மேலும், மன்னர் சல்மான் அவர்கள் தனது 19 வயதிலேயே ரியாத் மாகாண துணை கவர்னராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்: அபூ ஹாரித்

மரண அறிவிப்பு [ ஹாஜிமா ஹாஜராம் பீவி அவர்கள் ]

அதிராம்பட்டினம், மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.கா.மு முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகளும், 'ஸ்கூல் ஸ்டோர்' மர்ஹூம் வாவூபிள்ளை அவர்களின் மனைவியும், மர்ஹூம் N.K.M காதர் முகைதீன், மர்ஹூம் N.K.M முஹம்மது யூசுப், மர்ஹூம் N.K.M முஹம்மது ஆரிப் ஆகியோரின் சகோதரியும், சம்சுதீன் அவர்களின் தாயாருமாகிய தங்கச்சிமா என்கிற ஹாஜிமா ஹாஜராம் பீவி அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக அண்ணாதுரை பொறுப்பேற்பு !

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக திரு. ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (31.07.2016) மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்துத்துறை திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செம்மையாக செயல்படுத்தப்படும். விவசாயம் அதிகம் நடைபெறும் மாவட்டம் என்பதால் விவசாயப் பணிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  பொது மக்களின் குறைகளை தீர்க்கவும், பெறப்படும் பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  மாவட்டத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளவர்கள் மற்றும் பொது மக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு.ஆ.அண்ணாதுரை அவர்கள் இதற்கு முன் சென்னை மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற திரு.ஆ.அண்ணாதுரை அவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம்,  மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் திரு.ஜெய்னுலாப்தீன் (பொது), திரு.சொக்கலிங்கம் (விவசாயம்), மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கங்காதரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கோபு, திருமதி.சித்ரா  (ஊ.வ), மற்றும்  அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் பணியாளர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கண்டியூர் தர்ஹா தோப்பு விபத்து: அபுதாபி அய்மான் சங்கம் உதவி

தஞ்சை மாவட்டம் கண்டியூர் கிராமம் தர்கா தோப்பு பகுதியில் கடந்த புதனன்று தீ விபத்து ஏற்பட்டது. ஒருவர் உயிரிழந்தார் 70 வீடுகள் தீக்கிரையாயின.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உணவு உடை போன்ற அன்றாட தேவைகளுக்காகவும், சாம்பலான வீடுகளை புதுப்பித்து தருவதற்காகவும் அபுதாபி அய்மான் சங்கம் உதவி செய்துள்ளது.

அய்மான் உறுப்பினர்கள் மனமுவந்து அளித்த பொருளுதவியை (ரூபாய் எழுபதாயிரம் ) கடையநல்லூர் முஸ்லிம் லீக் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ.எம். அபுபக்கர் மூலம் கண்டியூர் ஊர் தலைவரிடம் அளிக்கப்பட்டது

Saturday, July 30, 2016

காது 'கடிகள்' - ஒரு பார்வை

பொதுவாக இரகசியம் பேசிக் கொண்டிருப்போரை காதை கடிக்கிறார்கள் என்பதாக சொல்வோம். மனைவிமார்கள் கணவன்மார்களின் காதைக் கடித்தால் ஒன்று பர்ஸ் காலியாகும் அல்லது குடும்பம் பனலாகும் என்பது எழுதப்படாத பொது விதியாகிவிட்டது.

நமதூர் அதிரையில் சுமார் 30 வருடங்களுக்கு முன் இரு சிறுவர்களுக்கிடையே செடியன்குளத்தில் நடந்த சண்டையில் ஒருவரின் கடிக்கப்பட்ட காது தனியாக வந்தது பின்பு மருத்துவரால் இணைக்கப்பட்டது. கடி வாங்கிய சகோதரன் இன்று துபாயில் பணிபுரிகிறார் அவரை பார்க்கும் போதெல்லாம் என் கண்கள் அவர் காதை கவனிக்கும்.

