Pages

Sunday, September 4, 2016

'நல்லாசிரியர்' தேர்வு செய்யும் தகுதி பெற்றவர்கள் மாணவர்கள் மட்டுமே: முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன்

அதிராம்பட்டினம், செப். 05
இன்று  செப்டம்பர் 5 ம் நாள் கல்வியில் சிறந்த மேதையும், நமது நாட்டின் இரண்டாம் குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி டாக்டர் எஸ். இராதகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்.

டாக்டர் இராதகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில் அவரிடம் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் அவருடைய பிறந்த நாளை கொண்டாட எண்ணி அவரை அணுகியபோது, தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார். அவ்வண்ணமே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் நாள் நாடெங்கிலும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து வகை கல்விக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியை அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசிரியர் தினத்தையொட்டி, கல்வி பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் சில செய்திகளை இணையதள வாசகர்களுக்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். உலகில் எத்தனையோ செல்வங்கள் இருந்தாலும், கல்விச்செல்வமே சாலச்சிறந்தது என்பதை அறநூல்கள் பல கூறுகின்றன.
'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே' என்று கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. 'நறுந்தொகை', 'கேடில் விழுச்செல்வம் கல்வி' எனச்சிறப்பித்துக் கூறுகிறது திருக்குறள். 'கற்றாரும் கல்லாதாரும் சமமாக முடியுமா?' என வினா எழுப்புகிறது 'இறைமறை'

'ஒரு தேசத்தின் தலைவிதியானது வகுப்பறைகளில் தான் முடிவு செய்யப்படுகிறது' எனக்குறிப்பிடுகிறது 1961 ல் அமைக்கப்பட்ட டாக்டர் கோத்தாரிக் கல்விக் குழுவின் அறிக்கை. மாணவர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் இடத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

'ஆசிரியர் இல்லாமல் கல்வி ஏது?', 'அறிவுக் கண்களைத் திறப்பவர் ஆசிரியர்', 'ஆசிரியர் பணி அறப்பணி', என்றெல்லாம் ஆசிரியர்களுக்குச் சமுதாயம் அளித்திருக்கும் இடம் உன்னதமானது. இந்த இடத்தை தவறாமல் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறது. 'அறிவும், ஆற்றலும், ஒழுக்கமும் மிக்கவர்களாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்' என நாடு எதிர்பார்க்கிறது.

நல்லாசிரியர்களாக என்றும் எல்லோராலும் மதிக்கப்படுவர். ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகளால் தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டுமே நல்லாசிரியர் அல்லர். பல நேரங்களில் அத்தேர்வுகள் எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாவதை நாடே அறியும்.

ஒரு ஆசிரியரை 'நல்லாசிரியர்' என்று சொல்லுகின்ற தகுதி படைத்தவர்கள் மாணவர்கள் மட்டுமே. ஆசிரியர் தங்களிடம் எப்படி அன்புடன் அல்லது கண்டிப்புடன் இருந்தார்; பாடம் போதிப்பதில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டினார்; பாடத்திட்டத்துக்கு வெளியிலான எத்தனை நல்ல நூல்களை அறிமுகம் செய்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தார்; எத்தனை ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டியாக இருந்தார்; உடன் பணிபுரியும் சக ஆசிரியர், ஆசிரியைகளுடன், சந்திக்க வரும் பெற்றோர்களுடனும் நடந்து கொண்ட விதம், பேசியவிதம் எவ்வாறு இருந்தது என்பதையெல்லாம் நேரில் காணும் வாய்ப்புள்ள மாணவர்கள் மட்டுமே நல்லாசிரியரை நேர்வு செய்யும் தகுதி பெற்றவர்களாக இருக்க முடியும்.

ஒரு ஆசிரியரை அவர் சொன்ன வார்த்தைக்காக, அவருடைய பண்புக்காக, நடத்தைக்காக, அவர் சொல்லித்தந்த கல்விக்காக ஒரு மாணவன் தன் வாழ்வின் பல தேர்வுகளில் திரும்பத் திரும்ப நினைவுகூற முடிகிறது என்றால் அந்த ஆசிரியர் நிச்சயமாக நல்லாசிரியர்தான் - அரசு விருது பெறாதபோதிலும்.

ஆசிரியர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் ( ஓய்வு )
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

3 comments:

 1. முன்னால் தலைமை ஆசிரியர் மிகவும் நல்லவர் பண்பாலர் அமைதி தன்மையை பின் பற்றுபவர்.

  ReplyDelete
 2. இன்று 05 SEP 2016 ஆசிரியர் தினம் என்று தெரியாது....! நாங்கள் மறந்து இருந்தாலும்....! அதை எல்லோரும் அறியும்படியாக நினைவு படுத்தும் விதமாக ஒரு ஆக்கத்தை எழுதி அதிரை நியூசில் பதியவிட்டு எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி....! அதாவது பழைய நினைவலைகளில் கொண்டு சென்ற உயர்தகு ஜனாப் எஸ்.கே.எம். ஹாஜா முகைதீன். எம்.ஏ., பி.எஸ்.சி., பி.டி. தலைமை ஆசிரியர் ஓய்வு, அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றேன்.

  அருமையான தலைப்பு, அழகான வரிகளின் அணிவகுப்பு, இலகுவாக விளங்கும்படியான தொகுப்பு. இது அவர்களின் தனித்துவத்தை விளக்குகிறது.

  காலங்கள் கடந்து சென்றாலும், ஐயா உங்களின் கருத்தோவியங்கள் எங்களை ஒருக்காலும் விட்டு அகலாது.

  இந்த ஆசிரியர்கள் தினத்தில் அனைத்து ஆசிரியர்களையும் என்னுள்ளம் பொங்கிவரும் பூம்புனல்போல் இன்பத்தால் பூரித்து வாழ்த்துகிறது.

  ReplyDelete
 3. அன்புமிகு ஆசான் அதிரையின் கல்வி
  இன்பமிக பேசுவார் இதயத்தால் சொல்லி
  நன்பனாக பழகினார் நம்ஆசான் நன்றி
  என்றுமவர் வாழ்கவே இதயசுகம் ஊன்றி.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...