.

Pages

Friday, March 31, 2017

புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி ?

தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக,
புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் நாளை 01.04.2017 முதல்,
குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்று வரும்
அந்தந்த நியாய விலை அங்காடிகளிலேயே வழங்கப்படவுள்ளது என
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் 01.04.2017 முதல், குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்று வரும் நியாய விலை அங்காடிகளிலேயே வழங்கப்படவுள்ளன. விநியோகத்திற்கு  தயாராக உள்ள ஸ்மார்ட் குடும்ப அட்டைதாரர்களின் மொபைல் போனிற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) குறுஞ்செய்தியாக வரப்பெறும்.  கடவுச்சொல்லினை 7 தினங்களுக்குள் உபயோகப்படுத்த வேண்டும்.  ஒரு முறை கடவுச்சொல் (OTP) குறுஞ்செய்தியாக வரப்பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் தற்போதைய குடும்ப அட்டை மற்றும் குறுஞ்செய்தியுடன் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படவுள்ள நியாய விலைக் கடை பணியாளரிடம் சென்று குறுஞ்செய்தியில் உள்ள ஒரு முறை கடவுச்சொல்லினை (OTP) காண்பித்து, ஒப்புதல் பட்டியலில் கையொப்பம் செய்து, நியாய விலை அங்காடி விற்பனையாளரால் விற்பனை முனையக் கருவியில் (POS) ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை பெற்றிட கட்டணம் ஏதும் செலுத்திட வேண்டியதில்லை.  இதன் மூலம் குடும்ப அட்டை பதிவானதற்கான ஒப்புதல் குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரரின் மொபைல் போனிற்கு வரப்பெறும். இது வரை மொபைல் போன் எண்ணை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக தங்களது மொபைல் போன் எண்ணினை நியாய விலை அங்காடிக்குச் சென்று பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையினைப் பெற்று, அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழான பலன்களை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

துபாயில் தங்க நிறத்தில் தகதகக்கும் பிரேம் ( Frame ) டவர் !

அதிரை நியூஸ்: மார்ச்-31
துபையின் ஷேக் ஜாயித் ரோட்டில் அல் ஜபீல் பார்க் ஸ்டார் கேட் அருகே துபை மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டு வரும் பிரேம் ( Frame ) டவர் பில்டிங்கின் பணிகள் நிறைவுறும் தருவாயை எட்டியுள்ளதுடன் அதன் இணைப்புப் பாலத்தின் கீழ் பதிக்கப்பட்டு வரும் தங்க நிற தகடுகளால் அப்பகுதியே தகதகவென மின்னுகிறது.

சுமார் 160 மில்லியன் திர்ஹம் திட்ட செலவில் 150 மீட்டர் உயரத்தில் இரட்டை கோபுரமாகவும், அகலத்தில் 93 மீட்டரிலும் இவ்விரு கோரங்களையும் இணைக்கும் பாலம் 100 மீட்டரிலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த 50 மாடி கட்டிடப் பணிகள் 2013 ஆம் ஆண்டு கட்டத் துவக்கப்பட்டு தற்போது இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இணைப்பு பாலத்திலிருந்து துபையின் அழகை கண்டு ரசிக்கவும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தரை தளத்தில் பழைய துபை குறித்த நவீன கண்காட்சி அரங்குகள் அமையவுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

மரண அறிவிப்பு ( ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் )

அதிரை நியூஸ்: மார்ச்-31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.மு அப்துல் மஜீது அவர்களின் மகளும், ஹாஜி அ.செ சேக் சலாஹுத்தீன் அவர்களின் மனைவியும், ஹாஜி மீ.மு அப்துல் கரீம், மர்ஹூம் ஹாஜி மீ.மு முஹம்மது தம்பி, ஹாஜி மீ.மு முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி சேக் முஹம்மது, ஹாஜி அப்துல் மஜீது, ஹாஜி முகமது முபாரக், ஹாபிஸ் முஹம்மது மதீனா, முஹம்மது இக்ராம் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 31-03-2017 ) அஸ்ர் தொழுகைக்கு பின்ம ரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிரை அருகே வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.20 லட்சம் கொள்ளை !

பட்டுக்கோட்டை, மார்ச்-31
வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி ரூ. 20 லட்சம் கொள்ளை

காரில் சென்ற வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு, ரூ. 20 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை உள்ளது. இந்த கிளையின் மேலாளராக அரவிந்த் எஸ். குமார், காசாளராக ஆர்.சுப்பிரமணியன் உள்ளனர்.

