.

Pages

Monday, October 31, 2016

அபுதாபியில் சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டுவோருக்கு பரிசு கூப்பன்கள் !

அதிரை நியூஸ்: அபுதாபி, அக்-31
அபுதாபி போக்குவரத்து காவல்துறையினர் Happiness Patrol Project எனும் மகிழ்ச்சியான ரோந்து திட்டம் என்ற புதிய போலீஸ் பிரிவை துவக்கியுள்ளனர். இந்தத் திட்டத்திற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ரோந்து வாகனத்தில் வரும் போலீஸார் உங்களை இடைமறித்து நிறுத்தினால் அதிகபட்சம் உங்களுக்கு ஆச்சரிய பரிசு கூப்பன் தருவதற்காகவே இருக்கும் என்றாலும் சிலவேளை சாலை விதிகளை மீறுவோரையும் இவர்கள் நிறுத்தி அபராத கூப்பனையும் தர அதிகாரம் பெற்றவர்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.

நீங்கள் சாலை விதிகளை மதித்து வாகனத்தை கவனமாக ஓட்டுகின்றீர்களா என்பதை உன்னிப்பாக கவனிக்கும் இந்த போலீஸ் பிரிவினர் தரும் சுமார் 300 திர்ஹம் பெறுமானமுள்ள பரிசுக் கூப்பன்களை பிரபல மால்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பரிசுப் பொருட்களாக பெற்றுக் கொள்ளலாம் அதேவேளை சிறிய அளவில் சாலை விதிகளை மீறினால் அன்புடன் கண்டித்து அல்லது கால்பந்து விளையாட்டில் உள்ளது போல் மஞ்சள் அட்டையை வழங்கி எச்சரித்து அனுப்புவர்.

இந்த திட்டத்தின் கீழ் வாகன ஓட்டுனர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வாகனப் பயணிகள் மற்றும் பாதசாரிகளும் கண்காணிக்கப்படுவர்.

இன்டிகேட்டர் போடாமல் லேன் மாறுவோர், தவறாக பார்க்கிங் செய்வோர், வாகன அனுமதியை புதுப்பிக்காதவர்கள், ஓட்டுனர் அனுமதியை புதுப்பிக்காதவர்கள், இரவில் முன்விளக்கை எரிய விடாதோர், அனுமதிக்கப்படாத இடத்தில் ரோட்டின் குறுக்கே நடந்து செல்வோர் என 27 வகையான சிறு குற்றங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அட்டை கட்டாயம் வழங்கப்படும்.

அதேவேளை பெருங்குற்றங்களான அதிக வேகம், போதையில் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்குரிய அபராதம் மற்றும் தண்டனைகளையும் தர வல்லவர்கள் இந்த போலீஸார் என்றாலும் இவர்களுடைய நோக்கம் சாலை விதிகளை மதிக்கும் உங்கள் முகங்களில் புன்னகையை மட்டுமே.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

உயிருக்குப் போராடிய குழந்தையை காப்பாற்றிய நிஜ ஸ்பைடர்மேன் !

அதிரை நியூஸ்: அக்-31
கிழக்கு சீனாவின் ஷன்டொங் மாகாணத்தின் லியாவ்செங் என்ற நகரைச் சேர்ந்த சீனர் 'லியாங் லெய்' என்பவர் அடுக்குமாடி கட்டிடத்தில் ஜன்னலின் இரு கம்பிகளுக்கிடையே கழுத்து மாட்டிய நிலையில் தொங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை, தனது வெறுங்கைகளால் பல மாடிகளை சரசரவென ஏறி காப்பாற்றியதால் இந்த நிஜ வாழ்க்கை ஹீரோ தற்போது சீனாவின் நிஜ ஸ்பைடர்மேன் என கொண்டாடப்பட்டு வருகிறார், அவரது சாகச வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறதாம்.


Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ( 'மீடியா மேஜிக்' நிஜாம் தகப்பனார் ஹாஜி கு.மு சாகுல் ஹமீது அவர்கள் )

அதிராம்பட்டினம், மேலத்தெரு மர்ஹூம் கு.மு குஞ்சாலி அப்பா என்கிற முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகனும், மர்ஹூம் 'தூண்டியப்பா' என்கிற எம்.எம் முஹம்மது சரீப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் கு.மு ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் கு.மு நெய்னா முஹம்மது ஆகியோரின் சகோதரரும், அப்துல் ஹமீது, மர்ஹூம் அட்டாக் என்கிற அப்துல் வாஹீது, மர்ஹூம் எம்.எம் அபுல் ஹசன், எம்.எம் அப்துல் அஜீஸ் ஆகியோரின் மச்சானும், சி.மு ஜஹாங்கீர், எம்.எஸ் சேக்பரிது ஆகியோரின் மாமனாரும், தாஜுதீன், ஜாஹிர் உசேன், ஜமீல் ரஹ்மான், சகாபுதீன், நிஜாமுதீன் ( மீடியா மேஜிக் ), அமீருதீன், நஜ்முதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி கு.மு சாகுல் ஹமீது அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

TNTJ ( அமீரகம், அதிரை ) அமைப்பின் முக்கிய அறிவிப்பு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமீரகம் - துபாய் வாழ் அதிராம்பட்டினம் கூட்டமைப்பின் புதிய நிர்வாகத் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 04-11-2016 வெள்ளிகிழமை அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 4 மணி அளவில் தேய்ரா ஒட்டக மஸ்ஜித் பின்புறம் உள்ள துபை புதிய JT மர்க்கசில் நடைபெற உள்ளது.

இதில் புதிய செயல்பாடுகள் பற்றியும், அதிரையில் கிளை 1, மற்றும் கிளை 2ல் நடக்கும் தாவா பணிகள் குறித்து ஆலோசணை நடைபெற உள்ளது. மேலும் துபாய் நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. இதில் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
TNTJ அதிரை UAE துபாய் கூட்டமைப்பின் நிர்வாகக்குழு

தொடர்புக்கு: 
சலீம் - 055 9090726
மக்தும் நெய்னா- 0507397093
நசீர்- 0501545251

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் உள்ள பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் விளையாட்டு போட்டிகள் கடந்த அக்-27 ந் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வி.சுப்பிரமணியன் தலைமை வாகித்தார். விளையாட்டு போட்டிகளை மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ஐ.நாடிமுத்து துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு மானோரா பாலிடெக்னிக் கல்லூரி பொருளாளர் முகமது முகைதீன், சமூக ஆர்வலர் அப்துல் ஜலீல் ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

விழா ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் வி.சுப்பிரமணியன், முதல்வர் ஆர்.ஈஸ்வரன், மேலாளர் எஸ்.சுப்பையன் மற்றம் உடற்கல்வி ஆசிரியர் சசிக்குமார் ஆகியோர் செய்தனர். 
 

