Pages

Sunday, October 2, 2016

குடும்ப உறவை சிதைக்கும் தேர்தல் திருவிழா!

அதிரை நியூஸ், அக்-02
ஒவ்வொரு வருடமும் வந்து போகும் பண்டிகை திருவிழாக்களில் ஆங்காங்கே சிதறி கிடக்கும் குடும்ப உறவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து குதூகலிக்கும் சூழலை 5 வருடத்திற்கு ஒருமுறை வந்து போகும் தேர்தல் திருவிழா சிதைத்து விடுகிறது.

மாமன் மச்சான் உறவுகளை கூட வேட்பாளர் என்ற பெயர் தாங்கி ஆயுதம் கீறி கிழித்து விடுகிறது. ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகள் வெவ்வேறு கட்சிகளின் வேட்பாளர்களாக களம் காணும் பிரிவினை என்னும் அதிசயங்கள் நிகழும் களமே தேர்தல் திருவிழா.

எந்த முறையும் இல்லாமல் இந்த முறை உள்ளாட்சிகளில் 50% விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டு விட்டதால்...வேட்பாளர் பஞ்சம் மேலோங்கும் என்ற கற்பனை கனவை நிர்மூலமாக்கி விட்டது இன்றைய தேர்தல் திருவிழா.

400 ஓட்டுகள் உள்ள வார்டுகளில் கூட 12 பேர் களம் காணும் அரசியல் திருவிழா இது. விலை மதிக்க முடியாத வாக்குரிமை என்னும் ஜனநாயகத்தை பணம் கொடுத்து விலை நிர்ணயம் செய்து விட்ட ஊழல் அரசியல் வியாதிகளின் பிடியில் சிக்கிவிட்ட சுயநலவாதிகளின் போர் முரசு கொட்டும் இடமாய் காட்சி தருகிறது தேர்தல் திருவிழா.

மக்களால் உள்ளாட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்தை மாற்றி கவுன்சிலர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் முறையே தற்போது குதிரை பேரத்தை நோக்கிய பயணத்தை வாக்காளர்களிடமும் வேட்பாளர்களிடமும் உருவாக்கி விட்டது தேர்தல் திருவிழா.

ஓட்டுக்கு 300 ரூபாய் என்ற விலை கொடுத்து 45 ஆயிரம் செலவில் 150 ஓட்டுக்கள் பெற்றால் கூட வார்டில் வெற்றி பெற்று விடலாம் என்ற கணக்கின் படி களம் காணும் சில வேட்பாளர்கள், சேர்மன் தேர்வில் இரண்டு லட்சம் விலை பேசி, போட்ட காசை திருப்பி எடுத்து விடுவோம் என்ற கனவில் மிதக்கும் தேர்தல் திருவிழா இது.

காலமெல்லாம் மக்கள் பணி செய்து வரும் பொதுநல ஊழியர்கள் தங்களுக்கான அரசியல் அங்கீகாரம் கிடைத்து விடாதா?என்ற எதிர்பார்ப்பில் களம் காணும் இந்த தேர்தல் திருவிழா அவர்களுக்கு வெற்றியை கொடுக்குமாயின் அதுவே அர்த்தமுள்ள திருவிழாவாகும்.

லஞ்சம்,ஊழல் என்னும் அரக்க குணம் கொண்ட சந்தர்ப்பவாதிகள் வெற்றி பெறும் திருவிழா என்றால்....இது ஜனநாயகத்தை கொல்லும் பணநாயக திருவிழாவாகும்.

- கீழை ஜஹாங்கீர் அரூஸி.

4 comments:

 1. ஓட்டுக்கு முந்நூறுரூவாபிச்சைகாஸு வாங்கிஓட்போடும் இழிச்சவாயர்கள் யாரும் இப்போது இல்லை!ஒரு ஒட்டு ரூவா அஞ்சாயிரம்! வேணுமா?வாணாமா?

  ReplyDelete
 2. தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டாலும் அது அவர்களை எந்தவகையிலும் பாதிக்காது மாறாக அவர்களுக்கு உதவியாக தான் இருக்கும் இது அரசியல் வல்லுநர்களுக்கு நன்கு புரியும். தேர்தல் முடியோடு வெளியில் காட்டிய பகை அது மாயமாக போய்விடும். அவர்கள் தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்கிறார்கள். இது எப்படி.... ஆனால் நம் சமுதாய அமைப்பில் உள்ளவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு அமைப்பில் இருந்தால் கடைசி வரை பகையாளி தான். அரசியல் சாக்கடை என்பதால் கழுவி விடலாம் ஆனால் அமைப்பு அது ஒரு உயிர் கொல்லியாக இருக்கே ! சிந்தித்தோமா??

  ReplyDelete
 3. அடிமடியில் கை வைக்கும் அரசியல்.
  =====================================
  ஊரெங்கும் உள்ளூராட்சி தேர்தல்!

