Pages

Sunday, April 2, 2017

மிளகாய்ப்பொடி கொள்ளையர்களிடமிருந்து ரூ.18 லட்சம் மீட்பு, 2 பேர் கைது

பட்டுக்கோட்டை, ஏப். 02:
பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை மேலாளர் அரவிந்த் எஸ்.குமார், காசாளர் ஆர்.சுப்பிரமணியன். இவர்கள் இருவரும் வியாழக்கிழமை காலை மல்லிப்பட்டினத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து நாட்டுச்சாலை வங்கிக் கிளைக்கு தேவையான ரூ.20 லட்சத்தை சூட்கேசில் வைத்து வாடகைக்காரில் எடுத்துச் சென்றனர். காரை நாட்டுச்சாலை என்.பழனிவேல் ஓட்டி வந்தார்.

மதியம் 1 மணியளவில் காசாங்காடு நடைபாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் காரை வழி மறித்து, வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு, ரூ.20 லட்சம் பணம் இருந்த சூட்கேசை பறித்துக் கொண்டு தப்பினராம்.

இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் சிலம்பவேளாங்காடு வீராச்சாமி மகன் சதீஷ் (24)என்பவருக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பட்டுக்கோட்டை வடசேரி சாலை அப்துல்கலாம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.  

இதில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் போலீஸார் தேடிய சதீஷ் என்பதும், அவருடன் வந்தவர் அவரது நண்பர் கண்ணுக்குடி மேற்கு தமிழ்ச்செல்வம் மகன் வீரமணி (22) என்பதும் தெரிய வந்தது.

இருவரிடமும் விசாரித்ததில் வெளியான தகவல்கள்:
சதீஷ், வீரமணி, அதிராம்பட்டினம் சுரக்காக்கொல்லை அங்குசாமி மகன் சாமிநாதன் (21), அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோயில் தெரு நூர்முகமது மகன் அகமது முஸ்ரப் (17) ஆகிய 4 பேரும் நண்பர்கள். இவர்கள் மல்லிப்பட்டினம் ஐஓபி வங்கியிலிருந்து நாட்டுச்சாலை ஐஓபி வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் காரை மறித்து பணத்தை கொள்ளையடித்து ஆடம்பர வாழ்க்கை வாழ திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி சதீஷும், சாமிநாதனும் கடந்த வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று காசாங்காடு நடைபாலம் அருகே காரை வழி மறித்து, வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு, ரூ.20 லட்சம் பணம் இருந்த சூட்கேசை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

பின்னர், கண்ணுக்குடி மேற்கு கிராமத்திலுள்ள வீரமணி வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த வீரமணி, அகமது முஸ்ரப் ஆகியோரிடம் சூட்கேசை கொடுத்து வீட்டுக்குள் மறைத்து வைக்கும்படி கூறியுள்ளனர். அப்போது கொள்ளையடித்த பணத்தில் ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு அதிரை சாமிநாதன், அகமது முஸ்ரப் ஆகிய 2 பேரும் வெளியே சென்று விட்டனராம். இவ்வாறு சதீஷ், வீரமணி இருவரும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீரமணி வீட்டில் மறைத்து வைத்திருந்த ரூ.18 லட்சம் பணத்தை மீட்ட போலீஸார் சதீஷ், வீரமணி இருவரையும் கைது செய்தனர். ரூ.2 லட்சத்துடன் தலைமறைவான அதிரை சாமிநாதன், அகமது முஸ்ரப் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...