Pages

Monday, May 1, 2017

'உழைப்பாளர் தினம்': எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், தலைமை ஆசிரியர் ( ஓய்வு )

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் 
அதிரை நியூஸ்: மே-01
ன்று மே முதல் நாள், உழைப்பாளர்களின் தினம். இந்நாளில் உழைப்பின் உயர்வு பற்றியும், உழைப்பாளிகள் பற்றியும் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

25 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாவாக சிங்கப்பூர் சென்றிருந்தேன். சொந்த நாட்டை விட்டுச் சென்ற முதல் அனுபவம் அது. சிங்கப்பூரில் கண்ட கண்கவர் கட்டிடங்கள், அகன்ற அழகான சாலைகள், சுத்தமான சுற்றுப்புறச் சூழ்நிலைகள் என்னை ஒருபுறம் வியப்பில் ஆழ்த்தினாலும், சிங்கப்பூர் மக்களின் சுறுசுறுப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. சோம்பல் சிறிதுமின்றி உழைப்பு, உழைப்பு என ஓடிக்கொண்டிருக்கும் அம்மக்களின் மனப்பாங்கைக் கண்டு இந்தியனாகிய நான் வியந்து போனேன்.

சிங்கப்பூரை விட்டுத் தாயகம் திரும்பும் தருணம் வந்த போது சிங்கப்பூரில் தொழில் செய்துவந்த கூத்தாநல்லூரைச் சேர்ந்த யாசீன் என்ற நண்பர் என்னிடம், 'ஒரு மாதம் சிங்கப்பூரில் இருந்துள்ளீர்கள். சிங்கப்பூர் பற்றிய உங்கள் கருத்து என்ன? ' எனக் கேட்டார்.

'அலுவலகங்கள், தொழிலகங்கள், வணிக வளாகங்கள், கல்விக் கூடங்கள் என எங்கு சென்றாலும் அங்குள்ளோரின் பொறுப்புணர்ச்சியையும், உழைப்புத் திறனையும் கண்டு வியந்து போனேன்' எனக் கூறினேன். அந்த நண்பர், 'நான் சென்ற மாதம் ஜப்பான் சென்று வந்தேன். ஜப்பானியர்களைக் கண்ட என் கண்களுக்கு சிங்கப்பூர் மக்கள் சோம்பேறிகளாகத் தெரிகிறார்கள்' என்றார்.  அவ்வாறெனில் ஜப்பானியர்களின் சுறுசுறுப்பும், உழைப்பும் எத்தகையதாக இருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது. அதனால் தான் மற்ற நாடுகள் மக்கள் பெருக்கத்தை எண்ணி மலைத்து நின்றபோது, 'ஒவ்வொரு குழந்தையும் ஒரு வயிற்ரோடு பிறந்தாலும் இரண்டு கைகளோடு பிறக்கிறது' எனப் பெருமிதத்தோடு ஜப்பானியர்களால் கூற முடிந்தது. அதே நேரத்தில் நம்முடைய சுறுசுறுப்பும், உழைப்பும் எத்தகையது என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

மறைந்த தமிழறிஞர் முனைவர் மு.வரதராசனார் எழுதிய 'மண்ணின் மதிப்பு' கட்டுரையை படித்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஒரு தொழிற்சாலையின் நிர்வாகம், ஜெர்மனி நாட்டுக்குச் சென்று அங்குள்ள தொழிற்சாலைகளின் வெற்றிக்கான காரணங்கள் அறிந்துவர சில தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டது. ஜெர்மனி செல்லுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ஜெர்மனியைச் சேர்ந்த குடும்பம் ஓன்று இந்தியாவில் வாசித்து வருவதாக அறிந்தனர். ஜெர்மனிக்குச் செல்வதை விடுத்து இந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து ஜெர்மனியின் நிலவரங்களை அறிந்துகொள்ளலாமே என முடிவெடுத்து, அவர்களைச் சந்தித்தனர். அந்தக் குடும்பத்தினரும் ஜெர்மனியிலுள்ள அரசின் தொழிற்கொள்கை பற்றியும், நிர்வாகத் திறன் பற்றியும் விரிவாக விளக்கினர்.