ஒரு முறை 1997 ஆம் ஆண்டு அமெரிக்கா, லாஸ் வேகாஸில் நடந்த உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியின் போது மைக் டைசன் தன்னுடன் மோதிய இவான்டர் ஹோலி ஃபீல்டின் காதை கடித்துத் துண்டாக்க, மைக் டைசனின் குத்துச் சண்டை வாழ்வே அத்துடன் அஸ்தமித்துப் போனது.

தற்போது, துபாயில் குடிபோதையில் ஒரு இந்தியர் சக தொழிலாளியின் காதைக் கடித்ததன் பரிசாக 9 மாத ஜெயிலுடன் திர்ஹம் 2 ஆயிரம் தண்டமும் கட்ட வேண்டும் என துபாய் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிரை அமீன்

ஷார்ஜாவில் தொழிலாளர் நல விழிப்புணர்வு பிரச்சாரம் !

அமீரகத்தில் 'வீடுகட்டி' அடிக்கும் வெயில் வாட்டி வருவதால் வெளிப்புறங்களில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உச்சி வெயில் அடிக்கும் போது (பகல் 12.30 முதல் மாலை 3 மணி வரை) கட்டாய இடைவேளை (ஓய்வு) விடும் சட்டமும் நடைமுறையில் உள்ளது. இதனை மீறும் நிறுவனங்கள் சுமாhம் 5000 அபராதம் செலுத்த நேரிடும் மேலும் அதிகமான தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் 50000 வரை அபராதம் அதிகரிக்கும்.

ஷார்ஜா தொழிலாளர் நிலை மேம்பாட்டு ஆணையம் (The Sharjah Labour Standards Development Authority) சார்பாக தொழிலாளர் நல விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் 'நாங்கள் உங்கள் நலனின் மீது அக்கறை கொள்கிறோம்' (We Care for Your Comfort) என்ற சுலோகத்துடன் வெயில் நேரத்தில் குளிர் சுகமளிக்கும் ஜாக்கெட் ஒன்றும் பல்வேறு மொழிகளில் 'உச்சி வெயில் நேரத்தில் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கியுள்ள உரிமைகள்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களுடன் பரிசுப் பொருட்களும் ஷார்ஜா பல்கலைகழக சுற்றுப்புறங்களில் விநியோகிக்கப்பட்டன.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

துபாயில் இனி DEWA சேவைகளைப் பெற வீட்டு வாடகை ஒப்பந்த சான்றிதழ் அவசியம் !

அமீரகத்தில் வாழும் 80 சதவிகிதத்தினர் சம்பாத்தியம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள வெளிநாட்டினரே. இவர்களில் குறைந்த ஊதியத் தொழிலாளர்கள் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் உறைவிடங்களில் வாழ்கின்றனர். இன்னும் பலருக்கு குடும்பத்துடன் வாழ்வதற்கான வசதிகளை நிறுவனங்களே செய்து தரும். இன்னும் பலர் நிறுவனங்கள் தரும் வீட்டு வாடகையை பணமாக பெற்றுக் கொண்டு தங்களின் வசதிகளுக்கேற்ப பழைய / புதிய வில்லாக்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வாழ்வர். இன்னும் பலர் ஒரே பிளாட்டை பகிர்ந்து கொண்டும் சமாளித்து வருகின்றனர்.

பெருவாரியான தனிக்கட்டை ஊழியர்கள் சிரமத்தை தினமும் சகித்துக் கொள்ளும் பலர் வாழும் அடுக்குக்கட்டில் அறை வாழ்க்கைக்கும் இன்னும் சிலர் எக்ஸிகியூட்டிவ் அறை வாழ்க்கை என தங்களுக்குத் தாங்களே மனதை தேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

சுயதொழில் நிறுவனங்களை நடத்தும் சிறு, குறு, பெரு தொழிலதிபர்களும் அவரவர் வசதிக்கேற்ப வாழ்விடங்களை தேர்வு செய்து கொள்வர்.

மேற்சுட்டியபடி வாழ்வோர்கள் DEWA நிறுவனத்திடமிருந்து மின்சாரம், தண்ணீர் போன்ற இணைப்புக்களை பெற துபாய் நிலத்துறையிடம் (Dubai Land Department - DLD) நமது வீட்டு வாடகை ஒப்பந்தத்தை சமர்ப்பித்து, சான்றிதழ் வாங்கினால் மட்டுமே இனி DEWA இணைப்புக்களை பெற முடியும்.