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சியை பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.சுராஜ் தொடங்கி வைத்தார். பள்ளி பட்டதாரி ஆசிரியை எஸ். மேகலா, உடற்கல்வி ஆசிரியை ஜி அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்காட்சியில் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்ற தலைப்பின் கீழ் பள்ளி மாணவிகளின் படைப்புகள் இடம்பெற்றன. இதில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான 80 மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளின் செயல்விளக்கத்தை பார்வையாளர்களுக்கு செய்து காண்பித்தனர்.

கண்காட்சிக்கு பள்ளி ஆசிரியைகள் எஸ். தையல்நாயகி, கே. அனுராதா, எம். ஹசினா நஸ்ரின் ஆகியோர் நடுவர்களாக இருந்து மாணவிகளின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.

கண்காட்சியில் இடம் பெற்று இருந்த அக்னி ஏவுகணைகள், பேரிடர் குறைப்பு, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

இக்கண்காட்சியில் பள்ளி ஆசிரியைகள் ஏ. வஜீரா பானு, எம். சரண்யா, டி. ஆரோக்கிய தமிழ் மலர், ஜெய்னம்பு நாச்சியா, புவனேஸ்வரி, இலக்கியா உட்பட பள்ளி ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

நிவாரண உதவிகளைக் கொண்டு செல்ல டிரைவரில்லா வாகனம் அறிமுகம் !

அதிரை நியூஸ்: அக்-31
பனிமலை, பாலைமணல், சதுப்பு நிலம், பாறை பகுதிகள் போன்ற எளிதில் பிற வாகனங்கள் பயணிக்க இயலாத நிலையிலும், போர், இயற்கை சீற்றம், போன்ற பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள், போர்முனையில் உள்ள வீரர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் சாலை வசதிகள் இல்லாப்பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களை முன்னிற்று வழிகாட்டி அழைத்துச் செல்லும் பைலட் வாகனம் என பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த புதிய வகை ஆளில்லா வாகனங்கள் வடிவமைக்கப்படவுள்ளன.

ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படவுள்ள இந்த டிரைவரில்லா வாகனங்களை அமீரகத்தின் மஸ்தார் அறிவியல் தொழிற்நுட்ப நிறுவனம் இங்கிலாந்து மற்றும் சுவிஸ் நிறுவனங்களுடன் இணைந்து இத்தகைய புதிய வகை ஆளில்லா வாகனங்களை அமீரகத்திலேயே தயாரிக்க ஓப்பந்தம் செய்துள்ளன.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் நவம்பர் 1 முதல் மீண்டும் பெட்ரோல் விலை ஏற்றம் !

அதிரை நியூஸ், அக்-31
சர்வதேச அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கடந்த 2 ஆண்டுகளால் பலத்த விலை வீழ்ச்சியை சந்தித்து வருவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் ஒன்றாக மாதந்தோறும் சில்லறை பெட்ரோல் விலையிலும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து வருகின்றன.

சென்ற மாதம் 6 காசுகளை விலையேற்றிய அமீரகம் வரும் நவம்பர் மாதத்திற்கான விலையேற்றம் குறித்து அறிவித்துள்ளது. அதன்படி லிட்டர் ஒன்றுக்கு கீழ்க்காணும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன,

சூப்பர் 98 – 1.81 திர்ஹத்திலிருந்து 1.90 திர்ஹம் - ஏற்றம் 9 காசுகள்

சூப்பர் 95 – 1.70 திர்ஹத்திலிருந்து 1.79 திர்ஹம் - ஏற்றம் 9 காசுகள்

ஈ பிளஸ் 91 – 1.63 திர்ஹத்திலிருந்து 1.72 திர்ஹம் - ஏற்றம் 9 காசுகள்

டீசல் - 1.76 திர்ஹத்திலிருந்து 1.91 திர்ஹம் - ஏற்றம் 15 காசுகள்

கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பின் (Opec - Organisation of petroleum exporting countries) தீர்மானங்களை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டதால் கடந்த மாதம் பேரல் ஒன்று 48 டாலருக்கு விலையேற்றம் பெற்றது தற்போது மேலும் சற்றே உயர்ந்து சர்வதேச அளவில் 49.71 டாலருக்கும், அமெரிக்காவில் 48.70 டாலருக்கும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ஓபெக் நாடுகளின் தீர்மானத்தின்படி, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்காமல் உள்நாட்டு போரை காரணம் காட்டி ஈராக்கும், சர்வதேச பொருளாதார தடையால் பாதிக்கப்பட்டதை சமன்படுத்தும் நோக்கில் ஈரானும் உற்பத்தியை குறைக்க மறுத்து வருகின்றன. மேலும் லிபியா, நைஜீரியா போன்ற அரசியல் ஸ்திரமற்ற நாடுகளும் இந்த தீர்மானத்தை எந்தளவு பின்பற்றுகிறது என்பதும் பெரும் கேள்விக்குறியே. இந்நிலையில் ஒபெக் நாடுகளின் அடுத்த கூட்டம் நவம்பர் 30 அன்று வியன்னா நகரில் கூடவுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி வாரம் அக்டோபர் 31ம் முதல் நவம்பர் 5ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபடுவதையொட்டி
அனைத்துத் துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (31.10.2016) உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்திய நாட்டின் பொதுப் பணியாளர்களாகிய நாம், நமது நடவடிக்கைகள் சார்ந்த எல்லாத் துறைகளிலும் நேர்மையும் ஒளிவு மறைவற்ற தன்மையும் இடம் பெறுவதற்கு, தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று இதனால் உளமார உறுதி கூறுவோம்.

ஊழலை அறவே ஒழித்திட நாம் வாழ்வில் இடையறாது முயல்வோம் எனவும் உறுதி கூறுவோம்.

நாம் விழிப்புடன் நமது அமைப்பின் முன்னேற்றம் மற்றும் நற்பெயருக்காக பணியாற்றுவோம்.

ஒன்றுபட்டு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வாயிலாக, நமது அரசுக்குப் பெருமை சேர்ப்பதுடன் நமது நாட்டு மக்களுக்கு உயர்நெறிகளின் அடிப்படையிலான சேவைகள் புரிவோம்.

எவ்வித அச்சமும், தயவுமின்றி நம் மனசாட்சி காட்டும் நெறியின்படி நமது கடமையை ஆற்றுவோம்.

