Pages

Tuesday, April 11, 2017

48 ஆண்டுகளுக்கு முன் பாஸ்போர்ட் இன்றி துபாய் வந்தவரின் நினைவலைகள் !

அதிரை நியூஸ்: ஏப்-11
இந்தியர்கள் அதிலும் குறிப்பாக கடற்கரை பிரதேசம் வாழ் தென்னிந்தியர்கள் பொருளீட்டுவதற்காக தொன்றுதொட்டு கடலோடியவர்களே, இவர்களின் வாழ்வு தாய்நாட்டைவிட அன்னிய மண்ணில் தான் மன வலியுடன் அதிகம் கழிந்திருக்கும். இந்த இரட்டை வாழ்க்கை வாழ்வோர் ஒவ்வொருவரின் பின்னும் துயரங்கள், துன்பங்கள், சந்தோஷங்கள், வெற்றிகள் என கலவையானதொரு சொல்லப்படாத வரலாறு ஒன்று கட்டாயம் ஒழிந்திருக்கும்.

கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த சேதுமாதவன் சுமார் 20 வயது மதிக்கத்தக்க 10 வாலிப நண்பர்கள் பட்டாளத்துடன் 1969 ஆம் ஆண்டு மும்பையிலிருந்து படகில் பயணித்து புஜைரா அருகிலுள்ள கொர்பக்கான் கடற்கரையில் வந்திறங்கினர் ஆனால் அவர்களிடம் பாஸ்போர்ட்டோ, விசாவோ ஏதுமிருக்கவில்லை இன்னும் சொல்லப்போனால் இப்பயணம் துவங்குவதற்கு முன்பாகத் தான் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பமே செய்திருந்தார்.

ஆரம்பத்தில் ஹோட்டல்களில் பல்வேறு வகையான வேலைகளை பார்த்தாலும் 1971 ஆம் ஆண்டு தான் துபையில் செயல்பட்ட நியூ இந்தியா இன்ஷூரன்ஸ் எனும் இந்திய நிறுவனத்தில் ஊழியராக இணைந்துள்ளார். பிறகு 5 ஆண்டுகள் கழித்து வேறொரு இன்ஷூரன்ஸ் கம்பெனியில் மேலாளராக ( Claims Manager) இணைந்துள்ளார். பின்பு 1980 ஆம் ஆண்டு பான் ஃபிரஷ் இன்டர்நேஷனல் டிரேடிங் எனும் நிறுவனத்தில் இணைந்து 37 ஆண்டு காலம் அட்மின் மேனேஜராக பணியாற்றியுள்ளார்.

1971 ஆம் மீண்டும் கப்பல் மூலம் இந்தியா திரும்பியவர் அன்றைய சென்னையில் இயங்கிய பிரிட்டீஷ் ஹைகமிஷன் அலுவலகத்தில் அமீரகத்தின் சார்பாக வழங்கப்படும் 'டுரூசியல் ஸ்டேட்ஸ்' (Trucial States) விசாவை தனது பாஸ்போர்டில் பெற்றுத் முறையாக மீண்டும் அமீரகம் திரும்பியுள்ளார். 1973 ஆம் ஆண்டு துபையில் இயங்கிய விமான நிலையம் ஒரு சிறிய ஹாலில் இயங்கியதையும் தற்போது உலகின் பிரமாண்ட விமான நிலையங்களுள் ஒன்றாய் உருவெடுத்திருப்பதையும் ஒப்பிட்டு பிரமிக்கின்றார்.

1974 ஆம் ஆண்டு துபை டிரைவிங் லைசென்ஸ் பெற்றவர் 'துபை 39' என்ற எண்ணுடைய பைக் ஒன்றுக்கும் சொந்தக்காரராக இருந்துள்ளார். தன் வாழ்நாளில் பெரும்பகுதியை துபையில் கழித்திருந்தாலும் நியூ துபை பகுதிகள் என அறியப்படும் மரீனா, ஜூமைரா லேக் டவர்ஸ் போன்ற பகுதிகளுக்குள் காரில் வந்துவிட்டு திரும்பிப் போக வழி தெரியாமல் தற்போது பலமுறை முழித்திருப்பதாக சொல்லிச் சிரிக்கின்றார்.

1976 ஆம் ஆண்டு முதல் குடும்பத்துடன் வசிக்கும் இவருடைய குழந்தைகள் இங்கேயே பிறந்து வளர்ந்து கல்வி கற்று தற்போது அமெரிக்காவிலும், கனடாவிலும் குடியுரிமை பெற்று குடும்பத்துடன் வசிக்கிறார்களாம் ஆனாலும் இவருடைய நெஞ்சார்ந்த கவலைகளில் ஒன்று, தன்னுடன் பம்பாயிலிருந்து படகில் பயணித்தவர்களில் 4 பேர் மரணமடைந்து விட, 4 பேர் இயலாமையால் தாய் மண்ணிற்கே திரும்பிச் சென்றுவிட்டனர். ஒருவர் மட்டுமே அவ்வப்போது வியாபார ரீதியாக விசிட்டில் வந்து செல்கிறார். நான் மட்டுமே என அந்த பழைய நண்பர்கள் இன்றி இங்கே துபையில் நீண்ட காலத்தை கழிக்கின்றேன் என விசனப்படுகின்றார்.

அமீரகத்தின் அபார, அசூர வளர்ச்சியுடன் பின்னிப்பிணைந்த இவரது வாழ்க்கையின் சாதனையாக கோழிக்கோட்டில் செயல்படும் ஒரு கல்லூரியில் பயிலும் சுமார் 25 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வருடந்தோறும் கல்வி உதவித்தொகைகளை கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வருகிறார். மேலும் தனது ஓய்வு காலத்தை அமெரிக்காவில் வாழும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் கழிக்க விரும்புவதாகவும், இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் ஒவ்வொருமுறையும் துபைக்குள் விஜயம் செய்து தனது நண்பர்களையும், இனிய நினைவுகளையும் என்றும் போற்றிட உறுதிபூண்டுள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 

1 comment:

  1. great man, good experience,thank you for sharing. thanks to adirai news

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...