Pages

Monday, April 10, 2017

அதிரையில் TNTJ மாவட்ட மாநாடு: நேரடி ரிப்போர்ட் ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-10
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் 'முகமதுர் ரசுலுல்லாஹ்' (ஸல்) மாவட்ட மாநாடு, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல் பின்புறம் உள்ள பிரமாண்ட மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டிற்கு அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.முஜீபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அவ்வமைப்பின் நிறுவனத் தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன், 'தூதரைப் பின்பற்றுவோம்' என்ற தலைப்பிலும், மாநில பொதுச்செயலாளர் எம். முஹம்மது யூசுப், 'திருக்குர்ஆன் ஏற்படுத்திய புரட்சி' என்ற தலைப்பிலும், மாநில பேச்சாளர் அஷ்ரப்தீன் ஃபிர்தெளஸி, 'இறைச்செய்திக்கு முரணான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்' என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. இறைவன் மன்னிக்காத இணைவைப்பை விட்டும் முஸ்லிம்கள் முற்றிலுமாக புறக்கணித்து, லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற திரு கலிமாவின் முழு விளக்கத்தையும் இங்கு கூடி இருக்கும் அனைவரும் தாமும் கடைப்பிடித்து, அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

2. இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பது அல்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபி மொழிகளும் ஆகும். இந்த இரண்டை மட்டும் பின்பற்ற வேண்டிய முஸ்லிம்கள் இதற்கு மாற்றமாக முன்னோர்களையும், மத்ஹபு இமாம்களையும், சஹாபாக்களையும், தங்களின் மனோ இச்சைகளையும் மார்க்கம் என பின்பற்றுகின்றனர். இந்நிலையானது மறுமை நாளில் பெரும் கைசேதத்தை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை இஸ்லாத்தில் இருப்பதால், இதுப் போன்ற பாவமான வழிகளிலிருந்து முஸ்லிம்கள் விடுபட்டு குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்ற வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

3. இஸ்லாத்திற்கு எதிரான தர்ஹா வழி பாடு, பில்லி, சூனியம், தகடு, தாயத்து, சகுனம் பார்த்தல் உட்பட அனைத்து மூடத்தனமான காரியங்களிலிருந்தும் முஸ்லிம்கள் முற்றிலுமாக விலக வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4.  மோடி ஆட்சியில் இந்திய அளவில் தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட MP, MLA, அமைச்சர்கள் போன்றோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுவருவது கண்டிக்கத்தக்கது.

5. தலித்துகள் மற்றும்சிறுபான்மையினர் மீதான தாக்குதளை தடுத்து நிறுத்த தவறிய மத்திய மோடி அரசை இம்மாநாடு கண்டிக்கிறது.

6. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் 3.5 % இடஒதுக்கீட்டை 7 % மாக உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்து முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக அரசு, முஸ்லிம்களின் கோரிக்கையான இடஒதுக்கீட்டை 7% உயர்த்தி வழங்கவேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

7. பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தில் குடி தண்ணீருக்கும் மற்ற தேவைகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழல் உருவாகி உள்ளது. எனவே தமிழக மக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்கும் முன்னேற்பாடுகளை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

8. மத்தியில் இருக்கும் மோடி தலைமையிலான அரசு தமிழக மக்களுக்கும், தமிழக நலனிலும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. காவிரி நீரை திறந்து விட உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை வழங்க மறுத்து வந்த கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல் பட்ட மத்திய அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. காவிரி நீர் கிடைக்காததால் வறட்சியின் காரணமாக இறந்த தமிழக விவசாயிகள் குடும்பத்திற்கும், பயிற்கள் கருகியதால் அதனால் ஏற்பட்ட இழப்பிற்கும் மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

9. விவசாயத்திற்கு தேவையான நீருக்காக ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரை மட்டும் நம்பி இல்லாமல், தமிழகத்தில் பெய்யும் மழை நீரினை தடுப்பணைகள் அமைத்து சேமித்தால் எந்த மாநிலத்தையும் நம்பி இருக்கும் நிலை ஏற்படாது. எனவே இதனை கவனத்தில் கொண்டு, பெய்யும் மழைநீரை வடிகால் மூலம் சேமிக்கும் அணைகளை அமைக்க வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

10). ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்க வேண்டும் என்ற அல்லாஹ்வின் வசனத்திற்க்கு மாற்றமாக திருமணத்தில் பெண் வீட்டார் வரதட்சணையாக வீடுக் கொடுகின்ற நிர்பந்தம் எழுதப்படாத சட்டமாக சில முஸ்லீம்களிடம் இருந்து வருகிறது இது இஸ்லாத்திற்க்கு முற்றிலும் எதிரான காரியம் ஆகும் எனவே இச்செயலை முஸ்லிம்கள் முற்றிலுமாக கைவிடும்படி இம்மாநாடு கோறுகிறது.

11) அதிராம்பட்டினம் மார்க்கெட்டில் மது, சூது, லாட்டரி போன்ற சமூகத் தீமைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதை அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி இம்மாநாடு கேட்டுக் கொள்ளப்படுகிறது

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மாநாட்டு துளிகள்:
1. மாநாட்டில் கல்லூரி பேராசிரியர் மகேந்திரன் (45) என்பவர் முஜாஹித் என்ற பெயர் மாற்றத்துடன் இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார்.