இந்த உறுதிமொழியில் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேரகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம்,  மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேசன் அலுவலக மேலாளர் (பொது) கார்த்திகேயன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்), சுபாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Sunday, October 30, 2016

அமீரகத்திலிருந்து 48 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பும் இந்தியர் ( படங்கள் )

அதிரை நியூஸ்: துபாய், அக்-30
இது தனிப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை குறிப்பல்ல, அவரோடு பின்னிப்பிணைந்து விட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னிருந்த அமீரக வரலாற்றை, கலாச்சாரத்தை, வளர்ச்சியை சற்றே எட்டிப்பார்க்கும் காலப்பதிவு இது. விரைவான கால ஓட்டத்தை அறிந்து கொள்ள கடைசி வரை படிக்கவும்.

V.P. ஜார்ஜ் 20 வயது இளைஞனாக அமீரகத்திற்குள் 1968 ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்தபோது ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரு நாடே உருவாகியிருக்கவில்லை.

இவர் அபுதாபிக்கு வந்த 4 வது வருடத்தில் தான் அன்றைய அபுதாபி மன்னர் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் துபை மன்னர் ஷேக் ராஷித் அல் மக்தூம் ஆகியோரின் தீவிர முயற்சியால் 1971 ஆம் ஆண்டு டிசம்பர்; 2 ஆம் நாள் தனித்தனி நாடுகளாக செயல்பட்ட 7 எமிரேட்டுகள் ஒன்றிணைந்து 'ஐக்கிய அரபு அமீரகம்' என ஒரே நாடாக மாறியது.

அன்றைய அபுதாபி என்ற தனி நாட்டிற்காக இந்தியாவில் தூதரகம் கூட உருவாகியிருக்கவில்லை மாறாக அபுதாபிக்கான தூதரக வேலைகளை அன்றைய மெட்ராஸில் செயல்பட்ட பிரிட்டீஷ் துணைத்தூதரகமே (Madras British Consulate - Truce State) ஒப்பந்த அடிப்படையில் அபுதாபியின் தூதரகப்பணிகளை செய்து வந்துள்ளது.

மெட்ராஸ் பிரிட்டீஷ் துணைத் தூதரகத்தில் 1968 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அபுதாபிக்கான 1 வருட விசா பெற்றுக்கொண்டு 'பம்பாய்' வழியாக 'சிர்தானா' என்ற கப்பலில் 1 வாரம் பயணித்து துபையை வந்தடைந்துள்ளார்.

துபையிலிருந்து அபுதாபி செல்ல 'இன்று போல் அன்று பறக்கும் சாலைகள் இல்லை' நாம் கச்சா ரோடு என்றழைக்கும் கரடுமுரடான மண் சாலையிலேயே காரில் பயணித்துள்ளார்.

சூடான ஜூலை மாத இறுதியில் வந்திறங்கியவரை காலையில் கழுதை பூட்டிய வண்டியில் தண்ணீர் விற்பவரின் குரலே எழுப்பியுள்ளது ஆனாலும் நண்பரின் அறிவுரைப்படி காசு கொடுத்து தண்ணீரை வாங்காமல் அதிகாலையில் குழாயில் மெலிதாக ஒரு சில மணிநேரமே வரும் தண்ணீரை பல நாட்கள் பல மணிநேரங்கள் அரைத்தூக்கத்தில் காத்திருந்து பாத்திரங்களில் பிடித்து வைத்து பயன்படுத்தியுள்ளார்.

அன்றைக்கு பல வீடுகள் ஆஸ்பெஸ்டாஸ் கூறை வேயப்பட்ட வீடுகளே மேலும் நாளொன்றுக்கு 3 முதல் 4 மணிநேரமே மின்சாரம் வரும் மற்ற நேரங்களில் மிகுந்த சத்தமெழுப்பும் பழைய மாடல் குளிர்ச்சாதனங்கள் ஓய்வில் தான் இருக்கும்.

1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி 'ஈஸ்டர்ன் பேங்க்' என்று அறியப்பட்ட இன்றைய 'ஸ்டாண்டர்டு சாட்டர்டு பேங்கில்' கிளார்க்காக பணியில் சேர்ந்து, காசாளராக, முதன்மை காசளராக, விற்பனை பிரிவு அதிகாரி என உயர்ந்து கடைசியில் தனது 60 வது வயதில் 40 ஆண்டு சேவைக்குப்பின் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் நாள் அதே வங்கியிலிருந்தே ஓய்வு பெற்றுள்ளார்.

தனது அனுபவத்தில் எத்தனையோ நாடுகளுக்கு பயணித்துள்ள ஜார்ஜ் அமீரகம் போன்று வேறு எந்த நாடும் இவ்வளவு விரைவான வளர்ச்சியை பெறவில்லை என சிலாகிக்கின்றார். (ஆனால் அமீரகத்திற்கு முன் வளர ஆரம்பித்த நம்ம இந்தியா இன்னும் வளரும் நாடுகளின் பட்டியலிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டது)

அமீரகத்தில் 1970 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக வங்கியில் கால்குலேட்டர் பயன்பாட்டுக்கு வந்தது மேலும் 1980 ஆம் ஆண்டு முதலே கம்ப்யூட்டர்கள் வங்கியில் பெரும் வரவேற்புடன் பயன்படுத்தப்பட்டன.

வங்கிப்பணி ஓய்வுக்குப்பின் தனியார் நிறுவனத்தில் நிதித்துறை மேலாளராக பணியாற்றியவர் இந்த மாதத்துடன் ஓய்வு பெற்று நவம்பரில் இந்தியாவுக்கு திரும்பச் செல்கிறார் ஆனாலும் அவருடைய 3 பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என அனைவரும் அமீரகத்தில் பெரும் பதவிகளில் உள்ளனர்.

உங்களுடைய பார்வைக்காக அவருடைய பழைய பாஸ்போர்ட்கள், மெட்ராஸ் பிரிட்டீஷ் துணைத் தூதரகம் வழங்கிய அபுதாபி விசா, இவரை குறித்து பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி மற்றும் பல...

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 

உலக குடும்பவியலில் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம் - தலாக் !

ரேபிய துணைக் கண்டத்தில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு இருண்ட காலம் என்பது அனைவரும் அறிந்ததே. அது குடும்பவியலில் நிறையவே பாதிப்பை உண்டாக்கியிருந்தது. அரேபியர்கள் பலதார மணங்களில் ஈடுபட்டிருந்தனர். பெண்களை ஒரு அடிமைப் பொருளாகவே பாவித்தனர். அவர்களுக்கென  உரிமைகள் பறிக்கப் பட்டிருந்தது. ஆண்களை அண்டி வாழும் அடிமைகளாக கருதினர். சொத்து, சுகத்தில் பங்கு கேட்கும் உரிமை இல்லை. பெண் குழந்தை பிறப்பதே பாவம் என்று உயிருடன் பாவி நெஞ்சம் பதைபதைக்க, பிஞ்சுக் குழந்தை கதறக் கதற புதைக்கும் அவலம் அங்கே நடந்தது என்பதினை மக்கா சென்றவர்கள் அந்த அடையாளத்தினைக் கண்டிருப்பீர்கள்.