இதன் தொடர்பில், கடந்த 2015 நவம்பர் மாதம் முதல் DEWA இணைப்புகளையும், வீட்டு வாடகை ஒப்பந்த சான்றிதழ்களையும் ஒரே இடத்தில் வழங்கும் பூர்வாங்க, சோதனை அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் "மனைகள் ஒழுங்குமுறை அலுவலகங்களில்" (Real Estate Regulatory Agency - RERA) செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து அரசு அலுவல்களையும் ஒன்றிணைக்கும் "ஸ்மார்ட் துபாய் 2021" (Vision Smart Dubai 2021) எனும் தூர நோக்கத் திட்டத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

பஸ்சில் பயணித்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் !

கொல்லம் பேருந்து நிலையம். நேற்று முன்தினம் இரவு 7.30 மணி. கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஒன்று திருவனந்தபுரத்துக்கு புறப்படத் தயாராக நிற்கிறது. அப்போது வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவர் பேருந்தில் ஏறுகிறார்.

பஸ் அருகே நின்றிருந்த லேடி கண்டக்டருக்கு அவரை எங்கேயோ பார்த்த நினைவு. கூர்ந்து கவனித்தால், அது உம்மன் சாண்டி. மாநிலத்தின் முன்னாள் முதல்வர். சேட்டா என அலறுகிறார் கண்டக்டர். அவருக்கு   கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன நடக்குதுனு ஒன்னும் புரியவும் இல்லை.கண்டக்டருக்கு நமஸ்காரம் போட்டு விட்டு,  பேருந்தில் ஏறி, ஓட்டுநர் இருக்கைக்கு பின்னே உள்ள சீட்டில் அமர்ந்து கொள்கிறார் உம்மன்சாண்டி.செக்யூரிட்டியிடம் கண்டக்டர் 2 டிக்கெட்டுகளை கொடுக்க, உம்மன் சாண்டி 'என்னிடம் பாஸ்இருக்கிறது' என ஒன்றை திருப்பிக் கொடுத்தார்.

பேருந்தில் இருந்த மற்ற பயணிகளுக்கோ உம்மன் சாண்டியை கண்ட இன்ப அதிர்ச்சி.  மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நம்முடன் பேருந்தில் வருகிறாரா என ஆச்சரியத்தில் வாயை பிளக்கின்றனர். கை கொடுக்கின்றனர். அரசியல் விவகாரம் பேசுகின்றனர். அடுத்த முறை ஆட்சியை பிடிப்பீர்களா என கேட்கின்றனர். வீட்டில் எல்லாம் சவுக்கியமா என குசலம் விசாரிக்கின்றர் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். பயணிகளின் எல்லா கேள்விகளுக்கும் உம்மனும் சளைக்காமல் பதிலளிக்கிறார்.

கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் 2 மணி நேர பயணம். சாண்டியின்  பஸ் பயணம் செய்தியாளர்களுக்கு தெரியவர, அவர்கள் காரிலும், பைக்கிலும் சாண்டியின் பஸ்சை துரத்தினர். ஆங்காங்கே பஸ்சை நிறுத்தி செய்தியாளர்களும் கேமராமேன்களும்  தொற்றிக் கொள்ள 10 ஆண்டுகளுக்கு பிறகு  உம்மன் சாண்டியின் பஸ் பயண ஆசை  குதூகலமாக நிறைவேறியது.

திருவனந்தபுரம் பேருந்து நிலையத்திலும் தகவல் அறிந்து ஏராளமான மீடியாக்காரர்கள் குவிந்து விட்டனர். பேருந்தில் இருந்து இறங்கிய உம்மன் சாண்டி, '' பஸ்சில் பயணித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. திருவனந்தபுரத்துக்கு ரயிலை மிஸ் செய்து விட்டதால் பஸ்சில் வந்தேன். முதல்வராக இருந்த வரையில் பஸ் பயணம் சாத்தியப்படவில்லை. அதற்கு நேரமும் இல்லை. இப்போது நேரம் கிடைத்துள்ளது. அதனால் பஸ்சில் போகலாம் என முடிவெடுத்தேன். இனியும் தொடர்ந்து பஸ்சில் பயணிப்பேன் ''என்றார்.

திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் உம்மன் சாண்டியை அழைத்து செல்ல கார் வந்திருந்தது. அதில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார். அண்மையில் நடந்த சட்டசபைத் தேர்தலில் கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி  வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.  முதல்வராக இருந்த உம்மன் சாண்டி பதவி விலகினார்.

நன்றி:விகடன்

மரண அறிவிப்பு [ உவைசுல் கருணை அவர்கள் ]

அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த தொழில் அதிபர் ஆஃப்ரின் நெய்னா முஹம்மது அவர்களின் மாமனார் உவைசுல் கருணை அவர்கள் இன்று திருத்துறைப்பூண்டி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு திருத்துறைப்பூண்டி பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிரையில் நாளை இறுதி ஆட்டம்: அனைவரும் பங்கேற்க அழைப்பு !

அதிராம்பட்டினம், ஜூலை 30
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 22 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 16 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த [ 07-07-2016 ] அன்று முதல் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் அதிரை எஸ்எஸ்எம்ஜி அணியோடு இராமநாதபுரம் மாவட்டம் பள்ளத்தூர் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் போட்டு சமநிலையில் இருந்தனர். பின்னர் இரு அணிகளுக்கும் டிரை ப்ரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளத்தூர் அணி வெற்றி பெற்று இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

நாளை ( 31-07-2016 ) நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் கண்டனூர் அணியோடு இராமநாதபுரம் மாவட்டம் பள்ளத்தூர் அணி மோத உள்ளது. ஆட்ட முடிவில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.  தொடர் போட்டியில் வின்னர் மற்றும் ரன்னர் அணிகள், தொடர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு பரிசுகள், கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.

இறுதி போட்டியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கால்பந்தாட்ட நிர்வாக கமிட்டி சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தி மற்றும் படங்கள்:
என். முஹம்மது ரபீக்
 

Friday, July 29, 2016

பட்டுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி வலது கையை இழந்த பள்ளிச் சிறுவனுக்கு ரூ 65 ஆயிரம் மருத்துவ உதவி !

பட்டுக்கோட்டை, ஜூலை 29
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, நேரு நகர், பூக்கொல்லையில் வசிப்பவர் ஷேக் அப்துல்லா. கஷாப் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கமருன் நிஷா. இவர்களுக்கு மகன்கள் முஹம்மது ரியாஸ் ( வயது 14 ), முஹம்மது ஆசிப் ( வயது 11 ), மகள் நபிலா ( வயது 6 ) உள்ளனர். இவர்கள் 3 பேரும் பட்டுக்கோட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முறையே 9 ம், 6 ம், 1 ம் ஆகிய வகுப்புகளில் கல்வி பயின்று வருகிறார்கள். மிகவும் ஏழ்மையான நிலையில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது மகன் முஹம்மது ஆஷிப் கடந்த மே 1 ந் தேதி வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டை ஒட்டி சென்றுகொண்டிருந்த மின் கம்பியில் இவரது வலது கை பட்டுள்ளது. இவரது உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் இவரது வலது கை முற்றிலும் செயல் இழந்தது. மேலும் முதுகு, வயிறு, தொடை பகுதி முழுவதும் பலத்த காயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களால் சிறுவனின் வலது கை முழுமையாக அகற்றப்பட்டு 2 மாதங்கள் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மின்சாரம் தாக்கி பாதிப்புக்கு உள்ளான சிறுவன் குடும்பத்தினரின் ஏழ்மை நிலை குறித்து முத்துப்பேட்டை 'சமூக ஆர்வலர்' சூனா இனா கே.எஸ்.எச் சுல்தான் இப்ராஹிம், சமூக வலைத்தளத்தில் பதிந்து இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த முஹம்மது முகைதீன் மகன் அப்துல் மாலிக், சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ முன்வந்தார். தான் பணியாற்றி வரும் துபாய் நாட்டில் உள்ள பல நண்பர்களிடம் சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டினார். இதில் அதிராம்பட்டினம், மேலத்தெரு பகுதியை சேர்ந்த நண்பர்கள் ரூ 65,100/- மருத்துவ நிதி வழங்கினார்கள்.

