Pages

Tuesday, September 19, 2017

பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு !

அதிராம்பட்டினம், செப்.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் லக்மன் வசீகரா, நரேஷ் ஆகியோர் இங்கிலாந்து டிரினிட்டி இசைக் கல்லூரி நடத்திய முதல் நிலை மற்றும் ஆரம்ப நிலை தகுதித் தேர்வில் வெற்றி பெற்றனர். இதையடுத்து, சாதனை நிகழ்த்திய மாணவர்களை பள்ளித் தாளாளர் வீ. சுப்ரமணியன், பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன், பள்ளி மேலாளர் எஸ். சுப்பையன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

காதிர் முகைதீன் கல்லூரியில் வளாக தூய்மைப் பணி (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை தொடங்கி, செப்.21 ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், கல்லூரி வளாகம் தூய்மை செய்தல், விழிப்புணர்வு கருத்தரங்கம், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

முகாமின் 2 வது நாளான இன்று செவ்வாய்கிழமை காலை, கல்லூரி வளாக தூய்மை பணியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.

கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கே. முத்துகுமாரவேல், எம் பழனிவேல், எஸ். சாபிரா பேகம், என்.சேகர் ஆகியோர் மேற்பார்வையில், கல்லூரி வளாகத்தில் கிடந்த குப்பைகள், தேவையற்ற கழிவுகளை மாணவ, மாணவிகள் அகற்றினர்.

இம்முகாமில், கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன், கல்லூரி பேராசிரியர்கள் என்.ஜெயவீரன், டி.லெனின், மேஜர் எஸ்.பி கணபதி, கே. செய்யது அகமது கபீர் உள்பட நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

மரண அறிவிப்பு ~ சம்சுனிஷா அவர்கள்

அதிரை நியூஸ்: செப்.19
அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கா.மு அப்துல் காசிம் அவர்களின் மகளும், கு.அ அப்துல் அஜீஸ் அவர்களின் சகோதரர் மகளும், மர்ஹூம் 'டீக்கடை நானா' என்கிற ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி மு.கா முகைதீன் பிச்சை ஓடாவி, மர்ஹூம் மு.கா நெய்னா முஹம்மது, மர்ஹூம் மு.கா அப்துல் ஜப்பார், மு.கா இப்ராஹிம்ஷா, மர்ஹூம் மு.கா கமால் பாட்சா, மர்ஹூம் மு.கா செய்யது முஹம்மது புஹாரி ஆகியோரின் மருமகளும், ஜெஹபர் சாதிக், சாகுல் ஹமீது, ஜபருல்லாஹ் ஆகியோரின் தாயாரும், ஜெஹபர் சாதிக், ஹாஜி சம்சுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய சம்சுனிஷா அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீச வாய்ப்பு !

File Image
அதிரை நியூஸ்: செப்.19
அமீரகத்தை வாட்டிய இந்த வருட வெயில் விடைபெறவுள்ளதால் காலநிலையில் ஏற்படும் மாற்றத்தை வரவேற்கும் முகமாக பலத்த புழுதிப்புயல் இன்று அடிக்கக்கூடும் என அமீரக தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஓரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் மங்கலாகவும் காணப்படும். இன்று மாலை வீசும் காற்று மலைப்பிராந்தியங்களில் மணிக்கு சுமார் 38 கி.மீ வேகத்திலும், நாட்டின் உட்பகுதியில் வீசும் காற்று மணிக்கு 32 கி.மீ முதல் 38 கி.மீ வரை வீசக்கூடும். திறந்தவெளிப் பகுதியில் சுழன்றடிக்கும் காற்றால் புழுதி பறக்கும்.

அடுத்த 2 நாட்களுக்கு இரவுவேளையில் பனியும் வெக்கையும் அதிகரித்து காணப்படும். அதிகாலை நேரத்திலும் இதேபோன்ற சீதோஷ்னம் கடற்கரை பிரதேசங்களிலும், நாட்டின் உட்புறங்களிலும் நிலவும்.