அந்த நிலையினை தலைகீழாக மாற்றியமைத்த பெருமை புனித குர்ஆனில் எம்பெருமானார்(ஸல்) அவர்களுக்கு அன்னிசா அத்தியாயம் நான்கினை வஹியாக எல்லாம் வல்ல அல்லாஹ் இறக்கியது மூலம் பெற்றுத் தந்தது. ஆண்களுக்கு நிகரானவர் பெண் என்ற பெருமை சேர்த்தது அல் குரான்.

திருமண ஒப்பந்தம் ஒரு சடங்கல்ல, மாறாக  அது ஒரு   சட்டம் என்றது ஷரியத் சட்டம். திருமணம் ஒரு சிவில் காண்டராக்ட் ஆகும். திருமணத்தினை பெற்றோர், ஒவ்வொரு தரப்பிலும் இரண்டு சாட்சிகள், வலியாக அமைந்துள்ள பெரிய மனிதர், மற்றும் இமாம், ஜமாத்து தலைவர் ஆகியரோடு மணமக்கள் கையொப்பம், மகர் தொகை ஆகியவை கண்டிப்பாக அமைந்துள்ளது தான் நிக்காஹ் பதிவேடு. இது போன்ற அமைப்பு வேறு மதத்திலோ, மார்க்கத்திலோ இருக்கின்றதா  என்றால் இல்லையென்றே சொல்லலாம். வரதட்சணை கொடுமை அறுத்தெறிந்து மணமகளை மணமகன் மகர் கொடுத்து மணம் முடித்து அந்தப் பெண்ணின் தன்மானத்தினை உயர்த்தியவன் எல்லாம் வல்ல அல்லாஹ். திருமண ஒப்பந்தம் ஆணையும், பெண்ணையும் கால், மனம் போன தறிகெட்ட போக்கில் வாழ விடாது, சமூதாயத்தில் கற்புடன் மாசு படாத தங்கம் போல வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வழி வகுத்தது ஷரியத் சட்டம்.

இஸ்லாமிய திருமணம் The Muslim personal law(shariat) application act, 1935 ல் தெளிவாக கூறப் பட்டு இஸ்லாமிய திருமணம் புனிதமானது, ஆணுக்கும், பெண்ணுக்கும் உடல் உறவிற்கு முன்பு செய்யப் படும் சிவில் கண்டராக்ட் என்று சொல்லுகின்றது

ஆகவே திருமண ஒப்பந்தம் ஆணும், பெண்ணும் மன மொத்த உடலுறவில் ஈடுபடவும், குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும், சமுதாயத்தில் கண்ணியத்துடன் திறம்பட வாழவும் வகை செய்தது அல் குரான். ஒவ்வொரு சுய சிந்தனை கொண்ட ஆணும், பெண்ணும் திருமண ஒப்பந்தம் இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயம். ஆனால் புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்கு அது பொருந்தாது. இஸ்லாத்தில் அபிலாசைகளை அடக்கிக் கொண்டு திருமணமாகாமல் சாமியாராக இருந்து காலம் கடத்தி அதன் மூலம் அபிலாசைகளை அடிமையாகி தவறான கற்பொழுக்கமில்லாத வாழ்விற்கு இஸ்லாத்தில் வழியில்லை. காரணம் ஒரு ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ சைத்தான் ஒரு விதத்தில் வழிக் கேட்டுக்கு ஆளாக்கி விடுவானல்லவா?

அது சரி இதற்கு என்ன இப்போது வந்தது என்று நீங்கள் கேட்கலாம். அது தான் உச்சநீதி மன்றத்தில் முத்தலாக்கு முறை பற்றி அறிக்கை சமர்ப்பிக்க நீதி மன்றம் மத்திய அரசை ஆணை பிறப்பித்துள்ளதால் அது விவாதப் பொருளாக்கி விட்டது. சிலர் புரிந்து கொள்ளாமல் அதனையே சிவில் சட்டம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற விஷமத்னமான விவாதத்தினையும் சேர்த்துக் கொண்டனர்.  முத்தலாக்கின் ஆரம்பமே சில இளைஞர்கள் தொலை பேசி மூலமும், மின் அஞ்சல் மூலமும்,, கைப்பேசி தகவல் மூலமும், தபால் மூலமும் தலாக்கை அனுப்பி விடுகிறார்கள் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் தெளித்து அனுப்புவது போல. சில இமாம்கள் அதனை செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கி விடுகிறார்கள். சிலர் மாப்பிள்ளை பக்கம் வெயிட் அதிகமானால் அந்தப் பக்கம் சாய்ந்து ஒருதலை பட்சமாக தீர்ப்பு வழங்கி, பெண்களையும், குழந்தைகளையும் அனாதையாக்கி விடுகிறார்கள் என்பதனை மறக்கவோ, மறைக்கவோ முடியாதல்லவா?

இன்று எந்த குடும்ப வழக்காடு மன்றங்களுக்கும் செல்லுங்கள் அங்கே நியாயத்திற்காக போராடும் 50 சதவீத பெண்கள் முக்காடு போட்ட முஸ்லிம் பெண்களாக இருக்கின்றார்கள். அந்தக் குறைகள் போக்க எடுக்க வேண்டிய கடமை முஸ்லிம் சமூதாயத்தினைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் உண்டல்லவா?  இஸ்லாத்தில் எந்த இடத்திலும் ஒரே நேரத்தில் மூச்சுப் பிடித்துக் கொண்டு மூன்று தலாக் சொல்லும் முறை இடம் பெறவில்லை. அப்படி சாட்சிகளுடன் சொல்லப் படும் முத்தலாக்கே ஒரு தலாக் என்று தான் கருதப் படும்.          

விவாகரத்து பெரும் ஒரு பெண் 3 மாதவிலக்கு காலம் வரை காத்திருக்க வேண்டும். ஒரு பெண் இரண்டு முறை தலாக் சொல்லப் பட்டு வேறு திருமணம் செய்ய வில்லையென்றால் அவள் தன் கணவருடன் சேர்ந்து வாழ வழியுண்டு. முதல் தடவை சாட்சிகள் சகிதம் தலாக் சொன்ன பின்பு பெரியோர், பெற்றோர் சமரசத்திற்குப் பின்பு தீர்வு காணவில்லையென்றால் இரண்டாம் தலாக் சாட்சிகள் முன்னிலையில் தலாக் சொல்லலாம். அதன் பிறகும் சமரச தீர்வு காணவில்லையென்றால் மூன்றாவது தலாக் சொல்லலாம்.

