Pages

Thursday, August 11, 2016

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை விரிவாக்கப் பணிகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்க வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 11
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணியினை விரைவுப்படுத்தக்கோரி அதிராம்பட்டினத்தில் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் சாரா திருமண மஹாலில் கடந்த 31-07-2016 அன்று நடந்தது. கூட்டத்தில் அகல ரயில் பாதை பணிகள் தாமதத்திற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பட்டுக்கோட்டை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை விரிவாக்கப் பணிகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வரின் தனிபிரிவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை வாழ் சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அயல் நாடு வாழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதமாக அனுப்ப அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடிதத்தின் மாதிரி
அடைதல்
மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள்,
சிறப்பு பிரிவு ( CM Cell )
தலைமைச் செயலகம்,
தமிழ்நாடு அரசு,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை.

மாண்புமிகு அம்மா,

பொருள் : தஞ்சாவூர் மாவட்டம்,  திருவாரூர் - காரைக்குடி அகல இருப்புப்பாதை விரிவாக்கப் பணிகளுக்கு  மண் எடுக்க அனுமதி வழங்கப்பட வேண்டுதல் சம்பந்தமாக. 

காரைக்குடி - திருவாரூர் இருப்புப்பாதையில், மீட்டர் காஜ் ரயில் பாதையை அகல இருப்புப்பாதையாக மாற்றும் பணி 14.04.2012  முதல் துவங்கப் பெற்று நடைபெற்று வருகிறது. 114 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இப்பாதையில் 4 வருடங்களாக பயணிகள் ரயில் இயங்கவில்லை. 2006 முதல் இப்பகுதியிலிருந்து சென்னைக்கு செல்லும் விரைவு ரயில்கள் இயங்கவில்லை. இதனால் நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த யாத்ரீகர்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள், மாணவர்கள், நோயாளிகள், பெண்கள், பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயப்பொருட்கள், உணவு தானியங்கள், கடல் உணவு பொருட்களான மீன், கருவாடு, உப்பு போன்ற பொருட்களை, அனுப்புவதிலும் சிரமம் ஏற்பட்டுவருகிறது. இப்பகுதி மக்கள், மதுரை, சென்னை, இராமேஸ்வரம் போன்ற தொலைதூர ஊர்களுக்கு பயணம் செல்வதிலும் பெரும் இடர்பாடு உள்ளது.

இரயில்வே துறையின் சார்பில், காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரையில் புதிய பாலங்கள், இருப்புப் பாதை நிலையங்கள், பிளாட்பாரங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. தண்டவாளங்கள், கருங்கல்& ஜல்லிகள், சிலிப்பர் கட்டைகளும் இருப்புப்பாதை பணிக்கு வந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இருப்புப்பாதை நிலையங்களின் நடைமேடை மற்றும் இருப்புப்பாதைகளை மேடு செய்ய மண் தேவைப்படுவதாக அறிகிறோம். மண் கிடைத்தால் இப்பணி விரைவில் முடிந்து தொடர்வண்டிகள் இயங்கத் தொடங்கி விடும்,

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள், இப்பகுதி 5 மாவட்ட மக்களின் மேல் கருணை கொண்டு, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறைக்கு தக்க ஆணையினை பிறப்பித்து, இருப்புப்பாதை அமைக்கும் பணிக்கு, இருப்புப்பாதைக்கு அருகில் உள்ள ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் மழைகாலம் துவங்குமுன், மண் எடுக்க அனுமதி வழங்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டுகிறோம்.

ஏரிகளில் மண் எடுப்பதால், நீர்நிலைகள் ஆழப்படுத்தப்படும். இதனால் வெள்ளக்காலங்களில் மழை நீர் கடலுக்கு செல்லாமல் சேமித்து வைக்கப்படும். வெள்ள சேதம் தவிர்க்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் கடலோர கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. வேளாண்மைக்கும், கால்நடைக்கும் மிக்க பயனுள்ளதாக இருக்கும். உள்ளூர் நீர்நிலைகளில் மீன்வளம் பெருகும். மேலும், மாண்புமிகு அம்மா அவர்களின் சிறப்புத்திடமான மழை நீர் சேமிப்பு திட்டம் வெற்றி பெறும் இருப்புப்பாதை அமைக்கும் பணியினை விரைந்து முடித்திட மத்திய அரசை வலியுறுத்தவும், இதுகுறித்து  இப்பகுதி மக்கள் நேரில் அம்மா அவர்களை சந்தித்து இம்மனுவினை அளிக்க அனுமதி வழங்கிடவும் பணிவுடன் வேண்டுகிறோம்.

தங்கள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம், பட்டுக்கோட்டை

நகல்:
1. உயர்திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள்,
முன்னாள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்,
பாராளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), புது டெல்லி.
2. பாராளுமன்ற உறுப்பினர் (மக்களவை) அவர்கள்,
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி.
3. சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்,
பட்டுக்கோட்டை.
4. சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், பேராவூரணி.
5. மாவட்ட ஆட்சியர் அவர்கள், தஞ்சாவூர்.
6. உதவி இயக்குநர் அவர்கள், கனிமவளத்துறை.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...