2. மாநாட்டில் 100 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வாகனங்களை ஒழுங்கு படுத்தல், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தல், குடிநீர், தேநீர் வழங்குதல், மாநாட்டு இடத்திற்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

3. ஆண்கள், பெண்கள் அமர தனித்தனி இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

4. மாநாட்டு மேடை 2400 சதுர அடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது.

5. இரவை பகலாக்கும் வகையில் அதிக ஒளி தரக்கூடிய சோடியம் மின்விளக்குகள் மாநாட்டு திடலில் பொருத்தப்பட்டது.

6. மாநாட்டு மைதானத்தில் 2 மெகா எல்சிடி ஒளித்திரை மூலம் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பு செய்யப்பட்டன.

7. நிகழ்ச்சிகள் அனைத்தும் 'ஆன்லைன்பிஜே' இணையதளத்தில் நேரடி ஒளிப்பரப்பப்பட்டன.

8. .மாநாட்டு பகுதியில் அவசர மருத்துவச் சேவை பணிக்காக  4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டன.

9. மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவக்குழுவினரின் சிறப்பு மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

10. மாநாட்டில், ஜல்கோபியா மூலிகை டீ, கிரீன் டீ, காபி, குழந்தைகளுக்கு பசும்பால் ஆகியன இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

11. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டால் இலவசமாக வழங்கப்பட்டன.

12. மாநாட்டில் பங்கேற்ற தொலைதூர வருகையாளர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

13. மாநாட்டு திடலில் 20 க்கும் மேற்பட்ட துரித உணவகங்கள், இஸ்லாமிய மார்க்க நூல்கள், சிடிக்கள் அடங்கிய ஸ்டால்கள் இடம்பெற்றன.

14. வாகன நெருக்கடியை தவிர்க்க மாநாட்டுக்குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட பிரத்தியோக இடங்களில் வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.

15. மாநாட்டு திடலில் தவ்ஹீத் ஜமாஅத் கொடிகள், ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள் அணிவகுத்து காட்சியளித்தன.

மாநாட்டு திடலிலிருந்து அஜீம்
 
 
 
 

1 comment:

 1. ராமரும் மாடும் இல்லாவிட்டா பாஜ அரசியல் நடத்த முடியாது அதைப்போல் நம் சமுதாய அமைப்புகளும் பில்லி சூனியம், தகடு தாயத்து இதை வைத்து அமைப்பை வளர்க்கிறார்கள். சமுதாய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும்போது தங்கள் அமைப்பின் பலத்தை நிரூபிப்பதற்காக மாநாடு - பேரணி - பிரச்சாரம் இப்படி நடக்குது. உண்மையில் சமுதாயத்தில் மாற்றம் காணப்படுகிறதா? சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தில் எத்தனை சட்ட வல்லுநர்கள்..மருத்துவர்கள் .. அரசில் உயர்பதவிகள் வகிப்போர் உருவாக்கிருக்கிறார்கள்? அல்லது மாணவர்களுக்காக வழிகாட்டி நிகழ்ச்சி., வறுமையில் படிக்கும் மாணவனுக்கு உதவி அளிக்கும் அமைப்புகள் எத்தனை? ஓன்று இரண்டு தன்னார்வ தொண்டு அமைப்பு காணலாம்.
  தமிழகத்தில் ஏன் இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல் கட்சிக்கும் நம் சமுதாய அமைப்புக்கும் பொறுப்புதாரிகள் அதிரையர் உண்டு அதிலும் இப்போ கிளைகள் வரத்தொடங்கி விட்டது. இனி காலப்போக்கில் நாங்க தான் அங்கீகரிக்கப்பட்ட கிளை என சொல்லுவார்கள் போல! சிந்திக்குமா சமுதாயம்.

  நம் இளைய சமுதாயம் இப்போ போதைக்கும் அடிமையாகி வருவது வேதனை., ஆள் விட்டு சரக்கு வாங்கி காலம்போய் இப்போ நேரடியாக செல்லுகிறார்கள். தள்ளாடி வருபவரை தாங்கி பிடிக்க பிள்ளைகள் வரவேண்டிய அவலம் ஏற்படுபோல் தெரிகிறது., அவசர கல்யாணம் அதிவேகத்தில் திருமண முறிவு ஏற்படுவதையும் காணமுடிகிறது அதனால் சீரழிவு ஏற்படாதா??

  தர்கா என்ற அரைத்த மாவை திரும்ப திரும்ப அரைக்காமல் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் செயல்பட வேண்டிய தருணம் இது.

  ரசூலுல்லாஹ் (ஸல் ) அவர்கள் மூமின்களே! ஒற்றுமை என்னும் கயிறை பற்றி பிடித்து கொள்ளுங்கள் " என்று சொன்ன வார்த்தையை ரசூலுல்லாஹ் மாநாட்டில் சொல்லமுடியவில்லை ... அதற்கான தீர்மானம் எப்போது?

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...