அது சரி மூன்றாவது தலாக் செய்த பின்பு கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ வழிவகை உள்ளதா என்று கேட்டால் இருக்கின்றது. அது எவ்வாறென்றால் மணவிலக்கு பெற்ற பெண் வேறு ஒருவருடன் திருமணம் ஒப்பந்தம் செய்து, அவருடன் தாம்பத்திய உறவு கொண்டு, அதன் பின்பு மூன்று முறை நான் மேலே சொன்ன முறைப் படி மாத விலக்கு முடியும் வரைக் காத்திருந்து அவரை தலாக் செய்து விட்டு முன்னாள் கணவனுடன் வாழ்க்கை நடத்தலாம். இது ஒரு கடுமையான சட்டமாக உங்களுக்குத் தெரியலாம். ஆனால் இறைவனால் வழங்கப் பட்ட ஷரியத் சட்டம் இப்படி கடுமையாக்கியதிற்குக் காரணமே அவசர கோலத்தில் அள்ளி முடிந்து முத்தலாக்கு சொல்லி குழந்தைகள் போல அம்மா-அப்பா விளையாட்டு, விளையாட்டுக்குக்  கூட செய்யக் கூடாது என்பதிற்குத்தானே ஒழிய மணமக்களை வஞ்சிக்கவல்ல என்பதினை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமுதாயத்தில் தலாக் சொல்லப் பட்ட பெண்கள் அபலையாக உள்ளன என்று மாற்று மதத்தினர் நினைக்கின்றனர். ஆனால் ஷரியத் சட்டத்தில் தலாக் சொல்லப் பட்டப் பெண்ணை அவள் மானக் கேடானவள் என்று அறியாதவரை அவளை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டாம் என்றும் கூறுகின்றது.

அல் குரான் (65.1) தலாக்-விவாகப் பிரிவினையில், "நபியே!(விசுவாசிகளை நோக்கி நீர் கூறும் (உங்கள் மனைவியாகிய) பெண்களைத் தலாக் (விவாகப் பிரிவிரும்பினால் ,வினை) கூற விரும்பினால், அவர்களுடைய 'இத்தாவின்'(கரு அறியக் காத்திருக்கும் காலத்தின்) ஆரம்பத்தில் கூறி இத்தாவை கணக்கிட்டு வாருங்கள்.(இவ் விசயத்தில்) உங்கள் இறைவான அல்லாஹ்விற்கு நீங்கள் பயந்து(நடந்து)  கொள்ளுங்கள்.(நீங்கள் தலாக் கூறிய) பெண்கள்  யாதொரு மானக் கேடான செயலினை செய்தாலன்றி, அவர்களை அவர்கள் இருக்கும்(உங்கள்) வீட்டிலிருந்து(இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதிக்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். இவைதாம் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள்.  எவர்கள் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.(இதிலுள்ள நன்மையை நீங்கள் அறிய மாட்டீர்கள், தலாக் கூறிய) இதன் பின்னரும் (நீங்கள் சேர்ந்து வாழ , உங்களிடையே சமாதானத்திற்குரிய)யாதொரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும் என்பதினை நீங்கள் அறிய மாட்டீர்கள்".

அல் குரான் இவ்வாறு கூறும் போது, இதற்கு நேர்மாறான   நேரில் அறிந்த ஒரு செய்தியினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். சென்னையில் வசித்த ஒரு இளம் வயது இளைஞர் சமீபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார். நானும் அந்த ஜனாஸா தொழுகைக்கும், அடக்கம் செய்வதற்கும் சென்றேன். இறந்தவருக்கு ஒரு ஒன்பது மாத கர்ப்பிணி மனைவி இருந்தாள். அந்த இளைஞர் மையத்து அடக்கம் செய்து விட்டு திரும்பிய பின்பு அந்தி மயங்கிய வேளையில் அந்த இளைஞனின் தாயார் அந்த கர்ப்பிணி மனைவியினை வீட்டைவிட்டு இரவே ஊருக்குச் செல் என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக முயன்றாள். நல்ல வேலையாக இறந்த பையனுக்கு உறவினர் தலையிட்டு அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் பணம் வாங்கி ஊருக்கு இரவே அனுப்பி வைத்தார் என அறிந்து என்னைப் போல பலர் பதைத்தனர். இந்த சம்பவம் எதனைக் காட்டுகின்றது தோழர்களே, ஷரியத் சட்டத்திற்கு புறம்பானதாக தெரியவில்லையா உங்களுக்கு?  பெண்களுக்கு பெண்களாலேயே கொடுமைகள் இன்னும் சமூதாயத்தில் நடந்து கொண்டுதான் உள்ளதாக நீங்கள் கருதவில்லையா?

ஆண்களுக்கு உள்ள உரிமை போல பெண்களுக்கும் விவாகரத்து கொடுக்கும் உரிமை உள்ளது. அதனை குலா என்று அழைக்கின்றார்கள். ஒரு பெண் குலா கொடுக்க வேண்டுமென்றால் சாட்சிகள் முன்னிலையில் காஜியிடம் முறையிட வேண்டும். (Dissolution of Muslim Marriage Act, 1939) முஸ்லிம் விவாக ரத்து சட்டம் 1939 படி ஒரு பெண் தன் கணவன் கொடுமைப் படுத்துகிறான் என்றோ, மானத்தை காக்கும் உடை, வயிற்றை நிரப்பும் உணவு போன்ற அத்தியாசிய பொருள்களை செய்ய வில்லையென்றாலோ, ஆண்மையற்றவன் என்று நினைத்தாலோ குலா கொடுக்கலாம் என்று சொல்கிறது. ஒருவன் காஜியினையே ஏமாற்றி குலா பெற்று விவாக ரத்து பெற்று மறுமணம் செய்திருக்கின்றான் என்ற வழக்கு 28.10.2016 அன்று சென்னை உயர் நீதி மன்றம் வரை சென்றுள்ளது என்பதினை உங்களுடன் பகிர்ந்து கொள்வது தவறில்லை என நினைக்கின்றேன்.