மருத்துவ நிதியை அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகளுக்கு அனுப்பி சிறுவனிடம் வழங்க கேட்டுக்கொண்டார். இதையடுத்து சங்கத் தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், துணைத் தலைவர் பி.எம்.கே தாஜுதீன், காதர் சுல்தான் ஆகியோர் மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் சிறுவனை பட்டுக்கோட்டையில் உள்ள சிறுவனின் இல்லத்தில் இன்று மாலை நேரில் சந்தித்து ரூ 65,100/- நிதியை வழங்கினார்கள். மேலும் துயரில் வாடும் சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள். சிறுவன் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்தனர். அருகில் பட்டுக்கோட்டை பல் மருத்துவர் டாக்டர் இலியாஸ், சுல்தான் இப்ராஹீம், பாரி ஹாஜியார், அப்துல் மஜீது ஆகியோர் உடன் இருந்தனர். மருத்துவ உதவியை பெற்றுக்கொண்ட சிறுவனின் தாய் கமருன் நிஷா நிதி உதவி வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நிதி திரட்டி அனுப்பிய அப்துல் மாலிக் மற்றும் நிதியை நேரில் வழங்கிய அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
 
 
 

வரப்போகிறது இந்தியாவிற்கு இ-பாஸ்போர்ட்!

லோக் சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நாட்டின் வெளிவுறவுத் துறை அமைச்சர் வி்.கே.சிங் அளித்த பதிலில், ''இ-பாஸ்போர்ட்டை நம் நாட்டில் செயல்படுத்தும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது'' என்றார்.

இ-பாஸ்போர்ட் நம்மை பற்றிய தகவல் சேமித்து வைக்கும் பெட்டகம் போல செயல்படும். போலி பாஸ்போர்ட்டுகளிடம் இருந்து விடுபெற இது உதவும்.

இ-பாஸ்போர்ட்டுடன் ஒரு எலக்ட்ரானிக் சிப் இணைக்கப்பட்டு அதில் நம் பாஸ்போர்ட்டில் அச்சிட வேண்டிய அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டு இருக்கும். இதை ஸ்கேன் செய்தால் போதும், நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் இது கொடுக்கும்.

மிக விரைவில் குடிமக்களுக்கு இதை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது, இந்திய அரசாங்கம். இதற்கான எலக்ட்ரானிக் சிப்களை தயாரிக்க (ISP) இந்தியா செக்யூரிட்டி பிரஸ்க்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அறுபது நாடுகளுக்கு மேல் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் இப்பொழுது இ-பாஸ்போர்ட் இந்தியாவிற்கும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: விகடன்

மக்கா, மதினா புனிதத் தலங்களில் போகிமான் விளையாடும் கூறுகெட்டவர்கள்

யூத இலுமினாட்டினரின் முக்கிய திட்டங்களில் ஒன்று மக்களை வீண் விளையாட்டுக்களின் பக்கம் திசை திருப்பி இளைய சமுதாயத்தின் மூளையை மழுங்கடிப்பது அதனால் தான் இஸ்ரேலியர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு மட்டும் கார்ட்டூன் விளையாட்டுக்களை தடை செய்திருப்பது ஆனால் இவை போன்ற பயனற்றவைகளை உலகிற்கு அறிமுகம் செய்வதும் யூத கும்பல் தான்.

கார்ட்டூன் விளையாட்டுக்களின் நீட்சியாக தற்போது 'போகிமான் கோ' எனப்படும் ஆண்ட்ராய்டு போன் விளையாட்டு தற்போது அமெரிக்கர்களை கிறுக்கிப் பிடித்து நிஜமாகவே 'தெருத்தெருவாக, வீடுவீடாக, சந்து பொந்துகள் என அலைய' விட்டுக் கொண்டுள்ளது மேலும் கார்ப்பரேட் வியாபார கும்பலின் விளம்பர யுக்தியால் உலகளவில் வேகமாய் பரவி வரும் அதேவேளை பல நாடுகள் இதன் ஆபத்தை உணர்ந்து தடை செய்தும் வருகின்றன.