பகலில் சுமார் 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பமும் இரவில் சுமார் 27 டிகிரி செல்ஷியஸ் வெப்பமும் நிலவும். அதேவேளை கடற்கரை பிரதேசங்களில் வெக்கை (Humidity) 0 சதவிகிதமும் மலைப்பிராந்தியங்களில் 50 சதவிகிதமும் நாட்டின் உட்புறத்தில் 80 சதவிகிதமும் உயர்ந்து காணப்படும். அமீரகத்தின் கிழக்கு பிராந்தியங்களில் மாலையில் மழை பெய்யக்கூடும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ~ ஹாஜா சரிப் (வயது 26) அவர்கள்

அதிரை நியூஸ்: செப்.19
அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் 'சிந்துபாத்' என்கிற சாகுல் ஹமீது அவர்களின் மகனும், தரகர் தெரு அப்துல் வாஸ் அவர்களின் மைத்துனருமாகிய ஹாஜா சரிப் (வயது 26) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Monday, September 18, 2017

ஊர்க்காவல் படைக்கு, செப்.24, 25 ந் தேதிகளில் ஆட்கள் தேர்வு !

கோப்புப்படம்
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில் குமார் இன்று திங்கக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது;
'தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையினர்களுக்கான தேர்வு, தஞ்சாவூர் ஆய்தப்படை மைதானத்தில் வருகிற செப். 24 ந் தேதியும், பட்டுக்கோட்டை பிரிவு ஊர்க்காவல் படையினர்களுக்கான தேர்வு செப்.25 ந் தேதி பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம்.

ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள், 10-ம் வகுப்பு கல்வி சான்றிதழ்களுடன், குடும்ப அட்டை நகல் கொண்டு வர வேண்டும். மேலும் தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை சுற்றி 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தில் ADCB வங்கி 3 நாட்கள் செயல்படாது என அறிவிப்பு!

அதிரை நியூஸ்: செப்.18
அமீரகத்தின் பிரதான வங்கிகளில் ஒன்றான வங்கி தனது வாடிக்கையாளர் சேவைகளை 'சிஸ்டம் அப்கிரேடு' (System Upgrade) பணிகளுக்காக தற்காலிகமாக 3 நாட்களுக்கு முடக்குகின்றது. எனவே, எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி மாலை 4 மணிமுதல் அக்டோபர் 3 ந் தேதி காலை 8 மணிவரை வாடிக்கையாளர் சேவை இருக்காது எனினும் ஒரு சில மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்காக வங்கி திறந்திருக்கும்.

வங்கியின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் நேரத்திலும் வாடிக்கையாளர்கள் வழமைபோல் ஏடிஎம் வழியாக பணத்தை பெறலாம். மேலும் டெபிட் கார்டு, கிரடிட் கார்டு சேவைகளும் தடையின்றி இயங்கும் எனினும் அதற்கான எஸ்எம்எஸ் செய்திகள் வராது.

இந்த 3 நாட்களிலும் வங்கிகள் கலெக்ஷன் செக்குகள், வங்கி சேவைகளுக்குரிய விண்ணப்பப் படிவங்கள், வர்த்தக விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் என்றாலும் அவை அக்டோபர் 3 ஆம் தேதியில் வங்கி முழுமையாக இயங்கத் துவங்கிய பிறகே செயல்முறைபடுத்தப்படும்.

The following services will be temporarily unavailable during the three-day period:
Mobile banking
Internet banking
Cash and cheque deposit
Cheque payment and encashment
Funds transfer
Direct debit and standing instructions
More details about the limited services here.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

துபையில் 24 மணி நேரம் இயங்கும் ஸ்மார்ட் தானியங்கி காவல் நிலையம் திறப்பு !

அதிரை நியூஸ்: செப்.18
துபையில் 24 மணிநேரமும் செயல்படும் தானியங்கி ஸ்மார்ட் காவல் நிலையம் சிட்டிவாக் பகுதியில் திறக்கப்பட்டது. துவக்கமாக 2 காவலர்கள் மக்களுக்கு வழிகாட்ட பணியமர்த்தப்பட்டுள்ளனர் இவர்களும் விரைவில் விலக்கிக் கொள்ளப்பட்டு முழுமையான தானியங்கி காவல் நிலையமாக செயல்படும், மேலும் இதுபோன்ற பல காவல் நிலையங்கள் துபை மாநகரின் பல பகுதிகளிலும் படிப்படியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

குற்றங்கள், விபத்துக்கள், அபராதங்கள் செலுத்துவது உட்பட இந்த ஸ்மார்ட் காவல் நிலையத்தில் 27 முக்கிய சேவைகள் உட்பட 33 வகையான சேவைகள் வழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள் 24 மணிநேரத்தில் எந்த நேரத்திலும் ஸ்மார்ட் காவல் நிலையம் சென்று அங்குள்ள தனித்தனி அறைகளுக்குள் சென்று அங்குள்ள மின்சாதனங்கள் வழியாக தொடர்பு கொண்டால் அங்குள்ள திரையில் தோன்றும் காவலர் தேவையான சேவைகளை பெறுவதற்கான வழிகாட்டுவார்.