28.8.1987 அன்று செய்யாறினைச் சார்ந்த முகமது யூசுப் என்ற இளைஞருக்கும்- பாடியினைச் சார்ந்த பசேரிய என்ற பெண்ணிற்கும் பாடி ஜும்மா மஸ்ஜிதில் மணம் முடிக்கப் பெற்றது. யூசுப் மாட்டுக்கறி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. யூசுப்பிவின் வியாபாரம் நஷ்டமாக நடந்தது. மனைவி பசேரிய தன் தந்தையிடம் சென்று ரூ ஒரு லட்சம் வாங்கி வந்து வியாபாரத்தினை பெருக்கச் சொன்னார். அதன் பின்னரும் வியாபாரம் நஷ்டத்தில் நடந்தது. யூசுப் தன் மனைவியிடம் நீ உன் தகப்பனார் வீட்டில் சில காலம் இரு, நான் செய்யார் சென்று வியாபாரத்திற்காக பணம் புரட்டி வருகிறேன் என்று புருடா விட்டு சென்று விட்டார். பசேரியாவும் கண்டதே கணவன், அவன் சொன்னதே வேத வாக்கு என்று கருதி தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால் போன மச்சான் வருவான் பூமணத்தோடு என்று வழிமேல் விழி வைத்து காத்திருந்த பசேரியாவிற்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ஏனென்றால் யூசுப் வரவில்லை. விசாரித்த போது தான் தெரிந்தது யூசுப் வேறு பெண்ணுடன் புது மாப்பிள்ளையாகி குடும்பம் நடத்துவது. கத்தினாள், கதறினாள் என்ன செய்ய பாவி பெண் நெஞ்சம் வழக்கு மன்றத்தினை நாடினாள். அப்போது தான் தெரிந்தது யூசுப் பசேரிய குலாக் கொடுத்தது போல ஒரு போலிக் கடிதத்தினை சென்னை தலைமை ஹாஜியிடம் கொடுத்து விவாகரத்து பெற்று மறுமணம் செய்திருக்கின்றார் என்று. இப்போது சொல்லுங்கள் இது யார் குற்றம் என்று. தலைமை ஹாஜி பெண் மற்றும் அவர்களுடைய பெற்றோர், மண சாட்சிகளை அழைத்து வரச் சொல்லி விசாரித்து விட்டுத் தானே குலா கொடுத்திருக்க வேண்டும். இது போன்ற மனிதர்களால் செய்கின்ற தவறுகளால் இன்று ஷரியத் சட்டமே சரியில்லை என்று மாற்று மதத்தினரால் பேசக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது அல்லவா? நேற்று கூட(29.10.2016) இரவு நடந்த தொலைக் காட்சி பேட்டியில் நேற்றுவரை முஸ்லிமாக இருந்து, இந்து நடிகரை மணந்த 'இட்லி'நடிகை ஒருவர் ஷரியத் சட்டத்தில் உள்ள தலாக் முறை சரியல்ல என்றும், சிவில் சட்டம் வேண்டும் என்று கூறும் அளவிற்கு யார் பொறுப்பு, இது போன்ற சிலர் செய்யும் தவறுகளால் தலாக் பிரச்சனை பூதாகரமாக பார்க்கப் படுகிறது என்றால் சரியா சகோதரர்களே!

இஸ்லாத்தில் தலாக் செய்யும் முறை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்
1) ஆரம்பம்: 
கணவன் மனைவி முன்பு ஒரு முறை தலாக் சாட்சிகள் முன்னிலையில் சொல்லுவது. ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் ஒருவருடைய மனைவியை கால இடைவெளி விட்டு விவாக ரத்து செய்யுங்கள் என்று கூறினார்கள். அது தெளிவாக அல் குரான் 65 1 அத்தியாத்தில் கூறுவதனை மேலே கண்டோம்.

2) சமரசம்: 
கணவனும் -மனைவியும் இரு வீட்டார் முன்னிலையில் சமரசம் செய்ய முயலுவது. இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்படவில்லையென்றால் பொதுவான நீதிமான்களைக் கொண்டு சமரச முயற்சியில் ஈடுபடுவது( அல் குரான் அந்நிஸா சூரா 4:35) கூறப்பட்டுள்ளது.

இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளை புனருவதிற்கு முன்னால் அவளை தலாக் செய்ய நேரிட்டால் அவளுக்கு பொருளுதவி செய்து விவாக ரத்து செய்யுங்கள் என்று அஹ்ஜாப் அத்தியாயம் 33:49 அல்  குரான் கூறுகின்றது.

3) நிறைவு:
சமரசத்திற்கு மூன்று முறை தலாக் சொன்னால் தலாக் நிறைவேறும். அதன் பின்பு கணவன் மனைவியினைத் தொட அனுமதியில்லை.(சூரா  தலாக்  65:2) அதாவது அவர்கள் தங்கள் இத்தாவின் தவனையினை அடைந்தால் நேரான வழியில் மனைவியனை நிறுத்திக் கொள்ளுங்கள்.

தலாக் கூறப் பட்ட பெண் இத்தா முடிந்து மறுமணம் செய்து கொள்வதினை சூரா 2 232 பஹரா கூறுகின்றது

விவாக ரத்து செய்த பெண்களுக்கு கணவனிடமிருந்து மறுமணம் செய்யாதவரை தன் வாழ்க்கைக்கு தேவையான பொருளுதவியினை பெற அல் பஹ்ரா 2: 241 வழி வகை செய்கின்றது.

குழந்தைகள் பராமரிப்பது சம்பந்தமாக ரஸூலல்லா(ஸல்) அவர்கள் ஒரு வழக்கினை தீர்மானம் செய்த தகவலினை இமாம் அபு ஹுரைரா அவர்கள், ஒரு தடவை ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து என் கணவர் எனக்கு விவாக ரத்திற்கு பின்பு பொருளுதவியும், அபு அன்பா கிணற்றிலிருந்தும் தண்ணீர் கொடுக்கின்றார். இப்போது எனது குழந்தையினை அவருடைய பராமரிப்பிற்கு கேட்கின்றார், எனக்கு என் பிள்ளையை விட்டுப் பிரிய மனமில்லை என்று நீதி கேட்கின்றார். அப்போது ரஸூலுல்லா(ஸல்) அவர்கள் அந்தக் குழந்தையை அழைத்து பெற்றோர் முன்னிலையில் நீ யாருடன் செல்ல விரும்புகிறாய் என்று கேட்டபோது அந்தக் குழந்தை தாயின் கையினைப் பிடித்ததாம், உடனே குழந்தையினை தாயுடன் அனுப்பி வைத்ததாக' கூறுகிறார்.