இவர்கள் இருவரும் வியாழக்கிழமை காலை மல்லிப்பட்டினத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து நாட்டுச்சாலை வங்கிக் கிளைக்கு தேவையான ரூ. 20 லட்சத்தை ஒரு சூட்கேசில் வைத்து எடுத்துக் கொண்டு, வாடகை காரில் நாட்டுச்சாலை வங்கிக்கு கிளம்பினர்.

பிற்பகல் 1 மணியளவில் காசாங்காடு நடைபாலம் அருகே கார் வந்தபோது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் காரை மறித்து, வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு, ரூ. 20 லட்சம் இருந்த சூட்கேசை பறித்துக் கொண்டு தப்பி விட்டனராம். புகாரின் பேரில், பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

நன்றி: தினமணி

Thursday, March 30, 2017

இந்தோனேஷியாவில் இளைஞரை விழுங்கிய மலைப்பாம்பு (வீடியோ)

அதிரை நியூஸ்: மார்ச்-30
இந்தோனேஷியாவின் சுலவேஷி மாகாண தீவு ஒன்றில் பனை எண்ணெய் மர பண்ணை (Palm Oil) தொழிலாளியான 25 வயது இளைஞர் அக்பர் என்பவரை சுமார் 7 மீட்டர் (22 அடி) நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று விழுங்கியது.

பனை எண்ணெய் மர விவசாய பண்ணையில் வேலை செய்யும் அக்பர் வீடு திரும்பாததால் அவரை தீவிரமாக தேடிய நிலையில், மலைப்பாம்பு ஒன்று அத்தோட்டத்தில் வயிறு பெருத்தநிலையில் படுத்திருப்பதை பார்த்து ஒருவேளை இந்தப் பாம்பு கொன்றிருக்கலாம் என தேடும் குழு சந்தேகப்பட்டு வயிற்றை அறுத்துப் பார்த்தால், உள்ளே கழுத்தின் பின்புறம் தாக்கி கொன்று அக்பரை விழங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.


Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ( சுல்தான் ஆரிப் அவர்கள் )

அதிரை நியூஸ்: மார்ச்-30
கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும்,
மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அஹமது ஹாஜா அவர்களின் சகோதரரும், முஹம்மது யூசுப், அகமது நியாஸ், நபீல் அகமது ஆகியோரின் தகப்பனாரும், சாகுல்ஹமீது அவர்களின் மைத்துனரும், ஹாஜா அலாவுதீன், செய்யது இப்ராஹீம் ஆகியோரின் மச்சானும், பகுருதீன் அவர்களின் மாமனாருமாகிய சுல்தான் ஆரிப் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 30-03-2017 ) இரவு இஷா தொழுகைக்கு பின் ( 8 மணியளவில் ) கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை தேவையில்லை !

அதிரை நியூஸ்: மார்ச்-30
இந்திய அரசு கொண்டு வந்துள்ள ஆதார் அட்டை எனும் அடையாள அட்டையால் குடிமக்கள் நன்மையடைந்தார்களோ இல்லையோ கண்டிப்பாக விரக்தியும், தனிநபர் அந்தரங்க தகவல் சுதந்திர பாதுகாப்பின்மையும் அடைந்துள்ளனர். இதற்கு மிக மிக சமீபத்திய உதாரணம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் விபரங்கள் ஆதார் மையத்திலிருந்தே பொதுவெளியில் வெளியானது கடும் சர்ச்சையை உண்டாக்கியது. இருந்த, இருக்கின்ற மத்திய அரசுகள் உருப்படியாக திட்டமிடாததால் வண்டி வண்டியாய் ஆதார் குழப்பங்கள் குவிந்துள்ளன.

இந்திய சட்டப்படி 182 நாட்களுக்கு மேல் வெளிநாட்டில் தொடர்ந்து வசிப்போர் வெளிநாடு வாழ் இந்தியர்களாக கருதப்படுவர். இத்தகையவர்கள் ஆதார் அட்டை எடுக்க உரிமையில்லை என்றும் அவர்களுக்கான உரிமைகள் சிறப்பு விலக்கின் (Exemption) அடிப்படையில் தொடர்ந்து கிடைக்கும் என விளக்கமளித்துள்ளனர்.