வாடிக்கையாளர்களால் தனியறைகள் நிரம்பினால் காத்திருக்கு பிற வாடிக்கையாளர்கள் டிரைவிங் பயிற்சியுடன் தொடர்புடைய கல்வி விளையாட்டை விளையாடி பயனுள்ள வகையில் நேரத்தை கழிக்கலாம். மேலும் பொதுமக்கள் தவறவிடும் பொருட்களை எடுத்து வருபவர்கள் உரியவரிடம் ஓப்படைப்பதற்கான பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த வசதியை அமீரகவாசிகளும் (ரெசிடென்ஸ்) மற்றும் சுற்றுலாவாசிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அமீரகவாசிகள் தங்களுடைய எமிரேட்ஸ் ஐடியை அங்குள்ள திரையில் வைப்பதன் மூலம் உள்நுழையலாம். சுற்றுலாவாசிகள் திரையில் தங்களைப் பற்றி முழு விபரங்களையும் பதிந்து ஸ்மார்ட் காவல் நிலைய சேவைகளை பெற முடியும்.

வழங்கப்படவுள்ள முக்கிய சேவைகள்:

List of services

- Traffic fines payment
- Good-conduct certificate
- Home security
- Police leaders at your service
- Traffic status certificate
- Reissuing traffic accident report
- Pay impound fees
- Verify driver
- Labour complaint
- Lost-and-found items
- Lost-item certificate
- File criminal complaint
- Certificate-TWIMC
- Detainee visit request
- Police report inquiry
- Report crime
- Tourist security
- Vehicle inspection request
- Application status
- Heart patient service
- Social support in family violence cases
- Police museum tour
- Feedback
Source: Dubai Police

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் !

பட்டுக்கோட்டை, செப்.18
பட்டுக்கோட்டையில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அண்ணாதுரை இன்று (18.09.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.

முதல் கட்டமாக ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து அவசர மற்றும் சிறப்பு பிரிவுகள் அடங்கிய புற நோயாளி பகுதி கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.  இப்பணியானது 5 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு என அறிவுறுத்தப்பட்டது.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து டயாலிஸ் கருவி, டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி ஆகியவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டனர்.

ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதி கட்டப்படவுள்ளது. ரூ.4 கோடி மதிப்பீட்டில் முதல் தளத்தில் நோயுடன் பிறந்த குழந்தைகள் கவனிப்பு பிரிவு, ஆண்கள், பெண்கள் வார்டு, இரண்டாம் தளத்தில் அறுசை சிசிச்சை அரங்கம் கட்டப்படவுள்ளது. பின்னர், அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பெற்றெடுத்த 16 தாய்மார்களுக்கு குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தினை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் வழங்கினார்.

பின்னர், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நிலவேம்பு குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டை நகராட்சியின் சார்பில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் மற்றும் கொசு பரவாமல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக வைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), கோவிந்தராசு (பேராவூரணி), பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஞானசம்பந்தன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் !

அதிராம்பட்டினம், செப்.18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

பள்ளிச்செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் வழிகாட்டுதலின் பேரில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி முகாம் ஏற்பாடு செய்தார். முகாமில் சிறப்பு அழைப்பாளராக, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் கலந்துகொண்டு டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். முகாமில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்கள் 1000 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

முன்னதாக பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.அஜ்முதீன் வரவேற்றுப்பேசினார். முகாம் முடிவில் பள்ளி ஆசிரியர் யு.உமர் பாருக் நன்றி கூறினார். இதன் பின்னர், பள்ளி தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், ஜூனியர் ரெட் கிராஸ் ஆகிய அமைப்புகளின் மாணவர்கள் பள்ளி வளாக தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

முகாமில், பள்ளி ஆசிரியர்கள், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஆறுமுகம், செயலர் டி.முகமது நவாஸ்கான், பொருளாளர் இசட். அகமது மன்சூர் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 

அமீரகத்தில் ஹிஜ்ரி புது வருடத்திற்கான பொது விடுமுறை அறிவிப்பு!

