Pages

Monday, December 19, 2016

முன் வர வேண்டும் அதிரை காதிர் முகைதீன் பள்ளி முன்னாள் மாணவர்கள்

தாங்கள் பயின்ற கல்வியகம் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே பலரும் உதவி வருவதை காண்கின்றோம். இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக திருச்சியில் செயல்படும் ஜமால் முஹமது கல்லூரிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கியுள்ள பல கொடைகள் சாட்சியாக திகழ்கின்றன. அந்த அடிப்படையிலேயே இந்த பதிவு....

அதிரையில் செயல்படும் காதிர் முகைதீன் கல்விக்குழும நிறுவனங்களால் சாதி, மதங்களை கடந்து பயன்பெற்றோர், பெறுபவர்கள் ஏராளம். இன்று அதிரை காதிர் முகைதீன் பள்ளியில், கல்லூரியில் பயின்ற ஏராளமான மாணவர்கள் இந்தியாவிலும், உலகளவிலும் பரவி பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகிக்கின்றனர், பொருளீட்டுகின்றனர். இத்தகைய உயர்நிலையை பலரும் அடைய காரணமாக இருந்தவர் நமது நகரின் கல்வித் தந்தை என்ற சொல்லுக்கு 100 சதவிகிதம் பொருத்தமாக திகழ்ந்து மறைந்த வள்ளல் எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் அப்பா அவர்களே.

அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு கல்விக்கண் திறந்த SMS. ஷேக் ஜலாலுதீன் அப்பா அவர்கள் அளவுக்கு நம்மால் அள்ளித்தர இயலாவிட்டாலும் அவர்களது நிறுவனத்தில் படித்த மாணவர்கள் என்ற அடிப்படையில் நாமும் இயன்றளவு உதவி நமது எதிர்கால சந்ததியின் கல்வியறிவு விரிவடைய உதவ முடியும் அல்லவா!

காதிர் முகைதீன் கல்லூரி ஒரளவு நவீனமடைந்து வரும் நிலையில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தோற்றமும், சுற்றுப்புறமும் மிக மோசமான நிலையிலேயே உள்ளன. முன்புற அலுவலகமும் பின்புற வகுப்பறை கட்டிடங்களும் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்தாலும் இன்னும் எஞ்சியுள்ள ஓட்டுக்கட்டிடமும், விளையாட்டு மைதானமும் கைவிடப்பட்ட அனாதை பிள்ளைகளைப் போல் பரிதாபமாக காட்சியளிக்கின்றன.

விளையாட்டில் சாதித்த மாணவர்களின் பிளக்ஸ் போர்ட்டுகள் பள்ளியின் நுழைவாயில் முன் தோரணம் கட்டி வரவேற்கின்றன ஆனால் விளையாட்டு மைதானத்தின் உண்மைநிலை இந்த பிளக்ஸ் போர்டு வரவேற்பினை நம்ப மறுக்கிறது. இந்த மாசடைந்த மைதானத்திலேயே மாணவர்களால் சாதிக்க முடியும் எனும்போது ஒருவேளை விளையாட்டு மைதானம் தரம் உயர்த்தப்பட்டால் இன்னும் பல விளையாட்டு வீரர்கள் அதிலிருந்து உருவாகி பாரெங்கும் ஒளிவீசக்கூடும்.

காதிர் முகைதீன் பள்ளியின் முன்னாள் மாணவர்களே! உங்களிடம் வேண்டுவதெல்லாம் இது தான். இந்தப்பள்ளிக்கூடம் தன்னலமற்ற ஒரு மாமனிதரால் நமது மற்றும் நமது சந்ததிகளின் நன்மைக்காக அர்ப்பணிக்கப்பட்ட பள்ளி. இந்தப்பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டியது நமது கடமை. எனவே, சுற்றுப்புறக் கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஒட்டுக்கட்டிட வகுப்பறைகளை அகற்றி நவீன கட்டிடமாகவும், விளையாட்டு மைதானத்தை சக்கடைநீர் தேக்காத வகையில் உயர்த்தியும் தர பள்ளியின் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு, நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் அடங்கிய கூட்டுக்குழுவை அமைத்து சீரமைத்து தர முன்வர வேண்டும்.