அதேவேளை ஏற்கனவே இந்நடைமுறை தெரியாமல் ஆதார் அட்டை எடுத்தவர்களின் நிலை குறித்து தெளிவு எதுவுமில்லாததுடன் எடுக்கப்பட்டுவிட்ட அந்த அட்டைகளை ரத்து செய்யவும் முடியாதாம். ஏனெனில் ஒருமுறை வெளியாகும் அந்த எண் நிரந்தரமானதாம். தெரிந்தோ, தெரியாமலோ ஆதார் அட்டை எடுத்த வெளிநாடுவாழ் இந்தியர்களை தண்டிக்கும் சட்டங்களும் ஏதுமில்லை என்றும் இந்திய அரசின் உயரதிகாரியான டாக்டர் அஜய் பூஷன் பாண்டே என்பவர் தெரிவித்துள்ளார். இவர் தான் ஆதார் அட்டைகளை வழங்கும் மத்திய அரசின் தனிப்பட்ட அடையாள அட்டைகளின் ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.CEO, Unique Identification Authority of India (UIDAI)

குறிப்பாக, வெளிநாடுவாழ் இந்தியர்கள் என பொதுவாக எல்லோரையும் ஒரே கூண்டுக்குள் அடைக்காமல், இந்தியாவில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் வெளிநாடுகளில் பணிபுரியும், 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறையே குடும்பத்தை சந்திக்கும் அவலங்கள் நிறைந்த தொழிலாளிகளையாவது 'வெளிநாடுவாழ் இந்திய தொழிலாளர்கள்' எனும் புதிய பட்டியலின் கொண்டு வர வேண்டும். மக்கள் நலன் பற்றி கவலைப்படும் அரசுகள் ஏதுமிருப்பின் கண்டிப்பாக செவிசாய்க்கும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

அதிரையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு !

அதிராம்பட்டினம், மார்ச்-30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியது.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி நேர நிலவரப்படி அதிரை, ஏரிப்புறக்கரை, பழஞ்சூர், மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, புதுக்கோட்டை உளூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியது.

கோடை தொடங்குவதற்கு முன்பே இவ்வளவு வெப்பம் பதிவாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: accuweather

மரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )

அதிரை நியூஸ்: மார்ச்-30
கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.பி பிச்சை குட்டி அவர்களின் மகளும், மர்ஹூம் ஏ.எம் அவ்லியா முகம்மது அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் அகமது ஹாஜா, கே.பி.என் நெய்னா முஹம்மது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் ஏ.எம் யாகூப் அலி, ஏ.எம் அஜ்மல்கான் ஆகியோரின் தாயாரும், பஷீர் அகமது, மர்ஹூம் அலிதம்பி மரைக்காயர் ஆகியோரின் மாமியாரும், ஜே. ஜே சாகுல் ஹமீது, ஜே. நவாஸ்கான் ஆகியோரின் பெரிய தாயாரும், ஜெஹபர் அலி, சகாபுதீன் ஆகியோரின் மாமியும், செய்யது முபாரக், அதிரை மைதீன், மீரா முகைதீன், சலீம் மாலிக், பைசல் அகமது, முஹம்மது அலி ஆகியோரின் பாட்டியுமாகிய பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 30-03-2017 ) மாலை 5 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

துபாயில் கட்டாய மருத்துவ இன்ஷூரன்ஸ் காலக்கெடு நாளை (மார்ச். 31) முடிவு !

அதிரை நியூஸ்: மார்ச்-30
துபாயில் அனைவருக்கும் கட்டாயம் மருத்துவ காப்பீடு எடுத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பலமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது அது (31 March 2017) நாளையுடன் முடிவடைகிறது. இன்ஷூரன்ஸ் எடுக்காதவர்கள் இனி மாதம் 500 திர்ஹம் அபராதம் செலுத்துவதுடன் புதிய விசாக்களையோ அல்லது நடப்பு விசாக்களை நீட்டித்துப் பெறவோ முடியாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இன்ஷூரன்ஸ் பெற விண்ணப்பிப்பது மற்றும் அதற்கான கட்டணங்களை செலுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தங்களின் உறவினர்களுக்கு விசா ஸ்பான்ஸர் செய்திருப்பவர்களே பொறுப்பு, ஊழியர்கள் விண்ணப்பிக்கவோ, அபராதம் செலுத்தவோ எவ்விதத்திலும் பொறுப்பாளிகள் அல்ல எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா விசாவில் வருபவர்களுக்கான கட்டாய இன்ஷூரன்ஸ் திட்டமும் 2017 டிசம்பருக்குள் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதுகுறித்து அதிரை நியூஸில் முன்பு வெளியான செய்தியை படிக்க:
துபாயில் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இல்லையெனில் அபராதம் !

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

துபாய் போலீஸின் நேர்மை ! தனக்கு தானே தண்டனை விதிப்பு !

