Pages

Sunday, January 22, 2017

முஸ்லீம் பெண் கட்டிய உலகின் பழமையான பல்கலைக்கழகம் - சிறப்பு பதிவு

அதிரை நியூஸ்: ஜன-22
உலகம் ஒருபுறம் பெண்களுக்கு கல்வி, சொத்துரிமைகளை மறுத்துக் கொண்டிருந்த காலத்தில் 2 முஸ்லீம் பெண்கள் தங்களின் சொத்துக்களை கொண்டு இரு மஸ்ஜிதுகள், ஒரு பல்கலைக்கழகம் மற்றும் ஒரு நூலகம் என அனைத்தையும் ஏற்படுத்தியதுடன் சுமார் 1158 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையிலும் 'உலகில் நீண்ட காலமாக இயங்கி வரும் ஒரே பல்கலைக்கழகம்' (the oldest operational educational institution in the world) என்ற பெயரையும் பெற்றுள்ளது.

9 ஆம் நூற்றாண்டில், துனிஷியாவில் பிறந்த பாத்திமா அல் பிஹ்ரி (Fatima Al Fihri) அவர்களின் செல்வச் செழிப்புமிக்க குடும்பம் மொரொக்கோ நாட்டின் 'பெஸ்' (Fez) என்ற நகருக்கு குடிபெயர்ந்தனர். பெரும் வணிகரான முஹமது பின் அப்துல்லா அல் பிஹ்ரி தனது மகள்களான பாத்திமாவுக்கும், மரியம் அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கச் செய்தார். சில ஆண்டுகளில் தந்தை, கணவர், சகோதரன் என அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக இறக்க, சகோதரிகளுக்கு தந்தையின் சொத்துக்கள் கிடைத்தன என்றாலும் சகோதரிகள் இருவரும் இந்த சொத்துக்களை கொண்டு சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் செலவிட உறுதிபூண்டனர்.

சகோதரிகளுடைய காலத்தில் பெஸ் நகர பள்ளிவாசல்கள் அனைத்தும் இடப்பற்றாக்குறையால் நிரம்பி வழிந்தன. இன்று சிரியா, லிபியா, ஈராக் மக்கள் அகதிகளாக அல்லல்படுவது போல் இஸ்லாமிய நாடாக இருந்த ஸ்பெயினிலிருந்து முஸ்லீம்கள் அகதிகளாக மொரொக்கோ நாட்டிற்குள் தஞ்சமடைந்ததும் ஒரு காரணம். எனவே, மரியம் அவர்கள் 859 ஆம் ஆண்டில் 'அல் அண்டலூஸ் மஸ்ஜித்' (The Grand Andalus Masjid) எனும் பிரமாண்ட பள்ளிவாசலை கட்டினார். அதேவேளை பிறிதொரு புறத்தில் வட ஆப்பிரிக்க பிராந்தியத்திலேயே பிரமாண்டமான 'அல் கராவியின் மஸ்ஜிதை' (Al Qarawiyyin Masjid) நிர்மாணித்தார் பாத்திமா அல் பிஹ்ரி .

இந்த 'அல் கராவியின் மஸ்ஜித்' வளாகத்திற்குள்ளேயே அவர் எழுப்பிய அல் கராவியின் பல்கலைக்கழகம் (Al Qarawiyyin University) வரலாற்றாசிரியர்களின் கருத்தின்படி, உலகில் தொடர்ந்து சுமார் 1158 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரே உயர்நிலை பல்கலைக்கழகம் இதுவே என சான்று பகர்கின்றனர். இன்று வரை இப்பல்கலைகழகம் உயர்தர பட்டதாரிகளை உலகிற்கு வழங்கி வருகிறது. இந்தப் பள்ளியுடன் இணைந்த பல்கலைகழகத்தை பாத்திமா அவர்கள் ஹிஜ்ரி 245 ஆம் வருடம் (ஆங்கில வருடம் 859) ரமலான் முதல் நோன்பிலிருந்து தொடர்ந்து இரண்டாண்டுகள் நோன்ற நிலையில் அல்லாஹ்வின் உதவியை வேண்டி பிரார்த்தித்து கட்டுமானத்தை நேரடியாக தினமும் மேற்பார்வையிட்டு உருவாக்கினார்.

இந்தப் பல்கலைகழகத்திலிருந்து அறிஞர் அபு அல் அப்பாஸ், நீதியாளர் முஹமது அல் பாசி, எழுத்தாளரும் தேசாந்திர பயணியுமான லியோ ஆப்ரிகானோஸ், மாலிக்கி சட்டமேதை இப்னு அல் அரபி, வரலாற்றாசிரியர் இப்னு கல்தூன், வானவியலாளர் அல் பிட்ருஜி போன்றோர் உருவாகியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பல்கலைகழகம் ஐரோப்பாவையும் இஸ்லாமிய கல்வி, கலாச்சரத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கியது.

தத்துவவியலாளர், இறையியலாளர், வானியலாளர், மருத்துவர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்த 'மைமோனிடஸ்' எனும் யூத ரப்பி (யூத மத அறிஞர்) கூட இந்த பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறி ஒரு மாணவர் தான். மேலும், இரண்டாம் சில்வஸ்டர் எனும் போப் ஆண்டவர் இந்த பல்கலைகழக தாக்கத்தின் காரணமாக இடைக்கால ஐரோப்பாவில் அரேபிய எண்கள் மற்றும் பூஜ்யத்தின் பயன்பாடுகளை அறிமுகம் செய்தார்.

ஒருபுறம் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய சட்டங்களை பயிற்றுவித்த இந்த பல்கலைக்கழகம் மறுபுறம் இலக்கணம், மருத்துவம், கணக்கு, வானவியல், வேதியியல், வரலாறு, பூகோளம், இயற்பியல், இயற்கை அறிவியல், அந்நிய மொழிப் பாடங்கள் மற்றும் இசை என விரிவான பாடத்திட்டங்களையும் நடத்தியது.

மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் பாத்திமா அல் பிஹ்ரி அவர்கள் உருவாக்கிய உலகின் பழமையான நூலகங்களில் ஒன்றான இங்கு சுமார் 4,000க்கும் மேற்பட்ட விலைமதிக்க முடியாத கையெழுத்து பிரதிகளையும், 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குர்ஆன் பிரதியையும், ஆரம்பகால ஹதீஸ் திரட்டல் பிரதிகளையும், மான்தோல் சுவடியில் எழுதப்பட்ட இமாம் மாலிக் அவர்களின் 'அல் முஅத்தா' என்ற பிரசித்தி பெற்ற நூலையும், பல பழமையான இலக்கிய புத்தகங்களையும், சீரா இப்னு இஷாக், இப்னு கல்தூன் அவர்களின் அல் இப்ரார், 1602 ஆம் ஆண்டு சுல்தான் அல் மன்சூர் அன்பளிப்பு செய்த குர்ஆன் பிரதி என பல வகையான நூற்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

காலப்போக்கில் அறிஞர்களை தவிர பொதுமக்கள் பயன்படுத்த இயலாத அளவிற்கு சேதமான இந்த நூலகம் 2012 ஆம் ஆண்டு குவைத் அரப் வங்கியின் உதவியுடன் 3 ஆண்டுகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று பழமைமாற தன்மையுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் திறந்துவிடப்பட்டது.

ஒரு முஸ்லீம் பெண்மணியின் தயாள குணத்தால் உருவான இந்த காரவியின் பல்கலைக்கழகமே உலகில் இன்றும் உயிர்ப்புடன் இயங்கும் ஒரே பழமையான பாரம்பரிய பல்கலைக்கழகம் என யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...