Pages

Wednesday, December 14, 2016

சுடச் சுட கண்முன்னே தயாராகும் விவசாயக் கருவிகள்... வியாபாரம் படு ஜோர் !

அதிராம்பட்டினம், டிச-14
வட மாநிலத்தில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து அரிவாள், வெட்டுக்கத்தி, கோடாரி உள்ளிட்ட விவசாய இரும்பு பொருட்களை, பொதுமக்கள் கண் முன்னே சுடச் சுட தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரம் நன்றாக இருப்பதாக வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அரிவாள் என்றாலே நினைவுக்கு வருவது திருப்பாச்சி அரிவாள் தான். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சியில் உள்ள பட்டறைகளில் தயாராகும் அரிவாள்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. கிராம கோயில்களில் கிராம தெய்வங்களின் முன்னாள் கம்பீரமாக நிற்கும் அரிவாள்கள் முதல் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுவது வரை சிறப்பிடம் பெற்றவை திருப்பாச்சி அரிவாள்கள். இதற்கு காரணம் மண், தண்ணீர், இரும்பு இவற்றை பக்குவமாக பயன்படுத்தும் திருப்பாச்சி பட்டறை கொல்லு தொழிலாளர்களின் கைத்திறன் என்றால் மறுப்பதற்கில்லை.

ஆனால் தற்போது தமிழகத்தில் முகாமிட்டுள்ள, வட மாநில தொழிலாளர்கள் தயாரிக்கும் விலை மலிவாக கிடைக்கும் இரும்பு பொருட்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். வட மாநிலமான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த, கொல்லுப்பட்டறை தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக இரயில் மூலம் தமிழகம் வந்துள்ளனர்.

இவர்கள் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று, பொதுமக்கள் கூடும் இடங்களில் சிறு டென்ட் கொட்டகை அமைத்து தங்கி, தங்களின் இரும்பு தயாரிப்புகளான அரிவாள், வெட்டுக்கத்தி, சுத்தியல், கோடாரி, மண்வெட்டி, கடப்பாரை, களைக்கொத்தி, கதிர் அரிவாள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். விலை மலிவாக இருப்பதாலும், தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள ஆயுதவடிவங்களை போல் அல்லாமல் வித்தியாசமான வடிவத்தில்  இருப்பதால் இப்பகுதி மக்கள் தங்களுக்கு வேண்டிய இரும்பு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் பொதுமக்கள் கண் முன்னே இரும்பு பட்டைகளை உருக்கி, வேண்டிய வடிவத்தில் பொருட்களை உருவாக்கி தருகின்றனர். இவர்கள் தங்கள் தொழிலுக்கான மூலப்பொருளான இரும்பு பட்டைகளை கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் பகுதியில் பழைய இரும்பு வியாபாரிகளிடம் பெறுகின்றனர். பெரும்பாலும் லாரிகள், பேருந்துகளில் பயன்படும் ஸ்பிரிங் பட்டைகளையே பயன்படுத்துகின்றனர்.

வேலைக்கென குடும்ப உறுப்பினர்களே இருப்பதால் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் விலை மலிவாக விற்பனை செய்கின்றனர். மரக்கரி துண்டுகளை ப்ளோயர் ( Blower) எனப்படும் துருத்தி மூலம் ஊதி சூடாக்குகின்றனர். சுமார் 1500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இரும்பு பட்டையை சூடாக்கி, வாட்டி அது இளகி நெருப்பு குழம்பு போல் இருக்கையில், சுத்தியலில் அடித்து தட்டி, வேண்டிய வடிவத்தில் இரும்பு உலோகங்களை தயாரிக்கும் லாவகம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் சர்தார் மற்றும் லல்லுபாய் ஆகியோரிடம் கேட்டபோது, " ஒரே குடும்பத்தை சேர்ந்த நாங்கள் இங்கு பொருட்கள் தயாரித்து விற்று வருகிறோம். நாங்களே தயாரித்து விற்பதால் விலை மலிவாக கொடுக்க முடிகிறது. வியாபாரம் சிறப்பாக உள்ளது. நேர்த்தியான முறையில் தயாரிப்பதால் மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். வியாபாரம் குறையத் தொடங்கினால் வேறிடத்திற்கு மாறி செல்வோம்" என்றனர்.

வட மாநில தொழிலாளர்களின் கைநேர்த்தியான தயாரிப்புகளை விரும்பி, அதனை வாங்கி ஆதரிக்கும் தமிழக மக்களின் இயல்பு தங்களை கவர்ந்திருப்பதாக நெக்குருகி நிற்கின்றனர்.
 
 
 
  
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...