அதிரை நியூஸ்: மார்ச்-30
வளைகுடா நாடுகளில் குறிப்பாக துபை போக்குவரத்து போலீஸார் விதிகளை பின்பற்றுவது போல் பிறர் பின்பற்றுவது அரிதே. இவர்களின் கடந்தகால வரலாற்றில் சாலை விதிகளை மீறிய ஆட்சியாளர்களின் குடும்பத்தவரையே 'சட்டத்தை இயற்றிய நீங்களே மதிக்காவிட்டால் வேறு யார் மதிப்பார்?' என துணிவாக கேள்வியெழுப்ப அதற்கு அவர்கள் கட்டுப்பட்டு சென்றதும் அனைவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரி.

துபையில் சாலை ஓர பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த எகிப்திய மருத்துவர் ஒருவருக்கு சொந்தமான காரை எதிர்பாராவிதமாக போலீஸ் வாகனம் ஒன்று இடித்தது. அதிலிருந்த போலீஸ்காரர் 'கார்ப்போரல்' அப்துல்லாஹ் முஹமது இபுராஹீம் என்பவர் உடனடியாக விபத்து நேர்ந்தால் பிறருக்கு வழங்குவது போலவே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு தனக்கு எதிரான ஒப்புகை சீட்டை சேதமடைந்த மருத்துவர் காரின் கண்ணாடி பகுதியில் வைத்துவிட்டுச் சென்றிருந்தார்.

ஓப்புகை சீட்டை படித்து விஷயமறிந்த எகிப்திய மருத்துவர் அந்த போலீஸாரின் நேர்மையை பாராட்டி சமூக வலைத்தளங்களில் செய்தியை பதிய வைரலானது. இந்த சமூக வலைத்தள செய்தி துபை போலீஸாரின் தலைமையகத்தை எட்ட, சம்மந்தப்பட்ட போலீஸ்காரர் மற்றும் எகிப்திய டாக்டர் ஆகியோரை அழைத்துப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியதுடன் கூடுதலாக போலீஸாருக்கு பதவி உயர்வையும் வழங்கியுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அமெரிக்கா விசா உள்ள இந்தியர்கள் அமீரகத்தில் நுழைய விசா நடைமுறையில் சலுகை !

அதிரை நியூஸ்: மார்ச்-30
அமீரகத்திற்கு வர விரும்பும் இந்தியர்கள் முன்கூட்டியே விசா பெற விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையில் ஒரு சிறப்பு சலுகையை அமீரக அமைச்சரவை வழங்கியுள்ளது.

இந்த புதிய சலுகையின்படி, குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்கா விசா அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டும் அமீரகத்தின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள், தரைவழி உள்நுழைவு மையங்கள் வழியாகவும் வருகை தந்த பின் On Arrival முறையில் 14 நாட்களுக்கான விசாவை பெற்று உள்நுழையலாம், மேலும் ஒருமுறை மட்டும் 14 நாட்களுக்கு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி நீட்டித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த வருடம் மட்டும் 1.6 மில்லியன் இந்தியர்கள் அமீரகத்திற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்துள்ளனர், அதேவேளை சுமார் 50,000 அமீரகத்தினர் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இருநாடுகளுக்கு இடையேயும் தினமும் சுமார் 143 விமான சேவைகள் அதாவது வாரத்திற்கு சுமார் 1,000 சேவைகள் நடைபெறுகின்றன.

ஏற்கனவே, வளைகுடா நாடுகளை தவிர்த்து 47 சர்வதேச நாடுகளுக்கு 90 நாட்களுக்கான ஆன் அரைவல் (On Arrival) விசா வசதியையும், அதிலும் சில நாடுகளுக்கு 30 நாட்களுக்கான ஆன் அரைவல் விசா வசதிகளையும் அமீரகம் வழங்கி வருகிறது.

கூடுதல் தகவல்கள்:
உலகளவில் இந்தியாவே அமீரகத்தின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக திகழ்கிறது. சமீபத்திய புள்ளிவிபரப்படி ஆண்டுக்கு 60 பில்லியன் டாலர் (220 பில்லியன் திர்ஹம்) அளவுக்கு வர்த்தகங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது இந்தியாவின் ஏற்றுமதி 33 பில்லியன் டாலர் (121 பில்லியன் திர்ஹம்) அளவிற்கும், அமீரகத்தின் ஏற்றுமதி 27 பில்லியன் டாலர் (99 பில்லியன் திர்ஹம்) அளவிற்கும் நடந்துள்ளது.