இது தேவையில்லாத வேலை, எங்களுக்கு ஏன் வம்பு, இதை சரி பண்ணுவது நிர்வாகத்தின் வேலை, இதை அரசு செய்து தர வேண்டும் என ஆளுக்கொரு காரணத்தையும் குறையையும் சொல்லிக் கொண்டிருக்காமல் நாம் படித்து உயர அடித்தளமிட்ட பள்ளிக்கு நம்மால் இயன்ற நன்றிக்கடனாக கண்டிப்பாக செய்து முடிப்பீர்கள் என நம்பும் அதேவேளை தயவுசெய்து இதில் எத்தகைய அரசியலும் நுழைய உங்களில் யாரும் காரணமாக இருந்து விடாதீர்கள் என்றும் முன்னாள் மாணவர்களை கேட்டுக் கொள்கின்றோம்.

J. ஆசிக் அஹமது ( மாணவ செய்தியாளர் )
 
 
 
 
 
 
 

2 comments:

 1. அதெல்லாம் சரிதான்.... திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியோடு கா.மு. கல்வி நிலையங்களை ஒப்பிடுவது சரியில்லை. தமிழகத்திலேயே கூடுதல் சொத்துள்ள கல்வி அறகட்டளை MKN Trust தான் என்பது மாநில அளவில் பேசப்பட்ட ஒன்றாகும். இதைக் கொண்டு கல்வி வணிகம் செய்து வந்து, தள்ளுமுள்ளு, கேஸ் என்று மாறி மாறி ஆதிக்கம் செலுத்திப் பயன் பெற்ற குடும்பத்தார் என்றைக்கோ இந்தக் கல்வி நிலையங்களைத் தரமாக ஏற்றத்திலும் தோற்றத்திலும் மிளிரச் செய்திருக்க முடியும். இவர்கள் dirty politics செய்ததால், நீதிமன்றம் தலையிட்டு, receiver ஒருவரை கொழுத்த சம்பளத்தில் நிர்வாகம் நடத்த வைத்தது எல்லோரும் அறிந்த உண்மை.

  இத்தகைய நிலையில், பழைய மாணவர்களிடம் கையேந்துவது போன்ற அறிவிப்பு, தேவையில்லை. உண்மையை உரத்துக் கூறுவதில் தப்பென்ன இருக்கிறது?

  இன்னும் எத்தனையோ முறைகேடுகள் கடந்த காலத்தில் நடந்தன. அவற்றைப் பட்டியல் போடுவது நமது நோக்கமன்று.

  ஒரு உண்மையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறேன். அந்தக் காலத்தில் ஏழ்மை நிலையில் மேல்படிப்பைத் தொடர முடியாத நிலையில் இருந்த என்னைப் போன்றவர்கள் படித்துப் பட்டம் பெற உதவியது, காதிர் முஹைதீன் கல்வி நிலையங்கள் என்பது, அடிப்படையான உண்மை.

  எந்த குடும்ப நிர்வாகம் வந்தாலும், எத்தனை ரிசீவர்கள் வந்தாலும், MKN Trust ன் சொத்துகளை மீட்டெடுப்பது குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது. எதிர் காலத்திலாவது சுயநலமில்லாத நிர்வாகம் அமைந்து, புதிய கட்டடங்கள் என்ன, புதுப்பொலிவுடன் இலங்கும் தோற்றத்துடனும், கல்வித் தரத்தின் முன்னேற்றத்துடனும் இக்கல்வி நிலையங்கள் திகழ எல்லாம் வல்ல இறைவன் துணை செய்யட்டும் என்று அவனையே இறைஞ்சுவோம்!

  -அதிரை அஹ்மத் (அபூ பிலால்)

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸாமு அலைக்கும் காகா அவர்கள் மிகச்சரியாகக்கூறினீர்கள்,சுயநலத்திற்காக அல்லாமல் பொதுநலத்திற்காக மட்டும் ஈடுப்பட்பால் மட்டுமே சாத்தியம். அல்லாஹ்தான் நேர்வழி காட்டனும்.

   Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...