அதிரை நியூஸ்: செப்.18
அமீரக மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, பிறை காணுதலின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ஹிஜ்ரி 1439 ஆம் புது வருடப் பிறப்பிற்கான பொது விடுமுறையை அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப். 20 ஆம் தேதி புதன் பின்னேரம் பிறை காணப்பட்டால் அடுத்த நாள் செப். 21 ஆம் தேதி வியாழக்கிழமை 1439 ஆம் ஹிஜ்ரி வருட முஹர்ரம் மாதத்தின் முதல் நாளாக அனுசரிக்கப்பட்டு அன்றைய தினம் விடுமுறை தினமாகும். எனவே, பலருக்கும் சனிக்கிழமையுடன் 3 நாள் தொடர் விடுமுறையும், சிலருக்கு வியாழன், வெள்ளி என 2 நாள் விடுமுறையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

செப். 21 வியாழன் பின்னேரம் பிறை காணப்பட்டால் செப். 22 வெள்ளிக்கிழமை முஹர்ரம் மாதத்தின் முதலாவது நாளாகும். வெள்ளிக்கிழமையே இணைந்த வாராந்திர மற்றும் பொது விடுமுறை தினமாக அமையும் அதனால் வழமையான விடுமுறையில் எந்த மாற்றமும் இருக்காது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகை வழக்கத்திற்கு மாறாக அதிகமாகக் காணப்படுகிறது. தினமும் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம், அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

முகாமில், நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர், டாக்டர் புவனா தலைமையில், மருத்துவக்குழுவினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முகாமில், இரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் மாத்திரைகள், டானிக், குளுகோஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், அறிவுரைகள் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாட்டினை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகள் செய்தனர்.
 

அதிரையில் TNTJ சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.18
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளி அருகில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளைத்தலைவர் நவாப்ஷா தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், பொதுமக்கள் 300 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

இம்முகாமில், கிளைச் செயலர் ஹைதர் அலி, துணைத்தலைவர் அப்துல் வஹாப், பொருளாளர் அல்லாபிச்சை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்தனர்.
 
 
 
 

பட்டுக்கோட்டையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோரிக்கை மாநாடு (படங்கள்)

பட்டுக்கோட்டை, செப்.18
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநாடு, பட்டுக்கோட்டை காசாங்குளம் அனிதா அரங்கில் சனிக்கிழமை நடந்தது.

மாநாட்டிற்கு, செயலாளர் கே. ஹாஜா முகைதீன் தலைமை தாங்கினார். சி.ராமலிங்கம், எஸ்.ஏ.எம் கோசிமின், கே. சக்திவேல், ஆர்.கே செல்வகுமார், என். காளிதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாநாட்டில், ரேஷன் கடைகளை மூடுவதை தடுத்து, பொது விநியோகத் திட்டத்தை பாதுகாத்திடவும், மாணவர், இளைஞர்களின் ஜனநாயகப் போராட்டத்தை அரசு ஒடுக்குவதை கைவிட வலியுறுத்தியும், பகத்சிங் பிறந்த தினமான வரும் செப். 28 ந் தேதி தஞ்சையில் இரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநாட்டில், ஜே. கோசிமின், கே.ஹாஜா முகைதீன், எஸ். பாக்கியராஜ், வ.விஜயன், எஃப். நிஜாமுதீன்,எல். பாக்கியராஜ், ஜி. பூபேஷ் ஆகிய 7 பேர் கவுன்சிலர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டின் தொடக்கத்தில் அண்மையில் மறைந்த மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொருளாளர் வ. விஜயன் வரேவேற்றார். மாநாட்டு முடிவில் அதிரை இஸ்மாயில் நன்றி கூறினார். இம்மாநாட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 

மரண அறிவிப்பு ~ சிறுவன் மர்ஜூக் அகமது (வயது 18)

அதிரை நியூஸ்: செப்.18
அதிராம்பட்டினம், பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த மர்ஹூம்
ஓ.கே.எம் சாகுல் ஹமீது, மர்ஹூம் எம்.ஏ சேக் முகமது ஆகியோரின் பேரனும், எஸ். ராஜிக் அகமது அவர்களின் மகனும், எஸ்.வஜீர் அலி, எஸ். தைசர் அலி ஆகியோரின் மருமகனுமாகிய சிறுவன் மர்ஜூக் அகமது (வயது 18 ) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Sunday, September 17, 2017

அதிராம்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் காந்தி நகர், மாரியம்மன் கோயில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சுகாதார தூய்மை தொடர்பாகவும், டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்

அதிராம்பட்டினம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதிராம்பட்டிணம் பேரூராட்சி அலுவலகத்தில் பொது மக்களுடன் டெங்கு நோய் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், தூய்மை கடைப்பிடித்து பராமரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. அதிராம்பட்டிணம் காந்தி நகர் பகுதியில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கழிவு நீர் வாய்க்கால் மேம்படுத்தி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அப்போது, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ம. கோவிந்தராசு, அதிரை பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...