Pages

Sunday, February 5, 2017

செல்லிக்குறிச்சி ஏரி தூர்வாரப்படுமா? அரசு நடவடிக்கைக்காக காத்திருக்கும் விவசாயிகள்!

அதிராம்பட்டினம், பிப்-05
அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் பிரதான சாலையில் சுமார் 285 ஏக்கர் பரப்புள்ள செல்லிக்குறிச்சி ஏரி உள்ளது. பட்டுக்கோட்டை பகுதியிலுள்ள ஏரிகளில் இதுவே மிகப்பெரிய ஏரியாகும்.

இந்த ஏரி கல்லணைக் கால்வாய் மற்றும் மழைநீரால் நிரப்பப்பட்டு பாசன வசதிக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் 700 ஏக்கருக்கு மேல் 2 போக சாகுபடி செய்யப்பட்டது. தவிர, மழவேனிற்காடு, அதிராம்பட்டினம், மாளியக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 500 ஏக்கர் நிலமும் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையின்மையாலும், கல்லணைக்கால்வாய் தண்ணீர் கிடைக்காததாலும் இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் முழுமையாக நீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும் செல்லிக்குறிச்சி ஏரி இன்று சொட்டு நீரின்றி வறண்டு காய்ந்து விளையாட்டுத் திடல் போல் காட்சியளிக்கிறது. இந்த ஏரி நீரைக் கொண்டு இருபோக சாகுபடி செய்து வந்த விவசாயிகளின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகி விட்டது.

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத காரணத்தால் இந்த ஏரியின் கொள்ளளவு குறைந்து போய் ஒரு போக சாகுபடி கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நீரின்றி வறண்டு பொட்டல் காடாக ஏரி மாறிப்போய் இருப்பதால் விவசாயிகள் வேதனையின் விளிம்பில் உள்ளனர்.

இந்த ஏரியைக் கொண்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள் இயங்கி வந்தன. ஆனால் நிகழாண்டு ஏரியில் நீர் இல்லாததால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்து ஆழ்குழாய் கிணறுகள் இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இந்நிலையில், நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்க, செல்லிக்குறிச்சி ஏரியின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, தூர்வாரி, ஆழப்படுத்த வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள மாளியக்காடு காமராஜர் சாகர் நீரேற்று நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமடம் கிளை வாய்க்கால் மற்றும் கடைமடைப்பகுதி விவசாய பாசனக்குழு விவசாயிகள் சனிக்கிழமை செல்லிக்குறிச்சி ஏரி அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ஆர்.எஸ். வெங்கடாசலம், ஓய்வு பெற்ற வேளாண் உதவி இயக்குநர் எம். கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு அனுப்பப்பட்டு 1 மாதத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தாற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர்.

நன்றி: தினமணி
*  File Images

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...