இப்போது சொல்லுங்கள் இஸ்லாத்தில் எங்கே முத்தலாக் இருக்கின்றது. அதாவது ஒரே நேரத்தில் மூச்சைப் பிடித்துக் கொண்டு சொல்லுவதற்கு சட்டம் உள்ளது. இதனைத் தெரியாமல் சிலர் செய்யும் தவறினால் பல பெண்கள் நீதி மன்ற வாசலை மிதிக்கும் கதை கந்தலாக நிற்கின்றது.
சில சமுதாய இயக்கங்கள் சில இளசுகள் வழி தவறி காதல் வலையில் விழும்போது அவர்கள் பெற்றோர்களிடம் விவரம் கேட்காது தங்கள் இயக்கங்கள் புகழ் வர திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். அதன் பின்பு அந்த இளம் தம்பதியினர் எப்படி இருக்கின்றார்கள் என்று திரும்பிக் கூட பார்க்காததால் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று ஓடிய பல முஸ்லிம் பெண்கள் அபலையாக இருக்கும் உண்மை சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

சில தனிப்பட்டவர் திருமணம் நடத்தி வைத்து  விட்டு பெரிய விவகாரமான கதை 28.10.2016 அன்று சென்னை உயர் மன்றத்தில் வந்துள்ளது. ஒரு முஸ்லீம் திருமணம் செய்ய வேண்டுமென்றால் இஸ்லாமிய மதத்தினை கடைப்பிடிக்கின்றார்களா என்று பார்க்க வேண்டும்.  ஆனால் அதனை பார்க்காமல் ஒரு முஸ்லீம் வழக்கறிஞர் அமீர் பாட்சா ஈடுபட்டது உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

சென்னையில் மனித வள மேலாளர் முகமது பஹ்மியிடம் ஒரு ஹிந்து பயிற்சி பெண்மணி சேர்ந்துள்ளார். அவர் சென்னைக்கு வெளியே வேலை வழங்கப் பட்டது. அந்தப் பெண் மேலாளர் பஹ்மிய்யினை அணுகி தனக்கு சென்னைக்கு மாற்றுதல் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்காக சில தாள்களில் அந்த பெண் இன்ஜினீரிடம் கையொப்பம் வாங்கியுள்ளார்.  சில நாட்களில் மாறுதல் வரும் என்று எதிர் பார்த்து உள்ளார் அந்த பெண்மணி.
மாறுதல் வரவில்லை. ஆகவே வேலையினை 2015 மார்ச் மாதம் விட்டு விட்டார். ஆனால் என்னே ஆச்சரியம்  2016 மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலில் அந்தப் பெண்ணின் பெயரினை தன் மனைவி பகுதியில் சேர்த்துள்ளார் பஹ்மி. வழக்கு நீதி மன்றம் சென்றது. அப்போது வழக்கறிஞர் அமீர் பாட்சா அந்த பஹ்மிக்கும், அந்த ஹிந்துப் பெண்மணிக்கும் சுயமரியாதை திருமண முறைப்படி 7A Hindu Marriage Act, 1955 படி திருமணம் செய்து ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதியப் பட்டுள்ளது. பார் கவுன்சிலும் வக்கீல் அமீர் பாட்சா இதுபோன்ற பல திருமணம் செய்வதாக சொன்னதால், உயர் நீதி மன்றம் அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவித்துள்ளது. ஆகவே இது போன்ற சட்ட சிக்கலுக்கு சமூதாய இயக்கங்களும் வருங்காலத்தில் சிக்கிக் கொள்ளாமல், அபலை பெண்களுக்கு நல்ல வழிக்கு காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் எப்படி முத்தலாக்கு என்றும், சிவில் சட்டம் என்றும் சொன்னவுடன் ஒற்றுமையுடன் கொதித்தெழுந்தோமோ அதேபோன்று திருமணமான பெண்கள் புகுந்தவீட்டை விட்டு அனாதைப் பெண்களாக, குழந்தைகளுடன் வரும்போது அரவணைத்து சீரான வாழ்விற்கும்,  வழி காட்ட அனைத்து சமுதாயமும், சமுதாய புரவளர்களும், தலைவர்களும் அவர்கள் மானத்தோடு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வழி வகுக்க வேண்டும் என்றால் சரிதானே சகோதரர், சகோதரிகளே!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

பட்டுக்கோட்டையில் டீக்கடை ஊழியர் வெட்டிக்கொலை !

பட்டுக்கோட்டை, அக். 30
பட்டுக்கோட்டை கோட்டை சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் சந்தோஷ்குமார் (20). பட்டுக்கோட்டை அண்ணா சிலை அருகிலுள்ள டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் சனிக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் பெருமாள் கோயில் தெருவிலுள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றுள்ளார். அதே நேரம் வெட்டிக்காடு தங்கையன் மகன் மன்னாரு (எ) அருண்செல்வன் அவரது நண்பர்களுடன் மது அருந்த அங்கு வந்துள்ளார்.

அப்போது சந்தோஷ்குமார் நண்பர்கள் முகேஷ், மகேந்திரன் ஆகியோரிடம் மன்னாரு தகராறு செய்து அவர்களைத் தாக்கினாராம். இதைத் தட்டிக் கேட்ட சந்தோஷ்குமாரை மன்னாரு கோஷ்டியினர் அரிவாளுடன் விரட்டிச் சென்றனராம்.

அவர்களுக்குப் பயந்து லெட்சத்தோப்பு பகுதியிலுள்ள கருவேலமரக் காட்டுக்குள் ஓடிய சந்தோஷ்குமாரை மன்னாரு கோஷ்டியினர் தடுத்து நிறுத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பினராம்.

இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

இதுகுறித்து சந்தோஷ்குமார் தாயார் விஜயகுமாரி அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் கொலை வழக்குப் பதிந்து பட்டுக்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்த அஜீத் (18) என்பவரை கைது செய்தனர்.

தலைமறைவான அருண்செல்வன் (எ) மன்னாரு, பிரகாஷ், செம்புமணி, பாண்டுமணி, ஆர். அருண் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

திருவனந்தபுரத்திலிருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் பழுது: 152 பயணிகளுடன் பத்திரமாக தரையிறக்கம் !

அதிரை நியூஸ்: அக்-30
நேற்று சனிக்கிழமை மாலை திருவனந்தபுரத்திலிருந்து 152 பயணிகள் மற்றும் 6 விமான சிப்பந்திகளுடன் துபாய் நாட்டிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 'ஆட்டோ பைலட்' எனும் தானியங்கி கருவி இயங்காததால் மீண்டும் இரவு சுமார் 8.20 மணியளவில் திருவனந்தபுர விமான நிலையத்திலேயே தரையிறங்கியது.

மொத்தம் 158 பேர் பயணித்த அந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாரை விமானி கண்டுபிடிக்கும் போது ஏற்கனவே அது தன் பயணத்தின் பாதி தூரத்திற்கு மேல் கடந்திருந்தது.

பயணிகள் அனைவரும் பத்திரமாக மாற்று விமானத்தில் துபாய்க்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

ஆளில்லா குட்டி விமானங்கள் ஊடுருவியதால் துபாய், ஷார்ஜா விமான நிலையங்கள் மூடல் !

அதிரை நியூஸ்: துபாய், அக்-30
நேற்று (சனிக்கிழமை) இரவு 7.25 மணிமுதல் இரவு 9.10 வரை துபை மற்றும் ஷார்ஜா விமான நிலையங்கள் பாதுகாக்கப்பட்ட வான்வெளியில் ஆளில்லா குட்டி விமானங்கள் (Drones) அத்துமீறி பறந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டன.