இந்த ஷைத்தானிய விளையாட்டு நமது இரு புனித ஹரம் ஷரீஃப் பள்ளிகளையும் விட்டு வைக்கவில்லை, புதிய மடாஃப் பகுதியில் 5 பேர் போகிமான் விளையாடி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும், போகிமான் இணையதள சவூதி குழுவினர் ஆய்வு செய்த போது இரு புனித ஹரம் பள்ளிகளின் வாசற்கதவுகள், கஃபாவின் மேல் தளம் என இந்த விளையாட்டு தொடர்புபடுத்தப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, புனித ஹரம் ஷரீஃபுகளான மக்கா, மதினா பள்ளிகளின் புனிதத்தன்மை, நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பு அனைத்தும் கேள்விக்குறியாகி வருவதாகவும், ஜிபிஎஸ் சிஸ்டத்தில் கூகுள் மேப் இணைப்பில் இயங்கும் இந்த விளையாட்டை உடனே சவூதியில் தடை செய்ய வேண்டும் என பல மார்க்க அறிஞர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர், இது தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் எச்சரித்துள்ளனர்.

மேலும், இரு புனித ஹரம் ஷரீஃபிலும் சமீபகாலமாக போட்டோ, வீடியோ, செல்ஃபி எடுத்தல் என சகட்டுமேனிக்கு பெருகி தற்போது போகிமான் விளையாட்டு வரை நீண்டுள்ளதால் மொத்தமாகவே மொபைல் போன் பயன்பாடுகளை இரு புனித ஹரம் ஷரீஃப் மஸ்ஜிதுகளின் புதிய மடாஃப் ( Mataf ) பகுதியில் தடை செய்யவும் அல்லது 3G 4G போன்ற சேவைகளை இரு புனிதப்பள்ளிகளை சுற்றி நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக எழுந்து வருகிறது.

Source: Arab News
Dated: 28.07.2016
தமிழில் நம்ம ஊரான்

திருவாரூர் - காரைக்குடி இடையே அகல ரயில் பாதை பணி 4 ஆண்டாக இழுத்தடிப்பு !

காரைக்குடி- திருவாரூர் இடையே உள்ள 145 கி.மீ. தூரத்தை அகல பாதையாக்கும் பணி 4 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருவதால் 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, குடந்தைக்கு அடுத்தபடியாக பெரிய நகரம் பட்டுக்கோட்டை.  வளர்ந்து வரும் நகரம். நகரை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் விவசாயம் முக்கிய தொழில். இதற்கு அடுத்தபடியாக விளங்குவது மீன்பிடி தொழில். ஆங்கிலேயர் ஆட்சியில் அதாவது 114 ஆண்டுகள் முன்பிருந்தே 1902 அக்டோபர்  20ல் துவங்கி இங்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

1902ம் ஆண்டு மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு மீட்டர்கேஜ் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அன்று முதல் பட்டுக்கோட்டை சென்னையுடன் ரயில் மூலம் இணைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி- திருவாரூர் இடையே காரைக்குடி, கண்டனூர் புதுவயல், வாளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயிங்குடி, மேற்பனைக்காடு, பேராவூரணி, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, திருநெல்லிக்காவல், மாவூர், திருவாரூர் ஆகிய 18 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வந்தன. இதில் காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய மூன்றும் சந்திப்பு நிலையங்கள்.

இவ்வழித்தடத்தில் சென்னையிலிருந்து காரைக்குடிக்கு கம்பன் எக்ஸ்பிரசும், சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வரை சேது எக்ஸ்பிரசும் இயக்கப்பட்டது. இதன் மூலம் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இந்த வழித்தடத்தில் பயணித்தனர். இந்த பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் அதிக அளவில் வந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக இருந்தது. இங்கு அதிகமாக விளையும் நெல் , உப்பு, மீன், கருவாடு, தேங்காய் போன்றவை வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்க வசதியாக இருந்தது. இந்தியா முழுவதும் மீட்டர்கேஜ் பாதைகள் ஒழிக்கப்பட்டு அகலப்பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பாதை வசதியை பட்டுக்கோட்டைக்கும் கொண்டு வருவதற்காக 14-3-2012ம் தேதியுடன் இந்த வழித்தடத்தில் மீட்டர்கேஜ் ரயிலுக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது.