அமீரகத்தில் சுமார் 45,000 இந்திய நிறுவனங்கள் வழியாக 70 பில்லியன் டாலர் (257 பில்லியன் திர்ஹம்) அளவிற்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை இந்தியாவில் 10 பில்லியன் டாலர் (36 பில்லியன் திர்ஹம்) அளவிற்கே முதலீடு செய்யப்பட்டுள்ளன. அந்த முதலீடுகள் கூட எரிசக்தி, உலோகம், கட்டுமானம், தொழிற்நுட்பம் மற்றும் சேவை துறைகளிலேயே செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Wednesday, March 29, 2017

அதிரையில் மஜக பொதுக்கூட்டம் அறிவிப்பு; 11 வது வார்டு கிளை நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-29
மனிதநேய ஜனநாயகக் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் அதிராம்பட்டினம் புதுத்தெருவில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அக்கட்சி அதிரை பேரூர் செயலர் முகமது செல்லராஜா தலைமை வகித்தார். மஜக 2 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி எதிர்வரும் ( 21-04-2017 ) அன்று வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையத்தில் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ,  மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாருன் ரஷீது மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.

அதிராம்பட்டினம் பேரூர் 11 வது வார்டு ( புதுத் தெரு பகுதி ) கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளராக இர்பாஃன், பொருளாளராக முபித் அஹமது, துணைச்செயளாலர்களாக சாதிக் பாட்சா, மஹாதிர், சரப் அஹமது, மாணவர் இந்தியா கிளைச் செயலாளராக தௌபிக் அஹமது, கிளை பொருளாளராக அப்துல் சமது ஆகியோர் ஏகனமதாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாணவர் இந்தியா அமைப்பின் அதிரை பேரூர் செயலாளராக இப்ராஹீம் மஸ்தான்  தேர்வு செய்யப்பட்டார்.

இக்கூட்டத்தில் மஜக அதிரை பேரூர் பொருளாளர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது, குவைத் மண்டல ஊடகச் செயளாலர் அப்துல் சமது, துணைச்செயலாளர்கள் புரோஸ்கான் அப்துல் கனி  உட்பட மஜகவினர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

அதிரை அருகே வாகன விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் பலி:12 பேர் காயம் (படங்கள்)

மல்லிபட்டினம், மார்ச்-29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்த தலையாமங்கலம் பகுதியை சேர்ந்த சிலர் குடும்பமாக சேர்ந்து டவேரா சொகுசு காரில் இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். புதன்கிழமை அதிகாலை சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள சுப்பம்மாள்சத்திரம் என்ற இடத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது, காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இவ்விபத்தில் காரை ஓட்டிச்சென்ற திருவையாறு தாலுகா அல்லூர் பகுதியை சேர்ந்த கரிகாலன் மகன் திருமாவளவன் (வயது 30), பருத்திக்கோட்டை பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் செந்தில்குமார் (வயது 25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் காரில் பயணம் செய்த பொன்னாப்பூர் நாகராஜ் மனைவி உமா(வயது 40), மகள் மேனகா( வயது 17), மகன் கர்ணன் (வயது 16), தலையாமங்கலம் முத்துசாமி மகன் விஜயகுமார் (வயது 36),  அவரது மனைவி பொன்னி ( வயது 32), இவர்களது மகள் அஸ்ரா ( வயது 1), இதே பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் மகன் சுரேஷ் (வயது 34), பருத்திக்கோட்டை பகுதியை சேர்ந்த வீரையன் மகன்  சின்னையன்( வயது 47) இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 44), சேதுராயன்குடிக்காடு பழனிவேலு மகன் சாய்பிரியன்( வயது 3), தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சங்கிலி மகன் குமாரவேல் (வயது 48) உள்ளிட்ட 12 பேர் பலத்த காயமடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானோர் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்திப்பு ( படங்கள் )

அதிரை நியூஸ்: மார்ச்-29
அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் ( AAF ) விடுமுறை கால சந்திப்பு நிகழ்ச்சி கலிபோர்னியா மகாணம் வல்லேஹோ இஸ்லாமிக் சென்டரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிரையரின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி பெருநாள் பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் நடைபெறுவது வழக்கம் அதன்படி வார இறுதியின் விடுமுறை தின சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் புஹாரி தலைமை வகித்தார்.
ஆண்டறிக்கை மற்றும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பொருளாளர் முகமது விவரித்தார். இக்கூட்டத்தில் துணைத்தலைவர் சலீம், செயலாளர் நஜ்முதீன், துணை செயலாளர் சித்திக் முகமது உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
கலிபோர்னியாவிலிருந்து அதிரை சித்திக்
 

