Pages

Friday, November 18, 2016

மோடியால் அவதியுறும் வெள்ளைப்பண வெளிநாடுவாழ் இந்தியர்கள் !

மோடியின் திட்டம் அடித்தட்டு இந்தியர்களின் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளதால் நாடே திவலாகும் நிலைக்கு தள்ளப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

சாமானிய இந்தியர்களின் அன்றாட வாழ்வு மிகப்பெரும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது குறித்து செய்திகள் வாயிலாக அறிந்து கொள்வதை விட மக்களே அனுபவரீதியில் பெற்றுவருகின்றனர் என்பதால் வெள்ளைப்பண இந்தியர்கள் ஏன் துன்பப்பட வேண்டும் என்ற கேள்வியை மட்டும் இங்கு வைப்போம்.

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய அரசுகளால் இந்தியர்களுக்கு வேலைவழங்க துப்பில்லாமல் போனதால் வேறு வழியின்றி வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்குள் தள்ளப்பட்டவர்கள் நாம் அதாவது இந்திய பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கும் அந்நியச் செலாவணி என்னும் பாலை விட வெண்மையான வெள்ளை பணத்தை மட்டுமே ஈட்டித்தருபவர்கள் நாம் என்றாலும் நமக்கான உரிய மரியாதையை, நம்மையும் இந்தியர்களாக மதிக்கும் போக்கை காணவே முடியவில்லை.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் என்ற சுகம் நம்மைப் போன்ற தகுதிவாய்ந்த இந்தியர்கள் விட்டுத்தந்து வெளிநாட்டுக்குச் சென்றதால் கிடைத்த வாய்ப்பு என்பதை உணர்வார்களேயானால் விமான நிலையங்களில் நம்மிடம் கீழ்த்தரமாக நடந்து கொள்வற்கு அவர்கள் வெட்கப்படுவர்.

சரி வெள்ளைப்பணத்திற்குள் மீண்டும் வருவோம், நாம் வெளிநாட்டில் ஈட்டும் பொருளாதாரம் முழுக்க முழுக்க வெள்ளையே அன்றி வேறில்லை. இந்நிலையில் கம்பெனிக்காரன் இரக்கப்பட்டுத் தரும் சொற்ப நாள் விடுமுறையில் ஊருக்கு வரும் நாம் வெளிநாட்டு கரன்சியை இந்தியாவிற்குள் முழுமையாக மாற்ற முடியாத சூழல் நிலவுகிறது அல்லது நமது வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டுச் சென்றாலும் இயங்காத ATMகளிலிருந்து நமது வெள்ளை பணத்தை எடுக்க முடியாது, ஒருவேளை ATM இயங்கினாலும் தினம் 2 ஆயிரத்திற்கு மேல் நமது வெள்ளை பணத்தை எடுக்க முடியாது.

வேறுவழியின்றி வங்கியில் மாற்றச் சென்றாலும் 2 ஆயிரத்திற்கு மேல் மாற்ற முடியாது அதுவும் விரலில் மை வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதால் டிசம்பர் இறுதி வரை மறுபடியும் ஒருமுறை நமது வெள்ளைப்பணம் 2 ஆயிரம் ரூபாயை கூட எடுக்க முடியாது. இதில் எத்தனையோ தலையாய பிரச்சனைகளை இந்த விடுமுறை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என வேறு திட்டமிட்டு சென்றிருப்போம்.

நம் அன்றாட வாழ்வில் கலந்துள்ள பால்காரரிடமோ, காய்கறிகாரரிடமோ, மீன் வியாபாரியிடமோ, சிறு மளிகைக்கடைகாரரிடமோ நாம் வங்கிப் பரிவர்த்தணை அடிப்படையில் வியாபாரம் செய்வது என்பது கனவில் கூட சாத்தியமில்லாததுடன் இலவச இணைப்பாய் மருந்தும் மருத்துவமும் தினசரி வாழ்வின் தவிர்க்க முடியாத துன்பம்.

வெளிநாட்டில் நாம் உழைப்பது நமது குடும்பத்திற்காக தான் என்றாலும் அதிலிருந்து சம்பந்தமேயில்லாமல் அந்நியச் செலாவணி எனும் வகையில் ஆதாயத்தை மட்டுமே அடைவது இந்திய அரசு. இந்நிலையில் நமக்கு கிடைக்கும் குறுகிய நாள் விடுமுறையில் குடும்பத்துடன் செலவிட செல்லும் முழுக்க முழுக்க கரைபடாத வெள்ளை பணத்திற்கு சொந்தக்காரர்களாகிய நாம் இந்தியாவில் தங்கியிருக்கும் நாட்களில் செலவுக்கு பணமின்றி மண்ணையா அள்ளித்தின்ன முடியும்!

நாங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அல்ல, சம்பாத்தியத்திற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குள் தள்ளப்பட்ட இந்தியர்கள். 50 நாட்களுக்குள் நிகழும் என சொல்லப்படும் அந்த ஜீம்பூம்பா மாற்றத்திற்கு முன் அமைந்துவிட்ட எங்கள் விடுமுறை நாட்களில் எங்களுக்கான தீர்வு என்ன?

இவண்

தற்போது விடுமுறையில் வந்துள்ள அல்லது வரவுள்ள வெளிநாடுவாழ் அனைத்து வெள்ளைப்பண இந்தியர்களுக்காக

அதிரை அமீன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...