மேலும், அவர்கள் கூறியதுதான் நமது சிந்தனைக்குரிய செய்தி, 'நாங்கள் சில ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். இந்தியர்கள் அன்புள்ளம் கொண்டவர்களாகவும், அறிவிற் சிறந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் இந்தியர்கள் பெரும்பாலோனோர் உழைக்க விரும்பாத சோம்பேறிகளாக இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். ஜெர்மனியர்களின் இக்கூற்றிலுள்ள உண்மையை நம்மால் முற்றிலும் மறுக்க முடியுமா? அதனால் தான் பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடினான் ' உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணில் உண்டுக் களித்திருப்போரை நிந்தனை செய்வோம்' என்று உழைப்பின் உயர்வை உணர்த்தும் கவிஞர் புலமைபித்தன் பாடல் ஒன்று 'உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே' என அறிவுறுத்துகிறது.

'படித்ததனால்அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு; பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு' என்பது ஒரு திரை இசைப் பாடல். இப்பாடலில் இடம்பெற்றுள்ள மேதைகள் என்பவர்கள் யார்? அவர்களும் உறக்கம் துறந்து உழைத்த உழைப்பாளிகள், உழைப்பின் வாயிலாக உன்னத நிலைக்கு உயர்ந்தவர்கள்.

உழைப்பாளிகள் இரு வகைப்படுவர். முதல் வகையினர் தனக்காகவும், தனது குடும்ப நலனுக்காக மட்டும் உழைப்பவர்கள் மற்றுறொரு வகையினர் தன்னலம் சிறிதுமின்றி பிற மக்களுக்காக உழைப்பவர்கள் பெருமானார் நபி ( ஸல் ) அவர்கள் பேருழைப்பை மேற்கொண்டார்கள். மக்களை நன்னெறி பக்கம் கொண்டு வருவதற்காக. அண்ணல் காந்தியடிகள் அயராது உஅளைதார் அடிமையுற்றுக் கிடந்த தனது நாட்டை விடுதலை பெறச் செய்வதற்காக. அன்னை தெரசா அயராது உழைத்தார் நாதியற்ற எளியவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதற்காக.

தனக்கென அல்லாது பிறருக்கென மிகப்பெரும் பணியில் ஈடுபட்ட ஒரு மனிதரைப்பற்றிய செய்தியை அண்மையில் ஊடக வாயிலாக அறிய நேர்ந்தது. பீஹார் மாநிலத்தின் கயா மாவட்டத்தைச் சேர்ந்த கஹல்வுர் கிராமத்திலுள்ள ஒரு மலையைத் தனியொரு ஆளாகக் குடைந்துப் பாதை உருவாக்கியிருக்கிறார் அந்த மனிதர். 'தஷாத் மாஞ்சி' என்ற அந்த உழைப்பாளி சுத்தி, உளி இரண்டை மட்டுமே வைத்துக்கொண்டு இந்தப் பாதையை உருவாக்கியிருக்கிறார். இதை ஏன் அவர் செய்ய வேண்டும்? எவ்வித அடிப்படை வசதியுமற்ற கஹல்வுர் கிராம மக்கள் ஆதிக்க சக்தியினரின் அடக்கு முறையாலும், சுரண்டலாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். அரசும், அக்கிராமத்தைக் கண்டு கொள்ளவில்லை. பள்ளி, மருத்துவமனை போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக மலையைக் கடந்து அடுத்த ஊருக்குச் செல்ல வேண்டிய நிலை. இந்த முயற்சியின் போது பலர் தவறி விழுந்து இறந்து போனார்கள். மக்களின் இன்னலைக் களைய எண்ணிய மாஞ்சி மலையைக்குடைந்து பாதை அமைப்பதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். 22 ஆண்டுகள் போராடித் தன் லட்சியத்தில் வெற்றியடைந்தார் தஷாத் மாஞ்சி. 'மலை மனிதன் மாஞ்சி' என நாடே அந்த உழைப்பாளியைக் கொண்டாடியது.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் ( ஓய்வு )
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

1 comment:

  1. மக்களின் நூற்றாண்டு கால உழைப்பும், தியாகமும் முதலாளிகளின் கையில் பேரழிவுக்கு பயன்படுத்தப்படுவது நிகழ்கால உண்மை . உழைப்பின் உன்னதம் குறைந்த கூலிக்கு நரம்பு புடைக்கு வேலை செய்பவர்களின் தினம் " தொழிலாளர் தினம்" - நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...