Tuesday, March 28, 2017

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, புதிய மின்னனு குடும்ப அட்டைகள் (Smart Family Card) 01-04-2017 முதல், குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்றுவரும் நியாயவிலை அங்காடிக்கு வெகு அருகாமையில் நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலம் வழங்கப்படவுள்ளன. முழுமையாக மற்றும் பகுதியாக ஆதார் இணைக்கப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட் குடும்ப அட்டையில், ஆதார் பதிவு செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மட்டுமே அச்சுப்பதிவு செய்திட கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது, ஸ்மார்ட் குடும்ப அட்டையில், முன்னுரிமை பெற்ற குடும்பங்களை (PHH) - பொருத்தமட்டில், அந்த குடும்பத்தின் மு்த்த பெண் உறுப்பினர். குடும்பத்தின் தலைவராக இருப்பார். தற்போது குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர், நடைமுறையிலுள்ள குடும்ப அட்டையுடன் முகவரிக்கான ஆதாரம் அல்லது அடையாள ஆவணத்தினை கொண்டு சென்று சிறப்பு முகாமில் காண்பித்து, ஒப்புதல் பட்டியலில் கையொப்பம் செய்து புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு அச்சுக்கட்டணம் ஏதும் செலுத்திட வேண்டியதில்லை, ஸ்மார்ட் குடும்ப அட்டையினை பெற்றவுடன் நியாய விலை அங்காடி விற்பனையாளரின் மு்லம் உடனடியாக விற்பனை முனையக் கருவியில் (POS) ஸ்மார்ட் குடும்ப அட்டையினை ஸ்கேன் செய்திட வேண்டும், இதன்மு்லம் குடும்ப அட்டைதாரர் அவரது கைபேசியில் குறுஞ்செய்தியைப் பெறுவார்.

குடும்ப உறுப்பினர்களில் இதுவரை ஆதார் இணைக்கப்படாத விடுப்பட்டுள்ள உறுப்பினர்களின் ஆதார் பதிவு செய்திட ஏதுவாக ஜுன் - 2017 மாதம் 17ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களில் ஒரு சிலரின் ஆதார் பதிவு செய்யாமல் உள்ள ஸ்மார்ட் குடும்ப அட்டைகளுக்கு  ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதத்திற்கு மட்டும். விற்பனை முனையக் கருவியில் (POS) பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளது.

ஸ்மார்ட் குடும்ப அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்யப்பட வேண்டுமானால், பொதுசேவை மையத்தின் மு்லம் (CSC) உரிய கட்டணம் செலுத்தி திருந்திய ஸ்மார்ட் குடும்ப அட்டையினைப் பெற்றுக்கொள்ளலாம்.   பிளாஸ்டிக்காலான ஸ்மார்ட் குடும்ப அட்டையினை ஒவ்வொரு முறையும். நியாயவிலை அங்காடிக்கு எடுத்துச் செல்லத் தேவையில்லை. அதன் பின்பக்கம் உள்ள QR Code ஐ  தெளிவாக ஜெராக்ஸ் எடுத்துச் சென்றாலே போதுமானதாகும்,  குடும்ப அட்டையிலுள்ள உறுப்பினர்களின் விவரங்களுடன் இதுவரை ஆதார் மற்றும் கைபேசி எண் விவரங்களை இணைக்காதவர்கள். உடனடியாக. நியாயவிலை அங்காடியிலுள்ள விற்பனை முனையக்கருவியில் (POS) அவற்றை விரைவில் இணைத்து. ஸ்மார்ட் குடும்ப அட்டைகளைப்பெற்று. அரசின் பொது விநியோகத்திட்டத்தின் கீழான பலன்களைப்பெற்று பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ. அண்ணாதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.

அமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை குறைப்பு !

அதிரை நியூஸ்: மார்ச்-28
அமீரகத்தில் மாதந்தோறும் பெட்ரோல் சில்லறை விலைகள் சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2017 ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலையில் லிட்டருக்கு சுமார் 8 காசுகளும் டீசல் விலையில் 7 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: 
அடைப்புக்குறிக்குள் சென்ற மாத விலை ஓப்பீட்டுக்காக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சூப்பர் 98 - திர்ஹம் 1.95 (திர்ஹம் 2.03)
ஸ்பெஷல் 95  -  திர்ஹம் 1.84 (திர்ஹம் 1.92)
ஈ பிளஸ் 91 - திர்ஹம் 1.77 (திர்ஹம் 1.85)
டீசல் - திர்ஹம் 1.95 (திர்ஹம் 2.02)

2017 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் விலை ஏறிவந்த நிலையில் தற்பொழுது தான் முதன்முதலாக குறைக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

தஞ்சை மாவட்டத்தில் தரமற்ற உணவுப்பொருள் விற்பனை: ரூ. 67 ஆயிரம் அபராதம் !