  ஒரு பெரிய தேர்தல் நடந்து முடிந்து அந்தக் களைப்பு அடங்குவதற்குள் அடுத்த தேர்தல்!

  ஜனநாயக கடமை என்ற பெயரில் ஒவ்வொருவரும் தங்களின் பலத்தையும் பணத்தையும் பரிசோதித்துப் பார்க்க புறப்பட்டுவிட்டார்கள்.

  இந்தப் பயணத்தில் பலருக்கு கண் தெரியவில்லை. அது கூட பரவாயில்லை குருடனாக இருந்தாலும் ஒரு ஓட்டு உண்டு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கூடப் பிறந்த பிறப்பு தெரியவில்லை; பெற்று வளர்த்தவர்களையும் தெரியவில்லை. நாற்காலி ஆசையில் நல்லது கெட்டது கூட தெரியவில்லை.
  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசக்கூடாது என்ற ஒழுக்கம் தெரியவில்லை. தோள் மீது கை போடுபவன் எல்லாம் தோழன் அல்ல என்ற உண்மையும் தெரியவில்லை.

  பரவலாகப் பார்க்கிறேன். குறிப்பாக முஸ்லிம்கள் வாழும் பகுதியில் அரசியல் இயக்க வேறுபாடுகள் - அடிமடியில் கை வைத்து இருக்கிறது. அண்ணனுக்கும் தம்பிக்கும் போட்டி – அக்காவுக்கும் தங்கைக்கும் போட்டி – அப்பாவை எதிர்த்து கண்ணான மகன் போட்டி என்ற செய்திகள்.

  அதே நேரம் . பாராட்டுதலுக்குரிய சில சமுதாயங்கள் விளிம்பு நிலையில் வாழ்பவர்கள்- குறிப்பிட்ட தொழிலை செய்பவர்கள் –பல்வேறு கட்சிகளில் இருந்தாலும் இந்த தேர்தலில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். பல இடங்களில் போட்டி இல்லாமலேயே தங்களுக்குள் கட்டுப்பாடாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். செலவுகளைத் தவிர்த்துக் கொள்கிறார்கள். பாகுபாடுகளை பகைமைகளை மறந்துவிட்டு கை குலுக்கிக் கொள்கிறார்கள்.

  இவ்வாறு செய்யும் முஸ்லிம்கள் அல்லாத சமுதாய சகோதரர்கள் முஸ்லிம்களைப் போல தஹஜ்ஜத், சுப்ஹு, ஐவேளை தொழுபவர்கள் அல்ல; நல்லுபதேசங்களை தஹ்லீம் என்று படிப்பவர்கள் அல்ல; ஒற்றுமையைப் பற்றி திருமறையின் வாசகத்தை அறிந்தவர்கள் அல்ல; முஸ்லிம்கள் ஒரு சீப்பின் பற்களைப் போன்றவர்கள் என்ற பெருமானார் ( ஸல்) அவர்களின் பொன் மொழிகளை அறிந்தவர்கள் அல்ல; மதினாவில் ஏற்படுத்தப் பட்ட சகோதர ஒப்பந்தத்தின் வரலாற்று வரிகளின் வாரிசுகள் அல்ல.

  ஆனாலும் அவர்களுக்கிடையே ஒற்றுமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அதற்கான அறிவிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன.
  ஆனால் ஆளுக்கொரு கட்சி அரசியல் , குடும்பத்துக்குள் பல்வேறு இயக்க அரசியல் என்று நாம்தான் பிளவுபட்டு நிற்கிறோம்.

  இப்படி ஊர் இரண்டுபட்டதால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது.

  பெருமானார் ( ஸல்) அவர்கள் கூறினார்கள். ( Ref: மு ஆத் இப்னு ஜபல் (ரலி) முஸ்னத் அஹமத் )

  “ஆடுகளுக்கு ஓநாய் எவ்வாறு பகைவனாக உள்ளதோ , தம் மந்தைகளை விட்டு விலகி தனியாக நிற்கும் ஆடுகளை எவ்வாறு ஓநாய் இலகுவாக வேட்டையாடி இரையாக்கிக் கொள்கிறதோ அதுபோல்

  ஷைத்தான் மனிதர்களுக்கு ஓநாயாக இருக்கிறான். “

  பதவி ஆசை என்பதும் ஷைத்தானின் ஒரு கரம்தான். அந்தக் கரம் குடும்ப ஒற்றுமையையும் சமுதாய ஒற்றுமையையும் துவம்சம் செய்கிறது.

  மூமினான மனிதர்கள் பரஸ்பரம் ஜமாஅத் ஆக இணைந்து ஒரு கூட்டமைப்பாக வாழாவிட்டால், ஷைத்தான் அவர்களைத் தனித்தனியாகப் பிரித்து வேட்டையாடிவிடுவான்.

  சொல்வதை சொல்லிவிட்டோம்! கேட்பவர்கள் கேட்கலாம்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...