விமான நிலையங்களை சுற்றி 5 கி.மீ. பரப்பளவிற்கு குட்டி விமானங்களை இயக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் இந்த வருடத்தில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவம் ஆகும்.

இந்த குட்டி விமான ஊடுருவலால் தரையிறங்க வேண்டிய சுமார் 22 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இச்சம்பவத்தை தொடர்ந்து அல் வர்கா பகுதியில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுபோன்ற தவறான நடவடிக்கைகளால் குட்டி விமானங்களின் விற்பனைக்கு அபுதாபி முற்றிலும் தடைவிதித்துள்ள நிலையில் துபை அதிகாரிகள் மேலும் பல கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கும் குறிப்பிட்ட வகை குட்டி விமானங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களை விற்பதற்கும் தடை கொண்டு வர ஆலோசித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ரியல் எஸ்டேட், விவசாயம் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் வயல் சார்ந்த பணிகளுக்காக வணிக நோக்கில் பயன்படுத்தப்படும் சுமார் 400 குட்டி விமானங்கள் ஏற்கனவே முறையாக பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அமீரக மனிதநேய கலாச்சார பேரவை செயற்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு !

துபாய், அக்-30
மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் ( 28-10-2016 ) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு அமீரக செயலாளர் மதுக்கூர்.S.அப்துல் காதர் அவர்கள் தலைமையில் சார்ஜா மர்கஸில் நடைபெற்றது.

அமீரக பொருளாளர் அதிரை அஷ்ரப் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தை இஸ்லாமிய காலச்சார பேரவை(IKP) செயலாளர் திருச்சி அப்துல் ரஹ்மான் அவர்கள் கிராஅத் ஓதி, இஸ்லாத்தில் நற்பண்புகள் குறித்து மார்க்க சொற்பொழிவாற்றினார்.

துபை, அபுதாபி, அல்அய்ன், சார்ஜா உள்ளிட்ட அனைத்து மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக நிர்வாக வசதிக்காக வேண்டி புதிய நிர்வாகிகளை இனைத்து நிர்வாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இனி அமீரக நிர்வாகிளாக கீழ்கண்டவர்கள் செயல்படுவார்கள்.

அமீரக செயலாளர் – மதுக்கூர்.S.அப்துல் காதர்
மூத்த ஆலோசகர் – M.A.சர்புதீன்
பொருளாளர்         – அதிரை அஸ்ரப்
இஸ்லாமிய கலாச்சார பேரவை.  – திருச்சி அப்துல் ரஹ்மான்
தகவல் தொடர்பு மற்றும் ஊடகம் – Y.M.ஜியாவுல் ஹக்
துணை செயலாளர்கள் :
நாச்சிகுளம் A.அசாலி அஹமது
K.M.A.முகமது அலி ஜின்னா
H.அபுல்ஹசன்
Y.அப்துல் ரஜாக்
H.M.பதாஹூல்லா

ஆகியோர் தேரந்தெடுக்கப்பட்டனர்.

இஸ்லாமிய கலாச்சார பேரவையின் சார்பாக வார பயான்கள் மற்றும் மாதந்தோறும் தர்பியா வகுப்புகள் அனைத்து மண்டலங்களிலும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் எனவும், அதற்கான செயல்திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் IKP செயலாளர் திருச்சி.அப்துல் ரஹ்மான் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

தலைமை வாடகை சம்மந்தமாக அனைத்து மண்டலங்களும் ஒத்துழைப்பது என முடிவு செய்யப்பபட்டது.

அனைத்து மண்டலங்களிலும் நிலுவையில் உள்ள கிளைகளை துரிதமாக அமைத்து நிர்வாகிகளை தேரந்தெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊடகசெயலாளர் Y.M.ஜியாவுல் ஹக் நன்றி கூற துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

தகவல் : ஊடகப் பிரிவு மனிதநேய கலாச்சார பேரவை அமீரகம்.

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மஹல்லாவாசிகளுக்கு அழைப்பு !

அஸ்ஸலாமு அலைக்கும் !

அன்பான சகோதரர்களே!  நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 04-11-2016 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத் ( Down Town Hotel ) அருகே உள்ள சகோதரர் ஜவாஹிர் அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும்.

அமீரகத்தில் இருக்கும் கடற்கரை தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு,
கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு.

துபாயில் நடந்த அமீரக TIYA வின் பொதுக்குழு கூட்டம் ( படங்கள் )

அமீரக TIYA வின் பொதுக்குழு கூட்டம் சகோ. சேக்காதி அவர்கள் தங்குமிடத்தில் கடந்த 28.10.2016 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு அமீரக TIYA வின் தலைவர் S.P.ஹாஜா முகைதீன் அவர்கள் முன்னிலையில் அமீரகம் வாழும் நமது முஹல்லாவை சார்ந்த மூத்த சகோ. காதர் முகைதீன் காக்கா அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் முஹல்லாவாசிகள் பங்களிப்போடு கூட்டம் தொடங்கப்பட்டது.

முன்னதாக நமது முஹல்லாவை சார்ந்த சகோ. சரபுதீன் அவர்கள் கிராஅத் ஓதினார். அமீரக தலைவர் சகோ. S.P. ஹாஜா அவர்கள் சிறப்பு அழைப்பாளர் சகோ. காதர் முகைதீன் மற்றும் முஹல்லா வாசிகள் அனைவரையும் வரவேற்று அமர்ந்தார்.

அதனை தொடர்ந்து அமீரக TIYA வின் செயலாளர் சகோ. S.M. சேக் அவர்கள் 1.1.2016 அன்று முதல் இன்று வரை செய்த செயல்பாடுகள், மற்றும் இனி செய்ய இருக்கும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து அமீரக TIYAவின் பொருளாளர் சகோ. S. நவாஸ் அவர்கள் வரவு செலவு கணக்குகளை மிக தெளிவாக உறுப்பினர்கள் அனைவர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார்.

இதனை தொடர்ந்து TIYAவின் உறுப்பினர்களிடம் இது வரை செய்து உள்ள செயல்பாடுகள் மற்றும் இனி செய்ய இருக்கும் செயல்பாடுகள் போன்ற விசயங்கள் குறித்து உறுப்பினர்கள் மத்தியில் பல விவாதங்கள் நடத்தப்பட்டு நமது மஹல்லாவாசிகள் நலன் கருதி நல்ல பல விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

மேற்கண்ட நிகழ்வுடன் அமீரக TIYAவின் பொதுக்குழு கூட்டம் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு துஆவுடன் இனிதே நிறைவுற்றது.

என்றும் அன்புடன்
அமீரக TIYA
தலைவர் மற்றும் நிர்வாகிகள்