உணவுப்பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன் பிரிவு 51 மற்றும் 52 ஆகியவற்றில் முறையே தரக்குறைவு (Substandard) மற்றும் தப்புக் குறியீடு (Misbranded ) ஆகியவற்றுடன் உணவுப் பொருட்களை தயாரித்தாலோ. விநியோகம் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ தரக்குறைவு பொருட்களுக்கு அபராதமாக ரூ 5,00,000-/ வரையிலும். தப்புக்குறியீடு உள்ள பொருட்களுக்கு  ரூ 3,00,000-/ வரையிலும் அபராதம் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
 
அதன்படி. உணவுபாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் நான்கு வணிக நிறுவனங்களில் பொதுமக்களுக்கு தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. உணவு பாதுகாப்பு அலுவலர்களால் கண்டறியப்பட்டதால், உணவுபாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ல் பிரிவு 51 ன் கீழ் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர். கூடுதல் மாவட்ட குற்றவியல் நடுவர் மற்றும் தீர்ப்பு அலுவலரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு. குற்றச்செயலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு ரூ 67,000-/  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே. தரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்தல். விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற நிகழ்வுகளில் ஈடுபடும் விற்பனை நிலையங்களின் பேரில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தரமான உணவுப்பொருட்களை மட்டும் வாங்கி பயன்படுத்திடுமாறும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். 

காதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் தொழில் வழி காட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தின் சார்பாக வளாக நேர்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், கோல்ட் பிளஸ் ஜுவல்லரி - டைட்டான் கம்பெனி ( லிமிடட்), நிறுவன விற்பனை பிரதிநிதி 10 பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தியது. இந்நிறுவனத்தின் மேலாளர்கள் ராஜகோபால், பாலசுந்தரம் ஆகியோர் நேர்காணலை நடத்தினர். இதில் 50 க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் 16 மாணவ, மாணவிகள் முதற் கட்ட தேர்வில் தகுதி பெற்றனர்.

இந்நேர்காணலில் கல்லூரி முதல்வர் ஏ.எம்.உதுமான் முகையதீன் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். நேர்காணல் ஏற்பாட்டினை தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் ஏ. சேக் அப்துல் காதர் செய்தார்.
 
 
 

கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (28.03.2017) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியானது ரயிலடி தொடங்கி முக்கிய வீதிகளில் வழியாக அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது.   இப்பேரணியில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த  700க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது விழிப்புணர்வு பதாகைகள், ஒழிப்போம், ஒழிப்போம் கள்ளச்சாராயத்தை ஒழிப்போம், காப்போம், காப்போம் நாட்டு மக்களை காப்போம், மறப்போம், மறப்போம் கள்ளச்சாராயத்தை மறப்போம், காப்போம், காப்போம் உயிரையும், உடலையும் காப்போம், கள்ளச்சாராய பிளைப்பு காலனுக்கு அழைப்பு, ஒழித்திடுவோம், ஒழித்திடுவோம் கள்ளச்சாராயத்தை  ஒழித்திடுவோம், தவிர்த்திடுவோம், தவிர்த்திடுவோம் பேராபத்தை தவிர்த்திடுவோம், அருந்தாதே, அருந்தாதே கள்ளச்சாராயத்தை அருந்தாதே, எதிர்கொள்ளாதே, எதிர்கொள்ளாதே பேராபத்தை எதிர்கொள்ளாதே,  மூழ்காதே மூழ்காதே பேராபத்தில் மூழ்காதே, விழாதே, விழாதே புதைக்குழியில் விழாதே, இழக்காதே, இழக்காதே வாழ்க்கையை இழக்காதே, விழாதே, விழாதே குடிபோதையில் விழாதே, விடைகொடு, விடைகொடு போதை மருந்திற்கு விடை கொடு போன்ற விழிப்புணர்வு கோஷங்கள் கூறியபடி பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) இன்னாசிமுத்து, வட்டாட்சியர் குருமூர்த்தி  மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு !

சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

தடை உத்தரவுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மறுபதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2016ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதிக்கு முன் வாங்கியிருந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை தளர்த்தியுள்ளது.

தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் வைத்த கோரிக்கை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்படும் நிலத்தில், சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை மீறக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சாலை, கழிவுநீர் குழாய் பதிக்க போதிய இடம் வசதி இல்லாத நிலங்களை முறைப்படுத்த போதிய கால அவகாசம் அளித்தும், அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் தொடர்பாக அரசின் கொள்கை முடிவை ஏப்ரல் 7ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வழக்கின் பின்னணி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த பொது நல மனு விவரம்: விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி  விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.