அடுத்த சில மாதங்களில் அகல ரயில்பாதை வந்து விடும் என இப்பகுதி மக்கள் கனவு கண்டார்கள். ஆனால் 4 ஆண்டுகளும், 4 மாதமும் உருண்டோடியும் இன்னும் அகலப்பாதை பணி முடியவில்லை. சுமார் 145 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடத்தில் அகலப்பாதை பணி நிறைவேற்ற மொத்த திட்ட மதிப்பீடு ரூ.506.73 கோடி என திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் முயல் வேகத்தில் தான் துவங்கியது.

முதல்கட்டமாக காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலான புதிய பாலங்கள், கட்டிடங்கள், பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டன.இந்த வழித்தடத்தில் 50 சதவீத பணிகள் தான் முடிந்து உள்ளது. அதன்பின் பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூருக்கு பாதை அமைக்கும் பணி மந்த கதிக்கு சென்று விட்டது. இங்கு 10 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை. 110 ஆண்டுகளாக ரயிலை பயன்படுத்தி வந்த மக்கள் இப்போது தங்கள் ஊர்களில் இருந்து ரயிலில் பயணிக்கும் வாய்ப்பை இழந்து விட்டனர்.இதனால் அன்றாடம் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த பகுதியில் உள்ள 18 ரயில் நிலையங்களிலும் பணியாற்றிய ஊழியர்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர்.

ரயில்வே துறையில் நிதி ஒதுக்கப்பட்டும் ஏன் இந்த பணி மந்தகதியில் நடக்கிறது என விசாரித்தபோது ரயில்வே லைனை உயர்த்த மண் போடவேண்டும். இந்த மண் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. அருகில் உள்ள குளம், ஏரிகளில் இருந்து மண் எடுத்தால் ஏரியும் ஆழமாகும். அதிகமாக நீர் தேக்கலாம். இந்த யோசனை முன்வைக்கப்போதிலும் பணி இன்னும் நடக்கவில்லை. இதிலும் அரசியில் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது.  மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். உடனடியாக இந்த பாதை பணிகளை முடித்து அகல பாதையில் ரயிலை இயக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

நன்றி:தினகரன்

ஊருக்குள்ளே ஒரு வன உயிரின பூங்கா ! இது துபாயின் பாலைவன புரட்சி !!

மண்மேடுகள் வான்முட்டும் கோபுரங்களாக எழுந்தன, சர்வதேச வியாபார சந்தையாய் செழித்தது, பெட்ரோல் இன்றியே செல்வம் பெருக்கெடுத்தது, ஒட்டகங்கள் காட்சிப் பொருளாக மாற வாகனங்கள் சாலைகளில் பறந்தன, காய்ந்த ரொட்டிகளும் பேரீத்தம் பழங்களும் வரலாறாகி போக அனைத்துலக உணவு வகைகளும் மிக எளிதாய் சாலை ஒரம் கிடைத்தது, துபையின் செல்வத்தால் பன்னாட்டு அந்நிய செலாவணிகளும் உயர்ந்தன!

சுமார் 60 வருடங்களுக்கு முன் மனிதர்களே வாழ யோசித்த மண் இந்த துபை ஆனால் இன்று உலகெங்கிலுமிருந்து மக்கள் வந்து வாழ்ந்து சுவாசிக்கும் மண்ணாக மாறியது விந்தையே! இந்த பாலைவனத்தில் ஓர் நவீன சோலைவனத்தை காட்டு மிருகங்களுக்கும் உருவாக்கி இன்னும் வளர்வோம் என்ன பந்தயம் என கட்டி நிற்கிறது!