இதனால் விளை நிலப்பரப்பு வெகுவாக குறைந்து விவசாயமும் பாதித்துள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவும் முக்கியமான காரணம். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முறையற்ற முறையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், -விளை நிலங்களை வீட்டு மனைகளாக -லே-அவுட்- போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது- என்று உத்தரவிட்டது.

நன்றி: தினமணி

அதிரை அருகே விபத்தில் மாணவர் பலி !

அதிராம்பட்டினம், மார்ச்.28-
தஞ்சாவூர் மாவட்டம் அதிரையை அடுத்த செந்தலைப்பட்டினம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் நாகூர்பிச்சை. இவரது மகன் ஜம்மூன் அலி ( வயது 16) 10 வது படித்து விட்டு, மேல்படிப்பு செல்லும் ஏற்பாட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு செந்தலைப்பட்டினம் கடைவீதிக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்பொழுது  கிழக்கு கடற்கரை சாலையில், வேளாங்கன்னியிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த மாணவர் ஜம்மூன் அலி மீது மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாணவர் ஜம்மூன் அலியை செந்தலைப்பட்டினம் பொதுநலச் சங்கத்தினர் தங்களது ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனாலும் மாணவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மாணவரது உடல் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கன்னியாகுமரியை சேர்ந்த சுற்றுலா வேன் ஓட்டுநர் சுதன் என்பவரை பிடித்து, சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாய் அரசு வேலைவாய்ப்புகளில் 50 சதவீத ரோபோட்டுக்கள் நியமிக்க முடிவு !

அதிரை நியூஸ்: மார்ச்-28
துபையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் மனிதவளத்திற்கு பதிலாக 'செயற்கை நுண்ணறிவு' (Artificial Intelligence - AI) ஊட்டப்பட்ட 50 சதவீத ரோபோ இயந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டு அதற்கான பயிற்சிகளை AI இயந்திரங்களை கையாளும் 200 அலுவலர்களுக்கு முதற்கட்டமாக அடுத்த மாதம் முதல் வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் படிப்படியாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

அரசு மற்றும் தனியார் துறைகளில் ரோபோ பயன்பாடு தவிர்க்க முடியாதவை என்றும், மனிதர்களைப் போல் அல்லாமல் ஒரு சில நிமிடங்களிலேயே தனக்கு தேவையான உலகளாவிய தகவல்களை திரட்டிக் கொள்ள வல்லவை என்றும், ரோபோக்கள் தங்களது பணிகளில் தவறு செய்யாதவை என்பதாலும், இந்த இயந்திர மனிதர்களை தொழிற்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அவ்வப்போது நுண்ணறிவை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் ஸ்மார்ட் துபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

துபாய் போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு !

அதிரை நியூஸ்: மார்ச்-28
துபை போக்குவரத்துத் துறையின் (RTA) கீழ் பஸ், மெட்ரோ, டேக்ஸி, டிராம், நீர்வழி போக்குவரத்து ஆகியவை இயங்குகின்றன. இத்துறையில் வரவேற்பாளர், விற்பனையாளர், மேனேஜர் என பலதரப்பட்ட காலி பணியிடங்கள் சுமார் 76 நிரப்பப்பட உள்ளன. இதற்கு புதிய ஊழியர்களை எடுப்பதற்கான அறிவிப்பை டிவிட்டர் வழியாக துபை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

ஆர்வமுள்ளவர் கீழ்க்காணும் சுட்டியை சுட்டவும்.

http://buzzon.khaleejtimes.com/ad-category/jobs-vacancies/

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

அதிரை பேருந்து நிலையத்தில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் !

 
அதிராம்பட்டினம், மார்ச்-28
திமுக மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் 65-வது பிறந்த நாளையொட்டி திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் அதிரை பேருந்து நிலையத்தில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றிய சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் கே. இத்ரீஸ் அகமது தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் ஏனாதி பா. இராமநாதன், அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அக்கட்சியின் தலைமைப் பேச்சாளர் நாகை நாகராஜ் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்த 3 பேர் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

கூட்டத்தில் திமுக அதிரை பேரூர் பொருளாளர் கோடி முதலி, துணைச் செயலாளர் அன்சர்கான், டி. சபீர், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, மீனவரணி பொறுப்பாளர் சுப்பிரமணி, வார்டு பொறுப்பாளர்கள் முத்துராமன், இப்ராஹீம், முஹம்மது சரிப், செய்யது முகம்மது உட்பட பலர் கலந்துகொண்டனர்.