ஆம், வரும் அக்டோபர் மாதம் 2016 முதல் துபாய் அல் வர்கா பகுதியில், சுமார் 1 பில்லியன் திர்ஹம் செலவில், 119 ஹெக்டேர் பரப்பளவில், புதிய தொழிற்நுட்பத்தில் மிருகங்களுக்கான 5 நட்சத்திர வன உயிரியல் பூங்கா 'துபாய் சஃபாரி' எனும் பெயரில் செயல்படவுள்ளது.

10,500 மிருகங்களை பாராமரிக்கும் வசதியுள்ள இதில் ஆரம்பமாக உலகெங்கிங்கிலுமிருந்தும் கொண்டு வரப்படும் சுமார் 5000 மிருகங்கள், பறவையினங்களுடன் துவங்கவுள்ள இந்தப் பூங்காவில் குளிரூட்டப்பட்ட செயற்கை நகரும் பாறைகள் சிங்கம் புலிகளுக்காக, செயற்கை மூடுபனியை உருவாக்கும் பாறைகள் சிறுத்தைகள் கழுதை புலிகளுக்காக, குளிர்நீர் குளங்கள் நீர்யானை, காட்டெருமை, மான் இனங்களுக்காக, சாரல் நீர் வழியும் மிருகங்களின் தங்குமிடங்கள் என பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவை சுற்றிப்பார்க்க சுமார் 8 மணிநேரமாகும் என்பதால் இங்கேயே மிருகங்களின் நடமாட்டங்களை நேரில் ரசித்தவாறு சாப்பிட 4 உணவகங்கள், குறைந்தது 2 நாட்களாவது பூங்காவினுள்ளேயே தங்கி இளைப்பாறி செல்ல ஏதுவாய் நட்சத்திர ஹோட்டல்கள், பூங்காவிற்கு தேவையான ஒரு பகுதி மின்சாரத்தை தயாரித்துக் கொள்ள சோலார் பேனல்கள் அதன் கீழேயே கார் பார்க்கிங் வசதிகள், 1000 சீட் வசதியுள்ள தியேட்டரில் மிருகங்களை பற்றியும் 300 சீட் வசதியுள்ள இன்னொரு தியேட்டரில் பறவைகள் குறித்தும் கல்விசார் படங்கள் காணும் வசதி, தண்ணீரில் வாழும் மிருகங்களை தண்ணீருக்குள்ளேயே சென்று காணும் வசதி, துபாயின் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப மாற்றப்படும் பூங்காவின் வேலைநெரங்கள், பல்வேறு மிருகங்களையும் நடந்தே இயற்கையாய் காணும் வசதி என அனைத்து மிருகங்களும் அதனதன் இயற்கை சூழலை உணரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

துபாய் சஃபாரி இன்னுமோர் மணிமகுடம்.

Source: 7 days
தமிழில் நம்ம ஊரான்
 

Thursday, July 28, 2016

சென்னையில் அதிரையர் வஃபாத் !

அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.மீ.மு முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது அலியார் ( கொழும்பு ரயில் ), நெய்னா முஹம்மது, மர்ஹூம் உவைசுல் கருணை, அஹமது கபீர் ஆகியோரின் சகோதரரும், அஹமது அன்வர் அவர்களின் தகப்பனாருமாகிய சாகுல் ஹமீது அவர்கள் இன்று சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இறுதி போட்டியில் விளையாட கண்டனூர் அணி தகுதி !

அதிராம்பட்டினம், ஜூலை 28
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 22 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 16 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த [ 07-07-2016 ] அன்று முதல் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் தஞ்சாவூர், கண்டனூர் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் கண்டனூர் அணி வெற்றி பெற்று இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

முன்தாக லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சாரா அஹமது, சமூக ஆர்வலர் மரைக்கான் ஆகியோர் இரு அணி வீரர்களுக்கு கை குலுக்கி ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

நாளை நடைபெற உள்ள அரை இறுதி ஆட்டத்தில் அதிரை எஸ்எஸ்எம்ஜி அணியோடு இராமநாதபுரம் மாவட்டம் பள்ளத்தூர் அணி மோத உள்ளது. வழமை போல் இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள், பொதுமக்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
ரபீக்